என் மலர்
சென்னை
- மனு கொடுக்க வந்த முதியவரை அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது.
- கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தை அடுத்த சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், தமது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து வினா எழுப்பிய முதியவர் ஒருவரை அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரியும், காவல் உதவி ஆய்வாளரும் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். மனிதத் தன்மையற்ற இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துப்பேட்டை கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற முதியவர் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். ஆனால், பல நாள்களாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்ற முதியவர் திருவேங்கடம், அங்கிருந்த அதிகாரிகளை அணுகி தமது மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று வினவியுள்ளார். மேலும் தமது மனுவை பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும்படி கோரியுள்ளார்.
இதை சகித்துக் கொள்ள முடியாத கிராம நிர்வாக அதிகாரியும், அவருக்கு துணையாக வந்த அதிகாரிகளும் பெரியவர் வேங்கடபதியை அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளரும் அந்த முதியவரை மார்பில் குத்தி விரட்டியடித்துள்ளார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மனு கொடுக்க வந்த முதியவரை அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை 35 லட்சம் பேர் மனு அளித்துள்ள நிலையில், அவர்களில் 90 விழுக்காட்டிற்கும் கூடுதலான மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், முகாம்கள் தொடங்கி 50 நாள்களாகியும் இதுவரை ஒருவருக்குக் கூட உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அப்பட்டமான படுதோல்வி என்பதற்கு இவை தான் சான்றாகும்.
மனு மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்று எவரேனும் கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தானே தவிர, கேள்வி கேட்பவர்களை அடித்து உதைப்பதற்கான திட்டம் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அதிகாரத் திமிருடன் மக்களை அவமதிப்பவர்களுக்கு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என கூறியுள்ளார்.
- இதுவரை இல்லாத உச்சமாக நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனையானது. வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,795-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.78,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440
02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800
01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640
31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960
30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-09-2025- ஒரு கிராம் ரூ.137
02-09-2025- ஒரு கிராம் ரூ.137
01-09-2025- ஒரு கிராம் ரூ.136
31-08-2025- ஒரு கிராம் ரூ.134
30-08-2025- ஒரு கிராம் ரூ.134
- டிக்கெட் வருமானம், பஸ் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை மாநில அரசு முழுமையாக எடுத்துக்கொள்ளலாம்.
- மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்னை:
மத்திய அரசு நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் 'பி.எம் மின்சார டிரைவ்' மற்றும் பி.எம். மின்சார பஸ் சேவை என்ற 2 திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் பி.எம். மின்சார பஸ் சேவை திட்டம் 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதற்காக மத்திய அரசு ரூ.57 ஆயிரத்து 613 கோடி ஒதுக்கியது. 2 பிரிவுகளாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் ஒரு பிரிவாக 10 ஆயிரம் மின்சார பஸ்கள் 169 நகரங்களில் இயக்கப்படும்.
40 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான மக்கள் தொகை நகரங்களுக்கு தலா 150 பஸ்களும், 5 லட்சம் முதல் 20 லட்சத்திற்கு தலா 100 பஸ்களும், 5 லட்சத்திற்கு கீழ் உள்ள நகரங்களுக்கு தலா 50 பஸ்களும் வழங்கப்படும்.
இந்த மின்சார பஸ்களை நிதி கொடுத்து வாங்கி பராமரித்து இயக்கும் பொறுப்பு தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. டெண்டர் மூலம் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2037-ம் ஆண்டு வரை அவர்கள் அந்த பஸ்களை இயக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு கட்டணம் என்ற அடிப்படையில் அந்த பஸ்கள் இயக்கப்படும் தூரத்திற்கு மத்திய அரசு பணம் வழங்கி விடும். அதே நேரத்தில் டிக்கெட் வருமானம், பஸ் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை மாநில அரசு முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சார்ஜிங் நிலையம் அமைப்பது போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு மாநில அரசு தான் பொறுப்பு. இருந்தாலும், அதற்கான நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கும்.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு 7 ஆயிரத்து 293 பஸ்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் 6,518 பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர சார்ஜிங் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.437 கோடி விடுவித்துள்ளது.
மத்திய அரசு, இந்த பஸ் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 நகரங்களை தேர்வு செய்துள்ளது. அந்த அடிப்படையில் கோவைக்கு 150 மின்சார பஸ்கள், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியவற்றுக்கு தலா 100 பஸ்களும், அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகியவற்றுக்கு தலா 50 பஸ்களும் என மொத்தம் 900 மின்சார பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு, பிரதமரின் இந்த மின்சார பஸ்களை தங்களது மாநிலத்திற்கு வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறும் போது, பிரதமர் மின்சார பஸ்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 9 சதவீத பஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால் தமிழக அரசுக்கு இந்த திட்டத்தின் கீழ் பஸ்கள் பெற விருப்பம் இல்லாததால் அவர்களிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றார்.
ஏன் வேண்டாம்? அமைச்சர் விளக்கம்
பி.எம் மின்சார டிரைவ் திட்டத்தில் 40 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதாராபாத், அகமதாபாத், கொல்கத்தா, சூரத், புனே ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் இந்த நகரங்களில் 14 ஆயிரம் மின்சார பஸ்கள் வாங்க மத்திய அரசு நிதி உதவி வழங்கும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் சென்னைக்கு மின்சார பஸ்கள் பெற வேண்டாம் என்று தமிழக அரசு முடிவு செய்து விட்டது.
இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்கள் அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தினால் நிதி சரியாக வராது. பெயர்கள் மட்டும் அவர்களுடையதாக இருக்கும். எனவே தான் தமிழக அரசு சுயமாகவே மின்சார பஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றார்.
- சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
- வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்த அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.
சென்னை:
பூமியின் நிழலானது சந்திரனின் மேல் விழும் நிகழ்வைத்தான் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். அதாவது, சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போதுதான் இந்த நிகழ்வு சாத்தியம் ஆகிறது. இந்த சந்திர கிரகணம், ஒரு முழு நிலவு நாளில் அதாவது, பவுர்ணமி தினத்தன்று மட்டுமே நிகழும்.
அதன்படி, வருகிற 7-ந் தேதி இந்த நிகழ்வு நடக்கிறது. அன்றையதினம் இரவு 9.57 மணிக்கு பூமியின் நிழலால் சந்திரன் மறைய தொடங்கும். இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை அதாவது, 82 நிமிடங்கள் நீடிக்கும். பின்னர் அதிகாலை 1.27 மணியில் இருந்து சந்திரன் பூமியின் நிழலை விட்டு வெளியேறிவிடும். சந்திரன் முழு கிரகணம் அடையும்போது, வானத்தில் அது மறைந்துவிடாது. மாறாக அந்த நேரத்தில் அடர் சிவப்பு நிறத்தில் மிக அழகாக தோன்றும்.
அவ்வாறு சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதாவது, சூரியனிடம் இருந்து வரும் ஒளி கதிர்களான சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா ஆகிய 7 வண்ணங்களில் சிவப்பு நிறம் ஒளி சிதறல் குறைவாகவும், அதே நேரத்தில் அதனுடைய அலை நீளம் அதிகமாகவும் இருக்கும். இது பூமியின் வளிமண்டலத்தின் மீது மோதும்போது ஒளிவிலகல் அடைகிறது. இதன் காரணமாகவே சந்திரன் சிவப்பு நிறமாக மாறுகிறது.
அந்த வகையில் 7-ந் தேதி இரவு 9.57 மணிக்கு பகுதி கிரகணம் தொடங்குகிறது. முழு கிரகணம் 11.01 மணிக்கு ஆரம்பிக்கிறது. முழு கிரகணத்தை நள்ளிரவு 11.42 மணிக்கு பார்க்க முடியும். அதன் பின்னர், 12.23 மணிக்கு முழு கிரகணமும், அதிகாலை 1.27 மணிக்கு பகுதி கிரகணமும் முடிந்து, அதிகாலை 2.25 மணிக்கு புறநிழல் பகுதியைவிட்டு வெளியேறும். வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்த அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.
இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், இதை பார்ப்பதால் எந்த தீங்கும் ஏற்படாது என்றும், இந்த இயற்கையான, அழகான, அற்புதமான நிகழ்வை கண்டு ரசிக்கலாம் என்றும் அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
- நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக தகவல்.
- நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி, சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில்," நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 28,250 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- மிலாடி நபி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
- பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முகமது நபியின் பிறந்த நாளான மிலாடி நபி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
03/09/2025 (புதன்கிழமை) 04/09/2025 (வியாழக்கிழமை முகூர்த்தம்). 05/09/2025 (வெள்ளிக்கிழமை மீலாடி நபி) மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 06/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 360 பேருந்துகளும்.
04/09/2025 (வியாழக்கிழமை) அன்று 710 பேருந்துகளும், 05/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 405 பேருந்துகளும் மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 80 பேருந்துகளும், 04/09/2025 (வியாழக்கிழமை) மற்றும் 05/09/2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் 105 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 03/09/2025 மற்றும் 04/09/2025 ஆகிய நாட்களில் 25 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திலையில், 03/09/2025 அன்று 17,832 பயணிகளும், 04/09/2025 அன்று 23,032 பயணிகளும் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,271 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7,317 பயணிகளும் ஞாயிறு அன்று 20,740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.trstein மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
- 13 ரெயில் நிலையங்களுடன் சுமார் 15 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
13 ரெயில் நிலையங்களுடன் சுமார் 15 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளது.
- ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது.
- 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் மாநகராட்சி சார்பில் புதிய பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் நொளம்பூர்- மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே சன்னதி முதல் குறுக்கு தெருவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த பணி சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது. 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை அடுத்த வாரம் திறந்து வைக்கிறார்.
இந்த பாலம் நொளம்பூர், மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், பாடி, முகப் பேர், அயப்பாக்கம், திரு வேற்காடு, அடையாளம் பட்டு, அத்திப்பட்டு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மிக முக்கிய போக்குவரத்து நிறைந்த பாலம் ஆகும்.
அங்கு சிறு பாலங்கள் கட்டப்பட்டு இருந்ததால் மழைக்காலத்தில் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து விடும். அதனால் மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் அப்பகுதி மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடும்.
நீண்ட காலமாக மக்கள் புதிய பாலம் கட்டக்கோரி போராடி வந்த நிலையில் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு விடியல் கிடைத்து உள்ளது.
இதுகுறித்து வளரசவாக்கம் மண்டல குழு தலைவர் வி.ராஜன் கூறியதாவது:-
புதிய பாலம் என்பது 143, 144 வார்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்பெனி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பயன் அடைவார்கள்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் கூவம் ஆற்றின் குறுக்கே ஏற்படும் வெள்ளப் பாதிப்பில் இருந்து புதிய பாலம் மக்களை பாதுகாக்கும். போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சீராகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., காரம்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பாலம் அர்ப்ப ணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா?
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு இண்டி கூட்டணியைச் சேர்ந்த RJD கட்சியினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இண்டி கூட்டணியினர் பிஹாரில் நடத்திய கூட்டத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைப் பற்றியும் அவரது தாயார் குறித்தும் முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒருவரை அரசியல் ரீதியாகத் தாக்க அவரது அன்னையை இழிவுபடுத்தி ஆனந்தமடையும் குரூரப் போக்கு எவ்வளவு கொடூரமானது? பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா என்ன?
பூவலகத்திலிருந்து மறைந்தவர்களைத் தெய்வமாகப் பார்க்கும் வழக்கம் நம் தாய்த்திருநாட்டில் தொன்று தொட்டு இருக்கும் வேளையில், மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா? வயதான பெண்மணியைத் தங்கள் கட்சிக் கூட்டத்தில் இழிவுபடுத்தியதை எதிர்த்துக் குரல் கொடுக்காத இந்த இண்டி கூட்டணியினர் தான் நம் இந்திய மகள்களையும் பாரதத் தாயையும் காக்கப் போகிறார்களா?
தற்போது வரை இதற்கு இண்டி கூட்டணித் தலைவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்காதது, பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களை இழிவுபடுத்துவதில் தவறில்லை என்ற எண்ணம் அவர்கள் மனதில் உள்ளது என்பதைத் தான் இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.
மாண்புமிகு பிரதமரின் மறைந்த தாயாரை அவமதித்த இச்சம்பவத்திற்கு உடனடியாக இண்டி கூட்டணித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து பாரதத்தின் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுகவினரின் ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
- திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பழனி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் ஸ்வானிதி மற்றும் முத்ரா கடனுதவிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்து கொடுக்க முயன்ற திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார் பழனி திமுக நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி.
அதிலும், "எந்த கவர்மெண்ட் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதோ அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்" என்ற தொனியில் அவர் பேசியிருப்பது அதிகார மமதையின் வெளிப்பாடு. திமுகவினரின் இந்த ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
மக்களுக்கு பலனளிக்கும் மத்திய அரசின் நலத்திட்டங்களை ஆளும் அரசும் செயல்படுத்த மாட்டார்கள், அவற்றை மக்களிடையே கொண்டு சேர்ப்பவர்களையும் விட மாட்டார்கள் என்றால் இது என்ன விதமான மனநிலை? ஒருவேளை மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து விட்டால் தங்களின் மடைமாற்று நாடகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறதா? திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா?
ஆனால், திமுகவின் அத்தனைத் தடைகளையும் தகர்த்து, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்குக் கிடைப்பதை
பாஜக உறுதி செய்யும். அடக்குமுறைகளாலும், அதிகாரத் துஷ்பிரயோகத்தாலும் எங்களின் மக்கள் பணியைத் திமுகவால் ஒடுக்கிவிட முடியாது!
மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பவர்களையும், நலிவடைந்தோரின் நலன் விரும்பிகளையும் கண்டால் திமுகவிற்கு அப்படியென்ன ஒவ்வாமை என்பது புரியவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து இன்று (03-09-2025) காலை 05.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி, காலை 08.30 மணி அளவில், வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை முதல் 09-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே நேரம் இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 7-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- விடுதி சுவர்களில் ஜெய்பீம் என்று எழுதியதாக கூறி சஸ்பெண்ட்.
- ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் உத்தரவு ரத்து.
விடுதி சுவர்களில் ஜெய்பீம் என்று எழுதியதாக கூறி சஸ்பெண்ட் செய்த மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் பயிலும் மாணவர்கள், விடுதியின் சுவர்களில் ஜெய் பீம் என்று எழுதியதாக கூறி அந்நிறுவனம் இரண்டாம் இரண்டாம் ஆண்டு படிக்கும் அஸ்லம், சயீத், நஹல், இப்னு ஆகிய 3 மாணவர்களை இடைநீக்கம் செய்தது.
இந்த இடைநீக்க உத்தரவை எதிர்த்து மாணவர்கள் மூன்று பேரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், 3 மாணவர்களை இடைநீக்கம் செய்த ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் சஸ்பெண்ட் உத்தரவு உள்நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்டுள்ளதான வாதத்தை ஏற்றும், மாணவர்களின் நடத்தையில் குறைபாடு இருந்தாலும் மற்ற சூழ்நிலைகளை கருதியும் ரத்து செய்யப்படுவதாக ஐகோர்ட்டு தெரிவித்தது.






