என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக 2 பெரிய ஏரிகள் உள்பட 98 ஏரிகள் நிரம்பி உள்ளன.
    காஞ்சீபுரம்:

    ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக 2 பெரிய ஏரிகள் உள்பட 98 ஏரிகள் நிரம்பி உள்ளன. இது குறித்து பொது பணிதுறை அதிகாரிகள் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பொதுபணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 98 ஏரிகள் 100 சதவீதமும், 136 ஏரிகள் 75 சதவீதமும், 149 ஏரிகள் 50 சதவீதமும், 570 ஏரிகள் இதற்கு குறைவாகவும் நிரம்பி உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    ஐந்து நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் தாம்பரம், முடிச்சூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி உள்ளனர்.
    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை நேற்று காலை வரை கன மழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளும் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், அனகா புத்தூர், பம்மல், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    மழைநீர் செல்ல வழியில்லாததால் தெருக்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    பெருங்களத்தூர் கண்ணன் அவென்யூ, சமத்துவ பெரியார் நகர், அன்னை அஞ்சுகம் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

    மழைநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றுக்கு செல்லும் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்துள்ளதால் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

    பொழிச்சலூர் தாங்கல் பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. தெருக்களில் முட்டு அளவு தண்ணீர் ஓடுகிறது.

    ராஜகீழ்ப்பாக்கம் ஏரி முழுவதுமாக நிரம்பி உள்ளது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் சாலை வழியாக குடியிருப்புக்குள் செல்கிறது.

    அனகாபுத்தூர், செம்பாக்கம் திருமலை நகர், மப்பேடு, திருவஞ்சேரி பகுதியிலும் மழை வெள்ளத்தால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு குறைந்த அளவு மழை பெய்தது. இன்று காலை வரை மழை இல்லை. இதனால் பொது மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு கிடைத்து வருகிறது. காலை 10 மணிக்கு பின்னர் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

    மேலும் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் தாம்பரம், முடிச்சூர் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்ட போது தாம்பரம், முடிச்சூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது ஒருநாள் பெய்த மழைக்கே குடியிருப்புகள் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    தொடர்ந்து கனமழை நீடித்தால் மேலும் பாதிக்கப்படலாம் என்று நினைத்து தாம்பரம், முடிச்சூர், பெங்களத்தூர் பகுதியில் தாழ்வான இடங்களில் வசித்து வரும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை காலி செய்து உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மழை வெள்ளம் காரணமாக தாம்பரம் - முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு பாதாள சாக்கடை பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி சமீபத்தில் நடந்தது.



    இதனால் அப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதைத்தொடர்ந்து பழைய தாம்பரம், கிருஷ்ணாநகர், பெருங்களத்தூர் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    வாகனங்கள் அனைத்தும் தாம்பரம்-கிஷ்கிந்தா சாலை வழியாகவும், தாம்பரம்- வண்டலூர் சாலை வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை மழையால் பாதிக்கப்பட்ட முடிச்சூர் அஷ்டலட்சுமி நகர், அமுதம் நகர் உள்ளிட்ட பகுதிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட புயல் கண்காணிப்பு அலுவலர் அமுதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது புயல் கண்காணிப்பு அலுவலர் அமுதா கூறும்போது, ‘கடந்த 2015-ம் ஆண்டே இப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் ஆக்கிமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது மணிமங்கலம், ஆதனூர் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் காலி மனைகளில் இருந்து வரும் மழைநீர் முறையாக அடையாறு ஆற்றுக்கு செல்ல முடியாமல் ஆக்கிரமிப்புகளால் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. இன்னும் சில நாட்கலில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.

    குடியிருப்புகளில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது’ என்றார்.

    மழைநீரை அகற்றும் பணியில் நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
    ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ. 28 லட்சத்துடன் மாயமான டிரைவர் மற்றும் 3 நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக நேற்று முன்தினம் தனியார் நிறுவன ஊழியர்கள் வேனில் வந்தனர். வேனை தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த உதய குமார் ஓட்டி வந்தார்.

    ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்பி விட்டு ஊழியர்கள் வந்தபோது வேனுடன் உதயகுமார் மாயமாகி இருந்தார். வேனில் ரூ. 28 லட்சம் பணம் இருந்தது.

    இதற்கிடையே மாயமான வேன் பல்லாவரம் மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. அதிலிருந்த ரூ. 28 லட்சத்துடன் டிரைவர் உதயகுமார் ஓட்டம் பிடித்து இருப்பது தெரியவந்தது.தலைமறைவான டிரைவர் உதயகுமாரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    உதயகுமாரின் சொந்த ஊரான ஏரலுக்கு ஒரு தனிப்படை போலீசார் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனால் இவ்வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது.

    இதற்கிடையே உதயகுமார் முன்பு வேலை பார்த்த இடங்கள் குறித்து போலீசார் விவரங்களை சேகரித்தனர். அப்போது அவர் போரூர் காட்டுப்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்ததும் அங்கிருந்து ஒரு காரை எடுத்துச்சென்று தலைமறை வானதும் தெரியவந்தது.

    இதையடுத்து உதய குமாரின் நண்பர்கள் குறித்து விசாரித்த போது ஆலப்பாக்கத்தில் தங்கி இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் அங்கு சென்ற போது உதயகுமார் வீட்டில் பதுங்கி இருந்தார். அவரை பிடித்து கைது செய்தனர்.

    மேலும் பணம் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் போரூரை சேர்ந்த தேவராஜன், மாங்காட்டை சேர்ந்த பாண்டியன், கோடம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 21½ லட்சம், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீசாரிடம் உதயகுமார் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எங்கள் குடும்பத்தில் பணக் கஷ்டம் இருந்தது. இதனால் ஏ.டி.எம்.களுக்கும் கொண்டு செல்லப்படும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். இதுபற்றி நண்பர்களிடம் கூறினேன். அவர்களும் கொள்ளைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று பணம் கொண்டு செல்லப்பட்ட வேனை நண்பர்கள் காரில் பின்தொடர்ந்து வந்தனர். விமான நிலைய ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப ஊழியர்கள் சென்றபோது பாதுகாவலரை திசைதிருப்பி வேனை கடத்தி சென்றேன். அதிலிருந்த ரூ. 28 லட்சத்தை எடுத்துக் கொண்டு நண்பர்கள் வந்த காரில் ஏறி தப்பினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த ரவுடி ஸ்ரீதரின் சமையல்காரர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், நில அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இருந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் 2012-ம் ஆண்டு போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார்.

    கடந்த மாதம் 4-ந் தேதி கம்போடியா நாட்டில் உள்ள ஓட்டலில் ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கடந்த 15-ந் தேதி சென்னை கொண்டு வரப்பட்டது.

    ரவுடி ஸ்ரீதர் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் போலீசாருக்கு இருந்தது. மேலும் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரம் போலீசுக்கு தெரியவில்லை.

    இதனால் அவருடன் நெருங்கி இருந்த கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஸ்ரீதர் வெளிநாடு தப்பி செல்லும் போது காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவரை உடன் அழைத்து சென்றிருந்தார்.

    அவர் ஸ்ரீதருக்கு சமையல்காரராக இருந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீதர் இறந்த பின்னர் தேவேந்திரன் இந்தியா திரும்பி வரலாம் என்று போலீசார் நினைத்திருந்தனர். இதனால் தேவேந்திரன் பற்றி அனைத்து விமான நிலையத்துக்கும் ‘லுக்-அவுட்’ சர்க்குலர் அனுப்பி இருந்தார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை வெளிநாட்டில் இருந்து பெங்களூர் விமான நிலையத்துக்கு தேவேந்திரன் வந்தார். அவரை அங்குள்ள போலீசார் கைது செய்தனர்.

    இதுபற்றி காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேவேந்திரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதன் பின்னர் ஸ்ரீதர் எப்படி இறந்தார்? தற்கொலைக்கான காரணம் என்ன? எந்தெந்த நாடுகளில் தங்கி இருந்தார்? அவருக்கு உதவியவர்கள் யார்-யார்? என்ற விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டிசம்பர் 12, 13-ந் தேதிகளில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஊழியர் சம்மேளன மாநில தலைவர் மதிவாணன் கூறினார்.
    திருப்போரூர்:

    தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் திருப்போரூர் கிளை தொடக்க விழா திருப்போரூரில் நடைபெற்றது. தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாநில தலைவர் மதிவாணன் கலந்து கொண்டார்.

    பின்னர் மதிவாணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    10 ஆண்டுகளாக பணிபுரியும் பி.எஸ்.என்.எல். தொழிலாளர்களுக்கு ஊதிய விகித மாற்றம் செய்யாமல், நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய அரசு கூறி வருகிறது. தபால் துறைக்கு வழங்கப்படும் சலுகைகள் போல எங்களுக்கும் வழங்க மத்திய அரசு மறுக்கிறது.

    மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக செய்கிறது. கூடிய விரைவில் பி.எஸ்.என்.எல். கட்டிடங்கள் தனியார் நிறுவனத்துக்கு விற்கப்படும் சூழ்நிலை ஏற்படும். தபால் துறை மேம்பாட்டு பணிக்கு செல்போன் சேவை வழங்க தனியார் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மத்திய அரசின் தனியார் மயம், ஊழியர் விரோத போக்கை கண்டித்து அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி டிசம்பர் 12, 13-ந் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். அதற்கு முன்பு பாராளுமன்ற முற்றுகை பேராட்டம் நடத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் ஒப்பந்த தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில அமைப்பு செயலாளர் முத்துக்கருப்பன் நன்றி கூறினார்.
    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், அன்னை அஞ்சுகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. ஒரு நாள் மழைக்கே புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

    கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையின் இருபுறத்தையும் தொட்டவாறு தண்ணீர் கரைப்புரண்டு ஓடுகிறது.

    தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அடையாறு ஆற்றை ஒட்டி கரையோரத்தில் உள்ள முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர், சி.டி.ஓ. காலனி பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    முடிச்சூர், வரதராஜபுரம், சமத்துவ பெரியார் நகர், அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளுக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு செல்கிறார்கள்.

    கடந்த 2015-ம் ஆண்டு பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது முடிச்சூர், பெருங்களத்தூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது ஒரு நாள் பெய்த மழைக்கே மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து இருப்பதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    சேலையூரை அடுத்த திருவஞ்சேரி மப்பேடு, ராஜகீழ்பாக்கம், திருமலை நகர், சிட்லப்பாக்கம், பொழிச்சலூர், அனகாப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தெருக்களில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.

    திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தாழ்வான இடங்களான ஜோதிநகர், சத்யமூர்த்தி நகர், முருகப்பா நகர், ஜெய்ஹிந்த் நகரில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் நிற்கிறது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து உள்ளது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

    ஜோதி நகரில் உள்ள பிரதான மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் மழை வெள்ளம் செல்ல வழியில்லாம் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது.

    ஜோதி நகர் அருகே மணலி விரைவுச் சாலையில் மழைநீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அவ்வழியே வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதே போல் ராஜாஜி நகரில் 100 வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது.

    கடல் சீற்றமாக காணப்படுவதால் திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் பைபர் படகு, கட்டுமர படகுகளில் செல்லும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. இதையடுத்து பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. குறைவான ஊழியர்களே சில தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    தொழிற்சாலையில் தேங்கி உள்ள நீரை மண்டல உதவி ஆணையாளர் பால சுப்பிரமணியன், அலெக்ஸ் சாண்டர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற வழி தெரியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவு நீரை வெளியேற்றினர்.

    இதை அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீண்டும் ஜே.சி.பி. மூலம் கரையை மூடினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை மீண்டும் அம்பத்தூர் மண்டல உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம், மத்திய கோட்ட துணை ஆணையர் சுப்புராஜ், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏரியின் கரையை உடைத்து மீண்டும் கழிவு நீரை கொரட்டூர் ஏரிக்குள் விட்டனர்.

    மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக முறையான வடிகால் கால்வாயும், கழிவு நீர் கால்வாயும் தனித்தனியாக அமைத்து முறையாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளில் 66 ஏரிகள் முழு கொள்ளளவினை எட்டியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளில் 66 ஏரிகள் முழு கொள்ளளவினை எட்டியுள்ளது.

    இது குறித்து பொதுபணித்துறை அதிகாரிகள் கூறும் போது, “வடகிழக்கு பருவ மழையின் ஆரம்ப நிலையிலேயே 66 ஏரிகள் முழு கொள்ளளவினை எட்டியுள்ளன. ஏராளமான ஏரிகள் நீர்வரத்தின் காரணமாக நிரம்பும் நிலையில் உள்ளது. இன்றும் நாளையும் மழை நீடித்தால் மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஏரிகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.

    மழை பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

    மாவட்டத்தில் 84 அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களையும், 117 பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களும், 183 மிதமான பாதிப்பு ஏற்படும் இடங்களும், 131 குறைந்த பாதிப்புக்குள்ளாகும் இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மழையால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் மீட்புப் பணிகளுக்காக தீயணைப்பு, மின்வாரியம், காவல் துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் என 11 துறை அலுவலர்கள் கொண்ட 84 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை ஆகிய துறைகள் முலம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 600 மணல் முட்டைகள் தயார் நிலையில் உள்ளன.

    மின்வாரியத்தினர், பாம்பு பிடிப்போர், மீனவர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    அவசர காலங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு 044-27237107, 27237207 என்ற எண்களிலும் அழைக்கலாம். மேலும் 94450 51077 மற்றும் 94450 71077 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நகரம் எங்கும் மழைநீர் தேங்கி நிற்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்குள் முடங்கியுள்ளனர்.

    ஸ்தலசயண பெருமாள் கோவில் வளாகம் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி மாமல்லபுரம் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. கோவளம், நெம்மேலி, பட்டிபுலம், தேவநேரி, மாமல்லபுரம், வெண்புரு‌ஷம், கொக்கிலமேடு, கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதி மீனவர்கள் வானிலை நிலைய எச்சரிக்கை காரணமாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    பழவேற்காடு பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
    அனகாபுத்தூரில் மாடியில் நின்றுகொண்டு செல்போன் பேசிக்கொண்டு இருந்தபோது மின்னல் தாக்கி ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.

    தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், குரோம்பேட்டை பகுதிகளில் காலையில் விட்டுவிட்டு பெய்து வந்த மழை, மாலையில் திடீரென இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்தது.

    சென்னை அனகாபுத்தூர் கஸ்தூரிபாய்நகர் முதல்தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 19). ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தார். அனகாபுத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிஷோர் (17). ஐ.டி.ஐ. மாணவர். இருவரும் நண்பர்கள். நேற்று இரவு அனகாபுத்தூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இரவு 9 மணிக்கு லோகேசின் வீட்டுக்கு கிஷோர் சென்றார். இருவரும் 2-வது மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கி இருவரும் மயங்கி கீழே விழுந்தனர்.

    உடனே அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் சோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு வரப்பட்ட ரூ.28 லட்சத்துடன் மாயமான டிரைவரை போலீசார் நேற்று நாமக்கல்லில் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கனரா வங்கியின் ஏ.டி.எம். ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம்.மில் கடந்த 25-ந் தேதி பணத்தை நிரப்ப வந்தபோது வேன் டிரைவர் உதயகுமார் (வயது 40) என்பவர் ரூ.28 லட்சத்துடன் மாயமாகி விட்டார். அவரை பிடிக்க பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில், விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த தனிப்படையினர் உதயகுமாரின் செல்போன் உரையாடல்களை வைத்து விசாரித்தனர். அப்போது அவர் சேலம் அருகே நாமக்கல்லில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து நாமக்கல் சென்ற தனிப்படை போலீசார் நேற்று உதயகுமாரை கைது செய்தனர். ஆனால் அவரிடம் பணம் எதுவுமில்லை.

    இது குறித்து துருவித்துருவி விசாரணை நடத்தி வருவதாகவும், பணம் குறித்து உதயகுமார் முன்னுக்கு பின் முரணாகவே பேசி வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
    வடபழனி கோவில் அருகே தனியார் காலணிகள் பாதுகாப்பு அறையில் மர்மமான முறையில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    வடபழனி முருகன் கோவில் அருகே தனியார் காலணிகள் பாதுகாக்கும் அறை உள்ளது. இன்று காலை ஊழியர் திறந்து பார்த்தபோது உள்ளே ஊனமுற்ற வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபர் உடலை மீட்டு ராயபேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் திருவொற்றியூரை சேர்ந்த ராஜேஷ் என்பதும், கோவில் வாசலில் தங்கி பிச்சை எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
    மாமல்லபுரத்தில் வெளி நாட்டு பயணிகள் தங்கியிருந்த 3 விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பதறியடித்து ஓடினர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள மீனவர் பகுதியில் கடற்கரையோரம் உள்ள குறைந்த கட்டண விடுதியில் தங்கி வருகிறார்கள்.

    வீடு போன்ற சூழ்நிலை, வீட்டு உணவு, கூறைவீடு போன்று பார் செட்டப், எளிமையான பைக் பயணம், சைக்கிள் சுற்றுலா, சூரிய குளியல் போன்ற வசதிகள் அங்கு உள்ளதால் விரும்பி தங்குவார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாமல்லபுரம் மீனவர் பகுதியில் உள்ள விடுதியின் மாடியில் அடுத்த கூறை, உணவகம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

    காற்றின் வேகத்தில் அருகில் உள்ள விடுதி மற்றும் வீடுகளுக்கும் தீ பரவியது. அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பதறியடித்து ஓடினர்.



    மொத்தம் 3 விடுதி, 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.

    தகவல் அறிந்ததும் கல்பாக்கம், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

    உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 3 விடுதிகளும் 2 வீடும் எரிந்து சாம்பலானது.

    வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்களை தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அகற்றியதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் பிரான்சு போலந்து நாட்டை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.



    குடிசைகளில் தீப்பற்றியதும் அங்கிருந்த வெளிநாட்டினர் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.விபத்துக் குள்ளான விடுதிகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதா? அல்லது சட்ட விரோதமாக செயல்பட்டதா? என வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கே.கே.நகரில் பட்டப்பகலில் பெண்களிடம் கத்திமுனையில் 10 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் ஜீவானந்தம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பசுவமதி. இவரது மனைவி பரமேஸ்வரி (43). பட்டு புடவை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று பகலில் பசுவமதி வெளியில் சென்று இருந்தார். பரமேஸ்வரி அவரது நண்பர் மாலாவுடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு வாலிபர் வந்து கதவை தட்டினார். பரமேஸ்வரி கதவை திறந்தார். பிரபல நிறுவனத்தில் இருந்து தண்ணீர் சுத்திகரிப்பு செய்வதற்காக வந்து இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு பரமேஸ்வரி எங்கள் வீட்டில் இருந்து எந்த புகாரும் கொடுக்க வில்லை என்று கூறியபோது அந்த வாலிபர் வீட்டுக்குள் புகுந்து கதவை மூடினார்.

    இருவரையும் சமையலறைக்கு அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். கூச்சல் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டி சமையல் அறையில் வைத்து பூட்டினார். பின்னர் படுக்கை அறைக்கு சென்று அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் ரொக்கம் ரூ.12500 மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை சுருட்டிக் கொண்டு தப்பி ஓடி விட்டார். மதியம் 12 மணியளவில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    சிறிதுநேரம் கழித்து பரமேஸ்வரி சத்தம்போட்டு பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார். அதற்குள் இருவரும் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தனர்.

    இதுபற்றி கே.கேநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    ×