என் மலர்
செய்திகள்

திருப்பத்தூரில் கணவர் இறந்த சோகத்தில் கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 73), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி செல்வி (58). இவர்களுக்கு கோபி என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென முருகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு முருகேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி சோகமாக காணப்பட்டார். மேலும் யாரிடமும் பேசாமல் பித்து பிடித்தது போல வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வி நேற்று காலை வீட்டில் உள்ள கிணற்றில் குதித்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி செல்வியை உயிருடன் கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்வி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு செல்வி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் இறந்த சோகத்தில் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






