என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சேலையூர் அருகே 2 கடைகளில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளிக்கரணை:

    சேலையூரை அடுத்த செம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6-வது தெரு வேளச்சேரி மெயின் ரோட்டில் லேப்டாப் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் நாகராஜன். இரவு கடையை மூடிச் சென்றார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த லேப் டாப், டி.வி.டி. பிளேயர், ரூ. 1000 ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.

    இதேபோல் அருகில் உள்ள மருந்து கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணப் பெட்டியில் இருந்த ரூ. 35 ஆயிரத்தையும் சுருட்டி சென்றுவிட்டனர்.

    காஞ்சீபுரத்தில் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய வாலிபருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், மேற்கு ராஜ வீதியில் குமரகோட்டம் முருகன் கோவில் உள்ளது. கந்த புராணம் அரங்கேறிய இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்வர்.

    இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அப்போது கோவில் வாசலில் வெளிநாட்டு வாலிபர் அமர்ந்து தனது தொப்பியை வைத்து பிச்சை எடுப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வெளிநாட்டு வாலிபர் நமது ஊரில் பிச்சை எடுக்கிறாரே என கூறியபடி பக்தர்கள் பலர் அவரது தொப்பியில் பணம் போட்டுச் சென்றனர்.

    அவர், ‘நான் இந்தியாவை சுற்றிப்பார்க்க வேண்டும் என்னிடம் பணம் இல்லை உதவி செய்யுங்கள்’ என சைகை மூலம் கேட்டு தொடர்ந்து பிச்சை எடுத்தார்.

    இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிச்சை எடுத்த வெளிநாட்டு வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த எவிக்மி என்பது தெரிய வந்தது.



    நான் சென்னை செல்ல வேண்டும். எனவே பிச்சை எடுத்தேன் என்று தெரிவித்தார். அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இருந்தன. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் துளசி மற்றும் போலீசார் அவரிடம், இது போன்று பிச்சை எடுக்கக் கூடாது என்று அறிவுரை கூறினர். மேலும் சிறிது பணத்தினை கொடுத்து சென்னை செல்லும் ரயிலில் ஏற்றி அவரை அனுப்பி வைத்தனர்.

    கோவில் வாசலில் ரஷ்ய நாட்டு இளைஞர் பிச்சையெடுத்த சம்பவம் பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வளசரவாக்கம்-ராமாபுரத்தில் கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வளசரவாக்கம் பகுதியில் செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்க உதவி கமி‌ஷனர் சம்பத், மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் குமரன், ஆல்பின்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் ஆற்காடு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்கள் போரூர் ராமகிருஷ்ணா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்கிற டோரி கார்த்திக், நெசபாக்கம் கானு நகரை சேர்ந்த கார்த்திக் பாண்டியன் என்கிற கோவூர் கார்த்திக் என்பதும் இவர்கள் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 சவரன் நகை, 600 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ராமாபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த பாலாஜி, ஆவடியை சேர்ந்த நவஹருள் ஆகிய 2 பேரை பிடித்தனர். அவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. அவர்களை போலீசார் கைது செய்து 2 விலை உயர்ந்த லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.

    குடும்ப தகராறு காரணமாக திருப்போரூர் கோவிலில் 3 மாதம் பிச்சைக்காரராக வாழ்ந்த கோடீஸ்வரர் தனது குடும்பத்தினருடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை கண்ட பக்தர்களும் கண்கலங்கினர்.
    திருப்போரூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி அருகே உள்ள தீவனூர்பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். கோடீஸ்வரர். இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் முன்னேறியவர் என கூறப்படுகிறது.

    இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். ஒரு மகனுக்கு மட்டும் திருமணம் ஆகி உள்ளது. அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் மருமகளுடன் நடராஜனுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்ட நடராஜன் மனைவி மற்றும் மகன்களிடம் ஏதும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

    பின்னர் எங்கும் செல்வது என தெரியாமல் பல கோவில் தலங்களுக்கு சென்று விட்டு கடைசியாக திருப்போரூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.

    நடராஜனுக்கு திருப்போரூர் கோவில் தலம் பிடித்துவிடவே கோவிலின் வெளிப்புற மண்டபம் பகுதியிலேயே தங்கி கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழங்கும் அன்னதானத்தை சாப்பிட்டு நாட்களை கடத்தினார். பிச்சைக்காரராக கடந்த 3 மாதமாக அவர் அங்கேயே தங்கி இருந்தார்.

    இதற்கிடையில் தந்தையை காணாது மகன்களும், கணவரை காணாது மனைவியும் தங்களுடைய உறவினர்கள் மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் என பல இடங்களில் தேடிவந்தனர். மேலும் பல கோவில்களுக்கு சென்றும் பார்த்தனர். ஆனால் நடராஜனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று காலை நடராஜனின் மனைவி மற்றும் மகன்கள் காரில் திருப்போரூர் முருகன்கோவிலுக்கு வந்தனர்.

    கோவிலுக்கு சென்று விட்டு அருகே உள்ள கடையில் டீ சாப்பிட சென்றபோது தாடி வளர்த்த நிலையில் தனது தந்தையை போல் ஒருவர் அங்குள்ள மண்டபத்தில் உட்கார்ந்திருந்ததை பார்த்தனர்.

    அவர்கள் அருகே சென்று பார்த்தபோது தந்தை நடராஜன் உட்கார்ந்து இருப்பதை கண்டு மகன்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

    இதற்குள் காரில் உட்கார்ந்திருந்த மனைவியும் தனது கணவர் கிடைத்து விட்டதை அறிந்து காரில் இருந்து உடனடியாக விரைந்து வந்தார். அவர் தனது கணவரை பார்த்து கதறி அழுதார்.

    இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்து அக்கம்பக்கத்தினர் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்கலங்கினர்.

    பின்னர் நடராஜனிடம் அவரது மகன்கள் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு வரும்படி அழைத்தனர். மனைவி மற்றும் மகன்களின் கண்ணீரால் கோபம் குறைந்த நடராஜன் வீட்டிற்கு வர சம்மதித்தார்.

    இதைதொடர்ந்து அங்குள்ள சலூன் கடையில் நடராஜனுக்கு முடிவெட்டி, ஷேவ் செய்து புதுமனிதராக மனைவி மற்றும் மகன்கள் காரில் சொந்த ஊருக்கு அழைத்துச்சென்றனர்.

    கம்போடியாவில் தற்கொலை செய்த ஸ்ரீதரின் உடலை காஞ்சீபுரம் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (45) சாராய வியாபாரியான இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டார்.

    பின்னர் நில உரிமையாளர்களை மிரட்டி அடி மாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி வேறோருவருக்கு அதனை அதிக விலைக்கு விற்று பல கோடி ரூபாய் சொத்து சேர்த்த நிலையில் பல்வேறு கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் இருந்தார்.

    இதனால் ஸ்ரீதர் போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் தப்பிச்சென்றார்.

    அங்கிருந்தபடியே பல்வேறு குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்டதாலும் வழக்குகளில் முறையாக நீதிமன்றங்களில் ஆஜர் ஆகாததாலும் ஸ்ரீதர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    அவரைப் பற்றிய விபரங்கள் சர்வதேச விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் கடந்த 4-ந் தேதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

    காஞ்சீபுரத்தில் இருந்து அவரது வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் மற்றும் ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி ஆகியோர் கம்போடியா சென்ற நிலையில் ஸ்ரீதரின் உடலை காஞ்சீபுரம் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

    இது குறித்து இன்று காலை கம்போடியாவில் உள்ள ஸ்ரீதரின் வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமனை மாலை மலர் நிருபர் வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-

    ஸ்ரீதரின் மரணம் குறித்து கம்போடிய போலீஸ் அளித்த விபரங்கள் குறித்த ஆவணங்கள் போன்றவற்றை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோரிடம் அளித்து ஸ்ரீதரின் உடலை முறைப்படி காஞ்சீபுரம் கொண்டு வர அவரின் மகள் தனலட்சுமி ஆவணங்களுடன் இந்தியா புறப்பட்டுள்ளார். இன்று காலை அவர் காஞ்சீபுரம் சென்று விட்டதாக தகவல் வந்துள்ளது.

    மாவட்ட நிர்வாகம் முறையான ஆவணங்களை அளித்த பின்னர் ஸ்ரீதரின் உடல் இந்தியா கொண்டு வரப்படும். மேலும் கம்போடியாவில் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அரசுப் பணிகள் ஏதும் நடக்காது என்ற நிலையில் உடலை கொண்டு வர திங்கட்கிழமை முதல் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில் எல்லப்பா நகர், திருப்பருத்திக்குன்றம் பகுதிகளில் உள்ள ஸ்ரீதரின் வீட்டிற்கு வந்து செல்லும் நபர்கள் யார் யார் என ரகசிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதிகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

    மேலும் மாவட்டம் முழுவதும் ஸ்ரீதர் தொடர்புடைய ரவுடிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் தீவிர கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கம்போடியாவில் ஸ்ரீதர் இருந்த போது பணவரத்து முற்றிலும் தடுக்கபட்டிருந்ததாலும் அங்குள்ள ஆடம்பர சூதாட்ட விடுதிகளில் சூதாடி பல லட்சக்கணக்கான ரூபாய்களை ஸ்ரீதர் இழந்ததாலும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
    மதுரவாயல் அருகே பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயல் அருகே உள்ள தண்டலம் ஜெயாநகரை சேர்ந்தவர் சதீஷ் (40). இவரது மாமனார் நாகேஸ்வரன் (72). நாகேஸ்வரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு மேல்மாடியில் சென்று தூங்கி இருக்கிறார்.

    இன்று காலையில் எழுந்து பார்த்தபோது கதவு பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரு.5 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்ததை பார்த்து திடுக்கிட்டார். இதுபற்றி மதுரவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரத்தில் ஏ.டி.எம்.மில் முதியவரிடம் ரூ.77 ஆயிரம் கொள்ளையடித்த டிப்-டாப் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பரத்வாஜ் தெருவை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் (78). நேற்று முன்தினம் இவர் மேற்கு தாம்பரம் துரைசாமி ரெட்டி தெருவில் உள்ள ஒரு ‘ஏ.டி.எம்.’ சென்டருக்கு பணம் எடுக்க சென்றார்.

    அப்போது அந்த மையத்திற்குள் ‘டிப்-டாப்’ வாலிபர் ஒருவர் இருந்தார். அவர் லட்சுமிகாந்தனிடம் உங்களுக்கு பணம் எடுத்து கொடுக்க உதவுகிறேன் என தெரிவித்தார். இவரது பேச்சையும், தோற்றத்தையும் பார்த்து நம்பிய லட்சுமிகாந்தன் அதற்கு சம்மதித்தார்.

    அந்த வாலிபரும் ‘ஏ.டி.எம்.’ கார்டை எந்திரத்துக்குள் செருகி அதற்குரிய ரகசிய குறியீடு நம்பர்களையும் பெற்று பணம் எடுப்பது போல் நடித்தார். பின்னர் பணம் வரவில்லை என வெறும் கார்டை மட்டும் அவரிடம் கொடுத்தனுப்பினார்.

    கார்டை பெற்றுக் கொண்ட லட்சுமி காந்தன் வீட்டுக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் ‘ஏ.டி.எம்.’மில், இருந்து ரூ.40 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் மறுபடியும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ‘ஆன்லைன்’ மூலம் அவர் கணக்கில் இருந்து ரூ37 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆக மொத்தத்தில் ‘டிப்-டாப்’ வாலிபர் லட்சுமிகாந்தனை நூதன முறையில் ஏமாற்றி ரூ.77 ஆயிரத்தை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து தாம்பரம் போலீசில் லட்சுமிகாந்தன் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ‘ஏ.டி.எம்.’ மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோ மூலம் விசாரித்து வருகின்றனர்.

    திருக்கழுக்குன்றம் அருகே பள்ளி வகுப்பறையில் ஆசிரியையை கத்தியால் குத்திய முன்னாள் மாணவரான 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கழுக்குன்றம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில் லிட்டில் ஜாக்கி என்ற தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. 12-ம் வகுப்புவரை உள்ள இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    நேற்று காலை வழக்கம்போல் பள்ளியில் வகுப்புகள் தொடங்கின. பள்ளியின் முதல் தளத்தில் உள்ள 9-ம் வகுப்பு ‘அ’ பிரிவு மாணவர்களுக்கு செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோட்டி என்பவருடைய மகள் ஆசிரியை பூங்கொடி(வயது 27) பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

    காலை 10.30 மணியளவில் 16 வயது சிறுவன் ஒருவன் அந்த வகுப்பறைக்குள் வந்தான். ஆசிரியை பூங்கொடி அவனிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அந்த சிறுவன், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஆசிரியை பூங்கொடியின் முகத்தில் குத்தினான். இதில் ஆசிரியைக்கு இடது கண் புருவம் பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் ஆசிரியை அலறினார்.

    உடனடியாக அந்த சிறுவன், வகுப்பறையில் இருந்து வெளியே தப்பி ஓட முயன்றான். அதற்குள் ஆசிரியை பூங்கொடியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஆசிரியர்கள், கத்தியுடன் தப்பி ஓட முயன்ற சிறுவனை மடக்கி பிடித்தனர்.

    இதுபற்றி திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று, பிடிபட்ட சிறுவனிடம் இருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவன், சிங்க பெருமாள் கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் அவன், கடந்த கல்வி ஆண்டில் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்து உள்ளான். அவன் சரியாக படிக்கவில்லை என ஆசிரியை பூங்கொடி, அவனை அடித்ததாக கூறப்படுகிறது.

    அவன் சரியாக படிக்காததால் பள்ளி நிர்வாகம் அவனை பள்ளியை விட்டு நிறுத்தியதுடன், மாற்றுச்சான்றிதழை கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது. அதன்பிறகு அவன், பள்ளி படிப்பை தொடராமல் தற்போது செங்கல்பட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    தன்னை பள்ளி நிர்வாகம் மாற்றுச்சான்றிதழ் கொடுத்து அனுப்பியதற்கு ஆசிரியை பூங்கொடிதான் காரணம் என்று நினைத்த சிறுவன், அவராலேயே தன்னால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போனதாக ஏற்பட்ட ஆத்திரத்தில் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை பூங்கொடியை கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    முன்னாள் மாணவரால் கத்திக்குத்து காயம் அடைந்த ஆசிரியை பூங்கொடி, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    காஞ்சீபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவனது நெருங்கிய கூட்டாளிகள் 8 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதர், கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

    இதையடுத்து வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.பிரபாகர், சரவணன், வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகளை கைது செய்ய பாலுச்செட்டிசத்திரம், திருப்பருத்திக்குன்றம், சின்ன காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது காஞ்சீபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த முருகன்(வயது 30), வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நெமிலியை சேர்ந்த மற்றொரு முருகன் (27), காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ராம்குமார் (34), ரத்தினவேல் (22), குமார் (44), ராஜ்குமார் (27), காஞ்சீபுரம் திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளி அருள் (34), காஞ்சீபுரம் வணிகர் வீதியை சேர்ந்த சுதாகர் (31) ஆகிய 8 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகளா? என்ற சந்தேகத்தின்பேரில் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன், திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த மணி, பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம், நரசிங்கராயர் தெருவைச் சேர்ந்த நரேந்தர் ஆகிய 4 பேரை பிடித்து சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.


    காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 49). பிரபல ரவுடி. இவருக்கு குமாரி என்ற மனைவியும், தனலட்சுமி உள்பட 2 மகள்களும், சந்தோஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.

    ஸ்ரீதர், முதலில் கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது காஞ்சீபுரம் மற்றும் சென்னை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், அடிதடி, வணிக நிறுவனங்கள், நிலங்கள் முதலியவற்றை அவற்றின் உரிமையாளர்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    காஞ்சீபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அம்பேத்கர் வளவன் என்ற நாராயணன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்ரீதர். இந்த கொலை வழக்கில் நேரில் ஆஜராகும்படி காஞ்சீபுரம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

    அவர் துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளில் பதுங்கி உள்ளதாக கூறப்பட்டது. அங்கிருந்து ‘யூடியூப்’ வீடியோ மூலமாக போலீசாருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    ஸ்ரீதரின் மகன் சந்தோஷ் குமார், மனைவி குமாரி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    ஸ்ரீதரின் பாஸ்போர்ட்டு 2017-ல் காலாவதியாவதையொட்டி, அதை புதுப்பித்துக்கொள்வதற்கு சென்னை வந்தால் அவரை பிடிக்க சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், விமான நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகளை உஷார்படுத்தி வந்தார். விமானநிலைய போலீசாரும் ஸ்ரீதரை உயிரோடு பிடிக்க தயாராக இருந்து வந்தனர்.

    இந்தநிலையில் ரவுடி ஸ்ரீதர், கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை காஞ்சீபுரம் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் உறுதி செய்தார்.

    ரவுடி ஸ்ரீதர், தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    ஸ்ரீதரை உயிரோடு பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிரம் காட்டி வந்தனர்.

    ரவுடி ஸ்ரீதர், மலேசியாவில் இருந்து கம்போடியாவுக்கு தப்பிச் சென்றதாகவும், அங்கு ஒரு பண்ணை வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தெரிந்துகொண்ட போலீசார், அவரை பிடிக்க தீவிரம் காட்டியதாகவும், அதனால் போலீஸ் கையில் சிக்காமல் இருக்க அவர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் போலீசார் அவருடைய அனைத்து சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி வைத்தனர். சர்வதேச போலீசாரால் அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டதுடன், அவரது தொடர்புகளும் கண்காணித்து வரப்பட்டது. சைபர் கிரைம் போலீசாரும் ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளிகளின் தொடர்புகளை கண்காணித்து வந்தனர்.

    ஆகவே ஸ்ரீதருக்கு பணம் வந்து சேர்வது முடக்கப்பட்டது. ஒரு புறம் போலீஸ் நெருக்கடி மற்றொரு புறம் செலவுக்கு பணம் இல்லாததால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தற்கொலை செய்த ஸ்ரீதர் உடலை காஞ்சீபுரம் கொண்டுவர அவரது வக்கீல்களும், ஸ்ரீதரின் மகளும் நேற்று முன்தினம் இரவே கம்போடியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

    போலீஸ் தனிப்படையினரும் தற்கொலை செய்து கொண்டது ரவுடி ஸ்ரீதர்தானா? என்பதை உறுதி செய்ய ஸ்ரீதரின் கைரேகை, மச்சம், தழும்பு உள்ளிட்ட அடையாளங்களுடன் ஒத்துப் போகிறதா?, அங்க அடையாளங்கள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து அவரது இறப்பு சான்றிதழை பெற கம்போடியாவுக்கு விரைந்து உள்ளனர்.

    பயங்கரவாதிகளிடமும், பயங்கரவாத இயக்கங்களில் தொடர்பு உடையவர்களிடமும்தான் பெரும்பாலும் சயனைடு இருக்கும். எனவே ரவுடி ஸ்ரீதருக்கு சயனைடு கிடைத்தது எப்படி?. அவருக்கு, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்குமா? என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது மிரட்டலுக்கு பயந்து நிலங் களை இழந்து புகார் கொடுக்க தயங்கியவர்கள் தற்போது தைரியமாக வந்து புகார் கொடுப்பார்கள் என்றும் போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

    ஜெயலலிதாவின் வாரிசு சான்றிதழை கோர்ட்டு மூலம் பெற்றுக் கொள்ளுமாறு, அவரது அண்ணன் மகன் தீபக்குக்கு கிண்டி தாசில்தார் அறிவுறுத்தி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.



    ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள்தான் என்றும், எனவே ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க தங்களுடைய அனுமதியை பெற வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் ஏற்கனவே கூறி உள்ளனர்.

    இந்த நிலையில், ஜெயலலிதாவின் வாரிசு என்று தனக்கு சான்றிதழ் வழங்க கோரி தீபக், சென்னை மயிலாப்பூர் தாசில்தாரிடம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முகவரியில், தான் தியாகராயநகரில் வசிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இதனால் அந்த மனு கிண்டி தாசில்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனுவை பரிசீலித்த கிண்டி தாசில்தார், தீபக்குக்கு பதில் அனுப்பி உள்ளார்.அதில், இறந்தவர்களின் நேரடியான வாரிசுகளுக்குத்தான் தாசில்தார் வாரிசு சான்றிதழ் வழங்க முடியும் என்றும், எனவே நீங்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடி வாரிசு சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறி உள்ளார்.
    தமிழ்நாடு மக்கள் பிரச்சினைகளுக்காக ரஜினிகாந்த், கமல் ஹாசன் மத்திய அரசை கண்டிக்காதது ஏன்? என்று டைரக்டர் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் டைரக்டர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார். இன்று சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் இருந்து வைகோ உள்பட நானும் மற்றும் சிலரும் இலங்கையில் நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து குரல் கொடுத்தோம். அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தோம். அதை கண்டு ஐ.நா. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிங்கள ராணுவ அதிகாரிகள் ஐ.நா. சபையின் பிரதான மண்டபத்தில் வைகோவிடம் தகராறு செய்தனர்.

    அதுபோல் என்னிடமும் நீ தமிழனா? தமிழ்நாட்டுக்காரனா? இங்கே நீங்கள் வரக்கூடாது என மிரட்டினார்கள். இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. அதன் முலம் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என நம்புகிறேன்.

    சிங்கள ராணுவத்திடம் இருந்து ஒரு போதும் நீதி கிடைக்காது. எனது இந்திய அரசு இதில் தலையிட்டு ஈழ தமிழர்களுக்கு நீதி பெற்று தர வேண்டும்.

    ரஜினியும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வர வேண்டும். அவர்கள் உச்சமான அதிகாரத்தின் உள்ளவர்களின் மறைவில் இருந்து அரசியல் நடத்தக்கூடாது. மக்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். தற்போது தமிழ் நாட்டில் உள்ள பிரச்சினைகளில் தலையிடும்படி மத்திய அரசை கண்டிக்க அவர்கள் பயப்படுவது ஏன்?

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் மரணம் அடைகின்றனர். ஒரு கொசுவிடம் இருந்து தமிழக அரசு மக்களை காப்பாற்ற முடிய வில்லை. இந்த நிலையில் பிரச்சினைகளில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவார்கள். இது சாவு இல்லை. பச்சைப் படுகொலை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×