என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.28 லட்சத்துடன் மாயமான டிரைவர்
    X

    ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.28 லட்சத்துடன் மாயமான டிரைவர்

    சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலைய முனையத்தில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப கொண்டு சென்ற டிரைவர் ரூ.28 லட்சத்துடன் மாயமானார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலைய முனையத்தில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவன ஊழியர்கள் ராஜ்குமார், கருணாகரன் வேனில் நேற்று மாலை சென்றனர்.

    பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய காவலாளி ஜியாவுதீன் உடன் சென்றார். வேனை தூத்துக்குடியை சேர்ந்த உதயகுமார் ஓட்டினார். ராஜ்குமார், கருணாகரன், காவலாளி ஜியாவுதீன் ஆகிய 3 பேரும் ரூ.15 லட்சத்தை எடுத்து கொண்டு ஏ.டி.எம்.மில் நிரப்ப சென்றனர். வேனில் மற்ற ஏ.டி.எம்.களில் நிரப்ப ரூ.28 லட்சம் இருந்தது.

    பணத்தை நிரப்பிவிட்டு திரும்பி வந்த போது வேன் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். டிரைவர் உதயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் சோதனையில் வேன் விமான நிலையத்துக்கு வெளியே சாலையோரம் நின்று இருந்தது. அதில் சோதனை செய்த போது ரூ.28 லட்சம் கொள்ளை போயிருந்தது. பணத்துடன் டிரைவர் உதயகுமார் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    டிரைவர் உதயகுமார் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் செட்டி குள தெருவை சேர்ந்தவர். கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் தனது சொந்த ஊருக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் உண்மையான முகவரியை கொடுத்துதான் பணியில் சேர்ந்தாரா என்று விசாரிக்கப்படுகிறது.

    விமான நிலையத்தில் வேன் நின்ற பகுதிகளில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். பணத்தை அவர் மட்டும்தான் கொள்ளையடித்து சென்றாரா? அல்லது வேறு யாருடன் சேர்ந்து ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரிக்கிறார்கள். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.
    Next Story
    ×