என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    நந்தம்பாக்கம் தனியார் பள்ளி ஒன்று சுகாதாரமின்றி டெங்கு கொசு உருவாகும் விதத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    ஆலந்தூர்:

    நந்தம்பாக்கம் பகுதியில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தனியார் பள்ளி சுகாதாரமின்றி டெங்கு கொசு உருவாகும் விதத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் குப்பைகளை முழுமையாக அகற்றும் வரை பள்ளியை திறக்க கூடாது என்றும் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி உத்தரவிட்டார். இதேபோல் அதே பகுதியில் சுகாதார மின்றி இருந்த 3 தொழிற் சாலைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
    தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பா.ஜனதாவின் தலையீடு உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசி இருப்பது அவரது ஒப்புதல் வாக்குமூலம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பா.ஜனதாவின் தலையீடு உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனம் திறந்து உண்மையை பேசி இருக்கிறார். இது அவரது ஒப்புதல் வாக்குமூலம்.

    பா.ஜனதா, தமிழக அரசின் நடவடிக்கையில் தலையிடுகிறது என்று ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலில் சுட்டிக்காட்டியது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்.

    தமிழக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அது சுதந்திரமாகவும், சுய மாகவும் இயங்க அனுமதிக்க வேண்டும். இதில் பா.ஜனதா கட்சி மற்றும் மத்திய அரசு தலையிடுவது என்பது நியாயம் இல்லை. ஜனநாயகமும் அல்ல.

    மெர்சல் படம் குறித்து தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி உள்ளனர் என்பது எனது கருத்து. படத்தின் கருத்தால் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    மெர்சல் படத்துக்கு கூடுதல் விளம்பரத்தை தேடி தரவும், நடிகர் விஜய்யை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற உள்நோக்கத்துக்காகவும் தான் இந்த சர்ச்சைகள் கூறப்பட்டு வருகிறது.

    நியாயமாக தணிக்கைத் துறையை எதிர்த்துதான் பா.ஜனதாவினர் போராடி இருக்க வேண்டும். விமர்சித்து இருக்க வேண்டும். இதனை அவர்கள் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் என்று தாம்பரத்தில் அக்கட்சியின் 46வது ஆண்டு தொடக்க விழாவில் முதல்- அமைச்சர் பழனிசாமி பேசினார்.
    தாம்பரம்:

    அ.தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் கூட்டத்தினரின் முன் பேசும்பொழுது, எந்த துறைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது தமிழகம்.

    227 தொடக்க பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 402 உயர் நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டுக்கு ஆளானது தமிழகம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா என கூறியுள்ளார்.

    பாரதீய ஜனதா, காங்கிரஸ் என காலத்துக்கு தக்கவாறு அடிக்கடி அணி மாறுவது தி.மு.க. 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும். குடும்ப ஆட்சி நடத்தும் கட்சி தி.மு.க. என அவர் பேசினார்.
    திருப்போரூரில் சுவாமியை சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் தாங்கிகள் மற்றும் பக்தர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூரில் புகழ்பெற்ற அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் உள்ளது. புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முருகப்பெருமான் பல்வேறு உருவங்களில் தோன்றும் சூரபத்மனை வதம் செய்யும் இந்த கந்தசஷ்டி விழாவின் சிறப்பம்சமாக திருப்போரூரில் பல்வேறு அசுர உருவங்களில் 6 தலையுடனும் 6 உடல் பாகங்களில் பொம்மைகள் தயார்செய்யப்பட்டு கந்தசஷ்டி விழாவின் போது தினமும் இரவு சுவாமி வீதி உலாவின்போது அசுர உருவ பொம்மைகளை தூக்கி பக்தர்கள் ஆடிக் கொண்டு வீதி உலா வருவர். மற்ற கோயில்களில் ஒரே ஒரு உருவபொம்மையும் தனித்தனியே 6 தலைகளும் இருக்கும்.

    தமிழகத்தில் வேறெந்த கோயிலிலும் 6 தலைகள், 6 உடல் அமைப்பு அசுர பொம்மைகள் இல்லாத சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. அதாவது மற்ற கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும்போது ஒரே ஒரு உடல் அமைப்புடன் தலையை மட்டும் மாற்றி சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் இக்கோயிலில் மட்டும் தான் தனித்தனியே தலைகளுடன் உருவபொம்மைகளுடன் சூரசம்ஹாரம் நடைபெறுவது சிறப்பு.

    ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழாவிழாவிற்கு முன்னதாகவே உருவ பொம்மைகள் தயார்செய்யப்பட்டு விடும். இந்த ஆண்டு வழக்கமாக செய்யும் இடத்தில் இல்லாமல் புதிதாக வேற இடத்தில் உருவபொம்மைகள் செய்யப்பட்டன. நேற்று இரவு சுவாமி வீதி உலாவின்போது தான் உருவபொம்மைகள் கொண்டு வரப்பட்டன.

    நேற்று முதல் நாள் வினாயகர் உருவபொம்மை மாடவீதி உலா வரும். ஆனால் செய்யப்பட்டு வந்த அந்த பொம்மையை பக்தர்கள் தூக்கி ஆடிவருவதற்கு ஏற்ற வசதிகள் செய்யாமலும், அதிக எடை கொண்டதாக இருந்ததாலும் அதை பயன்படுத்த முடியவில்லை.

    இதனால் உருவபொம்மை இல்லாமல் சுவாமி மட்டும் வீதி உலா வந்தார். இதனால் மாடவீதி முழுவதும் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். சுவாமி மாடவீதி சுற்றி வந்து கோயிலுக்குள் சென்றதும் இரவு 10 மணியளவில் சுவாமியை சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் தாங்கிகள் மற்றும் பக்தர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். செயல் அலுவலர் இல்லாததால் கோயில் மேலாளரிடம் சராமாரியாக வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு சூரபொம்மைகள் சரியாக இல்லை என்றும் நேற்று முதல் நாள் சூரபொம்மைகள் இல்லாது சுவாமி வீதி உலா வந்ததை சுட்டிகாட்டினர். இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்ததையும் கூறினர். உடனடியாக இன்று இரவு நடைபெறும் சுவாமி வீதி உலாவிற்குள் மற்ற சூர பொம்மைகளை சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டனர். இன்று அனைத்தும் சரி செய்யப்படும் என மேலாளர் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
    தாம்பரத்தில் நகைச்சீட்டு மோசடியில் ஈடுபட்டதாக பிரபல நகைக்கடை மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் பிரபல நகைக்கடை உள்ளது. இங்கு 200-க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைச்சீட்டு கட்டி வந்தனர்.

    நகைச் சீட்டு பணம் கட்டும் காலம் முடிந்தும் அவர்களுக்கு நகை கொடுக்கவில்லை. இது பற்றி வாடிக்கையாளர்கள் கேட்ட போது நிர்வாகத்தினர் சரிவர பதில் கூறவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நகை கடையை 30-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் முற்றுகையிட்டு வாக்கு வாதம் செய்தனர். அவர்களை தாம்பரம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

    நகைச்சீட்டு மோசடி குறித்து கடப்பேரியை சேர்ந்த நிவேதா என்பவர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைக்கடை மேலாளர் முத்துக்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    சோழிங்கநல்லூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் எங்கையா(65). சென்னை சோழிங்கநல்லூரில் குடும்பத்துடன் தங்கி மகளிர் விடுதி நடத்தி வந்தார்.

    எங்கையாவின் மகள்கள் மேகா, சின்னவெங்கம்மா, பேத்திகள் நுதீக், நிஜிதா, பேரன் நாக சேத்தனா, ஒரு வயது பெண் குழந்தை சிவப்பிரியா என அனைவரும் விடுதியிலேயே தங்கி வசித்து வந்தனர்.

    நேற்றிரவு விடுதியின் மொட்டை மாடியில் எங்கையா மகள்கள், பேரன், பேத்தி என 7 பேரும் கேக் மற்றும் குலோப்ஜாமூனில் வி‌ஷம் கலந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தனர்.

    இன்று காலை விடுதியில் தங்கியுள்ளவர்கள் மொட்டை மாடிக்கு சென்ற போது 7 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எங்கையாவை சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையிலும், மேகா, சின்னவெங்கம்மாவை சென்னை தனியார் மருத்துவமனையிலும், ஒரு வயது குழந்தை உட்பட 4 சிறுவர்களை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர்.

    மேகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு கடிதம் எழுதியுள்ளனர்.

    அதில் நான், அப்பா, தங்கை, குழந்தைகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளபோகிறோம், எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போகிறோம். நீ முன்னாலே போனா நான் பின்னாலே சாகனும் தனித்தனியே சாவுவதை விட அனைவரும் ஒன்றாக சாகலாம் என முடிவெடுத்துள்ளோம். அத்தை, மாமா நீங்கள் அனைவரும் நன்றாக இருங்கள், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் காஞ்சீபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆபத்தை உணராமல் பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் காஞ்சீபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆபத்தை உணராமல் பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம், திருக்காளி மேடு, எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ் அழகன் (20). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை அவர் நண்பர்களுடன் பாலாற்றில் குளித்தார். அப்போது தமிழ்அழகன் புதை மணலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் தமிழ் அழகன் பலியானார். தீயணைப்பு துறையினர் புதை மணலில் சிக்கி இருந்த தமிழ்அழகன் உடலை மீட்டனர்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    திருக்கழுக்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட ஆனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பவுல்ராஜ் (13). 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் அப்பகுதி பாலாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி பவுல்ராஜின் உடலை மீட்டனர். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    டெங்கு காய்ச்சல் பாதித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா சந்தித்து ஆறுதல் கூறினார்.
    காஞ்சீபுரம் :

    தமிழகத்தை டெங்கு காய்ச்சல் நோய் மிரட்டி வருகிறது. தினந்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு அதிகரித்து வருகின்றன.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. காய்ச்சலை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது.

    இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பாதித்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் ஆஸ்பத்திரி முழுவதும் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் சசிகலா மற்றும் நிலைய மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் போது, “காஞ்சீபுரம் அரசுப் பொது மருத்துவ மனைகளில் டெங்கு பாதிப்பில் 7 பேர்அனுமதிக் கப்பட்டு இருந்தனர். இதுவரை சிகிச்சை முடிந்து 4 பேர் வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ள 3 பேர் விரைவில் வீடு திரும்புவார்கள்” என தெரிவித்தனர்.
    நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை, வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
    தாம்பரம்:

    குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று மதியம் அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது. 15 நாட்களில் காய்ச்சலின் தாக்கம் முழுவதும் கட்டுப்படுத்தப்படும். சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு மருத்துவ குழு அனுப்பப்பட்டுள்ளது.

    நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொது மக்கள் காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு ரவுடி ஸ்ரீதரின் உடல் அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்றே இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு காஞ்சீபுரம் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.
    செங்கல்பட்டு:

    காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்பருத்திகுன்றம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 49). பிரபல ரவுடியான இவர் மீது ஆள் கடத்தல், நில அபகரிப்பு, கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அம்பேத்கர் வளவன் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவர் கடந்த 4-ந் தேதி கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை காஞ்சீபுரத்துக்கு கொண்டுவர அவரது மகள் மற்றும் உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

    அதன்படி நேற்று முன்தினம் கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக ஸ்ரீதரின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. ஸ்ரீதரின் உடலை அவரது மகளிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். காஞ்சீபுரம் போலீசார் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஸ்ரீதரின் தம்பி செந்தில், மகள் தனலட்சுமி மற்றும் டிரைவர் தீனா ஆகியோர் நேற்று காலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்ரீதரின் உடலை அடையாளம் காட்டினர். செந்தில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஸ்ரீதர் உடலை அடையாளம் காட்டுவதற்காக அவர் பரோலில் வந்து இருந்தார்.

    இறந்தது ஸ்ரீதர் தான் என உறுதிப்படுத்திய பிறகு அவரது உடலை டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். ஸ்ரீதர் உடல் கெட்டுப்போகாமல் இருக்க கம்போடியா நாட்டில் ‘எம்பார்மிங்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஸ்ரீதர் இறந்து 13 நாட்கள் ஆனாலும் உடல் கெடாமல் இருந்தது.

    அவரது முக்கிய உடல் உறுப்புகள் ஆய்வுக்காக சென்னையில் உள்ள உடற்கூறு ஆய்வகத்துக்கும், சில உறுப்புகள் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி ஆய்வகத்துக்கும் அனுப்பப்பட்டன. இந்த ஆய்வறிக்கை 20 நாட்களில் கிடைக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதில் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

    சுமார் 1½ மணி நேரம் நடந்த பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஸ்ரீதரின் உடலை அவரது மகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். மதியம் 1.55 மணியளவில் ஸ்ரீதரின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, 3 மணியளவில் காஞ்சீபுரம் திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

    அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பல்வேறு கட்சி பிரமுகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    போலீசார் இன்றே இறுதி சடங்குகள் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று மாலையே அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இரவு 9.40 மணி அளவில் அவரது வீட்டு அருகே உள்ள சுடுகாட்டில் உடல் தகனம் நடந்தது. உடலுக்கு ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் தீ மூட்டினார்.

    அசம்பாவிதங்களை தவிர்க்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில், காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் மேற்பார்வையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
    செங்கல்பட்டு:

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரொட்டி, பழங்கள் கொடுத்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்தார். நேற்று காலை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

    இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்த் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் டெங்கு காய்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை முறைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து ரொட்டி, பழங்கள், கொசு வலை வழங்கினார்.

    அப்போது விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் முழுவதுமாக ஆய்வு செய்யவில்லை. அவர்கள் முந்திரி பருப்பும், காபியும் தான் சாப்பிட்டு சென்றனர்.

    மத்திய அரசிடம் கேட்டுள்ள ரூ.256 கோடி நிவாரண நிதி மக்களுக்காக இல்லை. கொள்ளையடிப்பதற்காகவே.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் விஜயகாந்த் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன், நகர செயலாளர்கள் ரவி, ரங்கன், ஒன்றிய செயலாளர் எத்திராஜ், மார்க்கெட் பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்ரீதர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் (வயது49). பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்ட அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கம்போடியாவில் உள்ள ஓட்டலில் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார். போலி பாஸ்போர்ட்டில் அவர் சென்று இருந்ததால் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அவரது மகள் தனலட்சுமி மற்றும் உறவினர் ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று காலை கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக ஸ்ரீதரின் உடல் விமானம் முலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஸ்ரீதரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருந்ததால் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய காஞ்சீபுரம் போலீசார் பலத்த பாதுகாப்புடன் செங் கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை 11 மணியளவில் ஸ்ரீதர் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஸ்ரீதரின் உடலை பெறுவதற்காக அவரது மனைவி குமாரி, மகன் சந்தோஷ் குமார், மகள் தனலட்சுமி மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் வந்து இருந்தனர்.

    இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பிரேத பரிசோதனை நடைபெறும் இடம் முன்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    பிரேத பரிசோதனை முடிந்து இன்று பிற்பகல் ஸ்ரீதரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. பின்னர் ஸ்ரீதரின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்தி குன்றத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இன்று மாலை ஸ்ரீதரின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    ஸ்ரீதர் உடல் வருவதையொட்டி திருப்பருத்தி குன்றம்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சீபுரம் நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    ×