என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரத்தில் ஏ.டி.எம்.மில் முதியவரிடம் ரூ.77 ஆயிரம் நூதன கொள்ளை: டிப்-டாப் வாலிபர்
    X

    தாம்பரத்தில் ஏ.டி.எம்.மில் முதியவரிடம் ரூ.77 ஆயிரம் நூதன கொள்ளை: டிப்-டாப் வாலிபர்

    தாம்பரத்தில் ஏ.டி.எம்.மில் முதியவரிடம் ரூ.77 ஆயிரம் கொள்ளையடித்த டிப்-டாப் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பரத்வாஜ் தெருவை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் (78). நேற்று முன்தினம் இவர் மேற்கு தாம்பரம் துரைசாமி ரெட்டி தெருவில் உள்ள ஒரு ‘ஏ.டி.எம்.’ சென்டருக்கு பணம் எடுக்க சென்றார்.

    அப்போது அந்த மையத்திற்குள் ‘டிப்-டாப்’ வாலிபர் ஒருவர் இருந்தார். அவர் லட்சுமிகாந்தனிடம் உங்களுக்கு பணம் எடுத்து கொடுக்க உதவுகிறேன் என தெரிவித்தார். இவரது பேச்சையும், தோற்றத்தையும் பார்த்து நம்பிய லட்சுமிகாந்தன் அதற்கு சம்மதித்தார்.

    அந்த வாலிபரும் ‘ஏ.டி.எம்.’ கார்டை எந்திரத்துக்குள் செருகி அதற்குரிய ரகசிய குறியீடு நம்பர்களையும் பெற்று பணம் எடுப்பது போல் நடித்தார். பின்னர் பணம் வரவில்லை என வெறும் கார்டை மட்டும் அவரிடம் கொடுத்தனுப்பினார்.

    கார்டை பெற்றுக் கொண்ட லட்சுமி காந்தன் வீட்டுக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் ‘ஏ.டி.எம்.’மில், இருந்து ரூ.40 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் மறுபடியும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ‘ஆன்லைன்’ மூலம் அவர் கணக்கில் இருந்து ரூ37 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆக மொத்தத்தில் ‘டிப்-டாப்’ வாலிபர் லட்சுமிகாந்தனை நூதன முறையில் ஏமாற்றி ரூ.77 ஆயிரத்தை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து தாம்பரம் போலீசில் லட்சுமிகாந்தன் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ‘ஏ.டி.எம்.’ மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோ மூலம் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×