என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார்.
    • எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    கோவை:

    பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.-பா.ஜ.க. உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இன்று வழிபாடு நடத்தினோம். எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர். அ.தி.மு.க. கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பா.ஜ.க. இதுவரை அழுத்தம் கொடுக்கவில்லை.

    கூட்டணியில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை உறுதி செய்த பின் அறிவிப்போம். இரட்டை எண்ணிக்கையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் செல்வார்கள்.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள். முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி வந்துள்ளார். பொங்கல் பண்டிகை முடியட்டும். மேலும் பலர் வருவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்.

    அமலாக்கத்துறை, வருமானத்துறையை பயன்படுத்துவது போல் சென்சார் போர்டையும் தற்போது மத்திய அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படியானால் பராசக்தி படம் ரீலிசாகியது முதலமைச்சருக்கு தெரியாதா? பராசக்தி படத்தை எப்படி சென்சார்டு போர்டு அனுமதித்தார்கள். பராசக்தி யாருடைய படம். படத்தில் அண்ணாவின் வசனங்கள் துண்டிக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. நான் படம் பார்க்கவில்லை.

    தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஏற்கனவே சென்னைக்கு வந்து சென்றுள்ளார். முதன்முறையாக தமிழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். கொங்கு மண்டலத்தை மட்டும் பா.ஜ.க. குறிவைத்து பணியாற்றவில்லை. தமிழகம் முழுவதும் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என்றார். 

    • பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.
    • விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி உள்ளது. 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே அதிரடியாக களமிறங்கினார். அந்த தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்ற நிலையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். முதல் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளை பெற்ற விஜயகாந்த் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றார்.

    இதனை அடுத்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.

    இதன் பிறகு நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் தே.மு.தி.க. தோல்வியையே தழுவியுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தே.மு.தி.க. எந்த தேர்தலிலும் வெற்றி பெறாத நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை வெற்றி பாதைக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வியூகம் வகுத்துள்ளார்.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவியை அளிப்பதாக அ.தி.மு.க. உறுதி அளித்து இருந்தது.

    ஆனால் சமீபத்தில் மேல்சபை எம்.பி.க்கள் தேர்வான போது தே.மு.தி.க.வை அந்த கட்சி புறக்கணித்து இருந்தது. அ.தி.மு.க.வினர் இருவரை மேல்சபை எம்.பி.யாக்கி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

    இதனால் கோபமடைந்த தே.மு.தி.க. அதுபற்றி கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியது. இதற்கடுத்து இந்த மாதம் மேல்சபை எம்.பி. பதவி தே.மு.தி.க.வுக்கு அளிக்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தே.மு.தி.க. கூட்டணியை தக்க வைப்பதற்காகவே அ.தி.மு.க. இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

    இதுபோன்ற சூழலில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி நேற்று நடைபெற்ற மாநாட்டில் பிரேமலதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரேமலதாவோ யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்துவிட்டார்.

    இது பிரேமலதாவின் தேர்தல் வியூகத்தை காட்டுவதாகவே அந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் ஏற்கனவே உள்ள கூட்டணியில் நீடிக்க போகிறது? என்பது இன்னும் முடிவாகாத நிலையில் நாங்கள் மட்டும் எதற்காக அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்களது ஆதரவை பெற்றுவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். எனவே வருகிற தேர்தலில் அதற்கெல்லாம் இடம் கொடுக்காத அளவுக்கு முடிவெடுக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க.வினரின் எண்ணமாக உள்ளது.

    எனவே மேல்சபை எம்.பி. பதவியுடன் இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கும் கட்சியோடு கூட்டணி அமைக்கலாம் என்பதே அந்த கட்சியினரின் விருப்பமாக உள்ளது. இதனையே தே.மு.தி.க. சார்பில் நிபந்தனையாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியை முறிக்க வேண்டாம் என்றும் பலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எல்லாம் கருத்தில் வைத்தே தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக காய் நகர்த்தி வருகிறது, இதற்கிடையே தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதையடுத்து விரைவில் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. தலைமை பேச்சு நடத்தும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

    தி.மு.க. தரப்பிலும் மேல்சபை எம்.பி. பதவி தருவதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தே.மு.தி.க.- அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதா இல்லை தி.மு.க. அணியில் இணைவதா என்கிற குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தை பிறந்த பிறகு கூட்டணி தொடர்பான அதிரடி அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பா.ம.க.வுக்கு 17 அல்லது 18 தொகுதிகளும் ஒரு மேல்சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதியை கேட்டால் சில தொகுதிகள் மாறவும் வாய்ப்பு உண்டு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் பா.ம.க. வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    பா.ம.க.வுக்கு 17 அல்லது 18 தொகுதிகளும் ஒரு மேல்சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பா.ம.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் பற்றிய உத்தேச பட்டியலும் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

    திருப்போரூர், காஞ்சிபுரம், செஞ்சி, விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, விருத்தாச்சலம், நெய்வேலி, கும்மிடிப்பூண்டி, சோளிங்கர், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, பெண்ணாத்தூர், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, வானூர், பூம்புகார்.

    இதில் கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதியை கேட்டால் சில தொகுதிகள் மாறவும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.

    • சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அ.தி.மு.க. - பா.ஜ.க. தொகுதி பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் பா.ஜ.க. - அ.தி.மு.க. தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    * பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஆலோசனை நடத்தினோம்.

    * அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

    * பா.ஜ.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம், போட்டியிட விருப்பமான தொகுதிகள், அமைச்சரவையில் பங்கா? போன்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார்.

    • சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
    • அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

    அ.தி.மு.க. - பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினர்.

    2 தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

    அ.தி.மு.க. உடனான கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை காரணம் காட்டி அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நாளை காலை 9 மணிக்கு இபிஎஸ்-ஐ சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    • ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிப்பு.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நாளை காலை 9 மணிக்கு இபிஎஸ்-ஐ சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

    • தணிக்கை விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய்யே வாய்திறக்கவில்லை.
    • மாபெரும் தலைவர் மோடி.

    விஜய்யின் ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழ் விவகாரம், சினிமாவைத்தாண்டி அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அரசியல் உள்நோக்கத்திற்காகத்தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது என பலதரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய்யே வாய்திறக்கவில்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ சம்மன், தற்போது தணிக்கை சான்றிதழ் இழுபறி இவையெல்லாம் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக கொடுக்கப்படும் நெருக்கடிகளா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,

    "எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. அப்படி பார்த்தால் கட்சி ஆரம்பித்திருக்கிறார்; வேறு வழிகளில் நெருக்கடி கொடுக்கலாம். ஒரு படத்தை தடைசெய்வதால் நெருக்கடி கொடுத்துவிட முடியுமா? இதற்கெல்லாம் அரசியல் சாயம் பூசினால்?. மாபெரும் தலைவர் மோடி. கூட்டணிக்குள் யாரையும் வற்புறுத்தி சேர்க்கமுடியாது. மனமுவந்து வரவேண்டும். தொண்டர்கள், தலைவர்கள் விரும்பி இணைந்து வந்தால்தான் கூட்டணி. கூட்டணிக்காக இப்படி செய்வார்கள் என கொச்சைப்படுத்தக்கூடாது." என தெரிவித்துள்ளார். 


    • ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
    • அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் மதுரையில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப்பணி நடைபெற்று திறந்து வைக்கப்பட்டதால், இணைப்புகள் சரியாக கொடுக்கப்படாமல் ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறுகிறது.

    முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்தும் என கூறுகிறார். போதைக் கலாச்சாரம் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. இப்படி அவர்கள் கூட்டணியில் உள்ள வைகோவே சொல்லி இருக்கிறார்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகள் குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்கிறார். மக்கள் இந்த ஆட்சியை அகற்ற ஆர்வமோடு இருக்கிறார்கள்.

    125 நாட்களாக வேலை உறுதி திட்டத்தை உயர்த்திக் கொடுத்த அமித்ஷாவிற்கு நன்றி சொல்லத்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம். அதை விட்டு விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி என்பது தவறு. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.

    கூட்டணிப் பலத்தில் தான் தி.மு.க. இருக்கிறது. எங்கள் அம்மா போன்று யாருடைய கூட்டணியையும் எதிர்பாராமல் தனித்துப் போட்டி போட மு.க.ஸ்டாலின் தயாரா?

    ரூ. 3 ஆயிரம் கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் தி.மு.க. வெற்றிப் பெற முடியாது.

    அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது. முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அதனால் தான் திருப்பரங்குன்றம் அருகே முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும்.

    அமித்ஷா மாபெரும் தலைவர். விஜய் கட்சி மற்றும் அவரது படத்திற்கு நெருக்கடி கொடுப்பது போன்ற வேலை எல்லாம் அவர் செய்ய மாட்டார் என்றார். 

    • கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால் தான் விசாரிக்க சி.பி.ஐ. அழைத்துள்ளது.
    • தமிழகத்தை பொருத்தமட்டில் தனி கட்சியின் பெரும்பான்மை ஆட்சி தான் நடைபெறும்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே புல்லலக்கோட்டை கிராமத்தில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார். அ.தி.மு.க.வில் நிர்வாகத்தில் உள்ளவர்கள், மக்களோடு செயலாற்றி வரும் நிர்வாகிகள் யாரும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். கேப்டன் விஜயகாந்த் முடிவை பின்பற்றி தே.மு.தி.க. அ.தி.மு.க. பக்கம் தான் வருவார்கள். தான் இருக்கும் வரை தி.மு.க.வை எதிர்த்தவர் விஜயகாந்த். பிரேமலதா தனது கணவரின் கொள்கைக்கு எதிராகவோ தனது இயக்கத்தை நிறுவிய விஜயகாந்த் எண்ணங்களுக்கு எதிராகவோ செல்ல மாட்டார்.

    கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால் தான் விசாரிக்க சி.பி.ஐ. அழைத்துள்ளது.

    தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து மோதல் உள்ளது. ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளார்.

    தி.மு.க. கூட்டணி பிளவு ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் தனி கட்சியின் பெரும்பான்மை ஆட்சி தான் நடைபெறும். அதைத்தான் பொதுமக்கள் விரும்புவார்கள். அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதற்கான நடவடிக்கைகளில் எடப்பாடியார் இறங்குவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை.
    • திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    * அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினேன்.

    * தமிழகத்தில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலுவாக கூட்டணி அமைத்துள்ளோம்.

    * தி.மு.க. வை வீழ்த்தி 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    * தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது.

    * மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமல்படுத்துகின்றனர்.

    * தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை.

    * பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு கிடையாது.

    * திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பல மடங்கு அதிகரித்து விட்டது.

    * திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.

    * அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

    * ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிமுகவில் இணைக்கும் பேச்சிற்கு இடமில்லை.

    * சசிகலா, ஓபிஎஸ் இல்லாமலே அதிமுக வலுவாக உள்ளது.

    * அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக ஒரு போதும் தலையிடாது.

    * அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இணைந்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும்.

    * தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் அதிமுக தலைமையில் தான் ஆட்சி.

    * தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்பதில் மாற்றமில்லை.

    * யாருடன் பேச்சுவார்த்தை என்ற கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க முடியாது.

    * பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் ஏற்பட்டதும் முறையாக அறிவிக்கப்படும் என்றார். 



    • அஇஅதிமுக- பாமக கூட்டணி, தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி!
    • நானும், மருத்துவர் அன்புமணி அவர்களும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்!

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்நிலையில், அதிமுக - பாமக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    அஇஅதிமுக- பாமக இயற்கையான கூட்டணி; தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி!

    அந்த அடிப்படையில், இன்றைய தினம், நானும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்!

    மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் அஇஅதிமுகநல்லாட்சியினை அமைப்போம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    • கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இன்று காலை அ.தி.மு.க- பா.ம.க. இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் பா.ம.க. ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் நடைபெற உள்ள தாமரை மகளிர் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளதாகவும், கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கூட்டணியை உறுதி செய்யும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் வருகைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க பா.ஜ.க. தீவிர பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இன்று அதிமுக- பாமக கூட்டணி உறுதியாகி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. 

    ×