என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதை மு.க.ஸ்டாலின் செய்து கொண்டு இருக்கிறார் என வைகோ தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள விளை நிலங்களை எல்லாம் பாரதீய ஜனதா கட்சி அழித்துவிட்டது. தமிழர் பண்பாடு, கலாசாரம், நாகரிகம் ஆகியவற்றை நாசப்படுத்திவிட்டது. தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து மீத்தேன் கியாஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவுக்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்துக்காக தமிழகத்தை பாழ்படுத்த திட்டமிட்டு உள்ளது என குற்றம் சாட்டுகிறேன்.

    அங்குலத்துக்கு அங்குலம் நாங்கள் எதிர்ப்போம். திராவிட இயக்கத்தை நாசப்படுத்திவிடலாம் என்று பாரதீய ஜனதா கட்சி கணக்கு போடுகிறது. அது ஒரு நாளும் நடக்காது.

    பெரியார், அண்ணா வார்பித்து இருக்கிற தமிழகம். அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரங்கள் என்பதால் அதைப்பற்றி பேச விரும்பவில்லை. மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு தமிழகத்தின் நலனுக்கும், ஜனநாயகத்துக்கும் கேடு செய்கிறது என்பதற்கு ஆயிரம் காரணங்களை சொல்ல முடியும்.

    அ.தி.மு.க. அரசு ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கலாம் என கருதுகிறது. திருமுருகன் காந்தி, ஜெயராமன் ஆகியோரை சிறையில் அடைத்து, மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவுகிறது. இவை எல்லாம் வினையை விதைக்கிற வேலை. அடக்குமுறை மூலமாக கருத்துகளை நசுக்கி விட முடியாது என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம், “பாரதீய ஜனதா, அ.தி.மு.க. ஜனநாயகத்தை கெடுக்கும் போது தமிழக எதிர்க்கட்சி தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் சரியான முறையில் செயல்படுகிறாரா?” என நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, “ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ன வேலையை செய்ய வேண்டுமோ அதை அவர் செய்துகொண்டு இருக்கிறார்” என வைகோ தெரிவித்தார். 
    தாம்பரத்தில் நடந்த சென்ற ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நகையை பறித்தனர். போலீசார் 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    வேளச்சேரி:

    கிழக்கு தாம்பரம் முத்து ராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் வினிதா. செம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கிழக்கு தாம்பரம் போரூர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வினிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு சென்றனர்.

    அதிர்ச்சி அடைந்த வினிதா கூச்சல் போட்டார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் சத்தம் கேட்டு 2 வாலிபர்களையும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி வி.பி. காலனியைச் சேர்ந்த தொப்பை கணேசன், நன் மங்கலத்தைச் சேர்ந்த வித்யாதரன் என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாச மடத்தை நித்யானந்தா சாமிகளின் சீடர்களிடமிருந்து மீட்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாச மடத்தை நித்யானந்தா சாமிகளின் சீடர்களிடமிருந்து மீட்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார், சேக்கிழார் கல்வி பண்பாட்டு கழக மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தொண்டை மண்டல முதலியார்கள் அமைப்பினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டை மண்டல ஆதீனத்தில் தங்கியிருக்கும் நித்யானந்தா சீடர்களை வெளியேற்ற வேண்டும். மடத்தில் பூஜைகள் வழக்கம் போல தொடர்ந்து நடக்க வேண்டும்.

    தொண்டை மண்டல ஆதீனத்தின் சொத்துக்களை அபகரிக்க முயலும் நித்யானந்தாவின் செயலை கண்டித்தும், சிவபூஜை நடக்கும் இடத்தில் நித்யானந்தாவின் உருவ பொம்மைக்கு வழிபாடு நடத்துவதை கண்டித்தும். இந்த மடத்தின் ஆயிரம் கோடி சொத்துக்களை காப்பாற்றவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வேகநதி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நேதாஜி நகர், காமாட்சியம்மன் காலனி, மந்தவெளி, தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை வழியாக வாலாஜாபாத் வரை வேகநதி ஆறு செல்கிறது. ஆற்றின் கரையோரத்தை ஆக்கரமித்து ஏராளமானோர் வீடுகள் கட்டி உள்ளனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி நீர்நிலைகளை பாதுகாத்து அவற்றினை ஆழப்படுத்தும் அதிரடி நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக வேகநதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள 1418 குடியிருப்புகளை அகற்றும்படி பொதுப் பணித்துறையினர் ஆக்கிரப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    அவர்களுக்கு கீழ்கதிபூர் பகுதியில் உரிய இடம் ஒதுக்கியதுடன் 21 நாட்களுக்குள் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை காலிசெய்யவும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே ஆக்கிரப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிப்பவர்கள் காஞ்சீபுரத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் தேரடியில் தொடங்கிய பேரணியில் தி.மு.க. எம்.எல்.ஏ.., எழிலரசன், காங்கிரஸ் முன்னாள் எம்பி விஸ்வநாதன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தமிழகமெங்கும் உள்ள ஏரி,குளம் போன்ற நீர்நிலைகளை காக்க திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவுபடி தி.மு.க.வினர் தூர் வாரிவரும் நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக காஞ்சீபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ., எழிலரசன் பேரணியாக சென்றது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    நீலாங்கரை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவான்மியூர்:

    சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 20). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரி நண்பரான சிவக்குமாருடன் (20) மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தார். நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    நீலாங்கரையை அடுத்த அக்கரை செக்போஸ்ட் அருகே வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சரத்குமார், சிவக்குமார் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் பலராமன் (52). இவர் அதே பகுதியை சேர்ந்த பாலாஜியுடன் பனையூர் பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வேகத்தடையில் ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலராமன் பலியானார். பாலாஜி படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டில் தனியார் நிறுவன ஊழியருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அழகேசன் நகரை சேர்ந்தவர் ஜெகன் மோகன் (வயது 58). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 1 வாரத்துக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.

    இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரை பரிசோதித்த போது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் செங்கல்பட்டு டவுன் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு நகராட்சி மற்றும் சுகாதார நலத்துறை சார்பில் இந்த மருத்துவ முகாம் நடந்தது.

    இதில் டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    செங்கல்பட்டில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததால், உறவனிர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செங்கல்பட்டு:

    அச்சரப்பாக்கத்தை அடுத்த சித்தாமூர், நெட்ரம்பாக்கத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் பிரேம்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார்.

    மேலும் சிறுமிக்கு தொல்லையும் கொடுத்து வந்தார். இது பற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர், பிரேம் குமாரை கண்டித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேம் குமார், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றார். பின்னர் சிங்கபெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு டவுன் தட்டான்மலை தெருவில் உள்ள வீட்டில் சிறுமியுடன் பிரேம் குமார் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் மாயமான சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்து சிறுமி தப்பி வந்ததாக தெரிகிறது.

    இது குறித்து அவர், செங்கல்பட்டு மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமார், அவரது உறவினர் சரவணன் ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.

    காஞ்சீபுரத்தில் சுற்றுலா வேன் மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
    காஞ்சீபுரம்:

    மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 13 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்து உள்ளனர். நேற்று இரவு அவர்கள் மேல்மருவத்தூரில் இருந்து காஞ்சீபுரத்துக்கு வேனில் புறப்பட்டனர்.

    அதிகாலை 2 மணியளவில் காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து ஆரணிக்கு நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி திடீரென வேன் மீது மோதியது.

    இதில் வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் மகேஷ் சூரி, சமீர், தினேஷ் சல்லி உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் மகேஷ் சூரி, சமீர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் காமாட்சியம்மன் காலனியில் வசிப்பவர் தேவகுமார் (வயது27). லாரி டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு - கிளார் பைபாஸ் சாலையில் சென்றார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த தேவகுமார் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.
    நீலாங்கரை கடற்கரையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த கோவையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவான்மியூர்:

    நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பெண்கள் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர்களிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறி சில்மி‌ஷம் செய்தார்.

    பெண்கள் கூச்சலிட்டதால் அந்த வாலிபர் தப்பி ஓடியபோது சில பெண்கள் அவரை செல்போனில் படம் பிடித்தனர். அந்த படத்தை நீலாங்கரை போலீசில் ஒப்படைத்து புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் நீலாங்கரை பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது அங்கு பெண்களிடம் சில்மி‌ஷம் செய்த அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், அவர் கோவையைச் சேர்ந்த அஸ்வந்த் என்பதும் பெருங்குடியில் தங்கி ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்ததும் தெரிந்தது. அவர் மீது நடைபயிற்சி சென்ற பெண்களிடம் சில்மி‌ஷம் செய்ததாக திருவான்மியூர், சாஸ்திரி நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அஸ்வந்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொண்டை மண்டல ஆதீனத்தில் இருந்து நித்யானந்தாவின் சீடர்களை வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆதீன மீட்பு குழுவினர் நாளை காஞ்சீபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள தொண்டை மண்டல ஆதீன மடத்தில் 232-வது பட்டம் மடாதிபதியாக ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.

    கடந்த சில மாதங்களாக இந்த மடத்தில் பெங்களூரை சேர்ந்த நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் சிலர் தங்கி இருந்து பாரம்பரிய முறைகளை மாற்றி பூஜை செய்தனர்.

    மேலும் அவர்கள் மடத்தின் சொத்துக்களை கைப்பற்றி செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி திடீரென மடம் பூட்டப்பட்டு இருந்தது. மடாதிபதியும் மாயமாகி இருந்தார்.

    இதனால் மடாதிபதியை நித்யானந்தாவின் சீடர்கள் கடத்தி சென்று விட்டதாகவும், மடாதிபதியை மீட்க வேண்டும் என்றும் தொண்டை மண்டல முதலியார்கள் சங்கத்தினர் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை பெங்களூரில் இருந்து ஞானபிரகாச தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் காஞ்சீபுரம் மடத்துக்கு திரும்பினார்.

    அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் ஆன்மீக பயணமாக பெங்களூர் சென்றேன். என்னை யாரும் கடத்தவில்லை. மடத்தில் தங்கி உள்ள நித்யானந்தா சீடர்களை வெளியேற்ற முடியாது” என்று கூறினார்.

    இதனை கண்டித்து தொண்டை மண்டல ஆதீன மீட்புக்குழுவினர் நாளை (4-ந்தேதி) காஞ்சீபுரம், பெரியார் நினைவுத் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    தொண்டை மண்டல ஆதீனத்தில் இருந்து நித்யானந்தாவின் சீடர்களை வெளியேற்ற வேண்டும். நித்யானந்தாவுடன் உள்ள தொடர்பை ஆதீனம் முழுமையாக துண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. இது தொடர்பான போஸ்டர்கள் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் காஞ்சீபுரம் நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.

    இதுகுறித்து தொண்டை மண்டல ஆதீன மீட்பு குழுவினர் கூறியதாவது:-

    தொண்டை மண்டல ஆதீன மடத்தில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்களின் தலையீடு இருக்க கூடாது. அவர்கள் மடத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.

    நாங்கள் தேர்ந்து எடுத்தவர்தான் தலைமை ஆதீனம். அவர் தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் கிடையாது. அவரை நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

    தர்மபுரி ஆதீனம்தான் இந்த ஆதீனத்துக்கு எல்லாம் குரு பீடம் ஆகும். சைவ மடத்துக்குள் ஒரு காலத்திலும் நித்யானந்தா ஆதீனமாக வர முடியாது. வருகிற 7-ந்தேதி உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என டெல்லியில் இருந்து திரும்பிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

    சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறுவதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்.

    3 நாட்களாக அங்கு தங்கியிருந்த அவர் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் நட்டா, ராஜ்நாத்சிங், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரை சந்தித்து மீண்டும் அழுத்தம் கொடுத்தார். அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அவருடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்று நிரந்தர விலக்கு தரவில்லை என்றாலும் இந்த ஒரு வருடமாவது தரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    உள்துறை, சட்டத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மந்திரிகள், உயர் அதிகாரிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதிகட்ட முயற்சியில் ஈடுபட்டார்.

    தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மோடி கூறினாலும் இன்னும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் தெரியாததால் மாணவர்களும், பெற்றோர்களும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும், கால நெருக்கத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நீட் தேர்விற்கு விலக்கு அளித்தது போல இந்த வருடமும் விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு சார்பில் அவசர தீர்மானம் இயற்றி அதை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி உள்ளோம்.

    பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் சட்ட சிக்கல் இருப்பதாகவும், அதனை எப்படி தீர்க்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

    சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பல நீதிமன்ற தீர்ப்புகளை கோடிட்டு காட்டி இருக்கிறோம். தமிழக அரசு சார்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.


    தமிழக அரசு, மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் தரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    எந்த முயற்சியும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. இந்த சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரவில்லை. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் தராத அளவிற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து இருக்கிறது. ஒரேநாளில் 3 முறை மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து இதுகுறித்து பேசி இருக்கிறோம்.

    எல்லா மாநிலத்திலும் நுழைவுத்தேர்வு உண்டு. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் பிளஸ்-2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதே நடைமுறை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×