search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொய்வு"

    • அவனியாபுரம்-பெருங்குடி 4 வழிச் சாலை இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • அந்த சாலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை

    மதுரையின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் ஒன்றாக அவனியாபுரம் விமான நிலைய சாலை மாறியிருக்கிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வி.வி.ஐ.பிக்கள், வி.ஐ.பி.க்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், வர்த்தக பிரதிநிதிகள் அனைவரும் அவனியாபுரம் விமான நிலைய சாலை வழியாகவே செல்கின்றனர். மேலும் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரமுகர்களும் இந்த சாலை வழியாகவே விமான நிலையம் செல்ல வேண்டும். துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று வருவோர் அதிகரித்துள்ளனர். அதனால் இந்த சாலையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

    மேலும் தெற்கு வாசலில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் சாலை மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையில் வில்லாபுரம் முதல் அவனியாபுரம் பெரியார் சிலை வரை 10-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருக்கின்றன. பிரபலமான தியேட்டர், வணிக வளாகங்கள் இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருமண மண்டபங்களில் பார்க்கிங் வசதி இல்லாமல் இருப்பதினால் முகூர்த்த நாட்களில் நிகழ்ச்சிக்கு வரும் நபர்கள் முக்கிய பிரமுகர்கள் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சாலையிலே நிறுத்தி விட்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு பயணிகள் சென்று சேர்வதில் சிரமம் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் பெருங்குடியில் இருந்து விமான நிலையம் வரை உள்ள சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது பெருங்குடியில் இருந்து அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    அவனியாபுரம் - பெருங்குடி 2.5 கி.மீ. தூர சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. இந்த சாலையின் நடுவே சில மின் கம்பங்கள் உள்ளன. அவற்றை அகற்றி சாலையோரத்தில் அமைக்க வேண்டியுள்ளது. இந்தப் பணியை தமிழக மின் வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவர்களிடம் மதிப்பீடு கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மின் வாரியம் மதிப்பீட்டை இறுதி செய்து வழங்காமல் உள்ளது. அதனால் இறுதி கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வேலைப்பளு காரணமாக மதிப்பீட்டை இறுதி செய்து அளிக்க முடியாமல் உள்ளதாக மின் வாரியத்தினர் கூறுகின்றனர். மின் வாரியத்திடமிருந்து மதிப்பீடு கிடைத்தவுடன் இந்த சாலைப் பணிகளை துரிதப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலை துறை தயாராக உள்ளது.

    17.5 மீட்டர் அகலத்தில் நடுவே 2.5 மீ மீடியன் உடன் அமைக்கப்படும் இந்த சாலைப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் விமான நிலையம் செல்வோர் மட்டுமின்றி தூத்துக்குடி நான்கு வழிச் சாலைக்கு செல்லும் பயணிகளும், அந்த சாலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருப்புல்லாணி ஊராட்சியில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டம் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமப்பகுதிகளில் மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டம் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது.

    அதன் பின் கிடப்பில் உள்ளதால் குழாய்களில் குடிநீர் வராமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்புல்லாணி 4 ரத வீதிகளில் ஜல்-ஜீவன் திட்டத்தில் பயன்பாட்டிற்காக வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    குடிநீர் வழங்கும் திட்டத்திற்கென 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, தரை தளம் தொட்டி புதிதாக அமைக்கப்பட்டது.கடந்தாண்டு அமைக்கப்பட்ட குழாய்கள் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. எனவே திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து திருப்புல்லாணி ஊராட்சி தலைவர் கஜேந்திர மாலா கூறுகையில், ஜல்-ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தேரோடும் 4 ரத வீதிகளிலும் மழை நீர் சேகரிப்புக்கான புதிய வாறுகால்வாய் பணிகள் முடிவடைந்துள்ளது. விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய் பொறுத்த உள்ளோம். அதன்பிறகு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

    ×