என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள காயாவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி சுதா (வயது 31). கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்ததால் சுதா உறவினர் வீட்டில் குழந்தைகளுடன் இரவில் தங்குவது வழக்கம்.
நேற்று இரவு அங்கு தங்கிவிட்டு காலையில் வீட்டிற்கு வந்த சுதா பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து சோமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. 2 பவுன் நகை மற்றும் ரூ. 22 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக புகாரில் சுதா தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி பாப்பா ஊரணியைச் சேர்ந்தவர் முத்து (45). இவர் வெளியூர் சென்றுவிட்டு இரவில் காரைக்குடி பஸ் நிலையம் வந்தார். அப்போது அங்கு நின்ற ஒருவர் முத்துவிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றார். அவரை அக்கம், பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து காரைக்குடி வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.
இதில் அவரது பெயர் மாரிமுத்து (42) என்பதும், புதுக்கோட்டை இலுப்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தியை சேர்ந்தவர் தவமணி (வயது 33). இவரது மனைவி லோகாம்பாள் (31). இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
லோகாம்பாள் தினமும் ஏனாதி கண்மாய் பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.
அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் ஆடுமேய்ப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் லோகாம்பாள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டமடைந்த தவமணி, தனது மனைவியை தேடிச் சென்றார். அப்போது ஏனாதி கண்மாய் பகுதியில் லோகாம்பாள் மர்மமான முறையில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் 11 இடங்களில் அரிவாள்வெட்டு காயங்கள் இருந்தன.
தகவல் அறிந்த பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகாம்பாளை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை:
மானாமதுரை அருகே உள்ள கீழபசலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி (வயது 25). இவருக்கும், மாங்குடியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 7 வயதில் மகன் உள்ளான். பழனிச்சாமி அடிக்கடி வெளியே சென்று வருவார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்று வந்த அவர் ஆனந்திக்கு தெரியாமல் நிவேதா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்தார்.
இதை அறிந்த ஆனந்தி மதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சேது பாமா விசாரணை நடத் தினார்.
தொடர்ந்து பழனிச்சாமி, அவரது தாய் கலாமணி, 2-வது மனைவி நிவேதா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காளையார் கோவில் அருகே உள்ள புல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜாத்தி (34), சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனக்கும், சிவபாலன் என்பவருக்கும் 29-1-2006-ல் திருமணம் நடைபெற்றது. 10 வயதில் மகன் உள்ளான்.
பொள்ளாச்சியில் டாஸ்மாக் கடை சூப்பர் வைசராக எனது கணவர் அந்த வேலையை விட்டு விட்டு சமீபத்தில் ஊர் திரும்பினார். அதன் பிறகு தொழில் தொடங்க வேண்டும். அதற்கு பணம் வாங்கி வா என கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி விசாரணை நடத்தி சிவபாலன், அவரது தாய் சவுந்தரவள்ளி, உறவினர் சுரேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
கல்லல்:
தேவகோட்டை அருகே உள்ள கள்ளிக்குடியை அடுத்த உடையான் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பத்திநாதன். இவரது மகன் தாஸ் (வயது 32). இவர் நண்பர் ரமேசுடன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பைக்குடி கிராமத்திற்கு சென்றார்.
அங்கு ஆடுகளை வாங்கி விட்டு வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென பஞ்சரானது. கோட்டை வயல் பகுதியில் அதனை நிறுத்திவிட்டு உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் 2 பேரும் சாலை யோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு டிராக்டர்கள் வந்தன. அதில் ஒரு டிராக்டர் எதிர்பாராத விதமாக தாஸ் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்துகுறித்து வேலாயுதபட்டிணம் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தேவகோட்டை அகதிகள் முகாமை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சிவா (34)வை கைது செய்தனர்.
விபத்துக்கு காரணமான டிராக்டர் லைட் போடாமல் வந்துள்ளது. அந்த பகுதியில் திருட்டு மணல் எடுத்து வருபவர்கள் வேகமாக செல்வதும் போலீசில் சிக்காமல் தப்பிக்க இரவு நேரத்தில் விளக்கை எரிய விடாமல் டிராக்டர் ஓட்டுவதுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் தற்போது ஏற்பட்ட விபத்தின் போது 4 டிராக்டர்கள் வேகமாக வந்ததாக கூறப்படுவதால் அவை போட்டி போட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
திருப்புவனம் அருகே உள்ள திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மலர் விழி (வயது 30). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து விட்டு சென்றார்.
இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் பிரோவில் இருந்த ¾ பவுன் நகை மற்றும் பணத்தை திருடினர். அந்த சமயம் வெளியில் சென்றிருந்த மலர்விழி வீடு திரும்பினார். அப்போது 2 பேர் கொள்ளையடிப்பதை பார்த்து கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் வந்து 2 பேரையும் பிடித்து பூவந்தி போலீசில் ஒப்படைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது 2 பேரிடமும் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் இள மனூரை சேர்ந்த கருப்பசாமி (19). அறிவுகுமார் (19) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து நகை- பணத்தை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு சசிகலா குடும்பத்தின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் கர்நாடகா மாநிலத்தில் சிறையில் உள்ள சசிகலாவிற்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யே அறிக்கை தந்திருக்கிறார். கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். தமிழக மக்கள் இனிமேல் தமிழகத்திலிருந்து சசிகலா குடும்பத்தினரின் குடும்ப ஆட்சியை அப்புறப்படுத்தினால் தான் தமிழகம் முன்னேறும்.
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பின்தங்கி போய்க் கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் நதிகளும் ஆறுகளும் சுரண்டப்பட்டு மணல் அள்ளப்பட்டு பாலைவனமாக காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் மணல் விற்பனையை அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள், தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில், சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்காமல் தமிழக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்டத்தலைவர் சொக்கலிங்கம்,முன்னாள் துணைத்தலைவர் கருப் பையா உள்பட பலர்உடன் இருந்தனர்.
காரைக்குடி:
தேவகோட்டை அருகே உள்ள சிறுவனூரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது34). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி ராதிகா (34), மகன்கள் தீபக்ராஜ் (9), திலீப்ராஜ் (4), தீபன்ராஜ் மற்றும் சகோதரர்கள் காமேஷ் (25), பிரகாஷ் (20), உறவினர்கள் அழகர், சரண்யா (28) ஆகியோருடன் ஆம்னி வேனில் பெங்களூரு சென்றார்.
நேற்று அங்கிருந்து மீண்டும் குடும்பத்துடன் வேனில் ஊருக்கு புறப்பட்டார். இன்று அதிகாலை 5 மணி அளவில் தேவகோட்டை அருகே உள்ள திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது ஒரு கார் சர்வீஸ் ரோட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. இதை கவனிக்காத ஆம்னி வேன், கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 வாகனங்களும் சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு தலைகுப்புற கவிழ்ந்தன.
வேன் மற்றும் காரில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். விபத்தில் வேனில் இருந்த காமேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயங்களுடன் கிடந்த தியாகராஜன் குடும்பத்தினர் 8 பேர் மற்றும் காரில் வந்த பெரியசாமி (23), ஜெயபால் (49) ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியை சேர்ந்தவர் நாகரத்தினம். இவர் மணலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளி முடிந்து பஸ் ஏறுவதற்காக மணலூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து 2 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று நாகரத்தினத்தை மறித்து, அவரது கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்து சென்றவர்களை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்றவை சர்வசாதாரணமாக நடந்து வருகின்றன. போலீசார் தீவிர கவனம் செலுத்தி கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஊராட்சி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு குப்பைகளை சேகரிக்க நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக குப்பை லாரிகள், டிரை சைக்கிள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.
குப்பை அள்ளும் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் குப்பைகள் ரோட்டில் விழுகின்றன. மேலும் அடிக்கடி பழுதாகியும் வருகின்றன.
இது குறித்து துப்புரவு தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும், வாகனத்தின் பழுதுகள் இதுவரை சரி பார்க்கப்படவில்லை.
இதை கண்டித்தும் குப்பை லாரிகள், டிரை சைக்கிள்களை பழுது நீக்கக்கோரியும் இன்று 50-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரில் குப்பை அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டன. தகவல் அறிந்த அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காரைக்குடி அருகே உள்ள புதுவயல் யூனியன் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் சேக் அலாவுதீன். இவரது மனைவி அஸ்மா (வயது 27). இவர்களுக்கு 4½ வயதில் ரக்ஷிதா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று அஸ்மா தனது மகளுடன் அருகில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றார். அப்போது அஸ்மா அங்குள்ள முத்துலட்சுமி என்பவரின் வீட்டுக்கு தனது மகளுடன் சென்று பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு சாம்பிராணி புகை போடுவதற்காக முத்து லட்சுமி தூபக்காலில் தீ மூட்டினார், அதில் மண்எண்ணெயை ஊற்றிய போது அருகில் நின்றிருந்த ரக்ஷிதா ஆடை மீது எதிர்பாராத விதமாக தீப் பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென உடலில் பரவியது.
வலியால் அலறித்துடித்த ரக்ஷிதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் சிறுமி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரக்ஷிதா பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை மாவட் டம் சிங்கம்புணரி தாலுகா மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடா ஜலபதி, நகை கடை ஊழியர். இவரது மனைவி அமுதா (வயது 44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனாலும் அமுதா தனது உறவுக்கார பெண்ணை மகளாக வளர்த்து வந்தார்.
இந்நிலையில் வளர்ப்பு மகள் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனால் அமுதா சோகத் தில் விரக்தியுடன் காணப் பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து அவரது தந்தை முத்துச்சாமி சிங்கம் புணரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொன்ரகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மானாமதுரை:
மானாமதுரை வைகை யாற்றங்கரையில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஆனந்த வல்லி-சோமநாதர் கோவில் உள்ளது. அந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
அவர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் பிரகாரத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலின் பாதுகாப்பை கருதி இரவு நேர காவலர்களும் பணியில் உள்ளனர்.
நேற்று இரவு 2 காவலர்கள் கோவிலில் பணியில் இருந்தனர். இன்று காலை அவர்கள் கோவிலை சுற்றி வந்தபோது அம்மன் சன்னதி முன்பு இருந்த உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்த்தனர். பின்னர் மானாமதுரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கோவிலில் விசாரணை நடத்தினர். சுவர் ஏறி குதித்து மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்து உண்டியலை திருடிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த மே மாதம் இந்த கோவிலில் திருவிழா நடை பெற்றபோது கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதன் பிறகு கடந்த 3 மாதங்களாக பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்தனர்.
எனவே கொள்ளை போன உண்டியலில் ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






