search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்திரை திருவிழா"

    • தெப்ப குளத்தில் தெப்ப தேர் விழா நடந்தது.
    • தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நடந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. நேற்று இரவு அவினாசிலிங்கேசுவரர் கோவில் எதிரே உள்ள தெப்ப குளத்தில் தெப்ப தேர் விழா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் ஒளியில் சந்திரசேகர் - அம்பாள் சாமிகள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்ப குளத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தெப்ப தேர் விழாவை காண குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தெப்ப குளத்தின் படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து கண்டுகளித்தனர்.

    • கள்ளழகர் விடைபெறும் நிகழ்வாக பூ பல்லக்கு விழா நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசித்தனர்.

    மதுரை:

    சித்திரையில் முத்திரை பதிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடை பெற்றது. முத்தாய்ப்பாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக் கல்யாணமும், 22-ந் தேதி தேரோட்டமும் நடந்தது.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிவுக்கு வரும் நிலையில் கள்ளழகர் கோவில் சித்தி ரை திருவிழா தொடங்கியது. கடந்த 21-ந் தேதி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மதுரைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகடப்படிகளில் எழுந்தருளி கள்ளழகர் அருள்பாலித்தார்.

    மறுநாள் 22-ந் தேதி புதூரில் வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவி லில் கள்ளழகர் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. 23-ந் தேதி அதிகாலை கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி காலை 6 மணி யளவில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இரவு வண்டியூர் வீரராகவ பெரு மாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவு முழுவதும் அங்கு திருவிழா களைகட்டியது.

    24-ந் தேதி காலை சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனி வருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார கோலத்தில் கள்ளழகர் காட்சி அளித்தார்.

    நேற்று (25-ந் தேதி) காலை மோகினி அலங் காரத்தில் பக்தி உலா நடந்தது. பின்னர் ராஜாங்க அலங்காரத்தில் அருள் பாலித்த கள்ளழகர் தடம் பார்க்கு நிகழ்வுக்காக மீண்டும் வைகையாற்று பகுதியில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு வந்த கள்ளழகருக்கு திருமஞ்ச னம் நடந்தது. இன்று அதி காலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்பாடானார்.

    காலையில் மூன்று மாவடி, ரேஸ் கோர்ஸ், தாமரை தொட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர். அப்போது சர்க்கரை தீபம்ஏந்தி வழி பட்டனர்.

    வழிநெடுகிலும் மண்டகப் படிகளில் எழுந்தருளிய கள்ளழகரை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு களித்தனர்.

    இன்று இரவு அப்பன் திருப்பதி கோவிலில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அங்கு விடிய, விடிய நடக்கும் திருவிழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்பார்கள். பின்னர் நாளை (26-ந் தேதி) காலையில் கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர் மலையை சென்றைடைவார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா நிறைவுபெறும்.

    • திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
    • இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் குடகனாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டூக முனிவருக்கு பாவ விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சிக்காக பல்வேறு மண்டகப்படிகளில் பெருமாள் கள்ளழகராக எழுந்தருளினார்.

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தங்க குதிரையில் பெருமாள் குடை பிடித்தபடி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

    • முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
    • பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சிக்கு, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனி வாய்பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது. அதில் மீனாட்சி அம்மனின் அண்ணனாக பவளக்கனிவாய் பெருமாள் இருந்து சுந்தரேசுவரருக்கு மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுத்தார்.

    இதனையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து கடந்த 20-ந்தேதி மாலை 5 மணியளவில் மேள தாளங்கள் முழங்க பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    இதேவேளையில் முருகப்பெருமான் தனது தாய், தந்தை (மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக) புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    பின்னர் 21-ந் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கேற்று அருள்பாலித்தனர். நேற்று மாலை 5 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை நகைக்கடை வீதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க வாசனை கமழும் வண்ண மலர்களான பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.

    இதே வேளையில் பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், பைக்கரா பசுமலை வழியாக வழிநெடுகிலுமாக அமைக்கப்பட்டு இருந்த திருக்கண் மற்றும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படியே இரவில் திருப்பரங்குன்றம் வந்தடைந்து தன் இருப்பிடம் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    • நேற்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது.

    மதுரை:

    சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. கடந்த 12-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. கடந்த 21-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், மறுநாள் தேரோட்டமும் நடந்தது.

    பின்னர் தீர்த்தவாரியுடன் நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றது.

    இதற்கிடையில் அழகர்கோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 21-ந் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. அன்றைய தினம் காலை 6.02 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் `பச்சைப்பட்டு' உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது 10 லட்சத்திற்கும் அதிகமான கூட்டம் கூடியதால் மதுரை நகரமே ஸ்தம்பித்தது.

    பின்னர் வழி நெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் அன்று மாலையில் அண்ணா நகர் பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு இரவு 11 மணி அளவில் வந்து சேர்ந்தார்.

    அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

     சாப விமோசனம்

    அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக அங்கு சிறிய குளம் ஏற்படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. அதில் பூக்களை மிதக்கவிட்டனர். குளத்தில் மண்டூக முனிவரின் உருவச்சிலை ஒன்று இருந்தது. அதன் அருகில் நாரை ஒன்றும் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பூஜைகள் முடிந்து கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    • சூரியும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

    உலகப்பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. ஜாதி, மத பாகுபாடின்றி மக்கள் ஒன்று கூடி மகிழும் ஒற்றுமை திருவிழாவான இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    வி.ஐ.பி.க்கள் வரிசை என்றில்லாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரியும் மக்களோடு மக்களாக கலந்துகொண்டார். என்னதான் மதுரையில் பிறந்து வளர்ந்த போதிலும், அவரை பார்த்ததும் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    அவரும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முழுவதுமாக கண்டு ரசித்த பின்னர் அழகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
    • இன்று காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் அந்த தேர் வடக்கு ரத வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நேற்று 2-வது நாள் தேரோட்டம் நடந்தது. காலை 10 மணி அளவில் மீண்டும் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதி, கிழக்குரத வீதி, கடைவீதி வழியாக மதியம் 2 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக கருணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறிய தேர் வடம் பிடித்து நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து நிலையை அடைகிறது. இரவு 10 மணிக்கு வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) பரிவேட்டையும், 25-ந்தேதி தெப்பத்தேர் விழாவும், 26-ந்தேதி நடராஜ பெருமாள் மகா தரிசனம் நடக்கிறது. 27-ந்தேதி மஞ்சள் நீர் விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவுபெறுகிறது.

    • திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.
    • திருநங்கைகள் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதலில் உள்ளூரில் வசிக்கும் திருநங்கைகளுக்கும், இன்று காலை 7 மணி முதல் வெளியூர் திருநங்கைகளுக்கும் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

     மேலும், இன்று மாலை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.

    இன்று இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    நாளை (24-ந் தேதி) சித்திரை தேரோட்டம் தொடங்கும். தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது தாலிக் கயிறை அறுத்து விட்டு அருகில் உள்ள கிணறு, குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

    25-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி கள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தேர்களில் 3-வது பெரிய தேர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    `பூலோக வைகுண்டம்' என போற்றப்படும் இக்கோவிலில் `சொர்க்க வாசல்' தனியாக கிடையாது என்பது தனிச்சிறப்பாகும்.

    இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது. மேலும், 7 ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கோவில் தேரோனது தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தேர்களில் 3-வது பெரிய தேர் ஆகும். இந்த தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல் தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும்.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா.. சாரங்கா... பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 வீதிகளிலும் வலம் வந்து நிலையை வந்தடைய உள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • உலகப்புகழ்பெற்றது சித்திரை திருவிழா.
    • கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

    மதுரை:

    கோவில் மாநகர் என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இந்த விழாக்களில் உலகப்புகழ்பெற்றது சித்திரை திருவிழா. வரலாற்று சிறப்புமிக்க விழாவும்கூட..

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. அதாவது சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த ஒற்றுமை பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

    சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

    அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

     நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

    இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி உள்ளார். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

     வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கள்ளழகர் வைகையில் இறங்கியபின், இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    அப்போது கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருள்கிறார்.

    அங்கு நாளை (புதன்கிழமை) அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடக்கின்றன. காலை 9 மணியளவில் திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷவாகனத்தில் புறப்பட்டு பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.

    பின்பு மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது.

    அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு இரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார காட்சி நடக்கிறது. அப்போது அழகர் தசாவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    தொடர்ந்து 25-ந்தேதி காலை 6 மணிக்கு மோகினி அவதார கோலத்துடன் உலா வருகிறார். அதன்பின் பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருள்கிறார்.

    இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நள்ளிரவுக்குபின் 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    26-ந்தேதி காலை 8.50 மணிக்கு கருப்பணசுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியானவுடன் அழகர்மலைக்கு புறப்படுகிறார்.

    அன்று இரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் அழகர்மலையில் இருப்பிடத்தை அடைகிறார்.

    • அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும்.
    • அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது.

    மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.

    இந்நிலையில், மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    மேலும், கள்ளழகர் வைபவத்தில், ஆற்றில் இறங்க 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரை அடிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
    • வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தஞ்சாவூா்:

    தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி அம்மனுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு தேரடியில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. 27-வது தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். திருவையாறு நான்கு ராஜ வீதிகளில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது. இன்று மாலையில் தேர் நிலையை வந்து அடையும். அப்போது தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    விழாவில் வரும் 25ஆம் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. 26-ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ×