என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் புதுவையிலிருந்து சீர்காழிக்கு சாராயம் கடத்தி வந்த கார் ஆற்றில் பாய்ந்தது. இதில் காரை விரட்டி சென்று பிடிக்க முயன்ற 2 போலீசார் காயம் அடைந்தனர்.
    கடலூர்:

    புதுச்சேரியில் மது பாட்டில்கள் விலைகுறைவு மேலும் சாராயம் மற்றும் கள்ளும் விலைகுறைவு. இதனால் புதுவையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறது. இதை தடுக்க கடலூர் ஆல்பேட்டையில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை இன்ஸ்பெக்டர் மீனாள் தலைமையில் போலீசார்கள் ஸ்டாலின், சேரன், ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து கடலூருக்கு வேகமாக வந்த ஒரு குவாலிஸ் காரை போலீசார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் நிறுத்த முயன்றனர்.

    ஆனால் வந்த கார் நிற்காமல் சென்றது உடனே போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். மஞ்சக்குப்பம், பாரதிசாலை, புதுப்பாளையம் வழியாக அந்தகார் வேகமாக சென்றது அதனை விடாமல் போலீசார் விரட்டி சென்றனர்.

    அப்போது அந்த காரை ஒட்டி சென்ற நபர் திடீரென்று போலீசார் ஸ்டாலின், ரமேஷ் ஆகியோர் வந்த இருசக்கர வாகனத்தை இடித்தார். இதில் 2 போலீசார் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

    பின்னர் வேகமாக சென்ற கார் கடலூர் வன்னியர்பாளையம் என்ற இடத்தில் கெடிலம் ஆற்றில் பாய்ந்தது. போலீசார் அந்த காரை மடக்கிப்பிடித்தனர். காரை ஒட்டி சென்ற சீர்காழியை சேர்ந்த சண்முகம் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் காரில் 15 கேனில் இருந்த 600 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இந்த கார் சீர்காழிக்கு சாராயம் கடத்தி சென்றது தெரியவந்தது. ஆற்றில் பாய்ந்த காரை கிரேன் மூலம் போலீசார் மீட்டனர்.
    கடலூர் மவாட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வருகிறது. அதே வேளையில் இரவில் குளிர் வாட்டி எடுத்தது.

    இந்தநிலையில் வங்கக் கடலில் உருவான காற்றத் தழுத்த தாழ்வு நிலை வடதிசையில் நகர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் கடலூர் துறைமுகத்தில் நேற்று மாலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    கடலூரில் நேற்று மதியம் வெயில் கொளுத்தியது. மாலை 6.30 மணியளவில் திடீரென்று குளிர்ந்த காற்று வீசியது. சற்றுநேரத்தில் சூறாவளிக்காற்று வீசியது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடலூர் லாரன்ஸ்ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. அதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் கடந்த சென்றனர்.

    மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது. சுப்புராயலு செட்டித்தெரு போன்ற பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடலூர் நகரில் திடீர் மழை பெய்ததால் அலுவலக ஊழியர்கள், பயணிகள், சாலையோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

    பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

    நெல்லிக்குப்பத்தை அடுத்த சோழவல்லி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 52). கூலித்தொழிலாளி. இவர் சபரிமலைக்கு மாலை அணிவிப்பதற்காக நேற்று வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த துரைக்கண்ணு என்பவரின் கூரைவீட்டின் சுவர் திடீரென்று இடிந்து சுப்பிரமணி மீது விழுந்தது.

    இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    திட்டக்குடி பகுதியில் நேற்று மதியம் பலத்த காற்று வீசியது. இதில் ராமநத்தம் அருகே வாகையூர் அருகே திட்டக்குடி-ராமநத்தம் நெடுஞ்சாலையோரம் இருந்த புளியமரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பொது மக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரத்தை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சோழத்தரம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீர்பாட்சா, சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று இரவு சோழத்தரம் அருகேஉள்ள வடக்கு பாளையங்கோட்டையில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. போலீசார் லாரியை மறித்து குளத்தன்குறிச்சியை சேர்ந்த டிரைவர் தர்மராஜ்(வயது 26) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அனுமதி பெறாமல் லாரியில் மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் மணல் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் தர்மராஜை கைது செய்தனர்.
    கடலூர் மத்திய சிறைச்சாலையில் செல்போனை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறைச்சாலை நுழைவு வாயில் அருகே சிறை கைதிகள் மூலம் சிறை அங்காடி உணவகம், இனிப்பகம், துணி தேய்ப்பகம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    விழாவிற்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரன் தலைமை தாங்கி சிறை கைதிகள் அங்காடி உணவகம், இனிப்பகம், துணிதேய்ப்பகம் ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. பாஸ்கரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறை கைதிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் மன அழுத்தத்தை போக்க சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

    கடலூரில் இந்த கைதிகள் உணவகத்தில் அனைவரும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் சிறைச்சாலைகளில் கைதிகளிடம் செல்போன் பறிமுதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தலா ரூ.1 கோடி செலவில் செல்போனை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவி வைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை கோவை, புழல், வேலூர் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்து கடலூரில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை என்பதை சீர்திருத்த பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யும் அளவிற்கு கைதிகளுக்கு நன்னடத்தை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கடலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு பழனி வரவேற்றார். இதில் சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தினரை குறிவைத்து நடத்தும் வருமான வரிசோதனையால் எங்களை யாரும் திரட்ட முடியாது என விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கூறினார்.
    பண்ருட்டி:

    தினகரன் அணி கடலூர் மாவட்ட செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கலைச்செல்வன் பண்ருட்டியில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரை குறிவைத்து நடத்தும் வருமான வரி துறையினரின் சோதனை வன்மையாக கண்டிக்கதக்கது. நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்கிடைக்கும்.

    சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகளால் எங்களை மிரட்ட முடியாது. இந்த சொத்துக்கள் உழைப்பால் வந்த சொத்துக்கள்.

    இந்த வருமான வரிசோதனை நடவடிக்கை யாருடைய தூண்டுதலின் பேரில் மத்திய அரசு நடத்துகிறது என்று பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வந்த பிறகு அவர்களின் முகத்திரை கிழியும்.

    எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நாங்கள் கழகத்தின் சார்பில் நடத்துகிறோம். ஆனால் அவர்கள் அரசு சார்பில் நடத்துகின்றனர். வருமான வரி சோதனை நடவடிக்கைகள் ஆட்சியாளரின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காட்டுமன்னார்கோவிலில் வங்கி கடனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு நல்ல விலை வழங்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே சிதம்பரம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    21-ந் தேதி விவசாயிகள் ஒன்று திரண்டு டெல்லியில் போட்டி பாராளுமன்ற கூட்டமும், 22-ந் தேதி பெண்கள் கலந்து கொள்ளும் போட்டி பாராளுமன்ற கூட்டமும் நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    புதுவையை சேர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, நெய்வேலி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.

    டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தொழுதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் அந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வழிப்பறி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் கூறிய தகவலின் பேரில் கல்லூர் மாரியம்மன் கோவில் அருகே பதுங்கியிருந்த மேலும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அவர்கள் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 21), தவளக்குப்பம், தானம்பாளையம், நல்லவாடு சாலை, அபிஷேகபாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில், திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் உள்ள கொரக்கை, ஆலம்பாடி ரோடு, இடைச்செருவாய் ஏரிக்கரை, கோடங்குடி, அருகேரி, பெண்ணாடம் ஆகிய இடங்களில் தனியாக செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், மோட்டார் சைக்கிளில் சென்றும் நகையை வழிப்பறி செய்து சென்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    மேலும் சமீபத்தில் திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் இவர்கள் இத்தகைய வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 ¾ பவுன் நகை, 2 செல்போன், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் இருப்பதால் அவர்களை மிரட்டி பணிய வைப்பதற்காக இந்த சோதனை நடப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
    நெய்வேலி:

    நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலா குடும்பத்தினர் ஊழல் செய்திருந்தால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் தவறு இல்லை.

    ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மாநில கட்சிகள், ஒரு குறிப்பிட்ட சிலரை பணிய வைப்பதற்காக வருமான வரித்துறை சோதனையை நடத்துகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் இருப்பதால் அவர்களை மிரட்டி பணிய வைப்பதற்காக இந்த சோதனை நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது.

    தமிழக அரசு போக்குவரத்து கழக சொத்துக்கள், பணிமனை ஆகியவற்றை அடமானம் வைத்திருப்பதாக மதுரையை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமம் சட்டத்தின் கீழ் கேட்டதன் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையின் வெளிப்பாடே ஆகும்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்களான நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் பயிர் செய்திருந்த சம்பா பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும். போனஸ், இன்சன்டிவ் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டுவிட்டு, கடந்த கால வேலை நிறுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட 11 தொழிலாளர்களுக்கு அவர்கள் முன்பு என்ன பணி செய்தார்களோ அதே பணியை எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டும் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் வந்ததால் மனம் உடைந்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி அம்பிகா (வயது 41).

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அம்பிகா வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அம்பிகா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அம்பிகாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அம்பிகா வி‌ஷம் குடித்து இறந்தது தெரியவந்தது.
    ஸ்ரீமுஷ்ணத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழனியாண் டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகள் அம்சவேணி (வயது 17). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் அம்ச வேணியை தேடினர். எங்கும் அவர் இல்லை.

    இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் அம்சவேணியின் தந்தை வைத்தியநாதன் புகார் செய்தார். அதில் எனது மகளை ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் கடத்தி சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து மாயமான அம்சவேணியை தேடிவருகின்றனர்.

    வடலூரில் அன்னதான கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
    வடலூர்:

    வடலூரில் அன்னதான கூடத்தில் விறகு அடுப்பில் இருந்த தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பற்றி எரிந்தது. இதில் அருகில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

    கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த மேட்டுக்குப்பத்தில் மதுரையைச் சேர்ந்த நந்திசரவணன் என்பவர் அன்னதானம் வழங்குவதற்காக அன்னதான கூடம் அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வருகிறார். இங்கு வரும் ஏழை-எளிய மக்களுக்கு தினமும் 3 வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலை 3 மணிக்கு விறகு அடுப்பில் உணவு தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விறகு அடுப்பில் உள்ள தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பிடித்தது.

    அந்த தீ மளமளவென்று அனைத்து இடங்களிலும் பரவியது. அதனை அங்கிருந்த ஊழியர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதனால் ஊழியர்கள் அனைவரும் சமையல் கூடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

    தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த அந்த தீ அருகில் இருந்த கியாஸ் சிலிண்டரில் பிடித்ததால் அது வெடித்து சிதறியது.

    இது குறித்து தர்மசாலை நிர்வாகத்தினர் சேத்தியாத்தோப்பு மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் அன்னதான கூடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமடைந்து எலும்பு கூடாக மாறியது.

    அன்னதான கூடத்தில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், மேஜை- நாற்காலி, பாத்திரங்கள் உள்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
    வருமான வரித்துறையினர் சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணங்கள், சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தினகரனின் ஆஸ்தான ஜோதிடரை புதுவைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கடலூர், நவ. 12-

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். பிரபல ஜோதிடர். பங்கு சந்தை புரோக்கர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஜோதிடர் சந்திரசேகரை தினகரன் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத் தார்.

    சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனின் ஆஸ்தான ஜோதிடராக சந்திரசேகர் இருந்து வந்தார். சசிகலா குடும்பத்தினருக்கு ஜோதி டம் பார்ப்பது, பல்வேறு யாகங்களை செய்வது என்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தினகரன் மற்றும் அவரது நெருக்கமான உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின் றனர்.

    இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள ஜோதிடர் சந்திரசேகரின் வீட்டில் கடந்த 3 நாட்களாக வரு மானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத் தினர். அவரது வீடு மற்றும் வீட்டின் அருகில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை மேற்கொண் டனர். ஜோதிடர் சந்திரசேகர் பங்கு சந்தையில் அதிக அளவில் பணம் முதலீடு செய்துள்ளார். இந்த பணம் அவருக்கு வந் தது எப்படி?

    முக்கிய அரசியல் பிர முகர்களின் பணத்தை அவர் முதலீடு செய்துள்ளாரா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சந்திரசேகரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி னர்.

    மேலும் அவரது வீட்டை யும் அளவீடு செய்து குறிப்பு எடுத்தனர். வீட்டில் இருந்த கம்ப்யூட்டரின் மென்பொருட்களை நிபுணர்களின் உதவி யுடன் ஆய்வு செய்தனர்.

    ஜோதிடர் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் பங்கு சந்தையில் கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்ட பத்திரங்கள், சி.டி.க்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். இரவு 8.30 மணிக்கு சோதனை முடிந்தது.

    அதன் பின்னர் இரவு 8.40 மணிக்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் மேல் விசாரணை நடத்த ஜோதிடர் சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு காரில் வருமானவரித்துறை அதிகாரிகள் புதுவைக்கு அழைத்து சென்றனர்.

    புதுவையில் வைத்து அவர்களிடம் பங்குச்சந்தை முதலீடு மற்றும் சொத்து பத்திரங்கள் குறித்து வரு மானவரித்துறை அதி காரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதில் பல்வேறு திடுக் கிடும் தகவல்கள் கிடைத் துள்ளதாக கூறப்படுகிறது. * * * கிரீன் டீ எஸ்டேட் முன்பு திரண்டிருந்த தினகரன் ஆதரவாளர்கள். * * * ஜோதிடர் சந்திரசேகரை (வட்டமிட்டு காட்டப்பட்டவர்) வருமானவரித்துறை அதிகாரிகள் புதுவைக்கு அழைத்துச் சென்ற போது எடுத்த படம்.

    ×