என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த டாஸ்மாக் குடோன் மற்றும் போக்குவரத்து பணிமனைக்கு தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் முழுமுச்சுடன் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

    ஓரிக்கை பகுதியில் உள்ள டாஸ்மாக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் வகையிலும், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையிலும் குப்பைகள் குவிந்து இருந்தது. இதனை கண்ட கலெக்டர் பொன்னையா உடனடியாக அந்த இடத்தினை சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும் சுகாதாரம் இல்லாமல் இருந்ததால் டாஸ்மாக் குடோனுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமாக விதித்தார்.

    இதேபோல் அதே பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று கலெக்டர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிமனை சுகாதாரமற்ற நிலையில காணப்பட்டது. இதையடுத்து அரசுப் போக்குவரத்து பணிமனைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமாக விதித்தார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் சர்தார், நகர்நல அலுவலர் முத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    பல்லாவரம் அருகே காதல் திருமணம் செய்த 40 நாளில் இளம்பெண் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த பல்லாவரம் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நயின்பாஷா. இவருடைய மகள் ஷாகிரா(வயது 20). பி.காம். பட்டதாரி. அதே தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(27). டிரைவர்.

    ஷாகிரா-கார்த்திக் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 40 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் காதல் திருமணம் செய்த இருவரும் பம்மல் மூங்கில் ஏரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு ஷாகிரா, வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஷாகிரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஷாகிராவின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவளை கார்த்திக்தான் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.

    சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஷாகிராவுக்கு திருமணமாகி 40 நாட்களே ஆவதால் இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
    பூந்தமல்லியில் ரூ.5 கோடி மதிப்புள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லியில் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை தனியார் சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வாடகைக்கு விட்டு பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.

    அதே போல பூந்தமல்லியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான 4 கிரவுண்ட் நிலத்தை பச்சையப்பன் என்பவர் ஆக்கிரமித்து 10-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். இதில் மெக்கானிக் கடை, லாரி உதிரிபாகங்கள் விற்கும் கடை உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன.

    இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி பச்சையப்பனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

    இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும்படி உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை காஞ்சீபுரம் உதவி ஆணையர் ரமணி தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, வருவாய்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கோவில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இடித்து அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.

    மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு பூந்தமல்லி உதவி கமிஷனர் ஆல்பிரட் வில்சன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுட்டு இருந்தனர்.
    சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலைய முனையத்தில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப கொண்டு சென்ற டிரைவர் ரூ.28 லட்சத்துடன் மாயமானார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலைய முனையத்தில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவன ஊழியர்கள் ராஜ்குமார், கருணாகரன் வேனில் நேற்று மாலை சென்றனர்.

    பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய காவலாளி ஜியாவுதீன் உடன் சென்றார். வேனை தூத்துக்குடியை சேர்ந்த உதயகுமார் ஓட்டினார். ராஜ்குமார், கருணாகரன், காவலாளி ஜியாவுதீன் ஆகிய 3 பேரும் ரூ.15 லட்சத்தை எடுத்து கொண்டு ஏ.டி.எம்.மில் நிரப்ப சென்றனர். வேனில் மற்ற ஏ.டி.எம்.களில் நிரப்ப ரூ.28 லட்சம் இருந்தது.

    பணத்தை நிரப்பிவிட்டு திரும்பி வந்த போது வேன் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். டிரைவர் உதயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் சோதனையில் வேன் விமான நிலையத்துக்கு வெளியே சாலையோரம் நின்று இருந்தது. அதில் சோதனை செய்த போது ரூ.28 லட்சம் கொள்ளை போயிருந்தது. பணத்துடன் டிரைவர் உதயகுமார் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    டிரைவர் உதயகுமார் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் செட்டி குள தெருவை சேர்ந்தவர். கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் தனது சொந்த ஊருக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் உண்மையான முகவரியை கொடுத்துதான் பணியில் சேர்ந்தாரா என்று விசாரிக்கப்படுகிறது.

    விமான நிலையத்தில் வேன் நின்ற பகுதிகளில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். பணத்தை அவர் மட்டும்தான் கொள்ளையடித்து சென்றாரா? அல்லது வேறு யாருடன் சேர்ந்து ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரிக்கிறார்கள். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.
    தமிழகத்திற்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வாலிபர் மாமல்லபுரத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியை சேர்ந்தவர் சிவஞானம், குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகள் சத்யா. மாமல்லபுரத்தில் உள்ள கம்ப்யூட்டர் கம்யூனிகே‌ஷன் சென்டரில் பணிபுரிந்து வந்தார்.

    மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் அடிக்கடி கம்ப்யூட்டர் சென்டருக்கு வந்தார். அப்போது சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது சிரிப்பில் மயங்கி காதல் கொண்டார்.

    பின்னர் இருவரும் இணையதளம் வழியாக பேசுவதும் வீடியோ சாட்டிங் செய்வதுமாக இருந்தனர். இந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.


    இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். நேற்று இரவு மாமல்லபுரத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்று இன்று காலை பூஞ்சேரியில் திருமணம் நடந்தது.

    பின்னர் இருவரும் திருக்கழுகுன்றம் சார் பதிவு அலுவலகம் சென்று அரசு விதிமுறைபடி திருமண பதிவு செய்து கொள்கிறார்கள். பிரான்ஸ் நாட்டு மாப்பிள்ளை வீட்டார் தமிழ் பாரம்பரிய முறையில் சேலை-வேட்டி கட்டி திருமண மண்டபத்துக்கு வந்தது அப்பகுதி மக்களை ஆச்சர்யப்படுத்தியது.
    காஞ்சீபுரத்தில் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் செட்டியார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த பிரித்தம் (20), ஈரோடு பள்ளி பாளையத்தை சேர்ந்த நிதின் கார்த்தி (20)ஆகியோர் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

    நேற்று இரவு 10 மணிக்கு ஓட்டலில் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பொன்னேரி கரை பகுதிக்கு சென்றனர்.

    சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு திரும்பிய போது செட்டியார் பேட்டையில் சாலையோரம் நின்றிருந்த தனியார் நிறுவன பஸ் மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் போலீசார் 2 மாணவர்களின் உடல்களை மீட்டு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
    மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இல்லாத 4 டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் இன்று காலை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டு அறிந்தனர்.

    அப்போது 4 டாக்டர்கள் பணியில் இல்லாதது தெரிந்தது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். பின்னர் அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார்.
    மதுராந்தகம் அருகே பள்ளி வளாகத்தில் தூங்கிய முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள புத்திரம் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 65). விவசாயி. இவரது மனைவி ராசாத்தி அம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    இவர்களது வீட்டின் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் ராஜமாணிக்கம் தூங்குவது வழக்கம்.

    நேற்று இரவு வழக்கம் போல் அவர் பள்ளிக்கு தூங்க சென்றார். இந்த நிலையில் இன்று காலை அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் கட்டையால் தாக்கியதற்கான காயமும் இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சித்தாமூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது ராஜமாணிக்கம் அணிந்து இருந்த தங்க மோதிரம் மற்றும் அவர் பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போன் மாயமாகி இருப்பது தெரிந்தது.

    நள்ளிரவில் மது அருந்த வந்த கும்பல் மோதிரம், செல்போனுக்கு ஆசைப்பட்டு ராஜமாணிக்கத்தை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேலும் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்ததா என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. ராஜமாணிக்கத்துடன் யாரேனும் மோதலில் ஈடுபட்டனரா? என்ற விவரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரை மாற்று ஏற்பாட்டின் மூலம் குவாரிகளுக்கு கொண்டு சென்று நிரப்பினால் அது கோடை காலத்திற்கு உதவியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவ மழை இன்னும் ஒருசில நாட்களில் தொடங்க உள்ளது.

    இந்த பருவ மழையின் மூலம் கிடைக்கும் தண்ணீரை முறையாக பயன் படுத்த வேண்டும், அதனை வீணாக்க கூடாது என்று நீர் வளத்துறை திட்டமிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வார்தா புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதனை தொடர்ந்து அதில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அந்த தண்ணீரை சேமித்து வைக்க எந்த முன் ஏற்பாடுகளையும் செய்யாததால் மழை நீர் கடலில் கலந்து வீணானது. இப்போது குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏரி, குளங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. கோடை காலத்தை சமாளிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது.

    இதுபோன்ற நிலை மீண்டும் வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும்.

    உபரி நீரை வீணடிக்காமல் அதனை சேமித்து வைத்து குடிநீருக்கு பயன்படுத்த நீர்வளத்துறை அதிகாரிகள், குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.

    அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரை மாற்று ஏற்பாட்டின் மூலம் குவாரிகளுக்கு கொண்டு என்று நிரப்பினால் அது கோடை காலத்திற்கு உதவியாக இருக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

    சிங்கராயபுரம் பகுதியில் உள்ள பயன்படுத்தாத 22 குவாரிகளில் உபரி நீரை சேமித்து வைத்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஏரியில் இருந்து கால்வாய் மூலமாகவும் பைப் லைன் வழியாகவும் குவாரிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    தான்திகல் மற்றும் மணப்பாக்கம் கால்வாய் மூலம் உபரி நீரை வெளியேற்றி குவாரிகளுக்கு கொண்டு செல்லலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த 2 கால்வாய்களும் நீர்ப் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தான்திகல் கால்வாய் போரூர் ஏரியுடன் இணைப்பு கொண்டது. மணப்பாக்கம் கால்வாய் பல்வேறு பகுதிகளில் இருந்து அடையார் ஆற்றில் இணைகிறது.

    உபரி நீரை மாற்று திட்டம் மூலம் குவாரிகளுக்கு கொண்டு செல்லும் பணியை பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் 2 நாட்களுக்கு முன்பு பார்வையிட்டார்.

    பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக 4 ஏரிகளையும் ஆய்வு செய்து முன் ஏற்பாடுகளை தயார்படுத்தினார்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் மக்களுக்கு பயன் இல்லாமல் வீணாவதை தடுக்க இந்த ஆண்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் உபரிநீர் பயனற்று கிடக்கும் குவாரிகளில் சேமித்து வைக்கப்படும். அதில் இருந்து தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். இதன் மூலம் குடிநீர் பிரச்சினை ஏற்படாது. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை மக்கள் பயன்படுத்த இத்திட்டம் பேருதவியாக இருக்கும்” என்றார்.

    ஆலந்தூரில் ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவியின் முகம், கையில் பிளேடால் கிழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    ஆலந்தூர், மடுவாங்கரையைச் சேர்ந்தவர் ரோகித் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவியை ஒருதலையை காதலித்து வந்தார். இதனை மாணவி பெரிதாக எடுக்கவில்லை. வழக்கம் போல் அனைவருடனும் சகஜமாக பேசியபடி இருந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரோகித்குமார் மறைத்து வைத்திருந்த பிளேடால் மாணவியின் முகம், கையில் கிழித்தார். பலத்த காயம் அடைந்த அவருக்கு தனியார் ஆஸ்பத் திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்லாவரம் அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் மதி. தொழில் அதிபர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புதுக்கோட்டைக்கு சென்று இருந்தார்.

    இன்று காலை அவர்கள் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 37 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பானுமதி. இவர் மகாலட்சுமி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து வந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பானுமதி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மடிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப் பிரகாஷ். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது வீட்டில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு 65 பவுன் நகை ரூ. 3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் திருநெல்வேலியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் திருநெல்வேலி சென்று அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் சங்கரன்கோவில் பணவடலிசத்திரம் பகுதியை சேர்ந்த குமார், மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த பாண்டி என்று தெரியவந்தது. அவர்களை பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ் பெக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர் களிடம் இருந்து 31 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
    ×