என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பவானிசாகர் அண்ணா நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள பவானி ஆறு வட்டபாறை பகுதியில் முடுக்கன் துறை கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி மற்றும் கிராம உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி முதியவர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பவானி நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யு.சி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் கே.பி.நடராஜ், நகராட்சி சங்க துணை தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் குப்புராஜ், ரங்கநாதன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உள்ளாட்சி தொழிலாளர்கள் குறைதீர் ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் அவுட்சோர்சிங், தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நகராட்சி சங்க தலைவர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பாலமுருகன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஈரோட்டில் பிளஸ் - 2 பொதுத் தேர்வில் 95.72 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.11 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இதில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற துறைகளை ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் தேர்ச்சி விகிதம் உள்ளது.

    இதுகுறித்து பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் தேர்வு நடந்த 5 பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஆசனூர்-74 சதவீதம், பர்கூர்-80 சதவீதம், கெத்தேசால்-75 சதவீதம், தலமலை-44 சதவீதம், பிளஸ்-2 தேர்வில் ஆசனூர்-68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதும், பூர்த்தி செய்யாததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பர்கூர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை 418 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 418 பேருக்கு ஒரு தமிழாசிரியர், ஒரு ஆங்கில ஆசிரியர் உள்ளனர்.

    இது குறித்து கேட்டால் இந்த பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையில் வருவதில்லை வேறு துறைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை தான் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது.

    பள்ளி கல்வித் துறையில் காலிப்பணியிடங்களில் 95 சதவீதத்தை நிரப்பி விட்டு மீதி ஆசிரியர்கள் இருந்தால் இது போன்ற பிற துறை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இதுபோன்ற பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெருந்துறை அருகே 50 அடி ஆழம் கொண்ட தோட்டத்து கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
    • பெருந்துறை போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கிரே நகர் பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர். இவரது மனைவி அம்மணியம்மாள் (வயது 88). கணவர் இறந்து விட்ட நிலையில் அம்மணியம்மாள் தனது மகன் துரைசாமி என்பவரது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    துரைசாமி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட 10 அடி தண்ணீர் உள்ள தோட்டத்து கிணறு உள்ளது. நேற்று இரவு அம்மணியம்மாள் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

    உடனடியாக துரைசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி அம்மணியம்மாள் உடலை கயிறு கட்டி பிணமாக மீட்டனர்.

    பின்னர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் அம்மணியம்மாளின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாளவாடி, அந்தியூர் அரசு கலை கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பின்னலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அந்தியூர் பகுதியில் கலை கல்லூரி அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. சட்டமன்ற கூட்டத்தொடரில் அந்தியூர் பகுதிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து இந்த கல்வி ஆண்டில்கல்லூரி தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்தியூரில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது.

    இதையடுத்து 2022-2023-ம் ஆண்டுக்கான சேர்க்கை இன்று தொடங்கியது. பி.ஏ. தமிழ் பி.ஏ. ஆங்கிலம். பி.எஸ்.சி.கணிதம். பி.எஸ்.சி. கணினி அறிவியல், .பி.காம். இந்த பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளார்கள்.

    இதற்கான வகுப்பறைகள் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

    இதே போல் தாளவாடி பகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இனறு தொடங்கி நடந்து வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பின்னலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பவானிசாகர் அணையில் இருந்து 905 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர்:

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 82.43 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 261 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி கால்வாயில் 800 கனஅடியும், குடிநீருக்காக 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடியும் என மொத்தம் 905 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை ரோட்டில் பாய்ந்து சென்ற சிறுத்தையால் அதிர்ச்சி அடைந்த விவசாயி.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகள் வழியாக செல்லும்போது கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானைகள் புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். அதே போல் இரவு நேரங்களில் புலி மற்றும் சிறுத்தைகளும் அடிக்கடி ரோட்டை கடந்து உலாவி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அடுத்த புது குய்யனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (41). இவருக்கு அந்த பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இதில் மாட்டு தீவனங்கள் பயிரிட்டு பராமரித்து வருகிறார். மேலும் 2 மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பால் கறந்து சத்தியமங்கலம், பண்ணாரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பால் விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் புது குய்யனூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பால் விற்பனை செய்ய சென்று கொண்டு இருந்தார். அவர் சத்தியமங்கலம்-பண்ணாரி ரோடு குய்யனூர் பிரிவு அருகே சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் முன்பு ஏதோ ஒரு உருவம் பாய்ந்து சென்றது. இதை கண்டு நிலை தடுமாறினார்.

    இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விளக்கை எறிய விட்டு பார்த்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு சிறுத்தை சென்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது முன்பு சென்றது சிறுத்தை என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் குறித்து பொதுமக்கள் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதிகளில் இருந்து சிறுத்தை, யானை மற்றும் வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகள் வழியாக செல்லும்போது கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    • பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
    • இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(32). இவர் ஈரோடு-மொடக்குறிச்சி வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்சின் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    அப்போது அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவி அவரது பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரமேஷ் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் ரமேஷ் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 9-ந்தேதி மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியை தனியார் பஸ் டிரைவர் ரமேஷ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

    இந்நிலையில் பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • பஸ் தொடர்ந்து நெரிஞ்சிப்பேட்டை அடுத்த மூலக்கடை என்ற பகுதியில் சென்றது.
    • அப்போது அதே நபர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கினார். இதில் கண்ணாடி உடைந்து தொறுங்கியது.

    அம்மாபேட்டை:

    திருப்பூரில் இருந்து தர்மபுரி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள அஞ்சனூர் என்ற பகுதியை சேர்ந்த சக்திவேல் (47) என்பவர் ஓட்டினார். பஸ்சில் கண்டக்டராக அன்பழகன் என்பவர் பணியாற்றினார்.

    பஸ் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை அருகே காலை 9 மணி அளவில் சென்றது. அப்போது பஸ்சை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பஸ்சை முந்தி செல்ல முயன்றார். ஆனால் பஸ் டிரைவர் சக்திவேல் வழி விடாமல் சென்றார்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபர் பஸ்சை முந்தி சென்று நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்நிலையில் பஸ் தொடர்ந்து நெரிஞ்சிப்பேட்டை அடுத்த மூலக்கடை என்ற பகுதியில் சென்றது. அப்போது அதே நபர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கினார். இதில் கண்ணாடி உடைந்து தொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து பஸ் மீது கல்வீசிய வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    • அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    அந்தியூர்:

    நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பெங்களூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு யோகா செய்கிறார். இதையடுத்து பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜேஷ்குமார் ஒருங்கி ணைந்து வழி நடத்தினார். இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.
    • இது குறித்து சென்னிமலை போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் திட்ட பொறியாளராக பணி புரிந்து வருபவர் கோசல்குமார் (வயது 49).

    இவரது நிறுவனம் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்திய தொலைதொடர்புத் துறையில் பதிவு பெற்று நாடு முழுவதும் செல்போன் டவர்கள் அமைத்து அதனை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி இந்த நிறு வனத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு இட ங்களில் ஏர்செல் டவர்க ளை சுவாதீனத்தில் எடுத்து மற்றொரு தொலை த்தொடர்பு நிறுவனத்தி ற்காக (ஜியோ நெட்வொர்க்) பராமரித்து வந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 1-9-2017 முதல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாள்ளக்காட்டு தோட்ட த்தில் உள்ள ரங்கசாமி என்பவரின் நிலத்தில் செல்போன் டவர் அமைத்து அதனை பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தொலை த்தொடர்பு நிறுவன திட்ட பொறியாளர் கோசல்குமார் செல்போன் டவரை ஆய்வு செய்ய சென்னிமலைக்கு வந்தார். அப்போது ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.31½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    இதையடுத்து அவர் செல்போன் டவர் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார்.

    ஆனால் சரியான தகவல் கிடைக்க வில்லை. இது குறித்து கோசல் குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். பின்னர் இது குறித்து பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இது குறித்து சென்னிமலை போலீசில் அவர் புகார் கொடுத்தார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்போன் டவர் குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டுக்கு 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு ரத்தாகி வந்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. இந்திலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைய தொடங்கியது தக்காளி விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது. இன்று கிருஷ்ணகிரி, ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து எப்போதும் இல்லாத அளவாக 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு பெற்றது. சுமாரான தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது.

    ×