என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் ரமேஷ் (32). என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனம் ஓன்றில் ஏரியா மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பண்ருட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ரத்த பரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அவர் புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    டெங்கு காய்ச்சலுக்கு பலியான என்ஜினீயர் ரமேசுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
    புவனகிரியில் வியாபாரி வீட்டில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 60). இவரது மனைவி தமிழரசி(50).

    சுப்பிரமணி அங்கு கடை வீதியில் செருப்புக்கடை வைத்துள்ளார். கடந்த 30-ந்தேதி கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டனர்.

    அங்கு சுப்பிரமணியனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணி திருப்பூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவருடன் தமிழரசியும் சென்றிருந்தார். இன்று காலை தமிழரசி மட்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கீழே கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இந்தகொள்ளை சம்பவம் குறித்து புவனகிரி போலீசில் தமிழரசி புகார் செய்தார். அதன்பேரில் சிதம்பரம் உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு நிஷா, புவனகிரி இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்புதுலக்க கைரேகை நிபுணர்கள் வரவைழக்கப்பட்டனர். அவர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மொத்தம் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். இந்த கொள்ளைகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வியாபாரி வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூரில் டி.டி.வி. தினகரன் குடும்பத்தினருக்கு ஆஸ்தான ஜோதிடரான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சரஸ்வதி நகரில் வசித்து வருபவர் சந்திரசேகர். பிரபல ஜோதிடர். இவர் பங்கு சந்தை புரோக்கராகவும் இருந்து வருகிறார்.

    சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் குடும்பத்தினருக்கு சந்திரசேகர் ஆஸ்தான ஜோதிடராகவும் இருந்து வந்தார்.

    சசிகலா, தினகரன் குடும்பத்தினர் இடம் வாங்குவது தொடர்பாகவும், புதிய தொழில் தொடங்குவது மற்றும் பல்வேறு சுபநிகழ்ச்சிகளின் பூஜைகள் தொடர்பாகவும் ஆலோசனை இவரிடம் கேட்டு வந்துள்ளனர்.

    சசிகலா குடும்பத்துடன் சந்திரசேகர் நெருக்கமாக இருந்து வந்தார். இவர் பிரபல சினிமா நட்சத்திரங்களுக்கும் ஜோதிடம் பார்த்து உள்ளார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோருக்கும் இவர் ஜோதிடம் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டுக்கு நேற்று மாலை 5 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் 5 பேர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சந்திரசேகர் வீட்டுக்குள் சென்று கதவுகளை பூட்டிக் கொண்டு அதிரடி சோதனை நடத்தினர்.

    ஜோதிடர் வீட்டின் தரை தளம் மற்றும் மேல்தளத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    சந்திரசேகரின் வீட்டையொட்டி உள்ள அவரது அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அங்கு கட்டுக்கட்டாக ஆவணங்கள் மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீடு பத்திரங்கள் ஆகியவை சிக்கியது.

    இந்த சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது. அதன் பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் புறப்பட்டு சென்றனர்.

    இன்று காலை 6 மணிக்கு மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் ஜோதிடர் சந்திர சேகர் வீட்டுக்கு வந்தனர். அப்போதும் வீட்டின் கதவுகளை பூட்டிக் கொண்டு அதிகாரிகள் தொடர்ந்து 2-வது நாளாக சோதனை நடத்தினார்கள்.
    மத்திய அரசை கண்டித்து கடலூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏழைகளின் வாழ்வை சூறையாடிய மத்திய அரசை கண்டித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு – லிபரேசன், சோ‌ஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு மணிவாசகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு தனவேல், சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கருப்பு பண மீட்பு, ஊழல் ஒழிப்பு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது போன்ற எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. பணம் மதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகிகள் மாதவன், சுப்புராயன், ராஜேஷ்கண்ணா, அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ஓராண்டுக்கு பிறகு இன்று காலை வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 60 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டது.

    கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் தண்ணீரின்றி வீராணம் ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கீழணையில் தேக்கி வைக்கப்பட்டது. அங்கிருந்து கடந்த 26-ந் தேதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கீழணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வந்ததாலும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்ததையொட்டி வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீராணம் ஏரியில் இருந்து சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வி.என்.எஸ்.மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அந்த தண்ணீர் வெள்ளாற்று வழியாக கடலில் சென்று கலந்தது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் வீராணம் ஏரி நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது. இன்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.05 அடி ஆகும். 45 அடிக்குமேல் வீராணம் ஏரியில் தண்ணீர் இருப்பு வைக்கக்கூடாது என்பதாலும், வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ்.மதகு வழியாக கூடுதல் தண்ணீர் திறந்து விடமுடியாத நிலை உள்ளதாலும், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஓராண்டுக்கு பிறகு இன்று காலை 6 மணிக்கு வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 60 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    வீராணம் ஏரிக்கு இன்று வினாடிக்கு 160 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வி.என்.எஸ். மதகு வழியாக 100 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    வீராணம் ஏரி, கடல்போல் காட்சி அளிக்கிறது. நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    காட்டுமன்னார் கோவில் அருகே நந்திமங்கலம் ஏரியில் பொது மக்களை பயமுறுத்திய வந்த முதலையை வனத்துறையினர் நேற்று பிடித்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வருகிறது. ஏரி, குளம் மற்றும் கண்மாய்களில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதில் ஏராளமான முதலைகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டுள்ளன. அவை பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது .

    இந்நிலையில் நேற்று காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள நெய்வாசல் கிராமகுளம் மற்றும் நந்திமங்கலம் ஏரியில் முதலை நடமாட்டம் இருப்பதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனக்காப்பாளர் கஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் நெய்வாசல் கிராமத்துக்கு விரைந்து சென்று முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் முதலையை பிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து வனத்துறையினர் அங்கிருந்து நந்தி மங்கலம் ஏரிக்கு சென்றனர். அங்கு நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ஏரியில் இருந்த 6 அடி நீளம், 100 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்தனர். பின்னர் அந்த முதலையை வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விட்டனர். மேலும் குளத்தில் கிராமத்தினர் யாரும் இறங்க வேண்டாம் என தாசில்தார் ஜெயந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பண்ருட்டியில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    இன்று காலை பண்ருட்டி கடலூர் ரோட்டில் உள்ள சாமியார் தர்கா பின்புறம் ஆர்.எஸ். மணிநகரில் வசித்து வரும் ஏழுமலை என்பவரது மனைவி வீரம்மாள் (63) வீட்டின் முன்பு துணி வைத்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து இவர் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த வீரம்மாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வீரம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அருகே ஓட்டேரி பாலம் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடலூருக்கு வர முடியாமல் தவித்தனர்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த ஓட்டேரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் கடலூருக்கு வந்து செல்வதற்கு கெடிலம் ஆற்றில் மணலால் ஏற்படுத்தப்பட்ட பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கெடிலம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் ஓட்டேரி பாலம் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடலூருக்கு வர முடியாமல் தவித்தனர்.

    பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறினர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மரத்தினால் தற்காலிக பாலத்தை ஏற்படுத்தினர்.

    இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமாகாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குடும்ப அரசியல் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஏழைகளின் கட்சி, ஏழைகள் இருக்கும் வரை அ.தி.மு.க. இருக்கும். அ.தி.மு.க.வின் ஆணிவேர் நான். ஆணிவேர் ஆழத்தில் தான் இருக்கும். சல்லி வேர் வெளியே தெரியும். தேவைபடும்போது மட்டும் ஆலோசனை சொல்வேன். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் சிறப்பாக நடைபெறுகிறது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். சசிகலா கட்சியில் உறுப்பினராகவே இல்லாத தனது அக்கா மகன் தினகரனை துணை பொது செயலாளராக நியமித்தது தவறு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பண்ருட்டி பயணியர் விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வில் தலைவராக வேண்டும் என்றால் கருணாநிதி குடும்பத்தில் தான் பிறக்க வேண்டும். கருணாநிதி செய்யும் குடும்ப அரசியலை தான் சசிகலாவும் செய்ய நினைத்தார். இப்படி குடும்ப அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது. அப்படி செய்யும் கட்சிகள் அழியும்.

    உதாரணத்திற்கு காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் குடும்ப அரசியலால் அழிந்து விட்டன. தமிழ்நாட்டில் இனி எந்த நடிகராலும் ஆட்சிக்கு வரமுடியாது. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதால் நடிகர்கள் கருத்துக்கள் கூறலாம். ஆனால், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திவிட முடியாது.

    மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கத்தான் வேண்டும். இது எம்.ஜி.ஆர். காலத்திலே கடைபிடிக்கப்பட்டது. தமிழக அமைச்சர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் மாற்றி மாற்றி பேசுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் வேறு எந்த நடிகராலும் ஆட்சிக்கு வரமுடியாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
    பண்ருட்டி:

    அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று பண்ருட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இப்போது நடைபெறுவது அ.தி.மு.க. தொண்டர்களின் ஆட்சியாகும். தேர்தல் ஆணையம் 6-ந் தேதி(இன்று) இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த அ.தி.மு.க.விற்கு வழங்கும். அ.தி.மு.க.வில் எல்லோரும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஜெயலலிதா மறைவையடுத்து, நாம் அனைவரும் சேர்ந்து சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக நியமித்தோம். எதிர்பாராத விதமாக அவருக்கு உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கியது.

    இந்த தண்டனை அவருக்கு கிடைத்ததும், சசிகலா என்ன செய்திருக்க வேண்டும், கட்சி பொறுப்பாளர்களையும், மூத்த தலைவர்களையும் அழைத்து பேசி கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது குறித்து ஆலோசித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாமல் கட்சியிலேயே இல்லாத அவரது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராக ஆக்கி உள்ளேன், அனைவரும் அவர் சொல்வதை கேட்டுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டார். இதை எப்படி ஏற்றுக்கொள்வது?, கட்சியை குடும்ப சொத்தாக ஆக்க முயன்றது தவறு. பொதுச்செயலாளர் பொறுப்பில் சசிகலா சரியாக செயல்பட்டு இருந்தால் அ.தி.மு.க.வில் பிரச்சினையே ஏற்பட்டு இருக்காது. தி.மு.க.வில் தான் கட்சி குடும்ப சொத்தாக ஆக்கப்பட்டுள்ளது.

    பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் திராவிடத்தை மக்களிடையே வளர்த்துள்ளனர். தமிழகத்தில் வேறு எந்த நடிகராலும் ஆட்சிக்கு வரமுடியாது. இங்கு தேசிய கட்சிகளால் ஆட்சி பிடிக்க முடியாது. தமிழக மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசுடன் நட்புடன் இருக்க வேண்டும். இது தவறு இல்லை.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தேர்தல் சமயத்தை தவிர மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் புரிதலுடன்தான் இருந்துள்ளார்கள்.

    தமிழ்நாட்டில் ஆட்சி நன்றாகத்தான் நடைபெற்று வருகிறது. மழைகாலத்தில் கத்தும் தவளைகளை போல் எதிர்க்கட்சிகள் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய அரசியல் அனுபவத்தால் எனக்கு தெரிந்த ஆலோசனையை கண்டிப்பாக தமிழக அரசுக்கு வழங்குவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடலூரில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 20 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் அடைந்தன.
    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி உள்ளது.

    கடலூரில் நேற்று காலை லேசான தூறல் மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 11 மணிக்கு மேல் திடீரென்று பலத்த மழை கொட்ட தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. அதன் பின்னர் விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    கடலூர் தேவனாம்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலா (வயது 35). இவர் நேற்று இரவு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் அவரது குடிசை வீடு சரிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாலா மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    வீட்டில் இருந்த கட்டில், டெலிவி‌ஷன் போன்ற பொருட்கள் சேதமடைந்தன.

    மஞ்சக்குப்பம், குண்டுஉப்பலவாடி, வண்ணாரப்பாளையம், பாரதிநகர் போன்ற பகுதிகளில் 100 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் பலரது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.

    வண்ணாரப்பாளையம் பாரதி நகரில் தெருவில் மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் அங்கேயே குளம்போல் தேங்கி காட்சி அளிக்கிறது.

    நேற்று இரவு பெய்த மழையில் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டில் புதுவை செல்லும் சாலையில் சுமார் 3 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சில வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று தற்காலிகமாக அந்த பள்ளத்தில் மணல் போட்டு சரி செய்தனர்.

    கடலூரில் தாழங்குடா, தேவனாம்பட்டினத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இன்று 5-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் ரூ.20 கோடிக்கு மீன் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    பண்ருட்டி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. சிதம்பரம் உசுப்பூர் இந்திரா நகர் போன்ற பகுதிகளில் வீடுகளை சுற்றி மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.

    இந்த மழையால் ஆயங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சுகாதார நிலையத்தின் நுழைவு வாயிலில் குளம் போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

    காட்டுமன்னார்கோவிலில் உள்ள கிழக்கு, மேற்கு முள்ளங்குடி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரை வழியாக மழைநீர் கசிந்து வருவதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெல்டா பகுதிகளில் உள்ள ஏரி-குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளன. காட்டு மன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, டி.நெடுஞ்சேரி போன்ற பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு இருந்த ஒருபோக சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    சிதம்பரம்- 50.50

    வானமாதேவி- 41.30

    பண்ருட்டி- 34.50

    விருத்தாசலம்- 49.40

    மே.மாத்தூர்- 22

    கடலூர் - 66.80

    மாவட்டத்தில் சராசரியாக 941.70 மி.மீ. மழை பெய்தது.

    இதேபோல் நேற்று காலை விழுப்புரத்தில் சாரல் மழை பெய்தது. மாலை 6 மணிக்கு திடீரென்று பலத்த மழை கொட்டியது.

    இதனால் விழுப்புரம் நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை மரக்காணம், கீழ்ப்பேட்டை, காளையாங்குப்பம், கூனிமேடு, ஓமிப்பேர், வன்னித்தேர், முன்னூர், எண்டியூர் போன்ற பகுதிகளில் நேற்று இரவு விடிய... விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் ஓமிப்பேர், நகர், கோட்டிக்குப்பம் போன்ற பகுதிகளில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    அங்கு வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். மரக்காணம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அந்த பகுதியை சுற்றி உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் விவசாயிகள் பயிரிட்டிருந்த மணிலாவும் இந்த மழையால் பாதிப்படைந்துள்ளது.

    மரக்காணம் கடற் பகுதியில் இன்று 5-வது நாளாக கடலில் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மரக்காணம் உப்பளம் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால் அங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம், வானூர், சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது.

    கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை விடிய... விடிய வெளுத்து வாங்கியது. இதனால் கள்ளக்குறிச்சி நகர் முழுவதும் வெள்ளக்காடானது. அங்குள்ள பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.

    உளுந்தூர்பேட்டை- 27.2

    கள்ளக்குறிச்சி- 9.4
    காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியை தூர் வாரியதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் திருமாவளவன் வீராணம் ஏரியை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாருவதற்காக தமிழக அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

    அதில் வீராணம் ஏரிக்கு மட்டும் 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி முறையாக தூர்வாரப்பட்டிருந்தால் தற்போது வீராணம் ஏரியில் சுமார் 1.4 டி.எம்.சி. தண்ணீர் இருந்து இருக்கும்.

    ஆனால் தற்போது 1 டி.எம்.சி. கூட தண்ணீர் இல்லை. தூர்வாரும் பணியில் நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை குடிநீருக்கு தண்ணீர் தேவைதான். இருப்பினும் வீரணம் ஏரியிலிருந்து சம்பா, குறுவை, சாகுபடி காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும்.

    மழை, வெள்ள பதிப்புகளுக்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2 நாள் மழைக்கே சென்னை அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிதி போதாது. கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.

    சென்னை மழை பாதிப்பில் மின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×