என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்போடியாவில் தற்கொலை செய்த ஸ்ரீதர் உடல் நாளை கொண்டு வரப்படுகிறது
    X

    கம்போடியாவில் தற்கொலை செய்த ஸ்ரீதர் உடல் நாளை கொண்டு வரப்படுகிறது

    ஸ்ரீதர் உடல் கம்போடியாவில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு கார்கோ விமானம் மூலம் கோலாலம்பூர் வழியாக சென்னை வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். துபாய்க்கு தப்பி சென்ற அவர் பின்னர் போலி இலங்கை பாஸ்போர்ட்டில் கம்போடியா நாட்டுக்கு சென்று பதுங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கம்போடியாவில் ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார். அவர் இலங்கை பாஸ்போர்ட்டில் கம்போடியா சென்றதால் அவரின் உடலை இந்தியா கொண்டு வரும் பணியில் சிக்கல் எழுந்தது.

    கம்போடிய அரசிடம் ஸ்ரீதரின் வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் ஸ்ரீதர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை நேற்று சமர்ப்பித்த நிலையில் ஸ்ரீதரின் உடலை இந்தியா செல்ல சிக்கல் நீங்கியதாக தெரிகிறது.

    இந்நிலையில் கம்போடியாவில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு கார்கோ விமானம் மூலம் கோலாலம்பூர் வழியாக சென்னை வருகின்றது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னை வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

    இந்நிலையில் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையினில் அவரின் உடல் காஞ்சீபுரம் மாவட்ட காவல் துறை சார்பினில் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிகின்றது.

    இச்சோதனை சென்னையிலேயே செய்யப்படுமா அல்லது காஞ்சீபுரத்தில் செய்யப்படுமா என்பது உறுதியாகாத நிலையில் ஸ்ரீதரின் உடல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலோ அல்லது திங்கட்கிழமை காலையிலோ காஞ்சீபுரம் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகின்றது.

    ஸ்ரீதரின் இறுதிச்சடங்கு காஞ்சீபுரத்தில் நடைபெறும் பட்சத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக மாவட்ட போலீஸ் உஷார் நிலையில் உள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக அண்டை மாவட்டங்களில் இருந்தும் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் வரவழைக்கப்படுவர் எனத் தெரிகின்றது.

    மேலும் ஸ்ரீதர் வீடு உள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியில் போலீஸ் தீவிர கண்காணிப்புப் பணியில் உள்ளனர். அவ்வழியாக வரும் வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றது.

    Next Story
    ×