என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை உறவினர்கள் வீட்டின் முன் வீசியது தொடர்பாக டாஸ்மாக் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருவேகம்புத்தூர் அருகே உள்ள ஆந்தக்குடியை சேர்ந்தவர் ஜான்சன் ஜார்ஜ். இவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 42). இவர் அதே ஊரில் குழந்தைகள் நல காப்பகத்தில் அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த கடந்த 17-ந் தேதி ஆரோக்கி மேரியின் பிணத்தை காளையார்கோவில் அருகே உள்ள இலந்தைகுடியில் உள்ள அவரது சகோதரி வீட்டு முன்பு மர்ம கும்பல் வீசிச் சென்றது.

    இதுகுறித்து காளையார் கோவில் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியமேரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் கல்யாண குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில், ஆரோக்கிய மேரிக்கும், இலந்தைக்குடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. சிவக்குமார் காரைக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். சிவக்குமாருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சிவக்குமாரின் மனைவி குழந்தையுடன் ஊருக்கு சென்று உள்ளார். இதை அறிந்த ஆரோக்கியமேரி சம்பவத்தன்று காரைக் குடியில் உள்ள சிவக்குமார் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    அப்போது சிவக்குமார் வாங்கி கொடுத்த நகையை, ஆரோக்கியமேரி அடகு வைத்துள்ளார். இதில் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    பின்னர் சிவக்குமார் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் உள்ள தனி அறையில் ஆரோக்கியமேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சிவக்குமார் ஆரோக்கியமேரி இருந்த அறையின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவு திறக்கவில்லை. ஆரோக்கிய மேரி தூங்கியிருக்கலாம் என்று கருதிய சிவக்குமார் வீட்டின் மற்றொரு அறையில் தூங்கினார்.

    காலையில் எழுந்த சிவக்குமார் மீண்டும் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து பார்த்த போது ஆரோக்கிய மேரி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் செய்வதறியாது தவித்தார். உடனே உறவினர்கள் 5 பேரை வீட்டுக்கு வரவழைத்த சிவக்குமார், ஆரோக்கிய மேரியின் உடலை, அவரது சகோதரி வீட்டு முன்பு போட்டு விட்டு சென்று உள்ளார்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், ஆரோக்கியமேரியை தற்கொலைக்கு துண்டியதாக சிவக்குமாரை கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.
    காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி விடிய விடிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மித்ராவயல் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதனை உடனே மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கல்பனா தலைமையில் திரண்டனர். அவர்கள் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கண்டன கோ‌ஷம் எழுப்பிய படி மதுக்கடையை சென்றடைந்தனர். அங்கு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    தகவல் அறிந்ததும் தாசில்தார் கண்ணன் மற்றும் சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடையை மூடுவோம் என உறுதி அளித்தால்தான் இடத்தை காலி செய்வோம். என்று பெண்கள் கூறினர். அதிகாரிகள் உறுதி அளிக்காததால் போராட்டம் விடிய விடிய நீடித்தது. இரவு அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர். தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது.

    அ.தி.மு.க. அரசு கவிழ்ந்து விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.

    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

    இதனை பார்வையிடுவதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுடன் இன்று கீழடி வந்தார். அங்கு அவர் ஆய்வுப்பணிகளை பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அகழ்வாராய்ச்சி நடைபெறும் இந்த இடம் மதுரை அருகே உள்ளது. பாண்டிய ஆட்சிக்குட்பட்ட இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறுவதை பார்க்க வந்துள்ளேன். விவசாயிகள் பாதிக்காத வகையில் கீழடியில் அகழ்வாராய்ச் சியை மேற்கொள்ள வேண்டும்.


    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். இதனால் தே.மு.தி.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் பார்த்து யாரை வேண்டுமானாலும் தலைவராக தேர்ந்தெடுக்கலாம். ரஜினி அரசியலுக்கு வருவதை பலர் எதிர்க்கிறார்கள். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

    அ.தி.மு.க.வின் இரு அணிகள் குறித்து பேச விருப்பமில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தவுடன் தே.மு.தி.க. வின் நிலை குறித்து அறிவிக்கப்படும்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலைந்து விரைவில் பொதுத்தேர்தல் வரும். தமிழக ஆட்சியாளர்கள் இன்னும் 4 ஆண்டுகள் எப்படி ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது என்று தான் பார்க்கிறார்கள். மக்கள் பிரச்சினையை பார்ப்பதில்லை.

    குடிநீருக்காக மக்கள் அவதிப்படுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டால், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் என்று கூறுகிறார். ஆனால் அவர்கள் எப்போதுதான் பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று தெரியவில்லை.

    ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்கள் ஆட்சி செய்வது தமிழகத்தில்தான் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கல்லல் அருகே ஆழவிளாம்பட்டியில் குதிரை வண்டி பந்தயமும், திருப்பத்தூரில் மாட்டு வண்டி பந்தயமும் நடைபெற்றது.
    கல்லல்:

    கல்லல் அருகே உள்ள ஆழவிளாம்பட்டியில் காட்டு நாச்சியம்மன் கோவில் விழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. ஆழ விளாம்பட்டி-மதகுபட்டி சாலையில் பந்தயம் நடைபெற்றது. இதில் 14 வண்டிகள் கலந்துகொண்டதில், முதல் பரிசை வீழனேரி சரவணன் வண்டியும், 2-வது பரிசை நாச்சியார்கோவில் நான்கடவுள் வண்டியும், 3-வது பரிசை பவானி சிங்காரவேலன் வண்டியும் பெற்றது.

    இதேபோல் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 34 வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி, நடு மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி, பூஞ்சிட்டு வண்டி என 4 பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது.

    முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வெளிமுத்தி வாணி வண்டியும், 2-வது பரிசை ஆணையூர் செல்வம் வண்டியும், 3-வது பரிசை தேவரம்பூர் ராமநாதன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை கொட்டக்குடி ராஜேஷ்குமார் வண்டியும், 2-வது பரிசை தென்மாபட்டு பிரவீன்குமார் வண்டியும், 3-வது பரிசை வெளியங்குன்றம் ஆதிமோகன் வண்டியும் பெற்றது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சுண்ணாம்பிருப்பு ராஜா வண்டியும், 2-வது பரிசை தானிப்பட்டி விக்கி வண்டியும், 3-வது பரிசை திருப்பத்தூர் ரவி வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வாடிப்பட்டி செல்லாயி வண்டியும், 2-வது பரிசை சின்னமனூர் வீரசின்னம்மாள் வண்டியும், 3-வது பரிசை பில்லமங்கலம் வாசுதேவன் வண்டியும் பெற்றது. பந்தய முடிவில் வெற்றி பெற்ற வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    முதுகலை மாணவி மற்றும் நர்சு மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    காரைக்குடி:

    காரைக்குடி செக்காலை தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகள் பிரியதர்சினி (வயது 21). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம் போல் கல்லூரி சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்காததால், காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் இளவேனில் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி பிரியதர்சினியை தேடி வருகிறார்.

    காரைக்குடி செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் மீனாட்சி (19). திருமணமான இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை எதிரொலி, காங்கிரஸ் கட்சியினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    காரைக்குடி:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் ஆகும். இங்கு பூர்வீக வீடு உள்ளது. இந்த வீடு அவரது உறவினர் பராமரிப்பில் உள்ளது.

    இதுதவிர காரைக்குடியை அடுத்த மானகிரியில் சுமார் 90 ஏக்கர் நிலப்பரப்பில் கார்த்தி ப.சிதம்பரத்துக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. சிவகங்கை வரும்போது இந்த வீட்டில் தான் சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவது வழக்கம்.

    இன்று காலை சென்னையில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் காரைக்குடி மானகிரியில் உள்ள வீட்டிலும் சோதனை நடக்கலாம் என்ற தகவல் பரவியது.

    இதையடுத்து காங்கிரசார் அங்கு விரைந்தனர். ஆனால் அங்கு காலை 9 மணிவரை அதிகாரிகள் யாரும் சோதனைக்கு வரவில்லை. வீடும் பூட்டப்பட்டே இருந்தது.

    இதேபோல் கண்டனூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும் சாதனை நடைபெறவில்லை.
    சசிகலா, தினகரன் இல்லாமல் அ.தி.மு.க. செயல்படாது என்று தேவகோட்டையில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில், டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. நகர இணைச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், நடிகர் குண்டு கல்யாணம் உள்ளிட்ட பலர் பேசினர்.

    அம்மா முதல்வராக இருந்த போது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் பங்கேற்றார். அவர் உடல்நிலை சரியில்லாததை வெளிக்காட்டாமல் உற்சாகத்துடன் பங்கேற்றார்.

    தான் சோர்ந்து விட்டால் தொண்டர்களும் துவண்டு விடுவார்கள் என்று கருதி எப்போதும் உற்சாகமாக காணப்பட்டார்.

    ஓ.பி.எஸ்.சுக்கு மருத்துவத்தை பற்றி என்ன விவரம் தெரியும்? அவருக்கு ஜெயலலிதாவின் சாவின் மர்மத்தை கேட்க என்ன அருகதை உள்ளது?

    ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது, 74 தலைவர்கள் வந்து பார்த்தார்கள். அவ்வாறு இருக்கும் போது ஜெயலலிதா மரணம் எப்படி மர்மமாக இருக்கும்?


    சசிகலா மற்றும் தினகரன் மீது புகார் சொல்லும் பன்னீர் செல்வத்திற்கு தண்டனை கொடுக்க பொது மக்களிடமும், இளைஞர்களிடமும் நீதி கேட்க வந்துள்ளேன்.

    அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் எப்போது எந்த கட்சியில் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு பக்கமும் காற்று அடிக்கும் போது அவர் ஒவ்வொரு கட்சிக்கும் சென்று விடுவார். இவர் அ.தி.மு.க.வை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது?

    அ.தி.மு.க.வை காப்பாற்ற வந்தவர் தான் தினகரன். இவர்தான் நிதி அமைச்சர் என்று சொன்ன அமைச்சர்கள், இன்று ஏன் மவுனமாக இருக்கிறார்கள்?

    ஓ.பி.எஸ். தமிழகத்தில் அனாதையாக திரியும் காலம் வெகு விரைவில் வர உள்ளது. தினகரன் மவுனமாக இருப்பது, தமிழகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

    திகாரில் இருந்து தினகரன் விடுதலையாகி வரும்போது ஒரு கோடி தமிழர்கள் அவரை வரவேற்பார்கள். நிலத்தை நிராகரித்து விட்டு தண்ணீர் செல்லாததைப் போல சசிகலா- தினகரன் இல்லாமல் கட்சி செயல்படாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்புவனம் அருகே நான்கு வழிச்சாலையில் பஸ்சும், காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் ராமேசுவரத்திற்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியாகினர்.
    திருப்புவனம்:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். அரசு ஊழியர். நேற்று இவர் தனது மனைவி பாக்கியலட்சுமி, மகன் முத்துராமு, உறவினர் ஜெயபார்த்த சாரதி ஆகியோருடன் காரில் ராமேசுவரத்திற்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து மாலை புறப்பட்டு, திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை விஜய் ஆனந்த் ஓட்டி சென்றதாக தெரிகிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மாரநாடு பகுதியில் நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பஸ்சும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் கார் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டதுடன், காரின் முன்பக்க பகுதி நொறுங்கி போனது.

    இந்த விபத்தில் காரில் இருந்த விஜய் ஆனந்த், மனைவி பாக்கியலட்சுமி, மகன் முத்துராமு ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஜெயபார்த்த சாரதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரும் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் இறந்துபோனார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரம் மற்றும் ரணசிங்கபுரம் ரே‌ஷன் கடைகளில் இருந்த சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே சிராவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் நாச்சியாபுரத்தில் ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரே‌ஷன் கடையினை வழக்கம்போல் நேற்று திறப்பதற்காக கடை பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கடையின் கதவுகள் திறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடையினுள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 5 மூடை சீனி, 51 லிட்டர் பாமாயில் ஆகியவை திருட்டு போய் இருந்தன. உடனே இதுகுறித்து ராதாகிருஷ்ணன் திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்திற்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின்பேரில் விரைந்து வந்த வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்த், கடையினை ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்தில், ரே‌ஷன் கடையில் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது குறித்து புகார் அளித்தார்.
    மற்றொரு கடை

    இதேபோல் திருப்பத்தூர் அருகே தென்மாபட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ரணசிங்கபுரத்தில் ரே‌ஷன் செயல்பட்டு வருகிறது. இந்த கடையிலும் நேற்று கதவு பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 2 மூடை சீனி, 10 லிட்டர் பாமாயில் மற்றும் 50 கிலோ கோதுமை ஆகியவை திருட்டு போய் இருந்தன. இதுகுறித்து கடையின் பொறுப்பாளர் புஷ்பம், திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    விசாரணை

    புகார்களின்பேரில், ரே‌ஷன் கடைகளில் புகுந்து அத்தியாவசிய பொருட்கள் திருடிய மர்மநபர்கள் யார் என்பது குறித்து நாச்சியாபுரம் மற்றும் திருப்பத்தூர் நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 கடைகளிலும் ஒரே நபர்கள் தான் பொருட்களை திருடினார்களா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.
    மானாமதுரை ஆனந்தவல்லி–சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக நேற்று வீர அழகர் வெண் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மானாமதுரை:

    மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்–சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 30–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஆனந்தவல்லி அம்மன்–சோமநாதர் சிம்மம், அன்னம், ரி‌ஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை நடைபெற்றது.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலையில் தியாக வினோத பெருமாள கோவிலில் இருந்து புறப்பட்ட வீர அழகர் மானாமதுரை மரக்கடைவீதி, அக்ரஹாரம், அய்யப்பன் கோவில், பைபாஸ் ரோடு, ரெயில்வே கேட் வழியாக காலை 9.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு சிவாச்சார்யார்கள் வெண் கொற்ற குடை பிடித்து வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் காலை 10 மணிக்கு வீர அழகர் வெண் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினர். அப்போது விரதமிருந்து வீர அழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீர்த்தவாரி நடத்தினர். தொடர்ந்து மழை இல்லாததால் தண்ணீர் இல்லாத வெறுமையான ஆற்றில் வீர அழகர் பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே இறங்கினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோ‌ஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஆயிரக்கணக்கான பக்தர்கள்

    வீர அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் அதிமுகவினர் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

    வைகை ஆற்றில் இறங்கிய வீரஅழகரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தொழில் அதிபர்கள் ஆனந்த கிருஷ்ணன், சீனியப்பா தியேட்டர் சுரேஷ், வனங்காமுடி திவான்ராஜ், சுப்பிரமணியன் அன்கோ ஜான், பெரியாண்டவர் சேம்பர் பிரிக்ஸ் லட்சுமணன், கோட்டையன் செட்டியார் பெட்ரோல் பங்க் வெங்கடேசுவரன், பி.ஜி. சேம்பர்ஸ் துபாய் காந்தி, ஏ.எல்.எஸ். ராமையா நாடார் உரிமையாளர் நாகராஜ், தொழிலதிபர் சுப்பையா, சின்னகண்ணணு£ர் வேலுச்சாமி, ஈஸ்வர் மோட்டார்ஸ் மணிவண்ணன், நமச்சிவாயம், திருமலா அக்வா பார்ம் துரைச்சாமி செட்டியார், கோட்டையன் செட்டியார் உள்பட பலர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாளை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நிலாச்சோறு திருவிழா நடைபெற உள்ளது

    இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
    சிவகங்கை:

    உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை மற்றும் கோவில்கள், பள்ளிக்கூடங்கள் அருகே இயங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா என். வைரவன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது.

    தற்போது இந்த கடையை அதே ஊரில் 50 மீட்டர் தூரத்தில் உள்ள சமத்துவபுரம் கல்லூரி மற்றும் கோவில் உள்ள பகுதியில் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். என். வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

    இதேபோல் திருப்புவனம் தாலுகாயமனூர் சாலை வள்ளிக்கோட்டை காலனியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு அப்பகுதி பெண்கள் மனு கொடுத்துள்ளனர்.

    இக்கடை அருகே பெண்கள் விடுதி, நர்சரி பள்ளி, பள்ளிவாசல் உள்ளதால் இந்த டாஸ்மாக் கடையை மூடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
    காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
    சிவகங்கை:

    காரைக்குடி அருகே உள்ள புதுவயலை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 30). இவர் புதுக்கோட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கும், புதுவயல் பகுதியை சேர்ந்த கற்பகம் (26) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது நகை, பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கற்பகம் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது கணவர் நாகப்பன், தொழிலை அபிவிருந்தி செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் மாரிக்கண்ணு- லட்சுமணன் உள்பட 5 பேர் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி விசாரணை நடத்தி நாகப்பன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
    ×