என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை மாணவி பாலியல் வன்கொடுமை"

    • பெண்களுக்கு பாதுகாப்பான ஊர் என்று கொங்கு மண்டலத்திற்கு ஒரு பெயர் இருந்தது.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கஞ்சா, போதைப் பொருள் பயன்பாடு அதிகமாகிவிட்டது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு துளியும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான ஊர் என்று கொங்கு மண்டலத்திற்கு ஒரு பெயர் இருந்தது.

    கோவை மருத்துவமனையில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு ஆணும், பெண்ணும் தனியாக பேசிக் கொண்டிருந்த நிலையில் அந்த ஆணை அறிவாளால் வெட்டிவிட்டு அந்த பெண்ணை இழுத்துப்போய் முள் புதருக்குள் கூட்டிச் சென்று விடியற்காலை 4 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

    காவல்துறை என்ன செய்துக் கொண்டிருந்தது? காவல்துறையை கையில் வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் எனது கேள்வியாக இருக்கிறது.

    உடனடியாக கோவைக்கு சென்று போராட்டம் நடத்தினோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கஞ்சா, போதைப் பொருள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. பல்லடத்தில் மூன்று பேரை வெட்டிக் கொல்கிறார்கள்.

    தொடர்ந்து கொலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. ஆனால், முதலமைச்சர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார். ஆனால், இதுபோன்ற கொலை சம்பவங்களின்போது பெயருக்கு இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். போராட்டத்திற்கு பிறகு 4 பேரை கைது செய்கின்றனர். வெளியில் இருப்பவன் 17 கொலைகள் நான்தான் செய்தேன் என்கிறான். அப்போ கைது செய்து சிறையில் இருப்பவன் உண்மை குற்றவாளியா ? இல்லையா? என்கிற சந்தேகம் எழுகிறது.

    இதேபோல், கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திலும் உடனடியாக 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரும் உண்மையான குற்றவாளியா? இல்லையா ? என்பது தெரியாது?

    இதையெல்லாம் மாற்றி அமைப்பதற்கு கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
    • திமுக, தனது கூட்டணிக் கட்சியினரை இது போன்று பேசத் தூண்டுவதும் கருதப்படும்.

    பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    திமுகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட ஒருவர், கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குற்றவாளிகளைப் பற்றி எதுவும் கூறாமல், பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி, முற்றிலும் பிற்போக்குத் தனமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

    திமுக ஆட்சியில், குட்டியை வைத்து ஆழம் பார்க்கும் குரங்கு கதையாக, முதலில் தனது ஊதுகுழல்களில் யாரையாவது வைத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சுமத்திச் செய்தியாக்கி, பின்னர் அந்த வழக்கை அப்படியே நீர்த்துப் போகச் செய்வது வழக்கமாகிவிட்டது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும், மாணவியின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டது இந்த திமுக அரசு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    தவிர, கோவை மாணவி வழக்கில், குற்றவாளிகள் குறித்த மேலதிக தகவல்களை, காவல்துறை இதுவரை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. வழக்கம்போல, திமுக அரசில் செயலிழந்து நிற்கும் சட்டம் ஒழுங்கை மறைக்க, மடைமாற்றும் முயற்சிகளில் ஒன்றாகவே, திமுக, தனது கூட்டணிக் கட்சியினரை இது போன்று பேசத் தூண்டுவதும் கருதப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான கொலைகள், பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது , கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தான்.
    • கோவையில் நடந்த கொடூரத்தைத் தடுக்க தமிழக அரசு தவறியது ஏன்? என்பது தான் பொதுமக்களின் வினா.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து 36 மணி நேரம் கழித்து கருத்து தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாணவிக்கு நடந்த கொடுமைக்கு தமது ஆட்சியின் தோல்வி தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல், இந்தக் கொடுமைக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஆணையிட்டிருப்பதாகவும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார் முதலமைச்சர். தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொடூர நிகழ்வில் தமது தோல்வியை மூடி மறைக்க முதலமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது.

    கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதும் அரசு மற்றும் காவல்துறையின் அடிப்படைக் கடமைகள் ஆகும். இவற்றைக் கூட செய்ய முடியவில்லை என்றால் ஓர் அரசு அரசாகவும், காவல்துறை காவல்துறையாகவும் இருக்கத் தகுதியற்றவையாகி விடும். எனவே, குற்றவாளிகளை கைது செய்ததையும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணையிட்டிருப்பதையும் சாதனையாகக் கூறி கடமை தவறியதிலிருந்து தப்பிக்க முடியாது.

    கோவையில் நடந்திருப்பது, கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய மூன்றாவது பாலியல் வன்கொடுமை ஆகும். கடந்த ஆண்டு திசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியும், கடந்த ஜூலை மாதத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இனி இத்தகைய கொடுமைகள் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறி வந்தது. ஆனால், கோவையில் நடந்த கொடூரத்தைத் தடுக்க தமிழக அரசு தவறியது ஏன்? என்பது தான் பொதுமக்களின் வினா. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறித் தான் ஆக வேண்டும்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான கொலைகள், பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது , கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தான். அவற்றின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த நான்கரை ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; அதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறது; இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் நான் நேரில் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், போதைப் பொருள்களின் நடமாட்டம் சிறிதளவு கூட குறையவில்லை. அந்த அளவுக்கு தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்துள்ளன.

    அடுக்குமொழி வசனங்களை பேசுவதன் மூலமாகவும், கோவையில் நடந்த கொடுமையை 'வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலை' என்று கூறி மிகவும் எளிதாக கடந்து போவதன் மூலமாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவர் மீது படிந்திருக்கும் கறைகளை துடைத்தெறிய முடியாது. ஆட்சிக் காலத்தின் கடைசி சில மாதங்களிலாவது தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்கவும், பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • அதிமுக மகளிரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
    • அதிமுக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, அதிமுக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும்; தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில் கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    4.11.2025- செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை.
    • கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?

    கோவையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும்

    வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?

    கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போலீஸார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது என்று ஆதவ் அர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி, நேற்று ஞாயிறு இரவு, கோவை விமான நிலையம் அருகே தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது, மதுபோதையில் அங்கே வந்த மூன்று பேர் காரில் அமர்ந்திருந்த அந்த மாணவியின் நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். பிறகு, அதே பகுதியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    நீண்ட நேரத்திற்குப் பிறகு, மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் தனது செல்போன் மூலமாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு சான்றாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுவெளியில் அவர்கள் அச்சமின்றி பயணிக்கின்ற பாதுகாப்பான சூழலை ஒரு அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கடமை.

    ஆனால், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடங்கி, தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்கு இந்த அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த குற்றச் செயல்களுக்குக் காரணமாக, பெரும்பாலான வன்முறைகளுக்குக் காரணமான மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ, அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

    மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட மாணவி அவர்கள் விரைவில் நலம்பெறவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்து, சட்டத்தின் முன் அவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.
    • விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,

    பாதிப்புக்குள்ளான அம்மாணவி, 3.11.2025 அன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.

    பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக,

    எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெருநகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.

    விடியா திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுக சார்பில் கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர்.

    விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன்.



    • பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    • இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோ கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது, வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள், "தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்" என வெட்டி வசனம் பேசும் தி.மு.க.வின் ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர், இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோ கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? என்று வினவியுள்ளார். 

    • தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
    • திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கோவை விமானநிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கொடிய முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் மாணவிகளும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    பிருந்தாவன் நகரில் தனியார் கல்லூரி மாணவி தமது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் தகராறு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மாணவியும், அவரது நண்பரும் மகிழுந்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அவர்களின் மகிழுந்தை தடுத்து நிறுத்திய கும்பல், மகிழுந்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவியையும், அவரது நண்பரையும் வெளியே இழுத்துள்ளனர். நண்பரைத் தாக்கி காயப்படுத்திய அவர்கள், மாணவியை அங்கிருந்து கடத்திச் சென்று கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியை இன்று காலை அங்குள்ள புதரில் கண்டெடுத்த காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு திசம்பர் 23-ஆம் நாள் மனித மிருகத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே கடந்த ஜூலை 12-ஆம் நாள் திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கம் என்ற இடத்தில் 8 வயது மாணவி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கொடியவனால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இப்போது கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 2394 , அதாவது 52.30% அதிகம் ஆகும். இதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும், போதைப் பொருள்களின் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கோவையில் தனியார் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தரமான மருத்துவமும், மனநல ஆலோசனையும் வழங்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனைக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
    • பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.

    இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 



    • தப்பியோடிய கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கோவை:

    காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை 3 பேர் கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கோவையில் நள்ளிரவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தார்.

    இந்த மாணவிக்கு, கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். முதலில் செல்போனில் நட்பாக பேசி வந்தஅவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். வார விடுமுறை நாட்களில் 2 பேரும் வெளியில் எங்காவது சென்று நேரத்தை செலவிட்டனர்.

    இதேபோல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று இரவு கல்லூரி மாணவியும், அவரது காதலனும் சந்தித்துக் கொண்டனர். காதலன், காரில் வந்திருந்தார். அந்த காரில் கல்லூரி மாணவி ஏறிக்கொள்ள கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்றனர். நள்ளிரவு 11 மணிக்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி விட்டு 2 பேரும் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு மர்மநபர்கள் 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி காரை நோக்கி வந்தனர். காரின் கதவை தட்டி உள்ளே இருந்த 2 பேரையும் மிரட்டினர். இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபடியே காரில் இருந்த காதலனை வெளியே இழுத்தனர். கல்லூரி மாணவியின் கண் முன்பே அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த காதலன் மயங்கி விழுந்தார்.

    பின்னர் 3 பேரும் சேர்ந்து கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் மாணவியை, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். அங்குள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே புதருக்குள் தூக்கிச் சென்று 3 பேரும், மாணவியை ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடி இருக்கிறார். அவரையும் அந்த கும்பல் தாக்கி கொடூரச் செயலை அரங்கேற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

    இதற்கிடையே மயக்கம் தெளிந்த காதலன், செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பீளமேடு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இன்ஸ்பெக்டர் அர்ச்சுன்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு படுகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை அவர்கள் தேடினர். சுமார் 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த மாணவி, தண்டவாளம் அருகே உள்ள புதருக்குள் ஆடைகள் களைந்தநிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை போலீசார் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    காதலனை தாக்கி கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கும்பலை பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். இரவு விடிய, விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. அதேசமயம் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மட்டும் அந்த பகுதியில் கிடந்துள்ளது. அந்த மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரித்தபோது அது திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    தப்பியோடிய கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் யார், அவர்கள் மாணவர்களா அல்லது வேறு யாருமா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. 3 பேரும் கடும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன், உதவி கமிஷனர் வேல்முருகன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த கொடூர சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×