என் மலர்
சிவகங்கை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த பி.எம்.சி., நகரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 25). டிப்ளமோ படித்துவிட்டு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யா (20). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவர, பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, காதர்கள் சசிகுமார், சத்தியா இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருப்பத்தூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இன்று காலை காதல் தம்பதியினர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.
மனுவில், இரு வீட்டு பெற்றோர்களால், எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால், எங்களுக்கு பதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராணி இரு வீட்டாரின் பெற்றோர்களை அழைத்து சமாதானப்படுத்தினர். இதை பெண் வீட்டார் ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து, பெண் வீட்டாரிடம், காதல் தம்பதியினருக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என போலீசார் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.
மேலும், காதல் தம்பதியினரை மாப்பிள்ளையின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
சிவகங்கை:
திருப்பாச்சேத்தி அருகே உள்ள கொத்தன்குளத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேசன் (வயது30) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமிர்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதன் அடிப்படையில் லாரி டிரைவர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவகோட்டை தாலுகா சின்ன கொட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி கோகிலா (வயது 22). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. தற்போது ஆண் குழந்தை உள்ளது.
சிங்கப்பூரில் கார் டிரைவராக பணியாற்றி வந்த ராஜேஷ்குமார் அங்கிருந்து ஊர் திரும்பி விட்டார்.
இந்த நிலையில் அவர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக, தேவகோட்டை அனைத்து மகளிர் போலீசில் கோகிலா புகார் கொடுத்துள்ளார்.
அதில், திருமணத்தின் போது 35 பவுன் நகை, ரூ. 3 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது தொழில் தொடங்க கூடுதல் பணம் வாங்கி வருமாறு கணவர் சித்ரவதை செய்கி றார். இதற்கு அவரது குடும்பத்தினரும், துணை நிற்கின்றனர் என குறிப் பிட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி விசாரணை நடத்தி, ராஜேஷ்குமார், அவரது பெற்றோர் ராஜேந் திரன்-மீனா, சகோதரர் ரமேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் ராஜேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மகேஸ்வரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
10–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் வருகை புரியாதவர்களுக்காக சிறப்பு துணை பொதுத்தேர்வு அடுத்த மாதம் 28–ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 6–ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் மற்றும் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று வருகறி 31–ந்தேதி(புதன்கிழமை) முதல் 3–ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் கணினி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175–ஐ விண்ணப்பிக்கும் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
ஹால் டிக்கெட்
மேலும் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருக்கும். அதன்மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைத்து கண்மாய்களிலும் வண்டல் மணல் எடுத்து தங்களது விளை நிலங்களில் இட்டு மண்வளத்தை பெருக்குவதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம். அந்தந்த வட்டாரத்தில் தங்கள் வயல்களுக்கு அருகில் உள்ள கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விரும்பும் விவசாயிகள் உடனடியாக அந்தந்த வட்டாரத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களிடம் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தங்களது விண்ணப்பங்களை சிட்டா அடங்கலுடன் இணைத்து விண்ணப்பிக்கலாம். தனியார் பட்டா நிலங்களில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றிய இடங்களில் கண்மாய் வண்டல் மண் இடுவதால் நிலத்தின் வளம் அதிகரிக்கப்படுகிறது.
நஞ்சை நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர்(25 டிராக்டர் லோடு ஒரு ஏக்கருக்கு) என்கிற அளவிலும், புஞ்சை நிலங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர்(30 டிராக்டர் லோடு ஒரு ஏக்கருக்கு) என்கிற அளவிலும் வண்டல் மண் எடுக்கலாம். எனவே, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வயலுக்கு தேவைப்படும் வண்டல் மண்ணை இட்டு மண்வளம் அதிகரித்து விளைச்சலை பெருக்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காரைக்குடி:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
மூடப்பட்ட கடைகளுக்கு பதில் கிராமப்புறங்களில் கடைகள் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் காரைக்குடி அருகே மித்ரா வயலில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மாதர் சங்கத்தினர் கடந்த 20-ந் தேதி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கடை மூடப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 8 நாட்களாக நடந்த போராட்டத்தை அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் நேற்று மித்ராவயலில் 9-வது நாளாக போராட்டம் நடந்தது.
பொதுமக்கள் தூக்கு கயிறை கட்டி அதில் தொங்கியவாறு பாவனை செய்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
10-வது நாளான இன்று (28-ந்தேதி) குடிகார கணவனால் மனைவி, குழந்தைகள் எவ்வாறு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்? என்பதை பொதுமக்கள் நடித்துக் காட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி:
காரைக்குடி செட்டிநாடு அருகே உள்ள நங்கப்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகன் அண்ணாமலை (வயது20), கட்டிட தொழிலாளி.
கடந்த ஆண்டு நங்கப்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலையின் 15 வயதுடைய மாமா மகள் வந்திருந்தார். அவரிடம் அண்ணாமலை “நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று ஆசைவார்த்தை கூறினார். இதனால் அண்ணாமலையுடன் அவரது மாமா மகள் நெருக்கமாக இருந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார்.
இதுபற்றி அறிந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சி அடைந்து அண்ணாமலையிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர் அந்த பெண்ணையும், அவரது தாயையும் ஆபாசமாக பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய அண்ணாமலையை கைது செய்தார்.
காரைக்குடி அருகே உள்ள மித்ராவயலில் குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த 19-ந்தேதி முதல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை நடத்தும் பெண்கள் மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்தும் கும்மியடித்தும் ஒப்பாரி பாடல் பாடியும் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெண்கள் நடத்தும் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மாதர் சங்கத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராம பெண்களும் இதில் பங்கேற்றனர்.
நேற்று 6-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவருமான ராமசாமி பங்கேற்றார்.
டாஸ்மாக் கடையை எதிர்த்து நடத்தும் போராட்டத்துக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. இதுதொடர்பாக முதல்வரையும், கலெக்டரையும் சந்தித்து கோரிக்கை வைப்பேன். அதிகாரிகள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
காரைக்குடியை மதுக்கடை இல்லாத தொகுதியாக மாற்றுவதே எனது லட்சியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
7-வது நாளாக இன்றும் மித்ராவயலில் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று இரவு கடை முன்பு தூங்கிய பெண்கள் இன்று மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். டாஸ்மாக் கடையை அகற்றும்வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டம் தொடங்கி ஒரு வாரம் ஆகியும் அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்த முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் காரைக்குடி அருகே உள்ள சிறுவயலில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக கடை திறக்கப்படவில்லை.
காரைக்குடி:
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அனுராதா. இவர்களது மகள் மோனிஷா (வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற மோனிஷா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
காரைக்குடி இடையர் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அர்ச்சனா (22). இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கமுடியில்லை.
இதே போல் காரைக்குடி முத்து ஊரணி பகுதியைச் சேர்ந்த பார்வதி என்பவரின் மகள் முத்து கார்த்திகா (19). வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து பெற்றோர்கள் கொடுத்த புகார்களின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து 3 பெண்களை தேடி வருகிறார்.
காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் வெளிநாட்டு பணத்தை வைத்து சிலர் சூதாடுவதாக டி.எஸ்.பி. கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வடக்கு காவல் நிலைய போலீசார் குறிப்பிட்ட லாட்ஜுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு 15 பேர் கொண்ட கும்பல் மலேசிய நாட்டின் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 936-ம், மலேசிய பணமான 100 வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டன.
சூதாட்டத்தில் ஈடுபட்ட சேவுகன், சுப்பு, வெங்கடேஷ், கார்த்திக்ராஜா, பழனிச்சாமி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டம் நடத்த உடந்தையாக இருந்ததாக லாட்ஜ் மேலாளர் ராஜேசையும் போலீசார் கைது செய்தனர். 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காரைக்குடி கழனி வாசல் அருகே உள்ள உ.சிறு வயல் பகுதியில் குடியிருப்புகளுக்கிடையே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்துவோர் அப்பகுதியில் பிரச்சினை செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியில் நடமாட முடியவில்லை.
இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
உ.சிறுவயலிலும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் மற்றும் ஏராளமானோர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். 3-வது நாளான நேற்று கடை முன்பு திரண்ட பெண்கள் கடையை திறக்கக்கூடாது என்று கோஷமிட்டதோடு, பாரில் இருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து கடை முன்பு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
4-வது நாளாக இன்றும் போராட்டம் நீடிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், நீதிமன்ற உத்தரவை மீறி எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் நாங்கள் தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். எனவே டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும். இதுகுறித்து இன்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
காரைக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி, சத்யா, முத்துமாணிக்கம், உண்ணாமலை, அன்னபூரணி(வயது 36), வள்ளியம்மை, கிருத்திகா, 2 வயது குழந்தை ரோகிணி, அகிலாண்டேஸ்வரி ஆகிய 9 பேர் நேற்று மாலை திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவராயன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக ஒரு காரில் சென்றனர். காரை சுப்பிரமணி ஓட்டிச்சென்றார்.
காரைக்குடியை அடுத்த மானகிரி பை-பாஸ் சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது புதுச்சேரி மறைமலைநகரைச் சேர்ந்த மனோகர்(54), இவருடைய மனைவி மகாலட்சுமி(40), உறவினர்கள் சகுந்தலா, சுகன்யா, சரண்யா, அருண்பிரசாத், பிரபாகரன், குட்ளாயி ஆகிய 8 பேர் மற்றொரு காரில் புதுச்சேரியில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த காரை அருண்பிரசாத் ஓட்டிவந்தார்.
அப்போது காரைக்குடியை சேர்ந்தவர்கள் சென்ற காரின் டயர் வெடித்தது. இதையடுத்து அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே புதுச்சேரியில் இருந்து வந்த காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் காரைக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்த முத்துமாணிக்கம்(15), அன்னபூரணி, ரோகிணி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். புதுச்சேரியில் இருந்து வந்த காரில் இருந்த மனோகர், அவருடைய மனைவி மகாலட்சுமி ஆகியோரும் அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்ற அனைவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






