search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் விஜயபாஸ்கர்"

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பங்கள் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார். #Gaja
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். குறிப்பாக மின்விநியோகம் விரைவில் கிடைக்கும் வகையில் வெளி மாவட்ட மின் ஊழியர்களை வரவழைத்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்தநிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கஜா புயல் நிவாரண நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. 60 ஆண்டுகளாக இல்லாத சேதம். மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின்சாரம் சப்ளை வழங்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கஜா புயலால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் அழைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    மணமேல்குடி, ஜெகதாபட்டினம், பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டையில் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. இன்றோ நாளையோ அறந்தாங்கியில் மின்சாரம் வழங்கப்படும்.

    குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி குடிநீர் வழங்க அறிவுறுத்தி உள்ளோம். தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 200 ஜெனரேட்டர்களை வழங்கி உள்ளது. மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான தென்னை, வாழை, தேக்கு, பலா போன்ற மரங்கள் கீழே சாய்ந்துவிட்டன. பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

    கஜா புயலால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சீரமைத்து வருகிறோம். சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி என்னிடம் தொலை பேசியில் பேசி விவரங்களை கேட்டு வருகிறார். அவரின் உத்தரவின்படி நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட இன்று அல்லது நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வருகிறார். கஜா புயல் முன்னேற்பாடு மற்றும் சீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே பாராட்டி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
    குட்கா முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் வீடுகள் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த சிபிஐ சோதனை முடிவடைந்துள்ளது. #GutkhaScam
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.  இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் குட்கா விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன்பேரில் சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை ஆவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

    குட்கா ஆலை பங்குதாரர் மாதவராவ் வீட்டிலும், குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் உதவியாளர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அந்த டைரியில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாநகராட்சி உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது.

    ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் எந்தெந்த தேதிகளில் எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரமும் துல்லியமாக எழுதப்பட்டு இருந்தது.

    அதிகாரிகள் துணையோடு குட்கா விற்ற வகையில் எவ்வளவு வரி கட்டப்பட்டு இருக்கிறது என்ற குறிப்புகளும் இருந்தன. இந்த டைரி தகவல்தான் அதிகாரிகள் சிக்குவதற்கு ஆதாரமாக அமைந்தது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் அந்த டைரியில் இடம் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்பட 23 அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக குட்கா பங்குதாரர் மாதவராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாதாமாதம் தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும் லஞ்சம் கொடுத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் எழுதி இருந்தார்.

    இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சில போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

    சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு காலை 8 மணிக்கு 5 அதிகாரிகள் சென்றனர். வீட்டை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    நொளம்பூர் புதிய போலீஸ் நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமி‌ஷனரான ஜார்ஜின் வீட்டிலும் சோதனை நடந்தது.

    நொளம்பூர் பாரிசாலையில் உள்ள அவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இங்கு 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் இருவரது வீடுகளும் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. இதனால் இன்று நடைபெற்ற இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டத்திலும் சி.பி.ஐ. நடத்திய இந்த அதிரடி வேட்டை உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டி.ஜி.பி.யாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதும், அது தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதும், தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
    ×