என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    செங்கல்பட்டு:

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரொட்டி, பழங்கள் கொடுத்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்தார். நேற்று காலை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

    இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்த் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் டெங்கு காய்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு ரொட்டி, பழங்கள் வழங்கினார்.

    முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் அவர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன், நகர செயலாளர்கள் ரவி, ரங்கன், ஒன்றிய செயலாளர் எத்திராஜ், மார்க்கெட் பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மண்ணடியை சேர்ந்தவர் ஜமால் ஜேக் மரைக்காயர் (39). இவர் சுற்றுலா விசாவில் அடிக்கடி அரபு நாடுகளுக்கு சென்று வருவது வழக்கம்.

    கடந்த 1-ந் தேதி துபாய் சென்றுவிட்டு நண்பர்கள் மூவருடன் ஜமால் சென்னை திரும்பினார்.

    அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினர். அதில் 24 கேரட் தங்க கட்டிகள் 79 கிராம் பிடிபட்டது. மேலும் வெளிநாட்டு சிகரெட்டுகள், விலை உயர்ந்த செண்ட் போன்றவை அவர் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விதிமுறைக்கு மாறாக வெளிநாட்டில் இருந்து பொருட்கள் கொண்டு வருவது முறையல்ல என சுங்க அதிகாரிகள் அவரை கண்டித்தனர்.

    அப்போது ஜமாலுக்கும் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.தகாத வார்த்தைகளால் அவர் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சூப்பிரண்டு எல்டோ விமான நிலைய போலீசில் 4 பேர் மீதும் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தீனதயாளன் ஆகியோர் வழக்குபதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாரிமுனையில் ஜமாலை போலீசார் நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.மற்ற 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் கண்பார்வை குறைந்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். நெசவுத் தொழிலாளி. இவரது மகள் மஞ்சுளா (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    மாணவி மஞ்சுளாவுக்கு கண்பார்வையில் குறைபாடு இருந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை.

    இந்த நிலையில் கண் பார்வையை பரிசோதித்த போது அவர் குணமடைய வாய்ப்பு குறைவே என்று தெரிய வந்தது. இதனால் மஞ்சுளா வேதனையில் இருந்தார்.

    இன்று காலை பெற்றோர் வெளியில் சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீடு திரும்பிய பெற்றோர், மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார் மாணவியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீதர் உடல் கம்போடியாவில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு கார்கோ விமானம் மூலம் கோலாலம்பூர் வழியாக சென்னை வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். துபாய்க்கு தப்பி சென்ற அவர் பின்னர் போலி இலங்கை பாஸ்போர்ட்டில் கம்போடியா நாட்டுக்கு சென்று பதுங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கம்போடியாவில் ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார். அவர் இலங்கை பாஸ்போர்ட்டில் கம்போடியா சென்றதால் அவரின் உடலை இந்தியா கொண்டு வரும் பணியில் சிக்கல் எழுந்தது.

    கம்போடிய அரசிடம் ஸ்ரீதரின் வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் ஸ்ரீதர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை நேற்று சமர்ப்பித்த நிலையில் ஸ்ரீதரின் உடலை இந்தியா செல்ல சிக்கல் நீங்கியதாக தெரிகிறது.

    இந்நிலையில் கம்போடியாவில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு கார்கோ விமானம் மூலம் கோலாலம்பூர் வழியாக சென்னை வருகின்றது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னை வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

    இந்நிலையில் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையினில் அவரின் உடல் காஞ்சீபுரம் மாவட்ட காவல் துறை சார்பினில் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிகின்றது.

    இச்சோதனை சென்னையிலேயே செய்யப்படுமா அல்லது காஞ்சீபுரத்தில் செய்யப்படுமா என்பது உறுதியாகாத நிலையில் ஸ்ரீதரின் உடல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலோ அல்லது திங்கட்கிழமை காலையிலோ காஞ்சீபுரம் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகின்றது.

    ஸ்ரீதரின் இறுதிச்சடங்கு காஞ்சீபுரத்தில் நடைபெறும் பட்சத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக மாவட்ட போலீஸ் உஷார் நிலையில் உள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக அண்டை மாவட்டங்களில் இருந்தும் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் வரவழைக்கப்படுவர் எனத் தெரிகின்றது.

    மேலும் ஸ்ரீதர் வீடு உள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியில் போலீஸ் தீவிர கண்காணிப்புப் பணியில் உள்ளனர். அவ்வழியாக வரும் வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றது.

    சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22½ லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது. வெளிநாட்டு பணம் யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து 8 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகள், வெளிநாட்டு பணம் கடத்தி செல்வதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பன்னாட்டு விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது இலங்கை செல்வதற்காக சென்னையைச் சேர்ந்த முகமது அசாருதீன், சாதிக் உள்பட 8 பேர் மொத்தமாக வந்தனர்.

    சந்தேகம் அடைந்த அவர்கள் 8 பேரையும் தனித் தனியாக அழைத்து விசாரித்தனர். அவர்களது சூட்கேசை சோதனை செய்தபோது கட்டு கட்டாக அமெரிக்க டாலர், யூரோ பணம் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 22½ லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்தனர். வெளிநாட்டு பணம் யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து 8 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த பழனிகுமாரை தனியாக அழைத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர் ¼ கிலோ தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து பழனிகுமாரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.

    செய்யூர் அருகே காதலனை அடித்து விரட்டி விட்டு இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கற்பழித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுராந்தகம்:

    செய்யூர் அருகே உள்ள சீக்கானங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வரும் 22 வயது இளம்பெண் பக்கத்தில் உள்ள பவுஞ்சூர் கிராமத்துக்கு வந்தார்.

    மாலை நேரத்தில் அவர் ஒதுக்குபுறமான இடத்தில் அதே பகுதியை சேர்ந்த காதலனுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் 6 வாலிபர்கள் மது போதையில் வந்தனர். அவர்கள் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டினர்.

    இதில் இளம்பெண்ணின் காதலனுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கும்பல் இளம்பெண்ணின் காதலனை கத்திமுனையில் மிரட்டி தாக்கினர். அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    பின்னர் இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 6 பேரும் கற்பழித்தனர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர்.

    உடனே 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து அணைக்கட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக கூவத்தூரை அடுத்த பேட்டை கிராமத்தை சேர்ந்த 3 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    கம்போடியாவில் தற்கொலை செய்த ரவுடி ஸ்ரீதர் உடலை நாளை காஞ்சீபுரம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வக்கீல் மலையூர் புருசோத்தமன் கூறினார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். தலைமறைவாக இருந்த அவர் கம்போடியா நாட்டில் உள்ள ஓட்டலில் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

    இந்த நிலையில் கம்போடியாவில் உள்ள ஸ்ரீதரின் வக்கீல் மலையூர் புருசோத்தமனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    ஸ்ரீதர் உடலை கொண்டு வர இந்திய தூதரக அதிகாரிகள் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கின்றனர். நேற்று ஸ்ரீதர் குறித்த ஆவணங்களை கம்போடியா அரசிடம் வழங்கினோம். அவர்கள் மேலும் சில ஆவணங்களை கேட்டு உள்ளனர். இன்று ஸ்ரீதர் பற்றிய கூடுதல் ஆவணங்கள் கொடுக்கப்படும். இதனை ஏற்கும்பட்சத்தில் ஸ்ரீதர் உடலை நாளை காஞ்சீபுரம் கொண்டு வருவோம்” என்றார்.

    பள்ளிக்கரணையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணை, ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி விஜய குமாரி (வயது 28). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    கடந்த சில நாட்களாக விஜயகுமாரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விஜயகுமாரிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி விஜயகுமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும் போது,

    சென்னை அரசு மருத்துவமனையில் விஜயகுமாரிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. பயிற்சி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

    பள்ளிக்கரணை பகுதியில் மாநகராட்சி இதுவரை எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விஜயகுமாரி உயிரிழப்பிற்கு பிறகு அப்பகுதி முழுவதும் நேற்றிரவு கிரிமிநாசினி பவுடரை தூவி சென்றனர். இதை முன்கூட்டியே செய்திருந்தார். உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என்று கண்ணீரோடு தெரிவித்தனர்.

    பழனி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் ஹரிவிஷ்ணு. (வயது 8). 3-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சிலநாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான். அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹரிவிஷ்ணு இன்று காலை இறந்தான்.

    மன்னார்குடி நடராஜ பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரகுராமன். இவரது மகள் மதுமதி. தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் சி.ஏ. படித்து வருகிறார்.

    கடந்த 8-ந்தேதி மதுமதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. மேல் சிசிச்சைக்காக அவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பலனின்றி இன்று காலை மதுமதி பரிதாபமாக இறந்தார்.

    பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஜெய்சித்ரா, கலைவாணி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகளாக பணிபுரிந்து வந்தனர்.

    இவர்களுக்கு கடந்த 6-ந்தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பண்ருட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் ஜெய்சித்ரா மற்றும் கலைவாணிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரூ.7.13 கோடி செலவில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் பூங்காவில் உள்ள 7 மாத ஆண் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டினார்.
    தாம்பரம்:

    வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே புதிதாக உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் கட்டப்பட்டு உள்ளது.

    ரூ.7.13 கோடி செலவில் கட்டப்பட்ட இந்நிறுவன ஆராய்ச்சி மையத்தை இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்து வைத்தார்.



    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 7 மாத ஆண் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டினார்.

    2011-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண் சிங்கக் குட்டிக்கு ஜான்சி என்ற பெயர் சூட்டினார். தற்போது அந்த சிங்கம் ஈன்ற குட்டிக்குதான் அவர் பெயர் சூட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், பெஞ்சமின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எம்.பி.க்கள் கே.என்.ராமச்சந்திரன், மரகதம் குமாரவேல், ஜெயவர்தன், மாவட்ட செயலாளர்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், ஆறுமுகம் உடன் சென்றனர்.

    வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் வன உயிரின பாதுகாப்பு, ஊழியர்களுக்கு பயிற்சி போன்றவை மேற்கொள்ளப்படும். இந்தியாவில் 2-வதாக உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் வண்டலூரில் அமைக்கப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டில் மளிகை கடை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    புதுக்கோட்டை மாவட்டம் காரையூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 26). இவர் செங்கல்பட்டு டவுன் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

    செங்கல்பட்டு டவுன் கோகுலாபுரத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவருடன் அதே மளிகை கடையில் வேலை பார்க்கும் நண்பர்களும் தங்கியிருந்தனர்.

    கடந்த 5-ந்தேதி இரவு ரமேஷ்குமாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் சிகிச்சை பெறுவதற்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் குமார் தான் தங்கியிருந்த அறையில் வந்து படுத்துக்கொண்டார்.

    இதற்கிடையே மளிகை கடையில் இருந்து அறைக்கு திரும்பிய நண்பர்கள் ரமேஷ்குமார் காயங்களுடன் கிடப்பதை பார்த்து உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரமேஷ் குமாரை அடித்து கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    காஞ்சீபுரம் அருகே 800 ஆண்டு பழமை வாய்ந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை ஒன்று மீட்க்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உத்தரவின் பேரில் போலீசார் தமிழகம் முழுவதும் சிலை கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஐம்பொன் சிலை கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.க்கள் ரகுவரன், சிவசங்கரன், ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று இரவு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை காஞ்சீபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கத்தில் சாலையோரம் ஒரு ஆம்னி வேன் நின்று கொண்டிருந்தது. அதில் 4 பேர் இருந்தனர். இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் வேனில் சோதனை செய்தபோது 1¾ அடி உயரம், 17 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை இருந்தது. அது 800 ஆண்டு பழமை வாய்ந்த சைவ சமய புரவலர்களில் ஒருவரான சுந்தரரின் சிலை என்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும்.

    சிலையை மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விற்க கடத்தி சென்றபோது போலீசாரிடம் சிக்கினர்.

    விசாரணையில் பிடிபட்ட 4 பேரும் சேகர், கார்த்தி, மகேந்திரன், தட்சிணாமூர்த்தி என்பது தெரிய வந்தது.

    அவர்களை பாலு செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது, யாரிடம் வாங்கி யாருக்கு விற்க கொண்டு செல்லப்பட்டது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
    சிவாஜி மணி மண்டபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மருத்துவர்கள் அவசர கால நிலைமை கருதி விடுப்பு எடுக்காமல் மக்கள் பணியாற்ற வேண்டும்.

    மேலும் மக்களும் ஒருங்கிணைந்து டெங்குவை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    சிவாஜி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலையில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டினை அரசியல் நாகரிகம் கருதி மீண்டும் அமைக்கப்பட வேண்டும்.

    சினிமாவிற்கு அரசு விதித்துள்ள கேளிக்கை வரியினால் சினிமா தொழில் பாதிக்கப்படும். இதனால் திருட்டு வி.சி.டி. அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து கேளிக்கை வரியினை திரும்பப் பெற வேண்டும்.

    நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி சிந்திக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×