search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி கடத்தல்"

    • வியாபாரம் முடிந்து வீட்டிற்கு வந்த சந்திரசேகரனை மர்ம நபர்கள் திடீரென காரில் கடத்தி சென்றனர்.
    • கடத்தல் கும்பல் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை சூளைமேடு, சக்தி நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 46). இவர் ஜாம்பஜார் பகுதியில் முட்டை கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாதால் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை சந்திரசேகரனால் திருப்பி கொடுக்க முடிய வில்லை.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் சந்திரசேகரனுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். எனினும் அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் வியாபாரம் முடிந்து வீட்டிற்கு வந்த சந்திரசேகரனை மர்ம நபர்கள் திடீரென காரில் கடத்தி சென்றனர். இதனை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சூளைமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரன் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான கடத்தல் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதில் கடத்தல் கும்பல் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சூளைமேடு போலீசார் விரைந்து சென்று கடத்தலில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், மணி, சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த சரவணகுமார் ஆகிய 3 பேரை கைது செய்த னர். சந்திரசேகரனையும் மீட்டனர்.

    ரூ.8 லட்சம் கடன் தகராறில் இந்த கடத்தல் நடந்திருப்பது தெரிந்தது. இது தொடர்பாக பிடிப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • போலீசில் மனைவி புகார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 35). ஷூ ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி உமா சங்கரி (29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் இவர் கடந்த 29-ந் தேதி வியாபார சம்பந்தமாக கோயம்புத்தூருக்கு சென்றவர் நேற்று வரை வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உமா சங்கரி உதயகுமார் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.

    அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று வந்தது.

    இது தொடர்பாக ஆம்பூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் கணவர் மாயமானது குறித்து உமா சங்கரி புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான உதயகுமாரை யாராவது கடத்தி சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×