என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்தா சீடர்களை வெளியேற்ற மறுப்பு: ஆதீன மீட்பு குழுவினர் நாளை ஆர்ப்பாட்டம்
    X

    நித்யானந்தா சீடர்களை வெளியேற்ற மறுப்பு: ஆதீன மீட்பு குழுவினர் நாளை ஆர்ப்பாட்டம்

    தொண்டை மண்டல ஆதீனத்தில் இருந்து நித்யானந்தாவின் சீடர்களை வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆதீன மீட்பு குழுவினர் நாளை காஞ்சீபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள தொண்டை மண்டல ஆதீன மடத்தில் 232-வது பட்டம் மடாதிபதியாக ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.

    கடந்த சில மாதங்களாக இந்த மடத்தில் பெங்களூரை சேர்ந்த நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் சிலர் தங்கி இருந்து பாரம்பரிய முறைகளை மாற்றி பூஜை செய்தனர்.

    மேலும் அவர்கள் மடத்தின் சொத்துக்களை கைப்பற்றி செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி திடீரென மடம் பூட்டப்பட்டு இருந்தது. மடாதிபதியும் மாயமாகி இருந்தார்.

    இதனால் மடாதிபதியை நித்யானந்தாவின் சீடர்கள் கடத்தி சென்று விட்டதாகவும், மடாதிபதியை மீட்க வேண்டும் என்றும் தொண்டை மண்டல முதலியார்கள் சங்கத்தினர் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை பெங்களூரில் இருந்து ஞானபிரகாச தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் காஞ்சீபுரம் மடத்துக்கு திரும்பினார்.

    அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் ஆன்மீக பயணமாக பெங்களூர் சென்றேன். என்னை யாரும் கடத்தவில்லை. மடத்தில் தங்கி உள்ள நித்யானந்தா சீடர்களை வெளியேற்ற முடியாது” என்று கூறினார்.

    இதனை கண்டித்து தொண்டை மண்டல ஆதீன மீட்புக்குழுவினர் நாளை (4-ந்தேதி) காஞ்சீபுரம், பெரியார் நினைவுத் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    தொண்டை மண்டல ஆதீனத்தில் இருந்து நித்யானந்தாவின் சீடர்களை வெளியேற்ற வேண்டும். நித்யானந்தாவுடன் உள்ள தொடர்பை ஆதீனம் முழுமையாக துண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. இது தொடர்பான போஸ்டர்கள் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் காஞ்சீபுரம் நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.

    இதுகுறித்து தொண்டை மண்டல ஆதீன மீட்பு குழுவினர் கூறியதாவது:-

    தொண்டை மண்டல ஆதீன மடத்தில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்களின் தலையீடு இருக்க கூடாது. அவர்கள் மடத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.

    நாங்கள் தேர்ந்து எடுத்தவர்தான் தலைமை ஆதீனம். அவர் தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் கிடையாது. அவரை நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

    தர்மபுரி ஆதீனம்தான் இந்த ஆதீனத்துக்கு எல்லாம் குரு பீடம் ஆகும். சைவ மடத்துக்குள் ஒரு காலத்திலும் நித்யானந்தா ஆதீனமாக வர முடியாது. வருகிற 7-ந்தேதி உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×