search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "larceny"

    மருங்குளம் இ-சேவை மையத்தில் கம்ப்யூட்டர், பிரிண்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள மருங்குளத்தில் கிராம இ- சேவை மையம் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவைகளை திருடி சென்றுள்ளனர்.

    இந்நிலையில் காலை அங்கு வந்த அலுவலர்கள் கம்ப்யூட்டர் பிரிண்டர் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிராம சேவை மைய நிர்வாகி ராஜேஸ்வரி (வயது 45) கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சை அருகே 6 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை:

    தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 45), இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் முத்துகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்படி நேற்று இரவு அங்கு சென்ற போலீசார் கோபிநாத்தை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் நடுக்காவேரியைச் சேர்ந்த கலியராஜ் மகன் வேல்முருகன் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வேல்முருகன் வீட்டை சோதனை செய்தபோது 176 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மேலும் போலீசார் வேல்முருகனிடம் விசாரணை நடத்தியதில் கோபிநாத் வீட்டில் இருசக்கர வாகனத்தை திருடி மறைத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு 6 இரு சக்கர வாகனங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் நடுக்காவேரி போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    மதுரையில் ஆட்டோவில் பேட்டரிகள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

    இதன்படி தெற்கு துணை கமி‌ஷனர் தங்க துரை உத்தரவின் பேரில் திலகர் திடல் உதவி கமி‌ஷனர் பழனிகுமார் மேற்பார்வையில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் அந்தந்தப் பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர்.

    ஆரப்பாளையம் கண்மாய்க்கரையை சேர்ந்தவர் ஆனந்த் (30), ஆட்டோ டிரைவர். இவர் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இருந்தார். மர்ம நபர் ஆட்டோவில் இருந்த 2 பேட்டரிகளை திருடுவது தெரியவந்தது.

    இதனை தற்செயலாக கவனித்த ஆனந்த், ‘திருடன், திருடன்’ என்று கூச்சல் போட்டார். அந்த பகுதிக்கு தனிப்படை போலீஸ் தற்செயலாக ரோந்து சென்றது.

    ஆனந்தின் அலறல் சத்தம் கேட்டதும் தனிப்படை போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் அவர் ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி தெருவை சேர்ந்த செல்வம் (47) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம் அருகே வீட்டு பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சோழபுரம் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சாதிக் அலி. இவரது மனைவி ஹாஜா நாச்சியார். இவர்களின் இரண்டு மகள்களுக்கும் திருமணமானதால் இருவர் மட்டும் சோழபுரத்தில் வசிக்கின்றனர். சம்பவத்தன்று சிக்கல் நாயக்கன் பேட்டை மற்றும் பந்தநல்லூரில் உறவினர் குடிபோகும் நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டின் முன்பக்க கேட் பூட்டப்பட்ட நிலையில் நிலை கதவு திறந்து இருப்பதை பார்த்த அதே தெருவைச் சேர்ந்த அவரது உறவினர் நிஜாம் அகமது இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சாதிக் அலி அங்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு மற்றும் உள்ளே உள்ள பீரோக்களை மர்ம நபர்கள் உடைத்து பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பல பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்த தகவலின்பேரில் சோழபுரம் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குலசேகரம் அருகே கடையை உடைத்து 500 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் சிங்காராயன் டோமினிக் (63) இவர் திருநந்திகரை கூட்டுறவு வங்கி அருகில் ரப்பர் சீட் உலற வைக்கும் குடோன் வைத்து இருக்கிறார். இவர சுமார் 21 ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள சிறு ரப்பர் வியாபாரிகளிடம் இருந்து ரப்பர் சீட் வாங்கி உலர வைத்து அதை மொத்தமாக வெளியூர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை ரப்பர் சீட் குடோனில் உலற வைத்து விட்டு இரவு குடோனை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    மறுநாள் காலையில் குடோனில் வேலை பார்க்கும் தொழிலாளி வந்து பார்க்கும் போது குடோன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குடோன் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்த போது குடோனில் உலர வைத்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 500 கிலோ ரப்பர் சீட் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே குலசேகரம் போலிசுக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் வந்து குடோனில் அமைக்கப்பட்டியிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்த போது திருடன் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து சிசிடிவி கேமராக்களை திசை மாற்றி வைத்துவிட்டு குடோன் முழுவதும் சுற்றி வருவது தெரிந்தது. அவன் தலையில் இருந்த உடம்பு முழுவதும் துணியில் மூடி இருக்கிறது. திருடன் கேமராக்களை திசை மாற்றி வைத்ததால் வேறு எதுவும் தெரியவில்லை. இந்த திருட்டு சம்பவத்தில் ஒருவர் மட்டும் ஈடுபட வாய்ப்பு இல்லை இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்துதான் திருடியிருக்கிறார்கள் என்று குலசேகரம் போலிசார் சந்தேகிக்கிறார்கள்.

    கடந்த சில மாதங்களில் அரமன்னம், மணியன்குழி, நாகக்கோடு, மங்கலம், கோதையாறு, மாமூடு, கான்வெண்ட் போன்ற பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து உள்ளது. இதுவரைக்கும் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட ரப்பர் சீட் கடைகளில் இருந்து ரப்பர் சீட் திருடப்பட்டுயிருக்கிறது. இதுவரை யாரும் சிக்கவில்லை. இதனால் குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளிடத்தில் பெரும் அச்சம் நிலவுகிறது.

    தற்போது தினமும் இரவு நேரங்களில் சுமார் ஒரு மாதமாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் சீட்டின் விலை உயர்ந்து உள்ளது. இதை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு இரவு நேரங்களில் ரோந்து வர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.

    பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை- பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே திருக்கருகாவூர் ஸ்ரீவாரி நகர் பிரியங்கா தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 34). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மணிகண்டன் வீட்டை பூட்டி விட்டு தனது சகோதரி வீடான கும்பகோணத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் செயின் 3 பவுன் தங்கத்தோடு 1½ பவுன், வெள்ளி டம்ளர், வெள்ளி குத்து விளக்கு, பால் கிண்ணம் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் உள்பட 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி தப்பி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மணிகண்டன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதள்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொ) சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தஞ்சையில் இருந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் கீதா வருகை தந்து கொள்ளையர்களின் கைரேகைகளை சோதனை செய்தார். தஞ்சையில் இருந்து டப்பி என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து அருகில் தோப்பு வரை ஓடி சென்று படுத்துக்கொண்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தங்களை திருடிய 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வன சரகத்துக்குட்பட்ட கரியன் படுகை வனப்பகுதியில் கடந்த 23-ந் தேதி ஆண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்ததை வன ஊழியர்கள் பார்த்தனர்.

    அந்த யானையின் இரண்டு தந்தங்களும் திருட்டு போயிருந்தது. யாரோ யானையின் தந்தங்களை எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் 2 நாட்களுக்கு பின்னர் தந்தங்களை திருடிய மர்மநபர்கள் யானை இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் வைத்து விட்டு சென்றனர். இதனை வனத்துறையினர் மீட்டனர்.

    தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானையின் தந்தங்களை தாணி கண்டியை சேர்ந்த மருதுபாண்டி (வயது 27), ராமன்(50), சின்னான் (50) ஆகியோர் விற்பனை செய்வதற்காக திருடியது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கீரை மற்றும் மூங்கில் குருத்து எடுக்க காட்டிற்குள் சென்ற போது இறந்து கிடந்த யானையின் தந்தங்களை திருடி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்ததாகவும், சிக்கி விடுவோம் என்ற பயத்தில் மீண்டும் யானையின் தந்தங்களை வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தனர்.

    பின்னர் வனத்துறையினர் 3 பேரையும் 5-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் பவானிசாகர் சப்-ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    பணகுடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி பிரவீனா (வயது22).

    இவரது சொந்த ஊர் கங்கை கொண்டான் அருகே உள்ள துறையூரில் உள்ளது. சமீபத்தில் துறையூரில் நடந்த கோவில் விழாவிற்கு பிரவீனா சென்றிருந்தார். அங்கிருந்து ஊருக்கு திரும்பும் போது ஒரு பையில் தனது நகைகள் மற்றும் ஆடைகளை வைத்திருந்தார்.

    பணகுடி பஸ் நிலையத்தில் வந்து இறங்கும் போது கூட்ட நெரிசலில் நகை பை திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்த போது தங்க நகைகளை காணவில்லை.

    அதில் 10 பவுன் எடை உள்ள நெக்லஸ், வளையல் போன்ற நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து பிரவீனா பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    திருமருகல் பகுதியில் வீடு-கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஆதினக்குடி, போலகம், மானாம்பேட்டை, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணம் அடிக்கடி திருட்டு போனது.

    திருமருகல் பகுதி கடைகளிலும் திருட்டு போனது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் விஜய குமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின்படி நாகூர் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் தலைமையில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் திருமருகல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

    அப்போது சீயாத்தமங்கை கைகாட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பிச் சென்றார். இதனால் போலீசார் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருமருகல் அருகிலுள்ள சேகல் வடக்கு தெருவைச் சேர்ந்த சட்டநாதன் (வயது 35) என்றும் இவர் திருப்பூரில் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது மேலும் விசாரணையில் அவர் திருமருகல் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சட்ட நாதனை கைது செய்து அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்

    திருப்பத்தூரில் பஸ்சில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    ஒசூரை சேர்ந்தவர் குமார் (வயது 42). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சமியா (38). இவர்களுக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக குமார் தனது மனைவியுடன் ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் 7 பவுன் நகையை ஒரு பையில் எடுத்து கொண்டு இன்று காலை திருப்பத்தூருக்கு பஸ்சில் பயணம் செய்து வந்தார்.

    பண பையை சமியா வைத்திருந்து உள்ளார். திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே வந்த போது சமியா வைத்திருந்த பண பை காணாமல் போயிருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதி கத்திகூச்சலிட்டனர். பின்னர் இது குறித்து திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெற்குன்றம் பகுதியில் வாகனங்களை திருடி விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    போரூர்:

    கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் டிராவல்ஸ் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வேன் டெம்போக்கள் அடிக்கடி திருடு போகும் சம்பவம் நடந்து வந்தது.

    இது தொடர்பாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் துலூக்கார்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது, வளசரவாக்கம் கடும்பாடியம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்த யோகநாதன்.

    அவர்கள் இருவரையும் கடந்த மாதம் கோயம்பேடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்,. அவர்கள் வாகனங்களை திருடி வெளியூர்களில் குறைந்த விலைக்கு விற்றது தெரிந்தது. அவர்களிடமிருந்து 2 சொகுசு டெம்போ டிராவலர் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கைதான அப்துல் ஹமீது, யோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோயம்பேடு போலீசார் பரிந்துரை செய்தனர்.

    இதனை ஏற்று கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தர விட்டார்.

    திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்த பஸ்-லாரி திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.

    இங்கு விதிமுறை மீறி இயக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் என 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டுள்ளன.

    கடந்த வாரம் மகராஷ்டிராவில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை ஊத்துக்கோட்டை சந்திப்பில் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் உரிய ஆவணங்கள் இல்லாததால் பொன்னேரி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

    அதிகாரிகள் பறிமுதல் செய்த இந்த லாரியும், ஆம்னி பஸ்சும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் முன்பகுதியில் உள்ள வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் காம்பவுண்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டு இருந்த லாரியையும், ஆம்னி பஸ்சையும் அங்கிருந்து திருடி ஓட்டிச் சென்று விட்டனர்.

    லாரியும், பஸ்சும் திருடு போய் இருப்பதை கண்டு போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருவள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த வேறு எந்த வாகனங்களும் திருட்டு போய் உள்ளதா? என்று போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×