என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுங்குவார்சத்திரம் அருகே கொள்ளையர்கள் 5 பேர் கைது
    X

    சுங்குவார்சத்திரம் அருகே கொள்ளையர்கள் 5 பேர் கைது

    சுங்குவார்சத்திரம் அருகே கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 35). துணி வியாபாரம் செய்து வருகிறார்.

    துணிகளை சுங்குவார் சத்திரம் அடுத்த பேரம்பாக்கம், மதுரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் விற்றுவிட்டு தவணை முறையில் பணத்தை வசூல் செய்து வந்தார்.

    3 மாதத்துக்கு முன் எடையார்பாக்கம் பகுதியில் பணத்தை வசூல் செய்து மோட்டார் சைக்கிளில் எடையார்பாக்கம் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் பாபுவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 75 ஆயிரம் பணம், செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இது குறித்து பாபு சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜான் விகிடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் அவர்களின் அங்க அடையாளங்களை வைத்து கொள்ளையர்கள் படம் வரைந்து தேடி வந்தனர்.

    விசாரணையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த அஜித், விஜி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 கத்தி,2 செல்போன், பைக் ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடந்த மாதம் 25-ந் தேதி பிள்ளைச்சத்திரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கணேசன் என்பவர் தனது லாரியை சாலையோரம் நிறுத்திய போது மர்ம நபர்கள் 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கணேசனை கத்தியை காட்டி சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன், ரூ. 5 ஆயிரத்தை பறித்து தப்பினர்.

    அதே பகுதியில் இரும்பு கடை வைத்துள்ள ராதாகிருஷ்ணன் என்பவரிடம் அதே கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 20 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மொளச்சூர் பகுதியை சேர்ந்த சத்திரியன், ஆனந்த், வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3, கத்தி, 2 செல்போன், 4 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×