என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை அருகே கோவில்மாடு திடீரென்று இறந்ததால் 6 கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா, ஒக்கப்பட்டியில் மந்தை கருப்பணசாமி கோவில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இக்கோவிலுக்கு கிராம மக்கள் சார்பில் காளை மாடு வளர்க்கப்பட்டு வந்தது.

    ஒக்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பிராடேந்தல்பட்டி, மாணிக்கம்பட்டி, வி. புதுப்பட்டி, தேவன் பெருமாள் பட்டி, நல்லாண்டிபட்டி ஆகிய 6 கிராம மக்கள் காளையை மூத்த பிள்ளையாக நினைத்து வளர்த்து வந்தனர்.

    மந்தை சாமி மாடு என்று அழைக்கப்படும் இந்த காளைமாட்டை கட்டிப்போடுவதில்லை. வீடு வீடாக சென்று கிராம மக்கள் தரும் பழம், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம்.

    மேலும் வயலில் மேய்ந்தாலும் இந்த மாட்டை விரட்டி அடிக்க மாட்டார்கள். யாரையும் மாடு குத்தாது. அவ்வாறு கிராம மக்களுடன் பாசமாக பழகி வந்த மாடு நேற்று பிற்பகல் திடீரென்று மயங்கி விழுந்தது. கால்நடை மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் மாடு இறந்தது தெரியவந்தது.

    மாடு இறந்ததால் 6 கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினர். தங்களது வீட்டில் துயர சம்பவம் நடந்ததாக கருதுகிறார்கள். இறந்த காளைமாட்டின் உடல் அலங்கரிக்கப்பட்டு நாடக மேடையில் கோவில் முன்பு வைக்கப்பட்டது. நேற்று முதல் காலை வரை 6 கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து வழிபட்டனர்.

    பின்னர் நேற்று காலை காளைமாடு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி கட்டப்பட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கடவுளாக நினைத்து வழிபட உள்ளனர்.

    மேலும் ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் 27-ந் தேதி முதல் மந்தை கருப்பணசாமி கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெறும். கோவில் மாடு இறந்ததால் இந்த ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு தான் திருவிழாவை நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    தற்போது கோவிலுக்கு புதிதாக காளை கன்றுக்குட்டி வாங்கி உள்ளனர். காளை மாட்டினை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, கிராம அம்பலக்காரர்கள், 5 கிராம மக்கள் கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர்.

    பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கோர்ட்டில் விசாரணை நடக்கும்போது கொண்டுவர உத்தரவிடப்பட்டு உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு விபத்துகள் மற்றும் சமூக விரோத செயல்களின் போது போலீசாரிடம் பிடிபடும் வாகனங்கள், திருட்டு சம்பவ வழக்குகளில் பிடிபடும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் மாவட்டத்தில் உள்ள அந்ததந்த போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த வாகனங்களை வழக்குகள் முடியாததால் நீண்ட காலமாக அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்தது. இதனால் அந்த வாகனங்களை கோர்ட்டு அனுமதியுடன் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு தேவைப்படும்போது மீண்டும் கொண்டு வரும்படி சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் தெரிவித்து அந்த வாகனங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து சிவகங்கை நகர், சிவகங்கை தாலுகா மற்றும் மதகுபட்டி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட 4 கார் மற்றும் 18 மோட்டார் சைக்கிள் உள்பட 22 வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தணிகைவேலு, துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விஜயகுமார், மாசிலாமணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    மானாமதுரையில் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ டிரைவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

    மானாமதுரை:

    மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வசித்து வந்தவர் கதிரேசன் (வயது 33). ஆட்டோ டிரைவரான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்னர்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சி னை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று தகராறு ஏற்பட சாந்தி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் விரத்தியுடன் காணப்பட்ட கதிரேசன் சவாரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வீடு பூட்டியே கிடந்தது.

    இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் மானாமதுரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது கதிரேசன் இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவி பிரிந்து சென்ற காரணத்தால் வெறுப்படைந்த கதிரேசன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சிதரவதை செய்த ரியல் எஸ்டேட் அதிபர் 2-ம் திருமணம் செய்ததால் கைது செய்யப்பட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள என்.புதூரைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி பாண்டியன் (வயது 42) ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லீலாவதி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து லீலாவதி வசித்து வந்தார். இந்த நிலையில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் லீலாவதி புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனக்கு திருமணத்தின் போது 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. சில ஆண்டுகளில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் சிரஞ்சீவி பாண்டியன் சித்ரவதை செய்தார். இதனால் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்தேன்.

    இந்த சூழலில் கணவர் சிரஞ்சீவி பாண்டியன், பாண்டிச்செல்வி என்பவரை எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்தி சிரஞ்சீவி பாண்டியன், அவரது சகோதரிகள் மீனா, கருப்பாயி, தந்தை மணி, உறவினர் சுப்பிரமணியன், 2-வது மனைவி பாண்டிச் செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து சிரஞ்சீவி பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
    திருப்பத்தூர் அருகே பைக் மீது கார் மோதியதில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பலியாகினர். மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிம்மனப்புதூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 17). இவரும், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் தருண் (17) என்பவரும் நண்பர்கள். இருவரும், அங்கு உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் 2 பேரும் பைக்கில் திருப்பத்தூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். பைக்கை தருண் ஓட்டினார். சிம்மனபுதூர் கூட்ரோடு அருகே வந்த போது, திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற கார் மோதியது.

    விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. இதில், மாணவன் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய தருண், தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தருணும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2-ஆனது. விபத்து குறித்து, திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற காரை தேடி வருகிறார்கள். 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


    முன் விரோதத்தில் வாலிபரை தாக்கி ரூ. 1 லட்சம்- 13 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற உறவினர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    மானாமதுரை தாலுகா கே. ஆலங்குளத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 36). இவருக்கும் புரசைஉடைப்பை கிராமத்தைத் சேர்ந்த உறவினர் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

    இந்நிலையில் சேகர், தனது மகளுக்கு காதணி விழாவை வீட்டில் நடத்தினார். அப்போது அங்கு வந்த ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொத்தன், ஆறுமுகம், கணேசன் ஆகியோர் ராஜாவிடம் தகராறு செய்தனர்.

    இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் ராஜாவை சரமாரியாக தாக்கினர். மேலும் வீட்டில் இருந்த ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம், 13 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பினர்.

    தாக்குதலில் காயம் அடைந்த சேகர் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    புகாரின் பேரில் மானாமதுரை சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரக்கத்துல்லா வழக்குப்பதிவு செய்து ராஜா உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

    சிவகங்கையில் மாயமான மாணவிகளை குறித்து குழந்தைகள் நல காப்பாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவிகளை தேடி வருகிறார்கள்.
    சிவகங்கை:

    காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள்கள் கற்பகம் (வயது 15), பாகம்பிரியாள் (13).

    இவர்கள் 2 பேரும், சிவகங்கையில் உள்ள அரசு விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். கற்பகம் 10-ம் வகுப்பும், பாகம்பிரியாள 7-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று சகோதரிகள் 2 பேரும் வழக்கம்போல் விடுதியில் இருந்து பள்ளிக்கு செல்வ தாக கூறிவிட்டு சென்றனர். அதன்பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் விடுதிக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

    இதுகுறித்து குழந்தைகள் நல காப்பாளர் ஜெயப் பிரகாஷ் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவிகளை தேடி வருகிறார்கள்.

    தேவகோட்டையில் பட்டதாரி பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்தவர் அமுதா. இவரது மகள் புஷ்பகலா தேவி (வயது 21). பி.ஏ. முடித்துள்ள இவர், வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த புஷ்பகலா தேவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பலன் இல்லை.

    இது குறித்து அமுதா தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்.

    காரைக்குடி அருகே துப்பாக்கியுடன் காரில் 5 பேர் பிடிபட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    துப்பாக்கியுடன் காரில் வந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியை அடுத்த செட்டிநாடு போலீஸ் சரகத்துக்குட்பட்ட நேமத்தான் பட்டியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது.

    இங்கு அந்த வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்வது வழக்கம். இன்று அதிகாலையும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 5 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்தது போலீஸ் சோதனையில் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, துப்பாக்கி வைத்திருந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் கம்பர் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது38) என தெரியவந்தது.

    அவர் அங்குள்ள ஒரு வங்கியில் காவல் பணி செய்வதாகவும், துப்பாக்கியை சர்வீஸ் செய்வதற்காக மதுரை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

    இருப்பினும் மதுரை செல்வதற்கு வேறு வழி இருக்கும்போது இந்த பாதையில் ஏன் வந்தீர்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துப்பாக்கியுடன் வந்தவர்கள் வேட்டையாடும் நோக்கத்தில் வந்திருக்கலாம்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துப்பாக்கியுடன் 5 பேர் பிடிபட்ட சம்பவம் காரைக்குடி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரைக்குடி அருகே பிரசவத்தில் குழந்தை இறந்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி புதுவயல் அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் புண்ணிய குமார் (வயது 28). ஊர்க்காவல் படை வீரர். இவரது மனைவி தேவிகா (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேவிகாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. அவரை புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனு மதித்தனர். அங்கு இன்று அதிகாலை 3 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    சிறிது நேரத்தில் அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது.

    இந்த தகவல் புண்ணிய குமாரின் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பிரசவத்தின்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை என்றும், செவிலியரே பிரசவம் பார்த்தார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
    சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்டோர் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் மலர்விழி தகவல் தெரிவித்தார்.
    சிவகங்கை:

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், (டாப்செட்கோ), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இனத்தவர்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் வகையில் தொழில் செய்திட பல்வேறு திட்டங்களின் கீழ் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது.

    கடன் உதவி பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98,000/- மற்றும் ரூ.1,20, 000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    விண்ணப் படிவம் பெற மற்றும் கடன் திட்டங்கள் குறித்த விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்:-

    சென்னை அண்ணா சாலையில் உள்ள டாப் செட்கோவின் தலைமை அலுவலகம்.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (மண்டல மேலாளர், டாப்செட்கோ)

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்.

    சிவங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
    உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தையொட்டி முதியோர்களின் தேவைகளை உணர்ந்து முக்கியத்துவம் அளிப்போம் என சிவகங்கை கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தையொட்டி சிவகங்கை கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அவர்கள் பாதுகாப்பான, கெளரவம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதற்காகவும், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அவர்களது நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. முதியோர் நலன் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சட்டங்களின் அடிப்படையில் மற்றும் தமிழக அரசின் முதியோர் நல கொள்கைகளின் அடிப்படையின்படி, பல்வேறு திட்டங்களையும் ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் நடத்துதல், அரசு தற்பொழுது செயல்படுத்தி வருகிறது.

    முதியோர் மனோரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வளர்ந்து வரும் மக்கள் தொகை, உடைந்து போன கூட்டுக்குடும்பம், பொருளாதார பற்றாக்குறை மற்றும் மேல் நாட்டு கலாசாரத்தின் சீரழிவு போன்றவை முதியவர்களின் மீதான அக்கறையை குறைக்கின்றது.

    ஆகவே நாம் முதியவர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் அளித்திட இந்த முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாளில் நாம் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட செயல்களால் முதியோருக்கு உதவிட சூளுரை ஏற்போம்.

    முதியோர்களிடம் கோபத்தையும், தகாத வார்த்தைகளால் பேசுவதையும் தவிர்ப்போம்.
    முதியோர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தால் தட்டி கேட்போம்.
    முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு செவி கொடுப்போம்.
    முதியோர்களை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்துவதை தவிர்ப்போம்.
    முதுமை காலத்தில் முதியோர்களின் நலனில் அக்கறை காட்டுவோம்.

    முதியோர்களுக்கு பேருந்து, மருத்துவமனை, வங்கி மற்றும் அனைத்து இடங்களிலும் முன்னுரிமை அளிப்போம்.
    முதியோர்களிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவோம்.

    முதியோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் முதியோர்கள் கட்டணமில்லா 1253 என்ற உதவி எண் தொலைபேசி சென்னையிலும், 1800-800-1253 என்ற தொலைபேசி ஏனைய தமிழகத்திலும் சட்டம் மற்றும் மருத்துவ உதவி, முதியோர் இல்லங்களில் சேர்க்கை, முதியோர் பாதுகாப்பு சட்டம் 2007 பற்றிய தகவல்கள் பெற உதவலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×