என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது: எச்.ராஜா
    X

    அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது: எச்.ராஜா

    கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பின்தங்கி போய்க் கொண்டிருக்கிறது என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-



    தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு சசிகலா குடும்பத்தின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.



    மேலும் கர்நாடகா மாநிலத்தில் சிறையில் உள்ள சசிகலாவிற்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யே அறிக்கை தந்திருக்கிறார். கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். தமிழக மக்கள் இனிமேல் தமிழகத்திலிருந்து சசிகலா குடும்பத்தினரின் குடும்ப ஆட்சியை அப்புறப்படுத்தினால் தான் தமிழகம் முன்னேறும்.

    கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பின்தங்கி போய்க் கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் நதிகளும் ஆறுகளும் சுரண்டப்பட்டு மணல் அள்ளப்பட்டு பாலைவனமாக காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் மணல் விற்பனையை அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள், தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில், சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்காமல் தமிழக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்டத்தலைவர் சொக்கலிங்கம்,முன்னாள் துணைத்தலைவர் கருப் பையா உள்பட பலர்உடன் இருந்தனர்.

    Next Story
    ×