என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் திருமணம் செய்த 40 நாளில் இளம்பெண் மர்ம பலி: கணவரிடம் போலீஸ் விசாரணை
    X

    காதல் திருமணம் செய்த 40 நாளில் இளம்பெண் மர்ம பலி: கணவரிடம் போலீஸ் விசாரணை

    பல்லாவரம் அருகே காதல் திருமணம் செய்த 40 நாளில் இளம்பெண் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த பல்லாவரம் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நயின்பாஷா. இவருடைய மகள் ஷாகிரா(வயது 20). பி.காம். பட்டதாரி. அதே தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(27). டிரைவர்.

    ஷாகிரா-கார்த்திக் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 40 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் காதல் திருமணம் செய்த இருவரும் பம்மல் மூங்கில் ஏரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு ஷாகிரா, வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஷாகிரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஷாகிராவின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவளை கார்த்திக்தான் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.

    சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஷாகிராவுக்கு திருமணமாகி 40 நாட்களே ஆவதால் இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×