என் மலர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர்:
பெங்களூரைச் சேர்ந்தவர் சுதாபிரியன் (80) மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு சுங்குவார் சத்திரம் அருகே உள்ள பொடாவூர் பகுதியில் பண்ணை வீடு உள்ளது. மரம், செடிகளுக்கு மத்தியில் விசாலமான விடப்பட்ட காலி இடத்திற்கு மத்தியில் வீடு கட்டுப்பட்டுள்ளது.
இந்த வீட்டுக்கு எப்போதாவது விடுமுறையில் வந்து தங்கி செல்வார்கள். காவலாளியாக சரவணன் (45) இருந்தார். பண்ணை வீட்டிற்கு எதிரே மனைவி யமுனாவுடன் வசித்து வருகிறார்.
நேற்றிரவு அவர் பண்ணை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பண்ணை வீட்டின் கதவை கடப்பாறையால் உடைக்க முயற்சி செய்தது.
சத்தம் கேட்டு எழுந்த சரவணன் கொள்ளையர்கள் மூவரையும் எதிர்த்து போராடினார். 3 பேருடன் துணிச்சலுடன் மல்லுக் கட்டினார். இதனால் கொள்ளையர்கள் என்ன செய்வது என்று தடு மாறினார்கள்.
3 கொள்ளையர்களும் சரவணனிடம் இருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேர போராட்டத்திற்கு இடையே 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஒருவன் மட்டும் சிக்கி கொண்டான்.
சத்தம் கேட்டு சரவணனின் மனைவி யமுனா ஓடி வந்தார். கொள்ளையனை பிடிக்க கணவருடன் அவரும் போராடினார்.
உருட்டுகட்டையால் கொள்ளையனை சராமாரியாக சரவணன் தாக்கினார். அவரும் திருப்பி தாக்கினார். யமுனாவுக்கு உருட்டு கட்டை அடி விழுந்ததில் காயம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன், கொள்ளையனின் தலை, முகம் போன்ற பகுதியில் சரமாரியாக தாக்கினார். நிலை குலைந்த கொள்ளையன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பிணமானான்.
கணவனும், மனைவியும் கொள்ளையனிடம் நீண்ட நேரமாக போராடி தப்பித்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். ரத்த காயத்துடன் இருந்த யமுனாவை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
கொலையுண்ட கொள்ளையனுக்கு சுமார் 45 வயது இருக்கும். அவன்யார்? எந்த ஊர் என்பது போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவனோடு வந்த 2 கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 4-வது நுழைவு வாயில் அருகே இன்று காலை கேட்பாரற்று மர்ம பை கிடந்தது.
சந்தேகம் அடைந்த பயணிகள் இதுபற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை செய்தனர். அந்த பையில் லேப்-டாப் மற்றும் சில ஆவணங்கள் இருந்தன. வெடிகுண்டு எதுவும் இல்லை.
பயணிகள் யாரேனும் தங்களது பையை தவறவிட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. அதில் உள்ள ஆவணங்களை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு மர்ம பை சோதனை நடந்தது. இதனால் விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
போரூர்:
சாலிகிராமம், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலையில் வசித்து வருபவர் ஆனந்தி. இவரது வீட்டில் அதே பகுதியை சேர்ந்த புனிதா கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
ஆயுத பூஜையையொட்டி வீட்டில் உள்ள பொருட்களை ஆனந்தி சுத்தம் செய்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை மாயமாகி இருந்தது. கடந்த சில நாட்களாக புனிதாவும் வேலைக்கு வர வில்லை. அவர் நகையுடன் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கோயம்பேடு அருகே பதுங்கி இருந்த புனிதாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 பவுன் நகை மீட்கப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத் தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
சோழிங்கநல்லூர் தொகுதியில் ஆண்கள் 3,13,789, பெண்கள் 3,10,542, இதர வாக்காளர்கள் 74 என மொத்தம் 6,24,405 பேர் உள்ளனர்.
ஆலந்தூர் தொகுதியில் ஆண்கள் 1,79,335, பெண்கள் 1,80,887, இதர வாக்காளர்கள் 7 என மொத்தம் 3,60,229 வாக்காளர்கள்.
ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,54,847, பெண்கள் 1,62,959, இதர வாக்காளர்கள் 47 என மொத்தம் 3,17,853 பேர் உள்ளனர்.
பல்லாவரம் தொகுதியில் ஆண்கள் 2,08,776, பெண்கள் 2,09,403, இதர வாக்காளர்கள் 25 என மொத்தம் 4,18,204 வாக்காளர்கள்.
தாம்பரம் தொகுதியில் ஆண்கள் 1,95,888, பெண்கள் 1,96,180, இதர வாக்காளர்கள் 35 என மொத்தம் 3,92,103 பேர் உள்ளனர்.
செங்கல்பட்டு தொகுதியில் ஆண்கள் 1,90,470, பெண்கள் 1,95,923, இதர வாக்காளர்கள் 43 என மொத்தம் 3,86,436 வாக்காளர்கள்.
திருப்போரூர் தொகுதியில் ஆண்கள் 1,31,664, பெண்கள் 1,35,846, இதர வாக்காளர்கள் 19 என மொத்தம் 2,67,529 வாக்காளர்கள் உள்ளனர்.
செய்யூர் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,07,139, பெண்கள் 1,10,094, இதர வாக்காளர்கள் 29 என மொத்தம் 2,17,262 வாக்காளர்கள்.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,09,948, பெண்கள் 1,14,615, இதர வாக்காளர்கள் 47 என மொத்தம் 2,24,610 வாக்காளர்கள் உள்ளனர்.
உத்திரமேரூர் தொகுதியில் ஆண்கள் 1,17,836, பெண்கள் 1,25,782, இதர வாக்காளர்கள் 14 என மொத்தம் 2,43,632 வாக்காளர்கள்.
காஞ்சீபுரம் தொகுதியில் ஆண்கள் 1,44,584, பெண்கள் 1,54,372, இதர வாக்காளர்கள் 11 என மொத்தம் 2,98,967 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு:-
கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 31ஆயிரத்து 104, பெண்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 781, இதர வாக்காளர்(திருநங்கைகள்) 33 உள்பட மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 918 பேர் உள்ளனர்.
பொன்னேரி தொகுதியில் ஆண்கள்1 லட்சத்து 25 ஆயிரத்து 431, பெண்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 384, இதர வாக்காளர்கள் 59 உள்பட மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேர் உள்ளனர்.
திருத்தணி தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 177, பெண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 552 இதர வாக்காளர்கள் 29 உள்பட மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 758 வாக்காளர்கள்.
திருவள்ளுர் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 263, பெண்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 20 இதர வாக்காளர்கள் 25 உள்பட மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 308 வாக்காளர்கள் உள்ளனர்.
பூந்தமல்லி தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 63 ஆயிரத்து 387, பெண்கள் 1 லட்சத்து 66 ஆயிரத்து 556இதர வாக்காளர்கள் 52 உள்பட மொத்தம் 3 லட்சத்து 29 ஆயிரத்து 995 வாக்காளர்கள்.
ஆவடி தொகுதியில் ஆண்கள் 2 லட்சத்து 5 ஆயிரத்து 825, பெண்கள் 2 லட்சத்து 5 ஆயிரத்து 430ம், இதர வாக்காளர்கள் 89 உள்பட மொத்தம் 4 லட்சத்து 11 ஆயிரத்து 344 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரவாயல் தொகுதியில் ஆண்கள் 2 லட்சத்து 10 ஆயிரத்து 298, பெண்கள் 2 லட்சத்து 4 ஆயிரத்து 618, இதர வாக்காளர்கள் 130 உள்ளிட்ட மொத்தம் 4 லட்சத்து 15 ஆயிரத்து 46 வாக்காளர்கள் உள்ளனர்.
அம்பத்தூர் தொகுதியில் ஆண்கள், 1 லட்சத்து 86 ஆயிரத்து 225, பெண்கள் 1 லட்சத்து 84 ஆயிரத்து 202, இதர வாக்காளர்கள் 102 உள்பட மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரத்து 529 பேர் உள்ளனர்.
மாதவரம் தொகுதியில் ஆண்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 154, பெண்கள், 2 லட்சத்து 7 ஆயிரத்து 105 இதர வாக்காளர்கள் 90 உள்பட மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 349 வாக்காளர்கள்.
திருவொற்றியூர் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 450, பெண்கள் 1 லட்சத்து 47 ஆயிரத்து 993, இதரவாக்காளர்கள் 111 உள்ளிட்ட மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 554 பேர் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் ஆண்கள் 16 லட்சத்து 41 ஆயிரத்து 314, பெண்கள் 16 லட்சத்து 60 ஆயிரத்து 641, இதர வாக்காளர்கள் 720 உள்பட மொத்தம் 33 லட்சத்து 2 ஆயிரத்து 675 பேர் உள்ளனர்.
திருப்போரூர்:
பழைய மாமல்லபுரம் சாலையில் திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கிச்சென்ற பங்களா உள்ளது.
சசிகலா, இளவரசி பெயரில் உள்ள இந்த பங்களாவிற்கு ஜெயலலிதா அடிக்கடி வந்து தங்கியிருந்தார். இந்த பங்களாவின் ஒரு பகுதி சொத்துகுவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இங்கு வந்து தங்கிசெல்லும் போது பங்களாவைச் சுற்றிலும் சுமார் 15-க்கும் மேற்பட்ட செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். இதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் திருப்போரூர், ஆலத்தூர், பையனூர் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் அவர் முதல்வராக இல்லாதபோது குறைந்த அளவே போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த பங்களாவிற்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் தற்போது சசிகலா பெயரில் உள்ள இந்த பங்களாவிற்கு தமிழக போலீசாரின் பாதுகாப்பு கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த பங்களாவைச்சுற்றி உள்ள பகுதியில் யாரும் எளிதாக உள்ளே நுழைய முடியாத நிலை இருந்தது.
தனியார் நிலங்களுக்கு செல்வோர் பலத்த சோதனைக்கு பிறகே செல்ல முடியும். தற்போது எந்தவித கெடுபிடிகளும் இல்லாமல் எவ்வித சோதனைகளும் இல்லாமல் செல்லும் நிலை உள்ளது.
தற்போது பங்களா நுழைவாயில் மற்றும் பங்களாவிற்கு பக்கவாட்டில் உள்ள 2 தனியார் வழிகள் உள்ளிட்ட 3 இடங்களில் மட்டுமே ஷிப்டுக்கு 6 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
பங்களாவிற்குள் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா கணவர் நடராஜன் சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இதற்காக சிறையில் இருக்கும் சசிகலா பரோல் கேட்டு கணவரை பார்க்க சென்னைக்கு வர உள்ளார். அப்படி வந்தால் மருத்துவ மனையிலிருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள இந்த பங்களாவிற்கு வந்து செல்வாரா? என்று தெரியவில்லை.
ஸ்ரீபெரும்புதூர்:
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 35). துணி வியாபாரம் செய்து வருகிறார்.
துணிகளை சுங்குவார் சத்திரம் அடுத்த பேரம்பாக்கம், மதுரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் விற்றுவிட்டு தவணை முறையில் பணத்தை வசூல் செய்து வந்தார்.
3 மாதத்துக்கு முன் எடையார்பாக்கம் பகுதியில் பணத்தை வசூல் செய்து மோட்டார் சைக்கிளில் எடையார்பாக்கம் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் பாபுவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 75 ஆயிரம் பணம், செல்போனை பறித்து தப்பி சென்றனர்.
இது குறித்து பாபு சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜான் விகிடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் அவர்களின் அங்க அடையாளங்களை வைத்து கொள்ளையர்கள் படம் வரைந்து தேடி வந்தனர்.
விசாரணையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த அஜித், விஜி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 கத்தி,2 செல்போன், பைக் ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடந்த மாதம் 25-ந் தேதி பிள்ளைச்சத்திரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கணேசன் என்பவர் தனது லாரியை சாலையோரம் நிறுத்திய போது மர்ம நபர்கள் 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கணேசனை கத்தியை காட்டி சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன், ரூ. 5 ஆயிரத்தை பறித்து தப்பினர்.
அதே பகுதியில் இரும்பு கடை வைத்துள்ள ராதாகிருஷ்ணன் என்பவரிடம் அதே கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 20 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மொளச்சூர் பகுதியை சேர்ந்த சத்திரியன், ஆனந்த், வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3, கத்தி, 2 செல்போன், 4 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
ஆயுதபூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து கடந்த 29-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை வந்தது.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி இருந்து தென் மாவட்டத்தை சேந்தவர்கள் சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதற்காக சென்னையில் இருந்து சிறப்பு அரசு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தொடர் விடுமுறை முடிந்து நேற்று மாலை முதல் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாகனங்கள் மற்றும் பஸ்களில் சென்னைக்கு திரும்பி வந்தனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்துக் கிடந்தன.
இன்று அதிகாலை 3 மணி அளவில் இருந்து சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்தன.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூர் மேம்பாலம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.

பஸ்களும், கார்களும் மெதுவாக ஊர்ந்து சென்றதால் வண்டலூரில் இருந்து பெருங்களத்தூரை கடக்க சுமார் 2 மணி நேத்துக்கும் மேல் ஆனது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
பெங்களத்தூரில் இறங்கிய பயணிகள் அங்கிருந்து மாநகர பஸ் மற்றும் மின்சார ரெயில்கள் மூலம் நகரின் பிற பகுதிகளுக்கு சென்றனர்.
பஸ்கள் மற்றும் கார்கள் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக கோயம்பேடுக்கு வந்து சேர்ந்தன.
காலை 10 மணிக்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் ஓரளவு சீரானது. போக்குவரத்தை சரிசெய்ய பெருங்களத்தூரில் முன்னேற்பாடாக 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோல போக்குவரத்து ஊழியர்களும் பணியில் ஈடுபட்டனர்.
பெருங்களத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு 15-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்பட்டன.
பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே கார், ஆட்டோக்களை நிறுத்த போலீசார் அனுமதிக்கவில்லை.
சோழிங்கநல்லூர் அடுத்த ஒக்கியம் துரைபாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜா. மாநகர அரசு பஸ் கண்டக்டர். இன்று அதிகாலை வேலை முடிந்து ராஜா தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரோட்டை கடந்து சென்றார்.
அப்போது பல்லாவரம் நோக்கி வந்த கார் மோதியதில் ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் முத்துராஜை கைது செய்தனர்.
ஆலந்தூர்:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அ.தி.மு.க. அரசு எதற்கும் லாயக்கற்றது. அவர்கள் பதவி அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு கமிஷன் வாங்க நடத்தப்படுகிற ஆட்சி. மக்கள் படும் இன்னல்கள் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாத அரசு.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்கள் வரி பணமான அரசு பணத்தை நியாயமாக செலவு செய்கிறார்களா? உண்மையில் எம்.ஜி.ஆரின் புகழுக்காக நடைபெற்று இருந்தால் விமர்சிக்க மாட்டோம்.
உட் கட்சி விவகாரங்கள், எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்வதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகின்றன. அரசு நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து வரக் கூடாது என்று நீதிமன்றம் உத்தர விட்ட பிறகும் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் அவர்களது பள்ளி வாகனத்தில் அழைத்து வரப்பட்டுள்ளன. எந்த வகையிலும் இந்த ஆட்சி நீடித்து நிலைத்து இருக்காது.
ஏற்கனவே இருந்த கவர்னர் போல் இல்லாமல் தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய கவர்னர் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை புரிந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சிவாஜி மணி மண்டபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெயரை அகற்றி உள்ளனர். கடற்கரையில் இருந்து சிவாஜி சிலையை அவர்கள் அப்புறப்படுத்தியது ஏன்? என்று அனைவருக்கும் தெரியும். கலைஞருடைய பெயர் ஜெயலலிதாவுக்கு முதலில் உறுத்தியது. தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும், அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு உறுத்தி உள்ளது. அதனால் தான் சிலையை அங்கிருந்து அகற்றினார்கள். ஜெயலலிதா பெயரை பொறிப்பதற்காக சிவாஜி சிலை கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டது.
கலைஞர் தலைமையில் 2006-11 வரை மைனாரிட்டியாக இருந்த தி.மு.க. அரசு காங்கிரஸ் மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்து தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்தியது. தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களுடைய எம்.எல்.ஏ.க்களே கவர்னரை சந்தித்து மனு கொடுத்து உள்ளனர். அவர்கள் தான் மைனாரிட்டி அரசு. எங்களை பார்த்து அவர்கள் மைனாரிட்டி என்று சொல்வதா? இது திரிசங்கு ஆட்சி.
நான் அ.தி.மு.க. அமைச்சர்களை போல் கற்பனை செய்து கனவு காண்பவன் அல்ல. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரையைச் சேர்நதவர் ஈஸ்வரி (வயது45). இவர் அதே பகுதியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். பள்ளிக் கூடத்தை விரிவுபடுத்த அவருக்கு பணம் தேவைப்பட்டது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு கும்பல் ஈஸ்வரியிடம் தொடர்பு கொண்டு தங்களுக்கு வங்கியில் ரூ.1½ கோடி கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு கமிஷன் தர வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதற்கு தேவையான ஆவணங்களை ஆன்லைன் மூலமாக அனுப்பும்படி அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து கடன் பெறுவதற்காக அவர் ஆவணங்களையும் அனுப்பினார்.
இதற்கிடையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரியை அந்த கும்பல் தொடர்பு கொண்டு, முதல் கட்டமாக ரூ.50 லட்சம் கடன் தயாராகி விட்டது. அதற்கான கமிஷன் தொகை ரூ.1½ லட்சம் கொடுத்து விட்டு கடன் தொகையை பெற்று செல்லும்படி கூறினர்.
இதனை நம்பி ஈஸ்வரி மதுரையில் இருந்து புறப்பட்டு நேற்று சென்னை வந்தார். அந்த கும்பலிடம் தொடர்பு கொண்டபோது பல்லாவரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தாங்கள் இருப்பதாகவும் வந்து பணத்தை பெற்று செல்லும் படியும் கூறினர்.
இதையடுத்து ஈஸ்வரி அந்த ஓட்டலுக்கு சென்றார். அங்கு 5 பேர் இருந்தார்கள். அவர்களிடம் கமிஷன் தொகை ரூ.1½ லட்சத்தை அவர் கொடுத்தார்.
அதன்பிறகு ரூ.50 லட்சம் கொண்ட பண பார்சலை அவர்கள் கொடுத்து அதனை வீட்டிற்கு சென்று பிரித்து பாருங்கள் என்று தெரிவித்தனர்.
இதனால் ஈஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஓட்டலை விட்டு வெளியே வந்த அவர் கும்பல் கொடுத்த பணப் பார்சலை பிரித்து பார்த்தார். அதில் வெறும் காகிதம் மட்டுமே இருந்துள்ளன. மேல் பகுதியில் மட்டும் ரூ.500 நோட்டுகளை வைத்து அதன் கீழ் வெள்ளை தாள்களை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஈஸ்வரி பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு விரைந்து வந்தனர். தங்கராஜ் (65), செல்வராஜ் (60) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
வங்கி கடனுக்கு ஆசைப்பட்டு கையில் இருந்த பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை சோழிங்க நல்லூர் அடுத்த செம்மஞ்சேரி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் ஏழுமலை. மயிலாப்பூரில் தனியார் டிராவல்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் பிரவீன் குமார் (வயது 6).
நேற்று ஆயுதபூஜை கொண்டாடுவதற்காக அனைத்து வேலைகளையும் செய்து முடித்த கணவன்-மனைவி இருவரும் மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பிரவீன் குமார் வீட்டின் பின் பகுதியில் உள்ள குட்டையில் விளையாட சென்றுள்ளான்.
தூங்கி எழுந்த கணவன்-மனைவி இருவரும் மகன் பிரவீன் குமாரை காணவில்லை என அக்கம் பக்கம் முழுவதும் தேடினர். மகன் கிடைக் காததால் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் பிரவீன் குமார் வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. செம்மஞ்சேரி போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குட்டையில் இருந்து அதிகாலை 3 மணியளவில் பிரவீன்குமார் உடலை மீட்டனர். விளையாட சென்ற சிறுவன் குட்டையில் தவறி விழுந்து இறந்தானா அல்லது வேறு காரணமா என செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனையில் ஊழியர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மருத்துவமனை தலைவர் டி.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். விழாவில் அ.தி.மு.க. எம்.பி. வைத்திலிங்கம் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு உதவிகளை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் 98 சதவீத உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். நிச்சயமாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. அவருடைய விசாரணைக்கு முன்னால் சொல்ல வேண்டிய கருத்துகளை சொல்லலாம்.

ஆனால் இப்போது மாறுபட்ட கருத்துகளை சொல்லி, அதனால் விசாரணை கமிஷனின் விசாரணையை பாதிக்கின்ற அளவு இருக்கக்கூடாது. எனவே அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். யார் எந்த கருத்தை சொன்னாலும் விசாரணை கமிஷன் முன்பு சொல்வதுதான் சரியாக இருக்கும்.
திருச்சியில் டி.டி.வி.தினகரனுக்கு கூடிய கூட்டத்தை பெரிய கூட்டமாக நினைக்கவில்லை. நாங்கள் கூட்ட வேண்டும் என்றால் அதைவிட பத்து மடங்கு அதிகமாக கூட்டலாம். ஒன்றரை கோடி தொண்டர்கள் அத்தனை பேரும் எங்களிடம் தான் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






