என் மலர்
செய்திகள்

மானாமதுரையில் கோவில் உண்டியல் திருட்டு
மானாமதுரை:
மானாமதுரை வைகை யாற்றங்கரையில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஆனந்த வல்லி-சோமநாதர் கோவில் உள்ளது. அந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
அவர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் பிரகாரத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலின் பாதுகாப்பை கருதி இரவு நேர காவலர்களும் பணியில் உள்ளனர்.
நேற்று இரவு 2 காவலர்கள் கோவிலில் பணியில் இருந்தனர். இன்று காலை அவர்கள் கோவிலை சுற்றி வந்தபோது அம்மன் சன்னதி முன்பு இருந்த உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்த்தனர். பின்னர் மானாமதுரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கோவிலில் விசாரணை நடத்தினர். சுவர் ஏறி குதித்து மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்து உண்டியலை திருடிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த மே மாதம் இந்த கோவிலில் திருவிழா நடை பெற்றபோது கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதன் பிறகு கடந்த 3 மாதங்களாக பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்தனர்.
எனவே கொள்ளை போன உண்டியலில் ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






