என் மலர்
கோயம்புத்தூர்
- விஜயலட்சுமியை மிரட்டி பீரோவின் சாவியை எடுத்துக்கொண்டனர்.
- கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வடவள்ளி:
கோவை வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70). அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு, ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் கும்பல் பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.
அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, நீங்கள் யார் என்று கேட்டார். தொடர்ந்து அவர் கூச்சல் போட்டு பக்கத்து வீட்டினரை உதவிக்கு அழைக்க முயன்றார். அப்போது கொள்ளை கும்பல் அவரது வாயை பொத்தி அங்கிருந்த சேரில் கட்டிப்போட்டனர்.
பின்னர் விஜயலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி, 4 பவுன் தங்க வளையல்கள் மற்றும் 3/4 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பீரோவில் பணம், நகை எதுவும் உள்ளதா என்று கேட்டனர். மேலும் விஜயலட்சுமியை மிரட்டி பீரோவின் சாவியை எடுத்துக்கொண்டனர். பின்னர் கொள்ளையர்கள் பீரோவை திறந்து லாக்கரில் இருந்த பணம், நகைகளை ஓட்டுமொத்தமாக கொள்ளையடித்தனர். தொடர்ந்து அவர்கள் கொள்ளையடித்த பணம், நகைகளுடன் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்று விட்டனர்.
அதன்பிறகு மூதாட்டி விஜயலட்சுமி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் சேரில் கட்டப்பட்ட நிலையில் இருந்த விஜயலட்சுமியை விடுவித்து விசாரித்தனர். அப்போது தான் 2 பேர் கும்பல் வீட்டின் பின்பக்கவாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது.
இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பேரூர் சரக போலீஸ் டி.எஸ்.பி வெற்றிசெல்வன், தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து போலீசார் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர்.
இதில் அடையாளம் தெரியாத 2 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் டீச்சர்ஸ் காலனிக்கு வருவதும், பின்னர் விஜயலட்சுமி வீட்டின் பின்பக்க பகுதிக்கு நைசாக சுவரேறி குதித்து செல்வதும் தெரியவந்தது. அதாவது மூதாட்டி வீட்டு வளாகத்துக்குள் சுமார் 7.45 மணியளவில் புகுந்த கொள்ளை கும்பல் அங்கு சாவகாசமாக உட்கார்ந்து மதுஅருந்தியது. பின்னர் அவர்கள் மதுபோதையுடன் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த வீஜயலட்சுமி வீட்டுக்குள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.
ஆசிரியை வீட்டில் மொத்தம் 25 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- ஆண்டுதோறும் மாசி தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.
- தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.
கோவை:
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசித் தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும் வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.
8-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு உற்சவர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.
தேரோட்டத்தை முன்னிட்டு தேர்நிலை திடலான ராஜவீதியில் இன்று காலை முதலே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் தேரில் எழுந்தருளிய கோனியம்மனை வழிபட்டுச் சென்றனர். மதியத்துக்கு பிறகு ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரோட்டத்தை கண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கையாக ரத வீதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
- தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழக மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.
கோவை:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளல் பங்கேற்பதற்காக இன்று இரவு கோவை வருகிறார்.
கோவை விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை கோவை கொடிசியாவில் நடைபெறும் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழாவில் பங்கேற்று, ஆணைகளை வழங்குகிறார்.
நான் முதல்வன் வழிகாட்டும் இணைய முகப்பு, நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு, முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சி ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து அதே வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுததுறை சார்பில கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர், தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழக மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.
- பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். ’டோன்ட் கேர்’ என விட்டுவிடுங்கள்.
- மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்
"3% - 4% வாக்கு வங்கி வச்சிருக்க பாஜகவில் நான் சேருவதாகச் சொல்கிறார்கள். இதுக்குபோய் நான் பதில் சொல்லனுமா? Don't Care-னு விட்டுட்டு போயிடணும்" என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "பாஜக ஐடி விங் வெளியிடும் தகவல்களை எல்லாம் பார்க்க நேரமில்லை. தற்போது மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. உலக அளவில் அதிக தொண்டர்களைக் கொண்ட 7வது கட்சியாக அதிமுக உள்ளது. இந்த கட்சி நமது தாய்வீடு போல. சாதாரணமாக இருந்த நம்மை எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்த கட்சி அதிமுக. எல்லோரும் தாய் வீட்டிற்குத் தான் வருவார்கள். தாய் கழகத்தை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 'டோன்ட் கேர்' என விட்டுவிடுங்கள். கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை சொல்லியே வாக்காளர்களிடம் மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்போம். மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்
சிறப்பான முறையில் 4 ஆண்டுகள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றினார். எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வோம். கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்தார்.
- பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சூலூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக அவர் கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- எங்கள் மடியில் கனமில்லை. பா.ஜ.க. பிள்ளை பிடிப்பவர்கள் போல அலைகிறார்கள்.
- நான் இங்கு ராஜாவாக இருக்கிறேன். நான் ஏன் பா.ஜ.க.வில் போய் கூஜாவாக இருக்க வேண்டும்.
கோவை:
கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.
அந்த சமயத்தில் நான் ஓட்டல் அருகே உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். உடனே நான் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அவினாசி சாலை என்பது பா.ஜ.க.வினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒரு பொது வழிச்சாலை. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம்.
அ.தி.மு.க.வில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பா.ஜ.க.வில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்ததால் தான் பா.ஜ.க.வால் சட்டமன்றத் தேர்தலில் கோவையில் வெற்றி பெற முடிந்தது. நாங்கள் உயிரை கொடுத்து உழைத்து வெற்றி பெற வைத்தோம்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க.வில் இணைத்தது போல் இங்கும் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இது வடநாடு கிடையாது. இங்கிருந்து ஒரு தொண்டனை கூட பா.ஜ.க.வில் இணைக்க முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கோவையில் வெற்றி பெற்றால் நான் அரசியல் வாழ்வை விட்டு விலகி கொள்கிறேன். எங்களால் தான் பா.ஜ.க.வினர் வெற்றி பெற்றார்கள் என்பதை மறுக்க இயலாது. கள நிலவரம் எங்களுக்கு தான் தெரியும். தமிழகத்தில் கோவை அ.தி.மு.க.வின் கோட்டை. பா.ஜ.க.வால் தனித்து வெல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள்
கோவை:
கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழா பல்லடத்தில், பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார். இது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
"என் மண் என் மக்கள் யாத்திரை" தி.மு.க. அரசின் ஊழல்களையும், இயலாமையையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் யாத்திரையாகவும், பிரதமரின் 10 ஆண்டுகளாக சாதனைகளையும் எடுத்துச்செல்லும் யாத்திரையாக அமைந்தது. 234 தொகுதியிலும் யாத்திரை முடிந்துள்ளது.
தமிழகத்தில் கிராமம் தோறும் கஞ்சா ஊடுருவி இருக்கின்றது. இதற்கு உதாரணமாக தி.மு.க. நிர்வாகியே ரூ.3000 கோடி அளவிற்கு கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
இந்த போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கத்தை சொல்ல வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள். மேலும் யார் யார் வருவார்கள் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பாருங்கள்.
இன்று மாலை 5 மணிக்கு முக்கிய தகவல் வெளியாகும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, யார் வருகின்றார்கள் என்பதை கொஞ்சம் காத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.
- போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங்பவுடர் போன்ற தூய்மை பொருட்களால் அடிக்கடி தூய்மை பணியாளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருளாயி என்ற தூய்மை பணியாளர், ஆசிட் ஊற்றி ஆஸ்பத்திரி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார். எனினும் தொடர்ச்சியாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற தூய்மை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தூய்மை பணிகளுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடும் தங்களை இதுவரை ஆஸ்பத்திரி நிர்வாகம், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிவித்தனர். போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என பேசாமல் ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார்.
- பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே விடுவிடுத்துள்ளது.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தல் போல மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார்.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என பேசாமல் ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் பா.ஜ.க அரசின் தாரக மந்திரம். நிதி ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின் படியே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது.
பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே விடுவிடுத்துள்ளது.
இதுவரை ரூ.1000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை ஆராய வந்த மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும்.
மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது பாதிப்பு ஏற்படும் என கருதும் மாநிலங்கள் அவர்களின் கருத்துக்களை ஆதாரங்களுடன் முன்வைத்தால் பாதிப்புகளை தடுக்க முடியும் என்று தான் மத்திய நிதி மந்திரி கூறினார்.
ஆனால் இதனை வெள்ள நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது அவதூறு பரப்பி வருகிறார்.
ஊழல், குடும்ப ஆட்சியின் அவலங்களால் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
அதனை திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்ப, திரும்ப அவதூறு பரப்பி வருகிறார்.
தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பது வரும் மக்களவை தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பொங்கல் என்பது அறுவடைத் திருநாள்.
- சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருவேறு சாதனாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்மீக பாதையில் பயணிப்பவர்களுக்கு உத்தராயண காலம் என்பது மிகவும் முக்கியமான காலம் . பூமியின் வடக்கு பாகத்தில், சூரியன் பயணிக்கும் 6 மாத காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம்.
அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இது மிகச் சரியான நேரம். அதிலும் குறிப்பாக உத்தராயணத்தின் முதல் பாதி அதாவது மார்ச் மாதம் முடியும் வரை அதிகபட்சமான அருளைப் பெறுவதற்கு மிகச் சிறப்பான நேரம்.
தட்சிணாயணம் தூய்மைப்படுத்துவதற்கானது. உத்தராயணம் ஞானமடைதலுக்கானது. இது உள்வாங்குதலுக்கான காலம், அருளைப் பெறுவதற்கும் ஞானமடைவதற்கும் உகந்தது, மற்றும் உச்சபட்ச தன்மையை எட்டுவதற்கான காலம் இந்த நேரத்தில் விவசாய அறுவடையும் நடைபெறுகிறது.
பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். ஆகவே, இது உணவு தானியங்களை அறுவடை செய்வதற்கான காலம் மட்டுமன்றி, மனித ஆற்றலை அறுவடை செய்வதற்கும் உகந்த காலமாக இருக்கிறது. இப்படிப்பட்ட உத்தராயணத்தின் தொடக்கத்தில், விழிப்புணர்வுடன் அருளை உள்வாங்கும் தன்மையை மக்களிடம் அதிகரிப்பதற்காக ஈஷாவில் குறிப்பிட்ட ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது தான் சிவாங்கா சாதனா. சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருவேறு சாதனாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சாதானாவில் இருக்கும் பெண்கள் 21 நாட்கள் விரதமிருந்து, மாலை அணிந்து மிக விசேஷமான தைப்பூச தினத்தன்று தேவி லிங்கபைரவியை தரிசித்து, தொழுது விரதத்தை பூர்த்தி செய்வார்கள். ஆண்களோ, 42 நாட்கள் விரதமிருந்து மஹாசிவராத்திரி இரவில் வெள்ளியங்கிரி மலையில் யாத்திரை செய்து மறுநாள் காலை தியானலிங்க வளாகத்தில் விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த வாய்ப்பு அருள் தேடும் அனைவருக்கும்– ஈஷாவில் வகுப்பு செய்தோர், செய்யாதவர், எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.
சிவாங்கா சாதனாவின் அடுத்த தீட்சை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், info@shivanga.org என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம் மேலும் சிவாங்கா சாதனாவில் பங்கேற்ற தன்னார்வலர்கள் ஆதியோகி ரத யாத்திரையிலும் பங்கேற்று வருகின்றனர். ஆதியோகி ரதயாத்திரையானது தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. இது மார்ச் 8 ஆம் தேதி மஹாசிவராத்திரி அன்று கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியைவீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி
- தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
கோவையில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்ட்ரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தமிழக அணி 155 ரன்கள் முன்னிலையில் இருந்தது. தமிழக அணி சார்பில் பாபா இந்திரஜித் 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 155 ரன்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை சவுராஷ்டிரா அணி தொடங்கியது.
2-வது இன்னிங்க்சை தொடங்கிய சவுராஷ்டிரா வீரர்கள் தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சவுராஷ்டிரா அணி 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால தமிழக அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது
இப்போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 60 ரன்களையும் குவித்து அதிரடி காட்டிய தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் குண்டம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி கடந்த 22-ந் தேதி நள்ளிரவு நடந்தது.
நேற்று காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் தொடங்கியது. இதில் 41 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. குண்டத்தில் பூக்கள் தூவப்பட்டு வழிபாடு நடந்தது.
குண்டத்துக்கு தேவை யான விறகுகளை கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பல கிராமங்களில் இருந்து மக்கள் பால்குடும் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர். சிலர் தங்கள் கைகளில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குண்டம் இறங்கியது காண்போரை பரவசப்படுத்தியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு தேவையான உதவிகளை செய்தனர்.
குண்டம் திருவிழாவை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில், குண்டம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாசாணி அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவை, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனைமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனைமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குண்டம் திருவிழாவை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி காலை கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மகா முனி பூஜை நடக்கிறது. 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.






