என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே கோவில் மாடு திடீர் பலி: 6 கிராம மக்கள் துக்கம்
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா, ஒக்கப்பட்டியில் மந்தை கருப்பணசாமி கோவில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இக்கோவிலுக்கு கிராம மக்கள் சார்பில் காளை மாடு வளர்க்கப்பட்டு வந்தது.
ஒக்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பிராடேந்தல்பட்டி, மாணிக்கம்பட்டி, வி. புதுப்பட்டி, தேவன் பெருமாள் பட்டி, நல்லாண்டிபட்டி ஆகிய 6 கிராம மக்கள் காளையை மூத்த பிள்ளையாக நினைத்து வளர்த்து வந்தனர்.
மந்தை சாமி மாடு என்று அழைக்கப்படும் இந்த காளைமாட்டை கட்டிப்போடுவதில்லை. வீடு வீடாக சென்று கிராம மக்கள் தரும் பழம், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம்.
மேலும் வயலில் மேய்ந்தாலும் இந்த மாட்டை விரட்டி அடிக்க மாட்டார்கள். யாரையும் மாடு குத்தாது. அவ்வாறு கிராம மக்களுடன் பாசமாக பழகி வந்த மாடு நேற்று பிற்பகல் திடீரென்று மயங்கி விழுந்தது. கால்நடை மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் மாடு இறந்தது தெரியவந்தது.
மாடு இறந்ததால் 6 கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினர். தங்களது வீட்டில் துயர சம்பவம் நடந்ததாக கருதுகிறார்கள். இறந்த காளைமாட்டின் உடல் அலங்கரிக்கப்பட்டு நாடக மேடையில் கோவில் முன்பு வைக்கப்பட்டது. நேற்று முதல் காலை வரை 6 கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து வழிபட்டனர்.
பின்னர் நேற்று காலை காளைமாடு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி கட்டப்பட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கடவுளாக நினைத்து வழிபட உள்ளனர்.
மேலும் ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் 27-ந் தேதி முதல் மந்தை கருப்பணசாமி கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெறும். கோவில் மாடு இறந்ததால் இந்த ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு தான் திருவிழாவை நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தற்போது கோவிலுக்கு புதிதாக காளை கன்றுக்குட்டி வாங்கி உள்ளனர். காளை மாட்டினை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, கிராம அம்பலக்காரர்கள், 5 கிராம மக்கள் கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர்.






