search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #mrvijayabhaskar #bomb

    சென்னை:

    இலங்கையில் கடந்த 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் பலியானார்கள். தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    இதற்கிடையே தமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்றும், பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர் மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இலங்கையை போல கோயம்பேடு ஆழ்வார் திருநகரிலும் குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்த நபர் கடந்த சனிக்கிழமை பிடிபட்டார்.

    கர்நாடக மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் சிக்கினார்.

    நேற்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரும் கைதானார். இப்படி தொடர்ச்சியாக வரும் மிரட்டல் போன்களால் சென்னை போலீசார் கலங்கிப்போய் உள்ளனர்.


    இந்தநிலையில் நேற்று இரவு அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் வீட்டு தொலை பேசியில் பேசிய நபர் அமைச்சரின் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெடி குண்டு நிபுணர்களும் சோதனை செய்தனர். ஆனால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவும் ஒரு மிரட்டல் போன் வந்தது. அதில் பேசிய நபர் இலங்கையில் வெடித்தது போல இன்னும் 3 மாதத்தில் தமிழகம் முழுவதும் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

    போனில் பேசியவர் தனது பெயர் சாமி என்றும் மதுரையில் வக்கீலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த நபர் பேசிய எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் இப்போது இவ்வளவு தகவலைதான் தெரிவிக்க முடியும். மற்ற தகவல்களை செய்தியாளர் சந்திப்பில் சொல்லப்போகிறேன் என்று கூறிவிட்டு மீண்டும் போனை துண்டித்தார்.

    மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார் போனில் பேசிய மதுரை சாமி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போனில் பேசியவர் வக்கீல் என்று கூறியதால் அதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. மிரட்டல் ஆசாமியை பிடிக்க மதுரை போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். #mrvijayabhaskar #bomb

    Next Story
    ×