என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவையில் அதிர்ச்சி சம்பவம்: காதலனை தாக்கி விட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை- 3 பேர் கும்பல் வெறிச்செயல்
    X

    கோவையில் அதிர்ச்சி சம்பவம்: காதலனை தாக்கி விட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை- 3 பேர் கும்பல் வெறிச்செயல்

    • தப்பியோடிய கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கோவை:

    காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை 3 பேர் கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கோவையில் நள்ளிரவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தார்.

    இந்த மாணவிக்கு, கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். முதலில் செல்போனில் நட்பாக பேசி வந்தஅவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். வார விடுமுறை நாட்களில் 2 பேரும் வெளியில் எங்காவது சென்று நேரத்தை செலவிட்டனர்.

    இதேபோல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று இரவு கல்லூரி மாணவியும், அவரது காதலனும் சந்தித்துக் கொண்டனர். காதலன், காரில் வந்திருந்தார். அந்த காரில் கல்லூரி மாணவி ஏறிக்கொள்ள கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்றனர். நள்ளிரவு 11 மணிக்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி விட்டு 2 பேரும் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு மர்மநபர்கள் 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி காரை நோக்கி வந்தனர். காரின் கதவை தட்டி உள்ளே இருந்த 2 பேரையும் மிரட்டினர். இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபடியே காரில் இருந்த காதலனை வெளியே இழுத்தனர். கல்லூரி மாணவியின் கண் முன்பே அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த காதலன் மயங்கி விழுந்தார்.

    பின்னர் 3 பேரும் சேர்ந்து கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் மாணவியை, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். அங்குள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே புதருக்குள் தூக்கிச் சென்று 3 பேரும், மாணவியை ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடி இருக்கிறார். அவரையும் அந்த கும்பல் தாக்கி கொடூரச் செயலை அரங்கேற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

    இதற்கிடையே மயக்கம் தெளிந்த காதலன், செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பீளமேடு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இன்ஸ்பெக்டர் அர்ச்சுன்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு படுகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை அவர்கள் தேடினர். சுமார் 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த மாணவி, தண்டவாளம் அருகே உள்ள புதருக்குள் ஆடைகள் களைந்தநிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை போலீசார் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    காதலனை தாக்கி கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கும்பலை பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். இரவு விடிய, விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. அதேசமயம் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மட்டும் அந்த பகுதியில் கிடந்துள்ளது. அந்த மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரித்தபோது அது திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    தப்பியோடிய கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் யார், அவர்கள் மாணவர்களா அல்லது வேறு யாருமா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. 3 பேரும் கடும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன், உதவி கமிஷனர் வேல்முருகன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த கொடூர சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×