என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்திரை திருவிழா தேரோட்டம்"

    • பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
    • சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர்.

    தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன்றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

    இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.

    அதன்பிறகு பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது திரண்டிருந்தவர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    காலை 5.05 மணிக்கு மேல் 5.29 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என பக்தி முழக்கம் விண்ணைப்பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துசென்று சாமி தரிசனம் செய்தனர்.

    4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி சென்றதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.

    அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் மதியம் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.

    தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவை காணவந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்படுத்தினர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (10-ந் தேதி) உச்சிக் காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி நாளை தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.

    நாளை மறுநாள் (11-ந் தேதி) மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்கிறார்கள். மதுரையில் மூன்றுமாவடியில் நாளை மறுநாள் காலை 6 மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபாராதனை காட்டியும் அழகரை மதுரை மக்கள் வரவேற்க உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    12-ந்தேதி காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார். பின்னர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். சிறந்த சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் பெரியகோவில் விளங்கி வருகிறது.

    தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை 6 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி, போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக்குழு தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து, தேருக்கு முன்பாக விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது. தேரானது 4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

    மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்தடையும்.

    தேரோட்ட விழாவில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு துறை வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. பெரிய கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. 

    • நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு.
    • 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 28-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 7ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன்பின் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். திமஞ்சனம் கண்டருளி இன்று அதிகாலை 1மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    8ம் நாளான இன்று (25-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (26-ந் தேதி) காலை நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.

    பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.

    விழாவின் நிறைவு நாளான 28-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • விழாவில் முக்கிய நிகழ்ச்சி யான திருத்தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
    • தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீர பாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இத்திரு விழாவில் முக்கிய நிகழ்ச்சி யான திருத்தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    திருவிழாவில் சிறப்பு பஸ்கள் உள்பட ஏராளமான வசதிகளை அரசு செய்துள்ளது. மேலும் வருகிற 16-ந்தேதி வரை பக்தர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்லும் வரை போலீசார் நியமிக்க ப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவிலுக்குள் சென்று வர தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கண்களுக்கு புலப்படும் வகையில் அறிவிப்பு பலகைகளும், ஒலிபெருக்கி யின் மூலமும் பக்தர்களுக்கு தேவையான அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீர பாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    தேரோட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம்பி டித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய்பாபு, எஸ்.பி பிரவீன்உமேஷ்ேடாங்கரே, வருவாய் அலுவலர் ஜெய பாரதி, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • தேரோட்டம் இன்று காலை நடந்தது.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    திருநங்கைகளின் குலதெய்வமாக கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இதில் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம், அரவாண் பலி, தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி போன்றவைகள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    மகாபாரத போரில் பாண்டவர்களுக்கும், கவுர வர்களுக்கும் மோர் மூண்டது. இதில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், சாமூத்ரிகா லட்சணம் கொண்ட ஆண்மகனை பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    பாண்டவர்களின் படை யில் இருந்த அரவாண், 32 சாமூத்ரீகா லட்சணத்துடன் இருந்ததால் அவரை பலி கொடுக்க முடிவெடுத்தனர்.

    அப்போது அரவாண் ஒரு நிபந்தனை விதித்தார். தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தாம்பத்திய உறவு முடிந்த பின்பு தன்னை பலி கொடுக்க வேண்டுமென அரவாண் கூறினார்.

    இதனை ஏற்ற கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து, அரவாண் கையால் தாலியை கட்டிக்கொண்டு, அன்றிரவு முழுவதும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். தொடர்ந்து மறுநாள் காலை அரவாண் களப்பலி கொடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்.

     எனவே, இவ்வுலகில் வாழும் திருநங்கைகள் தங்களை கிருஷ்ணரின் அவதாரமாக கருதி, பூசாரி கைகளினால் தாலி கட்டிக்கொண்டு அன்றிரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர், தொடர்ந்து மறுநாள் நடைபெறும் தேரோட்டத்தை தொடர்ந்து அரவாண் பலி முடிந்த பின் தங்களது தாலியை அறுத்துக் கொண்டு ஓப்பாரி வைத்து அழுவது ஐதீகம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்றது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் திருநங்கைகள் கூவாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

     விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. கூவாகத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்த தேர் காலை 10 மணியளவில் தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தது. அங்கு அரவாண் பலி நடந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களின் தாலிக்கயிறை அறுத்துவிட்டு, கணவரை நினைத்து ஓப்பாரி வைத்தனர். பின்னர் அருகில் இருந்த நீர்நிலைகளில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    இவ்விழாவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடக, வட மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும், வெளிநாட்டை சேர்ந்த திருநங்கைகளும் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.

    ×