என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. மழையின் போது இடிமின்னல் தொழிலாளி பலியானார்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர், திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    காலையில் வெயிலின் அளவு அதிகம் இருந்த நிலையில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    சிவகங்கை தாலுகா இடையமேலூர் பகுதியைச் சேர்ந்த சலூன் கடை நடத்தி வரும் ஆனந்தன் என்பவர் நேற்று பெய்த மழையின் போது இடிமின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி சாவித்ரி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு இதமான காற்று வீசியது. திருமங்கலம், மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நகர் பகுதியில் லேசான தூரல் மழை பெய்தது.

    சிவகங்கையில் குடும்ப தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது குறித்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகனை கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர் பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் நிரஞ்சனாதேவி (வயது23). இவரும், திவான் (30) என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிரஞ்சனாதேவி தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று திவான் நிரஞ்சனாதேவியை குடும்பம் நடத்த அழைத்தார். அதற்கு அவர் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திவான் மனைவியை கத்தியால் குத்த முயன்றார். அப்போது மாமியார் சமயமுத்து (43) தடுக்க முயன்றார். இதில் அவருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து நிரஞ்சனாதேவி கொடுத்த புகாரின்பேரில் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து திவானை கைது செய்தார்.

    இளையான்குடி அருகே பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை:

    இளையான்குடி தாலுகா பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது32). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது தாயார் ராக்கு (55) புதிய வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் நைசாக ராக்கு கழுத்தில் கிடந்த 3¼ பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்.

    சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையை சேர்ந்தவர் அடைகாப்பான் (80). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதை பயன் படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் பின்புறம் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.

    ஆனால் அங்கு நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் நெற் குப்பை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மானாமதுரை அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே துத்திக்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் இந்த கடை மட்டுமே இருப்பதால் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதும்.

    நேற்று கடையில் விற்பனை அதிகமாக இருந்தது. ஊழியர்கள் முருகேசன், ரவி ஆகியோர் பணியில் இருந்தனர்.

    இரவு 9.45 மணி அளவில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முருகேசனிடம் ரூ.200 கொடுத்து மதுபாட்டிலை வாங்கினர். மீதி சில்லரையை கொடுப்பதற்காக அவர் கல்லாபெட்டியை திறந்தார்.

    அப்போது 2 பேரில் ஒருவன் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து மற்றொரு ஊழியரான ரவியின் கழுத்தில் வைத்து மிரட்டினான். இதனால் பயந்துபோன முருகேசன் செய்வதறியாது திகைத்தார்.

    உடனே மர்மநபர்கள் விற்பனை பணம் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

    இதுகுறித்து மானாமதுரை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வருகிறார்கள்.
    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிகாரப் போட்டி நடக்கிறது என எச்.ராஜா கூறினார்.

    காரைக்குடி:

    தமிழக பா.ஜனதா செயற்குழு கூட்டம், காரைக்குடியில் நேற்று தொடங்கியது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச். ராஜா, மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் முன்னாள் மாநில தலைவர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினைகளில் பா.ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகார போட்டி தான் அ.தி.மு.க.வில் நடக்கிறது இ.பி.எஸ்.க்கும், ஓ.பி.எஸ். க்கும் தான் தர்மசங்கடம்.

    தமிழ்நாட்டில் ஊழலை அறிமுகப்படுத்தியது திராவிட கட்சிகள் தான். நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரானது அல்ல.அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வால் எந்தவித பாதிப்பும் இல்லை .ஒரு தலை பட்சமான செய்தியை காதில் வாங்காமல் செயல்பாட்டில் முனைப்பாக இருக்க வேண்டும்.

    மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் கிடைக்கவில்லை என ஏங்கிய மாணவர்களின் அநீதிக்கு கிடைத்த தீர்வு தான் நீட் தேர்வு. தனியார் மருத்துவ கல்லூரி நடத்துபவர்கள் தான் நீட் தேர்வுக்கு எதிராக தூண்டி விடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையிலுள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் ஆடிதபசுவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையிலுள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் ஆடிதபசுவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் விழாவில் அம்மன் சிம்ம வாகனத்திலும், இரண்டாம் நாள் விழாவில் அன்னப்பறவை வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடந்தது.

    ஆடி 2-ம் வெள்ளிக் கிழமை அன்று மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிரா கோவில் உள்ள தண்டு முத்துமாரிஅம்மனுக்கு கூழ் காய்ச்சி சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு வழங் கப்பட்டது.

    தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோவிலில் நாகலிங்க நகரில் உள்ள மெக்கநாச்சி அம்மன் தயாபுரம் முத்துமாரியம்மன் மாரியம்மன் கோவில் தெரு, மாரியம்மன் ஆகிய கோவில் களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் பரவும் மர்ம காய்ச்சலால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    சிவகங்கை:

    ஒரு வாரமாக சிவங்கங்கை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி கடுமையான வெயில் அடிக்கிறது. போதிய மழை இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஒரு வாரமாக காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காரைக்குடி தாலுகா சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சை பெற்றும் ஒருவாரமாகியும் குணமடையவில்லை.

    மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லை. டாக்டர்கள் சரிவர கவனிப்பதில்லை. இதனால் அனைவரும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரிகளில் 5 பேர் தொடர் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவ மனைகளில் மர்ம காய்ச்சலால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    திருப்பத்தூர் அருகே திருமணமாகிய நாள் முதலே தாய்-மனைவி இடையே தகராறு தொடர்ந்து வருவதால் வெறுப்படைந்த புதுமாப்பிள்ளை மின் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள ப.முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாஸ் என்கிற சுந்தரேசன் (வயது 24), லாரி டிரைவர். இவரது மனைவி ராதிகா (20). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. திருமணமாகிய நாள் முதலே ராதிகாவுக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தாஸ், திடீரென வீட்டின் அருகில் உள்ள உயர்மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி படுத்துகொண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு கூட்டம் கூட தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் தாஸ் கீழே இறங்கினார். எனினும் இடையில் 8 அடி உயரத்தில் இருக்கும் போது திடீரென கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் பின்தொடர்ந்து ஓடியும் அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய தாஸை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    சிவகங்கை மாவட்டம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
    காரைக்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், மதச்சார்பற்ற தன்மையை கடைபிடிக்க வேண்டும், கதிராமங்கலம், நெடுவாசலில் மக்களுக்கு எதிராக செயல்படும் திட்டங்களை கைவிட வேண்டும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை நீக்க வேண்டும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதேபோல் காரைக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நகர செயலாளர் கருப்பையா தலைமையிலான கட்சியினர் ஊர்வலமாக வந்து அண்ணாசிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் கருப்பையா, மாதர் சங்க பொறுப்பாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் புதுவயலில் சாலை மறியல் செய்த இளைஞர் பெறுமன்ற மாவட்ட செயலாளர் சிவாஜி காந்தி, மாவட்ட குழு உறுப்பினர் மணக்குடி சிதம்பரம் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மானாமதுரையில் முன்னாள் மாநில தலைவர் தங்கமணி, ஒன்றிய செயலாளர் முத்தையா ஆகியோர் தலைமையில் கட்சியினர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு முற்றுகையிட்டனர். பின்னர் அவர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்புவனத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மானாமதுரை அருகே மாங்குளத்தில் உள்ள ரே‌ஷன் கடையில் தண்ணீர் கலந்த மண்எண்ணெய் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ளது மாங்குளம் கிராமம். இங்கு 300–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என தனியாக ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு உட்பட்டு 180 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றின் மூலம் மண்எண்ணெய், சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் இங்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மாதந்தோறும் மண்எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. மானாமதுரை பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் இரவு நேரங்களில் பெரும்பாலும் மண்எண்ணெய் விளக்குதான் பயன்படுத்தப்படுகிறது. கால்நடை கொட்டகையில் மண்எண்ணெய் விளக்குகளே பயன்படுத்தப்படுகிறது.

    இந்தநிலையில் மாங்குளம் ரே‌ஷன் கடையில் கடந்த 2 மாதங்களாக மண்எண்ணெய் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் கேட்ட பின்னர், நேற்று காலை மண்எண்ணெய் வழங்கப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட மண்எண்ணெய்யில் தண்ணீர் கலந்திருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கேட்டதற்கு, விற்பனையாளர் பதில் சொல்ல மறுத்து விட்டார்.

    இதனால் மாங்குளத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மண்எண்ணெய் வாங்காமல் திரும்பி சென்றனர். சிலர் வேறு வழியின்றி தண்ணீர் கலந்த மண்எண்ணையை வாங்கி சென்றனர். இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் கேட்டபோது, தண்ணீர் கலந்த மண்எண்ணெய் குறித்து புகார் எதுவும் வரவில்லை. விசாரிக்கிறேன் என்றார்.

    பொதுமக்கள் வாங்கும் அரிசி, பருப்பில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மண்எண்ணெய்யிலும் கலப்படம் செய்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே மாவட்ட வழங்கல் அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கையை அடுத்த உடைகுளம் கிராமத்தில் செயல்படும் தனியார் மதுபான தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அந்த தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் மண்டல செயலாளர் வெற்றிகுமரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் தரைமுருகன், மாவட்ட பொறுப்பாளர் வேங்கை பிரபாகரன், சாயல்ராம், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தேவகோட்டை அருகே காடத்தி கிராமத்தில் அரசு மதுபானக்கடை திறப்பதை எதிர்த்து மகளிர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    தேவகோட்டை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள அரசு மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டது. மூடப்பட்ட கடைகளை மாவட்ட நிர்வாகம் நகரின் எல்லைகளில் திறந்தது.

    தேவகோட்டை பஸ் நிலையம் அருகில் செயல்பட்ட மதுபானக்கடை கண்ணங்குடி ஒன்றியம் பூசலாகுடி ஊராட்சி காடத்தி கிராமத்தின் மைய பகுதியில் உள்ள வீட்டில் திறக்கப்பட்டது.

    இதை கண்டித்து மகளிர் அமைப்பினர் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த தெய்வானை கூறுகையில், தற்போது செயல்படும் மதுக்கடையையும், புதிதாக வர உள்ள கடையையும் அகற்றாவிட்டால் தேவ கோட்டை - கண்ணங்குடி சாலையில் மறியல் நடத்துவோம் என்றார்.

    ×