என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள சுனை நீரில் மூழ்கி பிளஸ்–1 மாணவிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி முத்துவடுகசாமி நகரை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் ஆஷா(வயது 16). தேத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் நிஜாமைதீன் மகள் ரிமாஷாபானு(16). இவர்கள் 2 பேரும் சிங்கம்புணரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தனர். மாணவிகள் 2 பேரும் பிரான்மலையில் நடைபெற்ற கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றனர். இவர்களுடன் மேலும் 3 பெண்கள் சென்றனர்.

    பிரான்மலையில் உள்ள மலை மீது இருக்கும் மசூதிக்கு மாணவிகள் உள்பட 5 பேரும் சென்றுள்ளனர். அங்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக ரிமாஷாபானு மற்றும் ஆஷா ஆகியோர் ஒதுங்கினர். இதனால் அவர்களுடன் வந்த மற்ற 3 பெண்கள் மசூதிக்கு சென்று வழிபட்டுவிட்டு திரும்பினர். ஆனால் வெகு நேரமாகியும் ரிமாஷாபானுவும், ஆஷாவும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற பெண்கள், இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல் மாணவிகள் காணாததது குறித்து சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ரகு தலைமையிலான போலீசார், உலகம்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை, எஸ்.வி.மங்கலம், புழுதிப்பட்டி ஆகிய நிலையங்களில் உள்ள போலீசாரும் பிரான்மலையில் ஏறி மாணவிகளை தேடினர். சுமார் 2 மணி நேரம் போலீசார் மாணவிகள் குறித்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

    பின்னர் பிரான்மலையில் உள்ள ஒரு சுனை நீரில் ஆஷாவும், ரிமாஷாபானுவும் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிங்கம்புணரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

    இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகள் பாறையில் வழுக்கி சுனையில் விழுந்து இறந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வருவாய்த்துறையினர் மோதலில் தாசில்தார்கள் 2 பேரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் மலர்விழி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் வருவாய் அலுவலர் சங்கத்தினர் இரு தரப்பினராக உள்ளனர். இதில் ஒரு பிரிவினர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் என்றும், மற்றொரு பிரிவினர் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (விடியல்) என்றும் செயல்பட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையைச் சேர்ந்த இரு சங்கத்தினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதலால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    தாக்குதல் குறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பைச் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் மோதலில் ஈடுபட்டதாக வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தை (விடியல்) சேர்ந்த தாசில்தார்கள் பாலாஜி, பாலகுரு ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் மலர்விழி அதிரடி உத்தர விட்டுள்ளார்.

    இதற்கிடையே மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும், பொய் வழக்கை திரும்ப பெறக்கோரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறையினரின் இந்த போராட்டத்தால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

    மானாமதுரை பைபாஸ் ரோட்டில் ரெயில்வே நிர்வாகம் காலதாமதம் செய்வதால் மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
    மானாமதுரை:

    மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை–பரமக்குடி இடையே 9 மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் மதுரை–ராமேசுவரம் அகல ரெயில் பாதையின் குறுக்கே கட்டப்படும் பாலமும் ஒன்று. ஒரு கி.மீ. தூரம் கொண்ட இந்த பாலம் கட்டுமான பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. தற்போது பாலம் கட்டுமான பணியில் ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சாலையின் இருபுறமும் உள்ள மரங்களை அகற்றினால் தான் எந்தவித இடையூறும் இன்றி பாலம் கட்ட முடியும். ஆனால் அந்த மரங்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளன.

    இதனால் ரெயில்வே நிர்வாகத்திற்கு, பாலம் பணிகள் நடப்பதால் மரங்களை வெட்ட வேண்டும் என்று தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கடிதம் அனுப்பியது. ஆனால் இதுவரை மரங்களை அகற்றுவதற்கான அனுமதியை ரெயில்வே நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் மரங்களுக்கு மத்தியில் பெரும் இடையூறுகளுடன் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    இத்துடன் பணிகள் பாதிக்கப்பட்டு, பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. ராட்சத தூண்களுக்காக இரும்பு கம்பி வளைவு அமைக்க முடியாமலும், சாரம் அமைக்க முடியாமலும் தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே பைபாஸ் ரோட்டில் பாலம் அமையும் இடத்தின் இருபுறமும் உள்ள மரங்களை அகற்றி பணிகள் விரைந்து நடைபெற ரெயில்வே நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருப்பத்தூரில் கணவன் இறந்த சோகத்தில் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 73), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி செல்வி (58). இவர்களுக்கு கோபி என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென முருகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு முருகேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி சோகமாக காணப்பட்டார். மேலும் யாரிடமும் பேசாமல் பித்து பிடித்தது போல வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வி நேற்று காலை வீட்டில் உள்ள கிணற்றில் குதித்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி செல்வியை உயிருடன் கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்வி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவர் இறந்த சோகத்தில் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் சாதி, மத கலவரத்தை ஏற்படுத்தி பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது என்று காரைக்குடியில் நடைபெற்ற விழாவில் தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.
    காரைக்குடி:

    திராவிட கழகம் சார்பில் தென் மாவட்டங்களுக்கான பெரியாரியல் பயிற்சி முகாம் காரைக்குடியில் நடைபெற்றது. இந்த முகாமில் 80 மாணவ–மாணவிகள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி முகாம் நிறைவு விழாவிற்கு தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அரங்கசாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்னாரஸ் பிராட்லா வரவேற்று பேசினார். தி.க. பொதுச் செயலாளர் சந்திரசேகரன், மாநில துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவின்போது கி.வீரமணி தனது சிறப்புரையில் கூறியதாவது:–

    ஒற்றை கட்சி, ஒற்றை ஆட்சி அமைப்பது தான் ஆர்.எஸ்.எஸ். நோக்கம். அந்த அடிப்படையில் ஒற்றை வரியையும் கொண்டு வந்துள்ளனர். நோக்கம் சிறந்ததாக இருந்தாலும், இதைப்பற்றி தெளிவுபடுத்த உரிய அவகாசம் தேவை. இதனுடைய விளைவுகள் வெற்றி தருமா என்பது கேள்விக்குறியே. தமிழகத்தில் ஆட்களே இல்லாத கட்சியாக, மிஸ்டுகால் கொடுக்கும் கட்சியாக இருந்து கொண்டு கழகங்கள் இல்லாத தமிழகம் என்று பா.ஜ.க. சொல்லக்கூடாது. குடியரசு தலைவர் தேர்தலில் கழகங்களின் ஓட்டு தேவையென்று தேடி வருகிறார்கள். இதற்கு மட்டும் கழகங்கள் தேவையா.

    பசுவுக்கு கொடுக்கும் பாதுகாப்பு மனிதர்களுக்கு இல்லை. கடும் எதிர்ப்புக்கு பிறகு வேறு வழியில்லாமல் பிரதமர் மோடியே ஒப்புக்காக கண்டித்துள்ளார். பசுவின் மூலம் ஏராளமான கலவரம் நடக்கிறது என்று மோடியே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். சாதி, மத கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முயற்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஏலகிரி மலையில் தேக்கு மரங்களை வெட்டி போலீஸ் வேனில் கடத்திய 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஏலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் கோட்டூர் என்ற பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நச்சுத் காப்புக் காடு உள்ளது.

    இதில் சந்தன மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் உள்பட பல்வேறு வகை மரங்கள் ஏராளமாக அடர்ந்து வளர்ந்துள்ளன.

    நச்சுத் காப்புக் காட்டில் நள்ளிரவு 1 மணியளவில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, வனவர் பரமசிவம் தலைமையில் உதவி வன பாதுகாவலர் முகம்மது ரபீக், வனவர்கள் பிரபு, பரந்தாமன் உள்ளிட்ட வனத்துறையினர் ஏலகிரி மலைக்கு விரைந்து சென்றனர்.

    காப்புக் காட்டிற்குள் வனத்துறையினர் நுழைந்த போது, ஆயுதப்படைக்கு சொந்தமான போலீஸ் வேன் நின்று கொண்டிருந்தது. 10-க்கும் மேற்பட்ட கும்பல், தேக்கு மரங்களை வெட்டி போலீஸ் வேனில் அடுக்கி கடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.

    வனத்துறையினர் நெருங்கி சென்றபோது, மரங்களை வெட்டிய கும்பல் தலைத்தெறிக்க தப்பி ஓட முயன்றது. வனத்துறையினர் விரட்டியதில் 2 பேர் மட்டுமே பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.

    பிடிபட்டவர்கள் ஏலகிரி மலை நிலாவூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வேல்முருகன் (வயது 28), தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளபட்டி கிராமத்தை சேர்ந்த பால கிருஷ்ணன் மகன் தம்பிதுரை (27) என்பது தெரியவந்தது.

    இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆயுதப்படை பிரிவு 7-வது பட்டாலியனில் போலீஸ்காரர்களாக பணியாற்றுகிறார்கள்.

    காவல்துறைக்கு தேவையான தேக்கு மரங்களை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரிலேயே வெட்டியதாக கூறி வனத்துறையினரிடம் அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    வனத்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டுவதற்கு காவல் துறைக்கு அதிகாரம் இல்லை. மரங்களை வெட்ட சொன்ன அதிகாரி யார்? நள்ளிரவில் மரங்களை வெட்டியது ஏன்? என்று கேட்டு வனத்துறையினரும் பதிலுக்கு வாக்குவாதம் செய்தனர்.

    பதில் அளிக்க முடியாமல் திணறிய 2 போலீஸ்காரர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், பிடிபட்ட போலீஸ்காரர் வேல்முருகனின் வீடு ஏலகிரி மலையில் இருப்பதால், அவர் மூலமே தேக்கு மரங்களை வெட்டி கடத்த திட்டமிட்டுள்ளனர்.

    ஆயுதப்படையில் தன்னுடன் பணிபுரியும் தம்பிதுரையிடம், சந்தன மற்றும் தேக்கு மரங்களை கடத்தி விற்றால் மாத சம்பளத்தை விடமும் அதிக பணம் கிடைக்கும். சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று வேல்முருகன் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    பணத்திற்கு ஆசைப்பட்டு தம்பிதுரையும் மரங்களை கடத்துவதற்கு ஒப்புக் கொண்டார். நேற்றிரவு பணி நேரம் முடிந்தவுடன், உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் போலீஸ் வேனை 2 பேரும் ஏலகிரிக்கு ஓட்டி வந்தனர். போலீஸ் வேனில் மரங்களை கடத்தினால் யாருக்கும் சந்தேகம் வராது.

    வழியில் வனத்துறையினரோ? அல்லது போலீசாரோ? மடக்கி சோதனை செய்ய மாட்டார்கள் என்று நினைத்தனர்.

    மரங்களை கடத்துவது போலீஸ்காரர்கள் என்பதால் 10-க்கும் மேற்பட்டோர் கூட்டு சேர்ந்தனர். சந்தன மரங்களை கடத்த முயன்றனர். ஆனால் இவர்கள் கண்ணில் தேக்கு மரங்கள் மட்டுமே தென்பட்டன. இதையடுத்து கட்டர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தேக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

    சுமார் 2 டன் எடையுள்ள தேக்கு மரங்களை 40 துண்டுகளாக வெட்டி போலீஸ் வேனில் அடுக்கி கடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்தபோது, வனத்துறையினரிடம் சிக்கி கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீஸ்காரர்கள் வேல்முருகன் மற்றும் தம்பிதுரையை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய போலீஸ் வேனும், 2 டன் தேக்கு மரங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், தப்பி ஓடிய கும்பல் ஏலகிரியை சேர்ந்த கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் வேல்முருகனின் உறவினர்களா? அல்லது ஆயுதப்படையை சேர்ந்த போலீசாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, 2 பேரையும் குடியாத்தம் சப்-கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் ஏலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏலகிரி மலையில் தேக்கு மரங்களை வெட்டி போலீஸ் வேனில் கடத்தியது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் கோட்டூர் என்ற பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நச்சுத் காப்புக் காடு உள்ளது. இதில் சந்தன மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் உள்பட பல்வேறு வகை மரங்கள் ஏராளமாக அடர்ந்து வளர்ந்துள்ளன.

    நச்சுத் காப்புக்காட்டில் நள்ளிரவு 1 மணியளவில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் ஏலகிரி மலைக்கு விரைந்து சென்றனர்.

    காப்புக் காட்டிற்குள் வனத்துறையினர் நுழைந்த போது, ஆயுதப்படைக்கு சொந்தமான போலீஸ் வேன் நின்றிருந்தது. 10-க்கும் மேற்பட்ட கும்பல், தேக்கு மரங்களை வெட்டி போலீஸ் வேனில் அடுக்கி கடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.

    வனத்துறையினர் 2 பேரை பிடித்தனர். 8-க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடி விட்டனர். விசாரணையில், ஏலகிரி மலை நிலாவூரை சேர்ந்த வேல்முருகன் (வயது 28), பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளபட்டியை சேர்ந்த தம்பிதுரை (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    பிடிபட்ட 2 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆயுதப்படை பிரிவு 7-வது பட்டாலியனில் போலீஸ்காரர்களாக பணி புரிவது தெரியவந்தது. போலீஸ் வேனில் தேக்கு மரங்களை கடத்தினால், யாருக்கும் சந்தேகம் வராது என்று திட்டமிட்டுள்ளனர்.

    போலீஸ்காரர்கள் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர், 2 டன் தேக்கு மரக்கட்டைகளை போலீஸ் வேனுடன் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் ஏலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பால் பணவீக்கம் ஏற்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    காரைக்குடி:

    நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இன்று காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை நாடு முழு வதும் அமல்படுத்தி உள் ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் முன்னோடி காங்கிரஸ் கட்சிதான். தற் போது அமலுக்கு வந்து இருப்பது ஜி.எஸ்.டி. அல்ல. வரி விதிப்பு முறைகளில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன.

    பல பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் வரவில்லை. அதாவது 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பொருளாதாரம் ஜி.எஸ்.டி.க்குள் வரவில்லை. இதனால் பழைய வரி முறையும், புதிய வரி முறையும் அமலில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் போன்றவை ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் வரவில்லை. ரியல் எஸ்டேட்டும் பாதி உண்டு. பாதி இல்லை.

    இந்திய பொருளாதாரத்தில் பெட்ரோலிய பொருட்கள், மின்சாரத்தை ஒதுக்கி வைத்த பின்னரும் 40 சதவீதம் பொருளாதாரம் ஜி.எஸ்.டி.க்குள் வரவில்லை.

    ஒரு நாடு, ஒரு பொருளாதாரம், ஒரு வரி விதிப்பு என்று சொல்லிவிட்டு பழைய வரி முறையும், புதிய வரி முறையும் கலந்துள்ளன. பழைய வரி முறை மாறி, புதிய வரி முறைகள் வந்ததாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    எல்லாவற்றுக்கும் மேலாக அதிக லாபம் ஈட்டக்கூடாது. அதை மேற்பார்வை செய்வதற்கு அதிகார மையத்தை உருவாக்கப் போகிறர்கள். இதைவிட மோசமான ஒரு சரத்து மசோதாவில் இருக்க முடியாது.


    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக சிறு-குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் விளைவுகள் போகபோகத்தான் தெரியும். கண்டிப்பாக பணவீக்கம் ஏற்படும். இதை மத்திய அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பது தெரியவில்லை. 80 சதவீத பொருட்களின் விலை உயரும். சந்தை பொருளாதாரம் பற்றி அறியாமல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தி உள்ளது.

    தற்போது 90 சதவீத வியாபாரிகள் மாநில அரசின் கட்டுபாட்டுக்குள் இருக்கிறார்கள். 10 சதவீத வியாபாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஒரு மாநிலத்தில் தொழில் செய்யும் வியாபாரி 36 வரி தாக்கல்களையும், வேறு மாநிலங்களில் தொழில் செய்பவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 36 வரி தாக்கல்களை செய்ய வேண்டும். இதற்கே தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும். இதுவே மிகப்பெரிய குறைபாடு.

    எந்த அரசு எந்த வியாபாரியை கண்காணிக்கும் என்று தெரியவில்லை. சமரசம் என்ற பெயரில் கீழ்தரமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காரைக்குடியில் கரும்புச்சாறு எந்திரத்தில் பெண்ணின் கைவிரல்கள் சிக்கியதால் வலி தாங்க முடியாமல் துடித்தது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

    காரைக்குடி:

    காரைக்குடி செஞ்சை அவ்வையார் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மனைவி ஆதம்மை(52) இருவரும் காரைக்குடி கீழவூரணி பகுதியில் கரும்புச்சாறு கடை நடத்தி வருகின்றனர்.

    நேற்று மதியம் கரும்புச்சாறு தயாரிக்கும்போது ஆதம்மையின் வலது கை விரல்கள் எந்திரத்தின் நடுவில் சிக்கிக்கொண்டன.தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் பல்வேறு முயற்சி செய்தும் கையை மீட்க முடியவில்லை. 108 ஆம்புலன்சில் வந்த செவிலியர் வலி தெரியாமல் இருக்க அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் இருந்து ஊசி எடுத்துவந்து செலுத்தினார். பின்னர் கட்டர் மெசினால் கரும்புச்சாறு எந்திரத்தை வெட்டியபிறகே கையை மீட்க முடிந்தது.பிறகு ஆதம்மை மயங்கியநிலையில் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    எந்திரத்தில் சிக்கிய கையோடு சுமார் ஒருமணி நேரமாக ஆதம்மை வலியால் துடித்தது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த சுப்பிரமணியசாமியை கண்டித்து அவரது ஊருவப்பொம்மையை எரிக்க முயன்ற ரஜினி ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அண்மையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையில் 15 பேர் சிவகங்கை பஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் ரஜினியை கீழ்தரமாக விமர்சித்த சுப்பரமணியசாமியை கைது செய்யவேண்டும் என கோ‌ஷமிட்டவாறு அவரது உருவப்பொம்மையை எரிக்க முயன்றனர்.

    அப்போது அங்கு வந்த நகர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உருவப்பொம்மையை பறிமுதல் செய்து ரஜினி ரசிகர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சிவகங்கை நகரில் வீடுபுகுந்து நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 27). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவு அருகில் வைத்துவிட்டு வெளியே சென்றார்.

    இந்நிலையில் இதை நோட்டமிட்ட மர்ம நபர் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் பிரோவில் இருந்த 2½ பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றார்.

    அப்போது பிரபாகரன் வீட்டுக்குள் வரவே திருடனை கையும் களவுமாக பிடித்து நகர் போலீசில் ஓப்படைத்தார். இன்ஸ்பெக்டர் மோகன் விசா ரணை நடத்தியதில் மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த பிரதீப்ராஜன் (38) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தார்.

    காரைக்குடி அருகே இன்று காலை நடந்த விபத்தில் லாரி மோதியதில் அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
    காரைக்குடி:

    மதுரையில் இருந்து காரைக்குடிக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. காளையார்கோவிலைச் சேர்ந்த பொன்முருகன் (வயது 45) என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

    இந்த பஸ் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திருமயத்தில் இருந்து தேவகோட்டை நோக்கி சல்லி கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதிய வேகத்தில் பஸ் சாலையிலேயே கவிழ்ந்தது.

    காலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் கவிழ்ந்ததில் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர்.

    குன்றக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் காயத்ரி (14), வினோ ரிச்சிதா (14), லியாசினி (9), காமாட்சி (14) ஆகிய மாணவிகளும், கார்த்திகேயன் (17) என்ற மாணவனும் காயம் அடைந்தனர்.

    பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பங்கஜவள்ளி (45) உள்பட 20-க்கும் மேற்பட்டோரும் காயம் அடைந்தனர். அனைவரும் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×