என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது கீழச்சிவல்பட்டி. இங்குள்ள பெரிய கடை வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணிகள் முடிந்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையை அடைத்துவிட்டு சென்றனர். அப்போது கடை அடைக்கப்பட்டதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் யாரோ கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
நேற்று காலை டாஸ்மாக் கடையை விற்பனையாளர் கண்ணதாசன் திறந்து பார்த்தபோது, கடையினுள் சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பண பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சமும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கண்ணதாசன் உடனடியாக கீழச்சிவல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கடையில் பணம் கொள்ளை போனது குறித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தார்.
மேலும் சிவகங்கைதடயவியல் துறை துணை கண்காணிப்பாளர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர். இதேபோல் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் கதிரேசன், மேலாளர் செல்வராஜ் ஆகியோர் கடையின் இருப்பு குறித்து சரிபார்ப்பு மேற்கொண்டனர். பின்னர் இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறும்போது, கடையின் பின்புறம் உள்ள சுவரில் கொள்ளையர்கள் துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் கடையின் பண பெட்டியில் இருந்த ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்கள் கொள்ளையடித்த பணம், கடந்த 3 நாட்களாக இந்த கடை மூலம் வியாபாரமான தொகையாகும். பணம் கொள்ளையடித்தது மட்டுமின்றி மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
அந்த பெட்டிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் சுவரின் துளை பகுதியில் விழுந்து உடைந்து கிடந்தன என்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). இவர் மதுரை பால்வள துறையில் கூட்டுறவு துணைப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று சிவகங்கையில் நடைபெற்ற கூட்டுறவு துறையில் பணிபுரியும் ஒருவரது இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். திருமணம் முடிந்த பின்னர், திருமணத்திற்கு வந்திருந்த ராமநாதபுரம் பால்வள துறையில் மேலாளராக பணியாற்றி வரும் சோனைக்குமார்(54), எழுத்தர்கள் நீலமேகம்(45), சதீஸ்குமார்(35) மற்றும் வசந்தகுமார்(38) ஆகிய 4 பேருடன், அவர்கள் வந்த காரில் சிவக்குமார் திருக்கோஷ்டியூர் சென்றார். அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர் 5 பேரும் ஊருக்கு செல்வதற்காக திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கார் சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சிவக்குமார், தன்னை மானாமதுரையில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். இந்தநிலையில் அவர்கள் வந்த கார் சிவகங்கையை அடுத்த வாணியங்குடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்து கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சிவக்குமார் உள்பட 5 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்து போனார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி:
மதுரை தெற்குவாசல் மஞ்சணக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 36) கட்டிட தொழிலாளி. இவர், தற்போது காரைக்குடியில் தங்கி பணி செய்து வருகிறார்.
நேற்று இவர் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 4 ரோடு சந்திப்பு பகுதிக்கு மது அருந்த சென்றார். அங்கு அனுமதியின்றி சிலர் மது விற்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ராஜா மது கேட்டபோது அதிக விலை கூறினர்.
இதுகுறித்து அவர் கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தாக காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இளவேனில் விசாரணை நடத்தி கூடுதல் விலைக்கு மது விற்றதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக வாகானுரைச் சேர்ந்த ரகுபதி (27), கொடுங்குளம் இளையராஜா (28) ஆகியோரை கைது செய்தார். மேலும் புதுக்குறிச்சியை சேர்ந்த விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா அலுவலக சாலையில் டீக்கடை நடத்தி வந்தவர் வெள்ளைச்சாமி (வயது26). இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அய்யாபட்டி ஆகும்.
தனது சகோதரனுடன் இணைந்து திருப்பத்தூரில் டீக்கடை நடத்தி வந்தார். கடையின் மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தார்.
நேற்று மதியம் கடையில் இருந்து அறைக்கு சென்ற வெள்ளைச்சாமி அதன் பிறகு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சகோதரர் மாடி அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு வெள்ளைச்சாமி, தூக்கில் பிணமாக தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளைச்சாமி எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை நகர் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை, ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர். இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.வாகைக்குளத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது கால்நடை துறையில் உதவியாளர் பணி வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் தேவைப்படும் என்றும் அண்ணாத்துரை கூறி உள்ளார்.
இதனை நம்பி அந்த பகுதியைச் சேர்ந்த கார்த்திக் உள்பட 13 பேர் பல்வேறு தவணைகளில் ரூ.26 லட்சத்து 53 ஆயிரம் கொடுத்தனர்.
பணம் வாங்கி மாதங்கள் பல ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது அண்ணாத்துரை சரியான பதில் அளிக்கவில்லை.
இதனையடுத்து கார்த்திக் உள்பட பாதிக்கப்பட்ட 13 பேர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர். அதில், வேலை வாங்கித்தருவாக கூறி அண்ணாத்துரை பண மோசடி செய்ததாகவும், இதற்கு உடந்தையாக அவரது நண்பர் ரவிச்சந்திரன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா, தைமை காவலர்கள் வெள்ளைச்சாமி, முத்துராமலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அண்ணாத்துரையை கைது செய்தனர். ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள மேல ஆவணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லதா (வயது 48). இவரது மகள் சவுந்தர்யா (20).
இவர், திருப்பத்தூரில் உள்ள கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி சவுந்தர்யா வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார்.
அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடு உள்பட பல இடங்களிலும் பெற்றோர் தேடினர். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து நாச்சியார்புரம் போலீசில், லதா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து மாயமான சவுந்தர்யாவை தேடிவருகிறார்.
சிவகங்கை:
இளையான்குடி தாலுகா முள்ளியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான்சி. இவர், வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய ஆரோக்கிய ஜான்சி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிக் கிடந்ததால் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து இளையான்குடி போலீசில், ஆரோக்கிய ஜான்சி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பீரோவில் இருந்த 4¾ புவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக ஆரோக்கிய ஜான்சி தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள முத்தூரணியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 35). இவரது நண்பர் முருகானந்த். இவர்கள் 2 பேரும் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள். நகையை விற்க இவர்கள் வெளியூர் சென்று வருவது வழக்கம்.
அதன்படி நேற்று ஹரிபிரசாத், முருகானந்த் ஆகியோர் காரில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு சென்று நகைகளை விற்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அறந்தாங்கியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் ஹரிபிரசாத்துக்கு தலையில் காயம் ஏற்பட்டது. முருகானந்த் காரிலேயே மயங்கினார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல், கார் கவிழ்ந்து கிடப்பதை பார்த்து நிறுத்தியது. அவர்கள் விபத்துக்குள்ளான காரின் அருகே சென்று பார்த்தபோது உள்ளே 2 பேர் காயங்களுடன் கிடந்துள்ளனர். மேலும் காரில் நகை, பணம் இருந்துள்ளதையும் பார்த்தனர்.
உடனே அந்த கும்பல் காரைக்குடியில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி நகை, பணத்துடன் 2 பேரையும் காரில் ஏற்றிக் கொண்டு சென்றது.
அவர்கள் மெயின்ரோடு வழியாக செல்லாமல் காட்டுப்பகுதி வழியாக சென்றனர். இதனால் ஹரி பிரசாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.
காரைக்குடி அருகே உள்ள புதுவயல் கண்டனூர் காட்டுப்பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது ஹரிபிரசாத் நகை, பணத்துடன் திடீரென்று கார் கதவை திறந்து கொண்டு வெளியே குதித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கும்பல் காரை நிறுத்தியது. ஹரிபிரசாத் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் இறங்கி ஹரிபிரசாத்தை பிடித்தது.
பின்னர் அவரை கட்டையால் அந்த கும்பல் தாக்கியது. இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு அவரை மட்டும் விட்டு விட்டு, முருகானந்தத்தை அவர்கள் காரில் கடத்தி சென்றனர்.
காயங்களுடன் இருந்த ஹரிபிரசாத் அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் காரைக்குடிக்கு வந்தார். அவர் சாக்கோட்டை போலீசில் நடந்த விபரத்தை கூறினார். 41 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கத்துடன் முருகானந்தத்தை மர்ம கும்பல் கடத்தி சென்றதாக தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து நகை, பணத்துடன் வியாபாரியை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டிவதைத்தது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.
சிவகங்கை நகரில் மாலை 5 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை, சிறிது நேரத்தில் மிதமாக பெய்தது. 2 மணி நேரம் பெய்த தொடர் மழை காரணமாக நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது.
வெயில் வாட்டிவதைத்த நிலையில் திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் காளையார் கோவில், மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.
திருப்பத்தூரில் மழை பெய்ததால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்தடையும் ஏற்பட்டது. கோடைமழை தமிழகம் முழுவதும் பெய்துவரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தை ஏமாற்றி வந்த மழை திடீரென பெய்ததையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை நகரில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து காற்று வீசியது. நகரில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மழை வரும் எனறு எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதேநேரம் புறநகர் பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் எழில் நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வினோதினி (வயது 28). இவர் நேற்று பள்ளத்தூர் சிவன் கோவிலில் நடைபெற்ற வைகாசி திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை பெறுவதற்காக வினோதினி வரிசையில் நின்றார்.
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த 65 வயது மூதாட்டி நைசாக அவரது கைப்பையை திருடினார். அதில் 6 பவுன் நகை இருந்தது.
வினோதினி கைப்பையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அருகில் நின்றிருந்த மூதாட்டியை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் கைப்பை இருந்தது. இதனையடுத்து பொது மக்கள் மூதாட்டியை பள்ளத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சென்னை ஆவடியைச் சேர்ந்த வசந்தா என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவரது மனைவி விஜயலட்சுமி (26). இவர்களுக்கு அபிஸ்ரீ (5) என்ற மகளும், அபிஸ் (3) என்ற மகனும் உள்ளார்.
சம்பவத்தன்று விஜய லட்சுமி, 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் சென்றார். அதன் பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், அன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் தங்கியிருந்து பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகள் அமுதா (22). எம்.எஸ்.சி முடித்துள்ள இவர் வேலை தேடி வந்தார். இந்நிலையில் கடைக்கு சென்றுவிட்டு வருவதாக சென்ற அமுதா அதன்பின்னர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் பயன் இல்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் காளையார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.
சிவகங்கை நகர் ராஜ சேகரன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). இவர் பாகனேரியில் உள்ள அரசு வேளாண் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இதே அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் முத்துமணி (59). இவர் கிருஷ்ணன் வீட்டின் அருகில் வசித்து வந்தார்.
நேற்று இரவு கிருஷ்ணனும், முத்துமணியும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். ஒக்கூர் அருகே வந்து கொண்டு இருந்த போது எதிரே வந்த கார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த முத்துமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கிருஷ்ணனை அப்பகுதியினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் இறந்தார்.
விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் டி.புதூரை சேர்ந்த சுந்தரபாண்டியனை தேடி வருகிறார்.






