search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை கட்டிப்போட்டு 25 பவுன் நகை கொள்ளை
    X

    கொள்ளையடித்த நபர்கள்

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை கட்டிப்போட்டு 25 பவுன் நகை கொள்ளை

    • விஜயலட்சுமியை மிரட்டி பீரோவின் சாவியை எடுத்துக்கொண்டனர்.
    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70). அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு, ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் கும்பல் பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.

    அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, நீங்கள் யார் என்று கேட்டார். தொடர்ந்து அவர் கூச்சல் போட்டு பக்கத்து வீட்டினரை உதவிக்கு அழைக்க முயன்றார். அப்போது கொள்ளை கும்பல் அவரது வாயை பொத்தி அங்கிருந்த சேரில் கட்டிப்போட்டனர்.

    பின்னர் விஜயலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி, 4 பவுன் தங்க வளையல்கள் மற்றும் 3/4 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பீரோவில் பணம், நகை எதுவும் உள்ளதா என்று கேட்டனர். மேலும் விஜயலட்சுமியை மிரட்டி பீரோவின் சாவியை எடுத்துக்கொண்டனர். பின்னர் கொள்ளையர்கள் பீரோவை திறந்து லாக்கரில் இருந்த பணம், நகைகளை ஓட்டுமொத்தமாக கொள்ளையடித்தனர். தொடர்ந்து அவர்கள் கொள்ளையடித்த பணம், நகைகளுடன் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்று விட்டனர்.

    அதன்பிறகு மூதாட்டி விஜயலட்சுமி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் சேரில் கட்டப்பட்ட நிலையில் இருந்த விஜயலட்சுமியை விடுவித்து விசாரித்தனர். அப்போது தான் 2 பேர் கும்பல் வீட்டின் பின்பக்கவாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது.

    இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பேரூர் சரக போலீஸ் டி.எஸ்.பி வெற்றிசெல்வன், தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து போலீசார் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர்.

    இதில் அடையாளம் தெரியாத 2 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் டீச்சர்ஸ் காலனிக்கு வருவதும், பின்னர் விஜயலட்சுமி வீட்டின் பின்பக்க பகுதிக்கு நைசாக சுவரேறி குதித்து செல்வதும் தெரியவந்தது. அதாவது மூதாட்டி வீட்டு வளாகத்துக்குள் சுமார் 7.45 மணியளவில் புகுந்த கொள்ளை கும்பல் அங்கு சாவகாசமாக உட்கார்ந்து மதுஅருந்தியது. பின்னர் அவர்கள் மதுபோதையுடன் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த வீஜயலட்சுமி வீட்டுக்குள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.

    ஆசிரியை வீட்டில் மொத்தம் 25 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×