என் மலர்
உள்ளூர் செய்திகள்

செப்டிக் டேங்க்
செங்கல்பட்டு - செப்டிக் டேங்கில் தவறி விழுந்து சிறுவன் பலி
- 6 வயது சிறுவன் தண்ணீர் பிடிக்க தந்தையுடன் சென்றான்.
- அப்போது செப்டிக் டேங்கில் தவறி விழுந்த சிறுவன் பலியானான்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35), லாரி டிரைவரான இவர் நேற்று மாலை 5 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் தனது 6 வயது மகனை அழைத்துக் கொண்டு வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் குழாயில் வீட்டிற்கு தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றார்.
தந்தை மணிகண்டன் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் கவனம் செலுத்திய நிலையில், விளையாடிக் கொண்டிருந்த மகன் திடீரென காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்த குடிநீர் குழாய் அருகே மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கை பார்த்தபோது அதில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடந்த தனது மகனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிநீர் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






