என் மலர்tooltip icon

    சென்னை

    • முருக பக்த மாநாட்டுத் தீர்மானங்கள் அரசியலையே பேசுகின்றன.
    • திருப்பரங்குன்றத்தை முன் வைத்து மத வெறியைத் தூண்டுகின்றன.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க. தனது அரசியல் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளதை அங்கு நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் மற்றும் பேசப்பட்ட கருத்துகள் மூலம் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

    தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து பாஜக, அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பா.ஜ.க 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் முருகனைப் போற்றிப் பாடும் கந்த சஷ்டிக் கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும் பாஜகவும் போராட்டம் நடத்தினர்.

    அதன் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பா.ஜ.கவின் அப்போதைய மாநிலத்தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.

    திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய முருகனை காவல்துறை கைது செய்தது. இதுபோல, தினமும் வேல் யாத்திரை செய்ய முருகன் முயல்வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தது. முடிவில் 2020 டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினர். இதில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜுன் 10 ஆம் தேதி மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

    இது பாஜகவின் அரசியல் அழைப்பு என்பதை மக்கள் அறிவார்கள்.

    தமிழ் கடவுள் என்று தமிழர்கள் கொண்டாடும் குன்றுதோறாடும் குமரனுக்கு ஆண்டு முழுவதும் தைபூசம், விசாகம், சூரசம்ஹாரம், கந்த சஷ்டி திருவிழா, மற்றும் பங்குனி உத்திர விழா என பல விழாக்கள் தமிழ்நாட்டில் காலம் காலமாக நடக்கின்றன.

    இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மற்றும் பாஜகவும் முருகனுக்கு ஆபத்து என்ற பிம்பத்தைக் கட்டமைக்க விழைவதை தமிழ் மக்கள் புறந்தள்ளுவார்கள்.

    முருக பக்த மாநாட்டுத் தீர்மானங்கள் அரசியலையே பேசுகின்றன.

    திருப்பரங்குன்றத்தை முன் வைத்து மத வெறியைத் தூண்டுகின்றன.

    அறநிலையத் துறையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றத் தீர்மானம் பாஜகவின் அரசியல் கோரிக்கையாகும்.

    சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்கு கேட்டு நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானம் மாநாட்டின் நோக்கத்தைப் புலப்படுத்துகிறது.

    முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை இழிவு படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெற்றிருந்தது கடும் கண்டனத்துக்குரியது.

    இந்த மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது.

    மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. மதம் சார்ந்த செயல்பாடுகள் எப்போதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை.

    2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க. முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும்கூட, 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதே நிலை தான் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நடக்கும் என்றார்.

    • அப்பட்டமான விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
    • மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகில் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெரினா கடற்கரையில் இயக்கப்படும் மின்கல (பேட்டரி) ஊர்திகளை நிறுத்துவதற்கான கட்டிடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது தான் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னை மாநகராட்சியால் கோரப்பட்டுள்ளன. இத்தகைய அப்பட்டமான விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    அரசுத் துறைகளுக்காக ஏதேனும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், அதற்காக முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, குறைந்த தொகையில் தரமான கட்டுமானப் பணிகள் செய்து தருவதாக குறிப்பிட்டிருக்கும் தகுதியுடைய ஒப்பந்ததாரருக்குத் தான் குறிப்பிட்ட பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும். இது தான் விதியாகும்.

    சென்னை மெரினா கடற்கரையில் மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தலா 11 பேர் அமரும் வசதி கொண்ட இரு மின்கல ஊர்திகள் கடந்த சில நாள்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகில் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், ரூ.8.3 லட்சம் செலவில் மின்கல ஊர்திகளுக்கான வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த 20-ஆம் தேதி கோரப்பட்டுள்ளன. ஜூன் 23-ஆம் தேதி வரை பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் இன்று ஆய்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணி செய்வதற்கான ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாகன நிறுத்துமிடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக இப்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அதிகாரியிடம் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியாளர் கேட்ட போது, அவரால் பதில் கூற முடியவில்லை. மீண்டும், மீண்டும் வினா எழுப்பப்பட்ட நிலையில், புதிதாக மேலும் இரு மின்கல ஊர்திகள் இயக்கப்படவிருப்பதாகவும், அவற்றுக்கான வாகன நிறுத்தம் கட்டுவதற்காகவே இந்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பதாகவும் பதிலளித்துள்ளார் அந்த அதிகாரி.

    அப்படியானால், ஏற்கனவே கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம் எந்த அடிப்படையில் கட்டப்பட்டது? அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படாதது ஏன்? அதைக் கட்டியவர் யார்? என்பன உள்ளிட்ட எந்த வினாவுக்கும் அந்த அதிகாரியிடம் பதில் இல்லை. அதுபற்றி தாம் விசாரிப்பதாகக் கூறி அவர் நழுவிக் கொண்டதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரியின் விளக்கம் அனைத்தும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படாமல் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டதை சமாளிப்பதற்கானவை தான் என்பதில் ஐயமில்லை.

    பல லட்சம் பேர் கூடும் மெரினா கடற்கரையில் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள இடத்தில் மாநகராட்சிக்கு தெரியாமலேயே வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது என்பதும், அதை கட்டியவர்கள் யார்? என்பது தெரியாமலேயே அங்கு மின்கல ஊர்திகளை மாநகராட்சி பணியாளர்கள் நிறுத்துவதும் திராவிட மாடல் ஆட்சியின் வினோதங்கள். அடுத்த சில நாட்களில் மாநகராட்சிக்கு தெரியாமலேயே, வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டதற்கான தொகை யாருக்காவது வழங்கப்படும். அது திராவிட மாடல் அரசின் அதிசயமாக அமையும்.

    தமிழ்நாட்டில் பல லட்சங்கள் மதிப்பிலான பணிகளுக்கும், சில கோடிகள் மதிப்பிலான பணிகளுக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் முறைப்படி கோரப்படுவதற்கு முன்பே ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஒப்பந்தப்புள்ளி வழங்கும் நடைமுறைகள் முடிவதற்கு முன்பே வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வந்ததால் தான் இந்த முறைகேடு அம்பலத்திற்கு வந்துள்ளது. மொத்தத்தில் முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசு ஆகும். இந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு விரைவில் வரும் என்றார். 

    • இன்றும், நாளையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

    சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட 22 மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்றும், நாளையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவிற்கு சம்மன் அளிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு சென்றுள்ளதால் அவருக்கு சம்மன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன்படி சென்னையில் போதைப்பொருளை கடத்தி வந்து மொத்தமாக விற்பனை செய்பவர்களையும், அவர்களிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி சில்லறை விற்பனையில் ஈடுபடுவோரையும் போலீசார் தினமும் கைது செய்து வருகிறார்கள். போதைப்பொருளை பயன்படுத்துவோரையும் பிடித்து சிறையில் தள்ளிவருகிறார்கள்.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.

    இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது போதைப்பொருளை வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரீகாந்த் ஆன்-லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகர் ஸ்ரீகாந்த் யார் மூலம் போதைப்பொருளை வாங்கியள்ளார்? திரையுலகை சேர்ந்த எத்தனை பேர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவிற்கு சம்மன் அளிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு சென்றுள்ளதால் அவருக்கு சம்மன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், கால் டாக்சி மீது எதிர்திசையில் வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
    • மதுபோதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை சிட்லபாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    சென்னை அனகாபுத்தூர் அருகே பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் கர்ப்பிணி, அவரது தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், கால் டாக்சி மீது எதிர்திசையில் வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டாக்சியில் இருந்த தந்தை, கர்ப்பிணி மகள் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த பத்மநாபனின் மனைவி, ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கார் விபத்தில் உயிரிழந்தவர்கள் வேங்கைவாசல் மகராஜபுரத்தை சேர்ந்த பத்மநாபன் (58), கர்ப்பிணியாக இருந்த அவரது மகள் தீபிகா (21) என்பது தெரிய வந்துள்ளது.

    மதுபோதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை சிட்லபாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும், எதிர்திசையில் காரை ஓட்டி வந்ததும் விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • கடந்த 4 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,840-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,155-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 4 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840

    22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    19-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-06-2025- ஒரு கிராம் ரூ.120

    22-06-2025- ஒரு கிராம் ரூ.120

    21-06-2025- ஒரு கிராம் ரூ.120

    20-06-2025- ஒரு கிராம் ரூ.120

    19-06-2025- ஒரு கிராம் ரூ.122

    • வெளிநாடு செல்லமாட்டேன். வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
    • கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டபோது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமின் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    மேலும் வெளிநாடு செல்லமாட்டேன். வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார். இருப்பினும் ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுரை வழங்கினார்.

    இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.
    • டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் 4,778 சில்லறை விற்பனை கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு மது வகைகளுக்கு ஏற்ப, ஒரு பாட்டில்களுக்கு கூடுதலாக குறைந்தது ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

    கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பாக கேட்கும்போது மதுப்பிரியர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. அப்போது அவர்கள் பேசுவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.

    எனவே தமிழக அரசின் உத்தரவின் பேரில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், அனைத்து கடைகளிலும் மது பாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தான் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் ஏராளமான ஊழியர்களையும் அவர், இடைநீக்கம் செய்தார். ஆனாலும் இந்த பிரச்சினை தீரவில்லை. தொடர்ந்து மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை தான் வசூலிக்கபட்டது.

    எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க டாஸ்மாக் நிர்வாகம், டிஜிட்டல் பண பறிமாற்ற முறையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தியது. ஒவ்வொரு கடையாக கொண்டு வரப்பட்ட இந்த முறை தற்போது அனைத்து கடைகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு கடைகளிலும் 2 'ஸ்வைப்பிங்' மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன.

    ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.

    இதனால் ஏ.டி.எம். கார்டு, யு.பி.ஐ. பறிமாற்றம் மூலம் 2 சதவீதம் அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டது. இப்போது 20 சதவீதத்தை தாண்டி டிஜிட்டல் பறிமாற்றம் நடக்கிறது.

    இருந்தாலும்....? ஒரு பாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவது மட்டும் நிற்கவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முடிவு செய்தது.

    இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது. அதாவது சூப்பர் மாக்கெட்டுகளில் வாங்கிய பொருளை ஸ்கேன் செய்தால் அந்த பொருளின் விலை மட்டும் தான் 'ஸ்வைப்பிங்' மிஷினில் வரும். அந்த தொகையை மட்டும் தான் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும்.

    அதேபோல டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும். அந்த தொகையை மட்டும் தான் நாம் கார்டு மூலமாகவோ, யு.பி.ஐ. மூலமாகவோ செலுத்த முடியும். கூடுதல் தொகையை செலுத்த முடியாது.

    இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம், 'ஸ்வைப்பிங்' பணம் செலுத்தும் எந்திரத்தை வழங்கியுள்ள வங்கிகளிடம் ஆலோசனை நடத்தியது. சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வங்கி பிரதிநிதிகள், இன்னும் 10 தினங்களுக்குள், அதற்கான ஏற்பாட்டை செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

    இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • இன்றைய முக்கிய செய்திகள்...
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • ஸ்ரீநகர் காலணி, தெற்கு மாடதெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம்: சிட்லபாக்கம் ஆர்த்தி நகர், ஆனந்த புரம், வினோபா நகர், பேராசிரியர் காலணி, சிட்லபாக்கம் 1-வது மெயின் சாலை பகுதி, ராமசந்திரா ரோடு, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யாசாமி தெரு.

    அடையார்: மல்லிப்பூ நகர் 1 முதல் 3-வது மெயின் சாலை, காந்தி நகர் பகுதி.

    கோட்டூர்புரம்: ஸ்ரீநகர் காலணி, தெற்கு மாடதெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1 முதல் 6-வது தெரு.

    பல்லாவரம்: சாவடி தெரு, ஐடிஎஃப்சி காலணி, ஜிஎஸ்டி ரோடு, பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட், சைதன்யா பள்ளி அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, கடப்பேர் துர்கா நகர் குடியிருப்பு வாரியம், வினோபா நகர், பாரதிதாசன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, தாகூர் தெரு, காமராஜர் தெரு, வள்ளலார் தெரு, காந்தி தெரு, காமாட்சி தெரு, கட்டபொம்மன் நகர், கோகுல் தெரு, திருமுருகன் நகர், திருவள்ளுவர் நகர், வசந்தம் நகர், பங்காரு நகர், விபி வைத்தியலிங்கம் சாலை, ஆர்கேவி அவென்யூ, அருள் முருகன் நகர். 

    • 5 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
    • கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

    பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுத்தன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று காலை அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்பாடு உறுதியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    மேலும், கோகைன் போதைப்பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

    பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.

    மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஸ்ரீகாந்த் ஆஜர் படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    • கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியது.
    • முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    இதனால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின.

    ×