search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் பலி"

    • விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீனேஷ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.
    • விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று அரசு பேருந்து சாலை வளைவைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 16) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீனேஷ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் மணி என்பவரை கைது செய்தனர்.
    • பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள்- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பாச்சங்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் சாய் சரண் (வயது 6). இவன் பல்லடம் அருகே பெத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் மாணவன் பள்ளிக்கு சென்று வந்தான்.

    வழக்கம் போல் நேற்று காலை பள்ளி வேனில் மாணவன் சாய் சரண் பள்ளிக்கு சென்றான். பின்னர் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் பள்ளி வேனில் வீட்டிற்கு சென்றான். வேன் மாணவன் வீட்டிற்கு அருகே வந்ததும் நிறுத்தப்பட்டது. அப்போது வேனில் இருந்து சாய் சரண் இறக்கிவிடப்பட்டான். மற்ற குழந்தைகளும் அங்கு இறக்கி விடப்பட்டனர்.

    பின்னர் பள்ளி வேன் திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது வேனின் பின் சக்கரத்தில் சாய்சரண் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் மாணவன் சாய் சரண் படுகாயம் அடைந்தான். உடனே சாய்சரணின் பெற்றோர் மற்றும் அருகில் உள்ளவர்கள் மாணவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாய் சரணை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டபனர். பள்ளிக்கு சென்ற மாணவன் பள்ளி வேனிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் மணி என்பவரை கைது செய்தனர். இதனிடையே இந்த விபத்து சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் அருகே உள்ள கள்ளிமேடு பகுதியில் திருப்பூர் -பொங்கலூர் ரோட்டில் இன்று காலை பொதுமக்கள்- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் சென்ற போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு சென்று விடுவதால், இஷ்வந்தை அவரது பாட்டி கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இஷ்வந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவரது மனைவி தென்காசி ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் இஷ்வந்த் (வயது 4).

    கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு சென்று விடுவதால், இஷ்வந்தை அவரது பாட்டி கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் சிறுவன் இஷ்வந்த் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது அங்கு அலமாரியில் ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த பேன் மருந்தை, குளிர்பானம் என நினைத்து விளையாட்டு தனமாக இஷாந்த் அதனை எடுத்து குடித்துவிட்டான். இதனால் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்தான். உடனே அவனை மீட்டு தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இஷ்வந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொதுமக்கள் சிறுவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை கைலாசா செட்டி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகேஷ் (வயது 17). நேற்று இரவு லோகேஷ் தண்டையார்பேட்டையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரெயில் மோதியது.

    இதில் லோகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் தொட்டியை பார்த்த போது குகன்ராஜ் தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுபேச்சின்றி கிடந்தார்.
    • அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    வடவள்ளி:

    கோவை வேடபட்டி சாலை நாகராஜபுரம் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் கார்த்திக். கட்டிடத் தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 6 வயதில் குகன்ராஜ் என்ற மகன் உள்ளார்.

    குகன்ராஜ், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குகன்ராஜ் வீட்டில் இருந்தான். மதியம் தனது தாயிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டின் அருகே சென்று குகன்ராஜ் விளையாடி கொண்டிருந்தான்.

    இந்நிலையில் விளையாட சென்ற சிறுவன் மாலை வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால், பெற்றோர் அதிர்ச்சியாகினர். அக்கம்பக்கத்தில் சிறுவனை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இவர்களது வீட்டின் அருகே ஆரம்ப பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக அங்கு தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்து தண்ணீர் நிரப்பி உள்ளனர். இந்நிலையில் அந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஒருவன் மூழ்கி கிடப்பதாக பரவிய தகவலை அடுத்து, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். சிறுவனின் பெற்றோரும் அங்கு வந்தனர்.

    அவர்கள் தண்ணீர் தொட்டியை பார்த்த போது குகன்ராஜ் தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுபேச்சின்றி கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள், சிறுவனை தூக்கி கொண்டு, தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பள்ளி சுற்றுச்சுவரை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தண்ணீர் தொாட்டியை மூடாமல் சென்றதால் தான் குழந்தை இறந்ததாக கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று வாக்குவாதம் செய்தனர்.

    மேலும் அஜாக்கிரததையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன், தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.

    ஆனால் உறவினர்கள் உடலை எடுக்க விடமால், குழந்தை இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். ஏராளமானோர் குவிந்ததால் பாதுகாப்புக்காக அங்கு அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் (19), மாலிக் குஷ்தூர் (29), ஷேக் ஆஸ்குத்கொமல் (25), அஸருதுல் இஸ்லாம் (30) ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரக்சன் உயிரிழந்தார்.

    போரூர்:

    சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களது மகன் ரக்சன் (வயது4)

    சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ரக்சனை சேர்த்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரக்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • டிராலியை ஓட்டி வந்த டிரைவர், தண்டவாளத்தின் நடுவே நடந்து சென்ற சரவணமாரி விலக செய்வதற்காக ஒலி எழுப்பி உள்ளார்.
    • வேறு வழியில்லாமல் டிராலி டிரைவர் பிரேக் போட்டார்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியை சேர்ந்தவர் ரோசையா. இவரது மகன் சரவணமாரி(வயது 16). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு, ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை மூக்குப்பீறி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தண்டவாளத்தை ஆய்வு செய்யும் டிராலி வாகனம் வந்துள்ளது.

    அப்போது டிராலியை ஓட்டி வந்த டிரைவர், தண்டவாளத்தின் நடுவே நடந்து சென்ற சரவணமாரி விலக செய்வதற்காக ஒலி எழுப்பி உள்ளார். ஆனால் அவர் காதில் ஹெட்போன் மாட்டியிருந்ததால் அவருக்கு சத்தம் கேட்க வில்லை. இதனால் தண்டவாளத்தில் அவர் தொடர்ந்து நடந்து சென்றார்.

    இதனால் வேறு வழியில்லாமல் டிராலி டிரைவர் பிரேக் போட்டார். ஆனாலும் வேகத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதனால் அந்த வாகனம் சரவணமாரி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று சரவணமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விபத்து ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். சோமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி வினோதா. இவர்களது மகன்கள் நித்தின், ருத்ரேஷ் (வயது 3½).

    நேற்று முன்தினம் மாலை ராமகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் நடுவீரப்பட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற நடிகர்கள் ஷாருக்கான்-விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இரவு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அனைவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நித்தின் மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்திலும், பின்பக்க இருக்கையில் வினோதா மகன் ருத்தரேசை கையில் பிடித்தபடி இருந்தனர்.

    இரவு 10 மணியளவில் சோமங்கலம்-தாம்பரம் சாலையை கடக்க முயன்றபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு புகுந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதி நிலை தடுமாறியது. அந்த நேரத்தில் எதிரே வந்த லாரியின் மீதும் மோட்டார் சைக்கிள் மோதி சரிந்தது. இதில் ராமகிருஷ்ணன் குடும்பத்தோடு சாலையில் விழுந்தார். சாலையில் விழுந்த வேகத்தில் சிறுவன் ருத்ரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமகிருஷ்ணன், அவரது மனைவி வினோதா, மற்றொரு மகன் நித்தின் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தலையில் பலத்த காயம் அடைந்து இருந்த ருத்ரேஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி திருமுடிவாக்கம் பகுதியில் நாகம்மாள் என்பவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் திடீரென புகுந்த மாடு மீது மோதியதில் கீழே விழுந்து பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து தாயுடன் வந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கியது குறிப்பிடத்தக்கது.

    விபத்து ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.
    • சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல்குளத்தில் நேற்று மதியம் குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

    சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன்.

    சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய்

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியை அடுத்த அழகிய நம்பி புரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வெண்சுபா. இவர்களுக்கு ஹரிஷ் இசை ரக்ஷன் (வயது5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சிறுவன் ஹரிஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    தினமும் வீட்டின் பின்புறம் உள்ள மாடி படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி விளையாடுவது வழக்கம். இன்றும் விடுமுறையையொட்டி காலையில் சிறுவன் ஹரிஷ் மாடி படிக்கட்டில் ஏறி நின்று விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து சிறுவன் தவறி கீழே விழுந்தான். இதில் மயக்க மடைந்த ஹரிசை உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவனது பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏரி, குளம், போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவும்.
    • நோயில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புணர்வு டன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மூளையை தின்னும் அரிய வகை நோயான அமீபா நோய் பரவி வருகிறது. நெல்லேரியா பவுலேரி என்ற தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை நேரடியாக தாக்கும். இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஏரி, குளம், போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவும். அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போது மூக்கு வழியாக அமீபா உடலுக்குள் சென்று விடும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, தூக்கமின்மை, கடுமையான தலைவலி, சுவையில் மாற்றம், கழுத்து வலி, மாறுபட்ட மனநிலை போன்றவை ஏற்படும்.

    இந்த நோயால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட நிவேடா என்ற பகுதியை சேர்ந்த உட்ரோ டர்னர் என்ற 2 வயது சிறுவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் அங்கு அவன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக அவனது தாய் பிரியனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் வெளியிட்டு உள்ளார். கடந்த 7 நாட்களாக அமீபா நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், தனது மகன் தான் எனக்கு ஹீரோ என்றும் உருக்கமாக அவர் தெரிவித்து உள்ளார். இந்த நோயில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற நோய்க்கு மேலும் ஒரு சிறுவனும் பலியாகி உள்ளான்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவைச் சேர்ந்த குருதத் என்ற 15 வயது சிறுவன் நோய் தாக்கி பலியானான்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது அம்மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், அமீபாவால் பரவும் பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற அபூர்வ நோய் தாக்குதல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தேங்கி நிற்கும் மாசுப்பட்ட தண்ணீரில் இருக்கும் அமீபா தாக்குதலுக்கு உள்ளாபவர்கள் இந்த நோய் தாக்கி பலியாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவைச் சேர்ந்த குருதத் என்ற 15 வயது சிறுவன் இந்த நோய் தாக்கி பலியானான்.

    தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பவர்கள் மற்றும் முகம் கழுவுபவர்களின் மூக்கு வழியாக அமீபா சென்று மூளையை தாக்குவதால் அந்த அறிய நோய் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே தேங்கி கிடக்கும் அசுத்தமான நீரில் குளிப்பதையும், முகம் கழுவதையும் தவிர்க்க வேண்டும் என கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இந்த நிலையில் பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற நோய்க்கு மேலும் ஒரு சிறுவனும் பலியாகி உள்ளான். காசர்கோடு படனகாடு பகுதியைச் சேர்ந்த பலேஷ்-அஸ்வதி தம்பதியின் இரட்டை குழந்தைகளில் ஒருவனான ஸ்ரீபாலு(3) என்ற சிறுவன் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதித்து அவதிப்பட்டுள்ளான்.

    காஞ்சங்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவனது உடல்நிலை மோசமானதால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டான். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் ஸ்ரீபாலு பரிதாபமாக இறந்தார்.

    அமீபாவால் வரும் அபூர்வ மூளை தாக்குதல் நோய்க்கு மேலும் ஒரு சிறுவன் பலியாகி இருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    ×