என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பொத்தேரி ரெயில் நிலையம் அருகே பெண் கொலையில் வேலூரை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    பொத்தேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை ஒட்டியுள்ள முட்புதரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலையுண்ட பெண் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த சபீதா (32) என்பது தெரிந்தது.

    இது தொடர்பாக வேலூரை சேர்ந்த சாதிக் உசேனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கொலையுண்ட சபீதா கணவரை பிரிந்து வாழ்ந்து பிராட்வேயில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது.

    சபீதாகக்கு சாதிக் உசேனுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இதில் திருமணம் செய்துகொள்ளும்படி சாதிக் உசேனை அவர் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த தகராறில் சபீதா கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    தமிழகத்தில் உள்ள தலைமை நூலகங்கள் சிவில் சர்வீஸ் பயிற்சிமையமாக செயல்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன் காஞ்சீபுரம் வந்தார். காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்த அவரை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, முன்னாள் எம்.எல். ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சீ பன்னீர்செல்வம், கே.யூ.எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட தலைமை நூலகங்களும் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ், ஐ.எப்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உண்டான சிறப்பு பயிற்சிகள் செயல்படும். மாவட்ட நூலகங்களில் பல்வேறு அறியவகை நூல்களும், நடப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் இருப்பதால் அங்கு பயிற்சியில் ஈடுபட்டால் மாணவர்களின் திறன் வெளிப்படும்.

    தமிழக மாணவர்களின் கல்வி சி.பி.எஸ்.இ.க்கு இணையாகவும், வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கல்வியாக வருங்காலத்தில் தமிழக கல்விதுறை செயல்படும்.

    வருங்காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பரிந்துரைகள் அதிக அளவில் வரும். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக பள்ளி கல்வித்துறை மேலும் பல நல்ல திட்டங்களை ஆலோசித்து வருகிறது.

    தமிழ்நாட்டை பொருத்த வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கல்விக் கொள்கை சிறப்பாக இருந்தது. 1 முதல் 3-ஆம் வகுப்பு பள்ளி குழந்தைகளின் கல்வித் திறன் சிறப்பாக உள்ளது. எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது இதுகுறித்து

    அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தி நீதி மன்றத்தில் கருத்துக்களை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட் டையன் காஞ்சீபுரம் காமாட் சியம்மன் கோயிலில் நடந்து வரும் நவராத்திரி பூஜை விழாவில் கலந்து கொண்டார். பிறகு காமாட்சியம்மனை பயபக்தியுடன் தரிசித்தார். அவருக்கு கோயில் சார்பில் பொன்னாடை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    தாம்பரம் தாலுகா அலுவலகம் எதிரே விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் குடிமனைப்பட்டா வழங்காமல் இருப்பது மற்றும் தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 38-வது வார்டு மண்ணுரான்குளம் பழங்குடி இன இருளர் மக்களின் 14 குடும்பங்களை இடித்து தரைமட்டமாக்கிய நகராட்சியை கண்டித்தும், திருநீர்மலை பேரூராட்சி திருமங்கையாழ்வார்புரத்தில் பட்டா வழங்குவதாக வாக்குறுதி அளித்ததை நிறைவேற்ற வேண்டும், அதே பகுதியில் அனைவருக்கும் குடிமனைப்பட்டா, மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் கூறும்போது, “மேட்டூர் அணை நிரம்பியும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு இன்னும் தண்ணீர் திறந்து விடவில்லை. உடனடியாக தமிழக அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும். பயிர்கள் வாடியதால் அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட அனைத்து விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்றார்.
    பொத்தேரி ரெயில் நிலையம் அருகே கொலையுண்ட பெண் வேலூரைச் சேர்ந்தவர் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    பொத்தேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை ஒட்டியுள்ள முட்புதரில் நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    மறைமலைநகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கொலையுண்ட பெண் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ஷாஜிதா (30) என்பது தெரிந்தது.

    அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    ஷாஜிதா வேலூரில் இருந்து பொத்தேரி வந்தது எதற்காக? அவருடன் வந்தவர்கள் யார்? யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் பிடிபட்டனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது மொய்தீன் (வயது 35) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் இருந்தன. அவற்றை சோதித்தபோது 1 கிலோ எடையுள்ள தங்கத்தை கம்பிகளாக மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

    அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்டப்பராஷனில் (29) என்பவர் வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை சோதனை செய்தபோது, அவர் தனது ஆசனவாய் பகுதியில் மறைத்து வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கக்கட்டிகளை கைப்பற்றினார்கள்.

    மேலும் அதே விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த அப்துல்சமத் (42) என்பவர், சூட்கேசில் மறைத்து வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கத்தையும், சென்னையைச் சேர்ந்த அப்துல் பர்வேஷ் (25) என்பவர் தனது ஆசனவாய் பகுதியில் மறைத்து கடத்தி வந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் முகமது மொய்தீனை கைது செய்தனர். மற்றவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.
    செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள முட்புதரில் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள முட்புதரில் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார்.

    அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. கை, உடம்பிலும் காயங்கள் காணப்பட்டன.

    அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. கறுப்பு கலரில் உடை அணிந்து இருந்தார்.

    உடல் கிடந்த இடத்தில் ரத்த கறை இல்லை. மர்ம நபர்கள் அவரை கடத்தி கழுத்தை அறுத்து கொன்று இங்கு முட்புதரில் உடலை வீசி இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்லாவரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    தாம்பரம்:

    பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் வசித்து வந்தவர் ராஜேஷ் (வயது 27) ரவுடி. கடந்த 20-ந்தேதி அவர் கூட்டாளி ஒருவருடன் பொழிச்சலூர், சிவசங்கரன்நகர் பகுதியில் சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த நரேஷ், கண்ணன், சதீஷ் ஆகியோர் எதிரே வந்தனர். அவர்களிடம் ராஜேசும், அவனது கூட்டாளியும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணம்- செல்போனை பறிக்க முயன்றனர்.

    இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நரேஷ் உள்பட 3 பேரும் சேர்ந்து கம்பியால் ராஜேசை தாக்கினர்.

    இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அவருடன் வந்த கூட்டாளி தப்பி ஓடிவிட்டான்.

    உயிருக்கு போராடிய ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் இறந்தார். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நரேஷ், கண்ணனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கொலையுண்ட ராஜேசின் சொந்த ஊர் பழவந்தாங்கல். அவர் மீது 2 கொலை வழக்கு உள்ளது. எதிரிகளால் ஆபத்து இருப்பதை உணர்ந்த ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொழிச்சலூரில் குடியேறினார்.

    சிறையில் இருந்து 15 நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்தார். உல்லாச செலவுக்கு ஆசைப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டபோது வாலிபர்களின் தற்காப்பு தாக்குதலில் சிக்கி பலியாகி விட்டார்.
    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி கருகினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கனிகண்டீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் பூபதி (வயது 44). இவரது மனைவி கோமளா (40). பூபதி, வீட்டின் ஒரு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தார். அதனை கோவில் திருவிழா மற்றும் விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்தார்.

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து அவர் ஏராளமான பட்டாசுகள் தயாரித்து குடோனில் வைத்து இருந்ததாக தெரிகிறது.

    இன்று காலை பூபதியை பார்ப்பதற்காக அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் மகன் மோகன் (30) அங்கு வந்தார்.

    அப்போது திடீரென குடோனில் இருந்து பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீட்டின் மேற்கூரை ஓடுகள் பல மீட்டர் தூரத்துக்கு பறந்து விழுந்தன. மேலும் வீடு முழுவதும் இடிந்து தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த பூபதி, அவரது மனைவி கோமளா, மோகன் ஆகியோர் உடல் கருகினர்.

    வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் உயிருக்கு போராடிய பூபதி உள்பட 3 பேரையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தீயணைப்ப வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர். மேலும் அங்கிருந்த பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டு இருந்த மூலப்பொருட்களை தண்ணீர் ஊற்றி செயல் இழக்க செய்தனர். பட்டாசு வெடித்ததில் அருகில் இருந்த வீடுகளும் சேதம் அடைந்து உள்ளன.

    தீயில் கருகிய பூபதியின் மனைவு கோமளா, மோகன் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பட்டாசுகள் வெடித்த உடன் வீட்டில் பெரிய அளவில் தீப்பிடிக்காமல் கட்டிடம் மட்டும் முழுவதும் இடிந்து உள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து செயல் பட்டதால் வீட்டில் இருந்த மற்ற பட்டாசுகள் வெடிக்க வில்லை. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    மோகனின் மனைவியின் சீமந்த நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அழைப்பதற்காக பூபதி வீட்டுக்கு அவர் வந்தார். அப்போது பட்டாசு விபத்தில் சிக்கி விட்டார். பூபதியின் 2 மகன்கள் இன்று காலை உறவினர்களுடன் கோவிலுக்கு சென்று விட்டனர். இதனால் அவர்கள் தப்பி விட்டனர்.

    பூபதி, வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் காஞ்சீ புரத்தை அடுத்த கலவை பகுதியில் பட்டாசு தயாரிக்க அனுமதி பெற்று வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்து உள்ளார். தற்போது பட்டாசு வெடித்து சிக்கிக் கொண்டார்.

    இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வானகரம் அருகே வாலிபர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயல் வடக்கு மாதா 2-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் குணசீலன் (வயது 27). கடந்த 19-ந்தேதி அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் வானகரத்தில் சாலையோரம் மூட்டை கட்டி வீசப்பட்டு கிடந்தது.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். உதவி கமிஷன் ஜான்சுந்தரம், இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது பழிக்குப்பழியாக குணசீலன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக திருமங்கலத்தை சேர்ந்த ஹேமந்தகுமார், அண்ணா நகரை சேர்ந்த தமிழரசன், விக்னேஷ், புளியந்தோப்பு டில்லிபாபு ஆகிய பேரை கைது செய்தனர்.

    கொலையுண்ட குணசீலன் மீது கடந்த 4.4.2016 அன்று அமைந்தகரையை சேர்ந்த தீபக்ராஜை கொலை செய்த வழக்கு உள்ளது. இந்த கொலைக்கு பழி தீர்க்க குணசீலனை தீர்த்துக்கட்டி இருப்பது தெரிந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளை மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கிய பின்னரே கொலைக்கான காரணம் வேறு ஏதேனும் உள்ளதா என்பது தெரியவரும்.

    காஞ்சீபுரம் அருகே கோவில் குளத்தில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ்குமார் (13). திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை ஆகாஷ்குமார் காலாண்டு தேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் திருப்புட்குழியில் உள்ள விஜயராகவபெருமாள் கோயில் குளத்தில் குளிக்க சென்றார்.

    அப்போது தண்ணீரில் மூழ்கி தத்தளிததார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ஆகாஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    கமல்ஹாசனை, கெஜ்ரிவால் சந்தித்து இருப்பது இயல்பான ஒன்றுதான் எனவும் இந்த சந்திப்பில் ஒன்றும் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    அமைச்சர்கள் டி.ஜெயக் குமார், சி.வி.சண்முகம், உதயகுமார் ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுக்குழு கூடி முடிவு எடுத்ததின்படி தொடர் நடவடிக்கையாக டெல்லி செல்கிறோம். கழக சட்ட விதிகளின் படி 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் இருந்தால் பொதுக்குழுவை நடத்தலாம். 98 சதவீத உறுப்பினர்கள் பொதுக்குழுவில் பங்கேற்று உள்ளனர். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

    பொதுக்குழுவில் பல தீர்மானங்களை இயற்றி உள்ளோம். அதில் உறுப்பினர்களிடம் கையெழுத்தை பெற்று வீடியோ பதிவு செய்து இருக்கிறோம்.

    இப்படி இருக்கும்போது பொதுக்குழு உறுப்பினரே இல்லாதவர்கள், பொதுக் குழுவை கூட்டுவோம் என்று சொல்வது காற்றில் கத்தியை வீசுவது போல் உள்ளது.

    அ.தி.மு.க.வில் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். எங்களுக்கே இரட்டை இலை சின்னம்.

    கமல்ஹாசன்-கெஜ்ரிவால் சந்திப்பு என்பது, ஒருவரை ஒருவர் சந்திப்பது. கமல்ஹாசனை, கெஜ்ரிவால் சந்தித்து இருப்பது இயல்பான ஒன்றுதான். அதில் அவர்கள் அரசியல் பேசி இருந்தால் பெரிய அளவில் இருக்காது. என்னைப் பொறுத்தவரை இந்த சந்திப்பில் ஒன்றும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே திருநங்கை கொலையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எரிந்த நிலையில் எலும்பு கூடாக ஒரு பிணத்தை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைப்பற்றினர். சம்பவ இடத்திற்கு அருகே ரத்தக்கறை இருந்தது.

    இறந்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார்.

    விசாரணையில் இறந்த நபர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த திருநங்கை சின்னராசு (25) என்பது தெரியவந்தது. கிளாய் பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), விஜய் (20), செல்வ குமார் (20) ஆகிய மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் சின்னராசுவை 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    கார்த்திக் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலம் வருமாறு:-

    நானும் எனது நண்பர்கள் விஜய், செல்வகுமார் ஆகியோரும் கிளாய் ஏரிக்கரை அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக சின்னராசு வந்தார். சின்னராசுவிடம் நைசாக பேசி ஒரிண சேர்க்கைக்கு அழைத்தோம். அதற்கு அவர் மறுத்தார். ஆத்திரத்தில் மது பாட்டிலை உடைத்து திருநங்கை சின்னராசுவின் கழுத்தில் குத்தி கொலை செய்தோம்.

    சின்னராசு இறந்த அடையாளம் தெரியாமல் இருக்க அருகே இருந்த குப்பை மேட்டில் வைத்து தீவைத்து எரித்து விட்டு தப்பி சென்றோம். ஆனால் போலீசிடம் மாட்டிக் கொண்டோம்.

    இவ்வாறு கார்த்திக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதையடுத்து கார்த்திக், விஜய், செல்வகுமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×