என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வண்ணான்குடிகாடு கிராமம் உள்ளது. இங்குள்ள புதிய காலனிபகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வண்ணான்குடிகாடு பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள வீடுகள் முன்பும், குடியிருப்பு பகுதிகள் முன்பும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே வீடுகள் முன்பு தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைகண்டித்து இன்று அந்த பகுதிமக்கள் வீடுகள் முன்பு தேங்கியுள்ள தண்ணீரில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, வீடுகள் முன்பு தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனக்கூறினர்.
சிதம்பரம்:
சென்னையில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை தாக்கி கட்சி கொடியை எரித்த பாரதீய ஜனதா கட்சியினரை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிதம்பரம் நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பனைச் செல்வன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ராஜா, முத்து மற்றும் சங்கமேஸ்வரன், மகளிர் சங்க நிர்வாகிகள் அமுதா, மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர்குழு உறுப்பினர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பு இழப்பு நாள் என்று மோடி அறிவித்து 1 ஆண்டு ஆகிறது. இந்த நாள் தேசிய பொருளாதார பேரிடர் நாளாக அறிவித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நவம்பர் 3-ந்தேதி கரூரில் மதவாத சக்திகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் கண்டிப்பாக நடைபெறும்.
தமிழகத்தில் மழை கால பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் எந்தெந்த அரசு துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும், அதற்கான செலவீனங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழக அமைச்சர் பேசும்போது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளை ஒப்பிடுகையில் தமிழகம் முன்னேற்பாடாக செயல்படுகிறது என்று கூறுகிறார். ஆனால் அங்கெல்லாம் மழை வெள்ளத்தின் போது மின் கசிவினால் உயிரிழப்பு இல்லை, அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னையில் மின் கசிவினால் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பண்ருட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சென்னை போன்ற மாநகராட்சிகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பல்வேறு கிராமங்களிலும் தண்ணீர் தேங்கி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி குளமாக நிற்கிறது.
சாலைகள் குண்டும்- குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவு உள்ளது. இந்த நிலையில் மழை பாதிப்பால் சேறு, சாக்கடை, கொசு தொல்லை ஆகியவை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். மழை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் அரசு மெத்தனமாக உள்ளது.
ஆட்சியாளர்களுக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. தமிழக அரசு மக்கள் பிரச்சனையில் முழுமையாக கவனம் செலுத்தி வாக்களித்த மக்களுக்கு கடமை ஆற்ற வேண்டும்.
தமிழகத்தில் கந்து வட்டியால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கந்து வட்டி கொடுமையை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வர்த்தகர்கள் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து நடைபெறும். ஜி.எஸ்.டி. கூட்டங்களில் உண்மை நிலையை உணர்ந்து வரி குறைப்பு செய்ய வேண்டும். உள்ளாட்சிதேர்தல் உடனடியாக நடத்த வேண்டும்
என்.எல்.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது. என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் போன்ற பகுதிகளில் இன்று காலையில் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு கடலூர் அருகே பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
கடலூர் அடுத்த பில்லாலிதொட்டி பெரிய காலனியை சேர்ந்தவர் ரவி(வயது 45). இவர் பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா(36). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இன்று காலை லதா தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் சுவர் மழை காரணமாக திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் லதா இடிபாட்டுக்குள் சிக்கி கொண்டார். உடனே அவர் கூச்சல்போட்டு அலறினார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய லதாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லதா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகவும், நீர் ஆதாரமாகவும் இது உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.60 அடியாகும். இந்த ஏரிக்கு சாதார காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளான செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, தென்னங்குடி ஓடை ஆகியவை வழியாக தண்ணீர் வருகிறது.
கடந்த 20-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் கல்லனைக்கு வந்ததும், கடந்த 5-ந் தேதி கல்லனை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கீழ்அணை வந்த நிலையில் கடந்த 26-ந் தேதி தண்ணீர் திறந்தவிடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் வீராணம் ஏரியை வந்தடைந்தது.
ஏரிக்கு தொடர்ந்து 150 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர் மட்டம் 41.60 அடியாக உள்ளது. இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 5 மி.மீ. மழையும், காட்டுமன்னார்கோவிலில் 12 மி.மீ., லால்பேட்டையில் 7 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
கடலூரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அதன் பின்பு கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சில இடங்களில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இரவு 9 மணி அளவில் கடலூர் நகரில் பலத்த மழை கொட்டியது.
சுமார் ½ மணி நேரம் இந்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை 5 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
காலை 10 மணிக்கு மேல் கடலூரில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் இம்பிரியல் ரோடு, லாரன்ஸ் ரோடு, திருப்பாதிரிப்புலியூர், ரெயில் நிலையம் போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
மழை காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் நனைந்தபடியும், குடை பிடித்து கொண்டும் சென்றனர்.
பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியிலும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றதால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். மேலும் இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி வெளியே செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு இடங்களில் குப்பை-கூளங்களாகவும் காட்சி அளிக்கிறது.
ரெயில்வே சுரங்கப்பாதையில் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
பண்ருட்டி, கண்டரக் கோட்டை, காடாம்புலியூர், புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் நேற்று மாலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இன்று காலையும் அந்த பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
பண்ருட்டியில் இன்று காலை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் குடை பிடித்த படியும், நனைந்து கொண்டும் சென்றதை காண முடிந்தது.
இதேபோல் சிதம்பரம், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், கீழ்செருவாய், விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, இறையூர், கூடலூர், முருகன்குடி போன்ற பகுதிகளில் இன்று காலையில் லேசான மழை பெய்தது.
கடலூர் முதுநகர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகன் சிரஞ்சீவி (வயது 13). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று மாலை 6 மணிக்கு தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அருகில் மழையில் நனைந்திருந்த வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து மாணவன் மீது விழுந்தது. இதில் அவன் படுகாயம் அடைந்தான்.
உடனே அக்கம் பக்கத்தினர் சிரஞ்சீவியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று அதிகாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், பெரியதச்சூர் போன்ற பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
அதுபோல் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரில் தனியார் முந்திரிக்கொட்டை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பண்ருட்டி அருகே முத்து கிருஷ்ணாபுரம், நரிமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
இன்று காலை ஒரு வேனில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் முந்திரிக்கொட்டை தொழிற் சாலைக்கு வேலைக்கு சென்றனர். வேனை கடலூர் அருகே உள்ள குமனங்குளம் பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 45) என்பவர் ஓட்டிச்சென்றார்.
பண்ருட்டி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றபோது மாடு ஒன்று குறுக்கே வந்தது. இதைத் தொடர்ந்து டிரைவர் தேவராஜ் வேனை திருப்ப முயன்றார்.
அப்போது வேன் நிலைதடுமாறு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் உள்ளே இருந்த பெண்கள் கூச்சல்போட்டு அலறினர். இந்தவிபத்தில் வேனில் இருந்த பூங்கோதை, வினோதினி, ருக்மணி, தெய்வகனி, சங்கீதா, வள்ளி உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுக்க வந்திருந்தனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து கலெக்டர் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கடலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (வயது 58) என்பவர் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவருடன் அவரது மனைவி தவமணி (45) என்பவரும் வந்திருந்தார்.
சிவலிங்கம் தனது கையில் ஒரு பை வைத்திருந்தார். போலீசார் சோதனை செய்தபோது அதில் விஷப்பாட்டில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கணவன்- மனைவி 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கந்து வட்டி கொடுமை தாங்காமல் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கலெக்டரிடம் கொடுக்க அவர் தான் கொண்டு வந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 10.5.2011-ம் ஆண்டு எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கி இருந்தேன். அதற்கு வட்டிப்பணம் செலுத்தி வந்தேன்.
ஆனால், அவர் வட்டிப் பணத்துக்கு எனது நிலத்தை எழுதி வாங்கி கொண்டார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, அசலும், வட்டியும் சேர்த்து ரூ.3½ லட்சம் கொடுத்தால்தான் நிலத்தை கொடுப்பேன் என்றார்.
இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தேன். ஆனால், போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி எனது நிலத்துக்கு சென்றேன். அப்போது பணம் கொடுத்தவர், நிலம் பக்கம் நீங்கள் வரக்கூடாது. வட்டி பணத்தை தந்தால்தான் நிலப்பத்திரத்தை தருவேன் என்றும், இல்லாவிட்டால் குடும்பத்தோடு தீ வைத்து எரித்து விடுவதாகவும் மிரட்டினார்.
எனவே, கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
போலீசார் சிவலிங்கத்திடம் விசாரணை நடத்திய பிறகு கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர்.
கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்துக்கு விஷப்பாட்டிலுடன் தொழிலாளி மனைவியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை அடுத்த கருமாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 70). இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி வளர்மதிக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு ரூ.1 லட்சம் கடனாக கொடுத்தார். இந்த ரூபாயை திருப்பித் தருமாறு வளர்மதியிடம் பலமுறை கேட்டு வந்தார். ஆனால் அவர் கொடுக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று மாலையும் மீனாட்சி பணத்தை திருப்பி கேட்பதற்காக வளர்மதியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வளர்மதியும், அவரது தாய் பாப்பாத்தியும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் மீனாட்சி பணத்தை கேட்டார். உடனே அவர்கள் தாங்கள் பணம் வாங்கும் போது எழுதி கொடுத்த பத்திரத்தை கொடுத்து விட்டு பணத்தை வாங்கி செல்லுங்கள் என்று கூறினர்.
இதை நம்பிய மீனாட்சி வீட்டுக்கு சென்று பத்திரத்தை எடுத்து கொண்டு மீண்டும் அங்கு வந்தார். அவரை வளர்மதியும், அவரது தாயாரும் வீட்டிற்குள் வருமாறு அழைத்தனர். உள்ளே வந்த மீனாட்சியை அவர்கள் சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்தனர். இதில் மீனாட்சி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் மீனாட்சி அணிந்திருந்த 7½ பவுன் தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டு, அவரது உடலை வீட்டின் பின்புறம் வளர்மதியும், அவரது தாயும் மறைத்து வைத்தனர்.
பின்னர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர். இரவு வீட்டுக்கு திரும்பி வந்த வளர்மதியும், அவரது தாயும் சேர்ந்து வீட்டில் மறைத்து வைத்திருந்த மீனாட்சியின் உடலை ரோட்டில் வீசினர். பின்னர் வளர்மதியின் தாய் பாப்பாத்தியின் சொந்த ஊரான குள்ளஞ்சாவடி அருகே உள்ள சிந்தாமணி குப்பத்துக்கு 2 பேரும் சென்று விட்டனர்.
இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் ரோட்டில் மீனாட்சி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு வளர்மதியின் வீட்டின் பின்புறம் சென்று நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வளர்மதியை தேடி சிந்தாமணி குப்பத்துக்கு சென்று வளர்மதியிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் வீட்டில் சோதனை செய்தபோது இறந்து போன மீனாட்சியின் நகைகள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வளர்மதியையும், அவரது தாய் பாப்பாத்தி யையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட மூதாட்டியை தாய்-மகள் சேர்ந்து அடித்து கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு வழகத்தைவிட வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடலூரில் நேற்று மதியம் 2 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டதால் சிறிது நேரத்தில் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் வரை மிதமான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு முதல் இடி-மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது. அதிகாலை வரை மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
இதனால் கடலூரில் சுரங்கப்பாதையிலும், பஸ் நிலையத்திலும், சாலையிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. இன்று காலையில் கடலூரில் காலை 6 மணிமுதல் 7 மணிவரை பலத்த மழை பெய்தது.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பிறபகுதிகளான நெல்லிக்குப்பம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
விழுப்புரத்தில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் நேற்று மதியம் மரக்காணம் அருகே நடுக்குப்பத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது அதே ஊரைச்சேர்ந்த ஜெயமூர்த்தி மனைவி மஞ்சுளா (வயது 33) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரில்களை யெடுக்கும் பணியில் தொழிலாளர்களான செல்வம் மனைவி சலஜா, சுப்புராயலூ மனைவி செல்வி, காத்தவராயன் மனைவி அன்னலட்சுமி ஆகியோருடன் சேர்ந்து ஈடுபட்டிருந்தார்.
அப்போது மின்னல் தாக்கியதில் மஞ்சுளா உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள், அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி பீம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக சலஜா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை- பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடந்து வருவது வழக்கம்.
கோவிலின் பூசாரியாக செல்வராஜ் (வயது 60) என்பவர் உள்ளார். நேற்று இரவு பூஜை முடிந்து கோவிலின் நடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இரவில் மர்ம மனிதர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் அதில் இருந்த பணம் தப்பியது.
இதைத்தொடர்ந்து கொள்ளையர்கள் கோவிலின் கருவறைக்கு புகுந்து அங்கிருந்திருந்த வெள்ளி கிரீடத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை கோவில் பூசாரி செல்வராஜ் கோவிலை திறக்க வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது அம்மனின் வெள்ளி கிரீடம் கொள்ளை போய் இருந்தது. அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
இது குறித்து கம்மாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






