என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும்போது பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு- கோவில் நிர்வாகம் அறிவிப்பு
    X

    வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும்போது பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு- கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    • 16-ந்தேதி கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலைக்கு திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறும்.
    • 17-ந்தேதி அழகர் கோவிலில் உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை:

    தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் சன்னதியில் கடந்த 27-ந்தேதி சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் தொடர்ச்சியாக வருகிற 10-ந்தேதி மாலை 6 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும்.

    11-ந்தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறுகிறது. இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக 12-ந்தேதி அதிகாலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தல் நிகழ்வு நடைபெறுகிறது.

    13-ந்தேதி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அன்று நள்ளிரவில் திவான் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறும். 14-ந்தேதி அதிகாலை மோகினி அலங்காரத்தில் கள்ளழகர் காட்சி அளித்தல், பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் சேதுபதி மண்டபத்திற்கு அனந்தராயர் பல்லக்கு புறப்படுதல், இரவு 11 மணிக்கு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    16-ந்தேதி கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலைக்கு திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறும். 17-ந்தேதி அழகர் கோவிலில் உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் அழகர்கோவில் நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளழகர் கோவிலில் 2025-ம் ஆண்டுக்கான சித்திரைப் பெருந்திருவிழா வருகிற 8.5.2025 முதல் 17.5.2025 வரை நடைபெறவுள்ளது. மேற்படி சித்திரைப்பெருந்திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசை கொண்ட நீருந்துகள் மூலம் தண்ணீர் பீய்ச்சாமலும் மற்றும் தண்ணீர் பைகளைக் கடித்து தண்ணீர் பீய்ச்சாமலும், விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் ஏதும் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டும் பீய்ச்சுமாறு பக்தர்கள் மற்றும் பொதுமக்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×