என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    • தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத காளையாய் துள்ளிக்குதித்து எகிறி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விற்பனையாகிறது. தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தக்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால், தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1160 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை வரலாற்றில் முதன்முறையாக சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டியதால், பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 213 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    காலை ரூ. 3 உயர்ந்த நிலையில் இன்று மாலை மேலும் ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • பொருளாதார மற்றும் வர்த்தக போரின் காரணமாக உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
    • தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை.

    சென்னை:

    தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.

    புதிய ஆண்டிலும் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    தங்கத்தின் விலை தினமும் கூடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக உயரக்கூடும். ஒருநாள் கூடினால் மற்றொரு நாள் குறைகிறது. ஆனால் விலை உயர்வுக்கு ஏற்ற அளவு குறையாது.

    ஒட்டுமொத்தமாக பார்த்தால் தற்போது போர் பதட்டம் இல்லாத சூழலிலும் தங்கம் விலை உயருகிறது. பொருளாதார மற்றும் வர்த்தக போரின் காரணமாக உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

    மேலும் டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

    சர்வதேச அளவில் பொருளாதார போட்டி அதிகரித்து வருவதால் மற்ற பொருட்களில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், லாபகரமாகவும் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் விலை உயர்ந்து வருகிறது.

    தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை. அதனால் எல்லா நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் தங்கம், பண்டம் மாற்று பொருளாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

    தங்கத்தின் விலை கூடினாலும் வியாபாரம் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சுபகாரியங்களுக்கு மக்கள் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். வாங்கும் அளவு குறைந்துள்ளது. தங்கம் விலை உயர்ந்த போதிலும் மக்களின் தனிநபர் வருமானம் அதிகரித்து பொருளாதாரமும் உயர்ந்து உள்ளது.

    இதனால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடி உள்ளது. தங்கம் கிராம் 250 ரூபாய் முதல் ரூ.12,500 வரை உயர்ந்து வந்துள்ளதை நான் அறிந்துள்ளேன் என்றார்.

    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை முதல் நாளை மறுநாள் வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 18-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும்.
    • கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ம் தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ம் தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு இடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கும், இது தொடர்பான அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை ஆஜராகும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    கடந்தமுறை விசாரணையின் போது மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சார்பிலும் ஆஜரான அரசு வக்கீல்கள் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கோரும் கல் தீபத்தூண் அல்ல நில அளவைகல் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கை தனி நீதிபதி பொதுநல வழக்கை போல விசாரித்து உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்கள்.

    அதற்கு நீதிபதிகள் மனுதாரர்கள் கூறும் பகுதியில் ஏன் தீபம் ஏற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வக்கீல் பல ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார். இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலைமீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது. கோவிலின் பராமரிப்பு அடிப்படை திட்டங்களை நிறைவேற்றும் கடமை அரசுக்கும் அறநிலைய துறைக்கும் தான் உள்ளது. கடைசியாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படிதான் நடந்து வருகிறது.

    இந்த நடைமுறையை பாரம்பரிய நடை மற்றும் வழக்கமான நடைமுறையாகும். தனி நீதிபதி இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளார். கோவில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும். திருப்பதி தேவஸ்தானத்தில் கூட ஆகம விதிகளை மீறி எதையும் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களையும் நடைமுறைகளையும் நிறைவேற்றும் போது பல தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியம். இந்த நடைமுறைகளை எல்லாம் தனி நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் போது கருத்தில் கொள்ளவில்லை. அர்ச்சனை மற்றும் பூஜையின் போது தனிநபர் தலையீடு இருக்கக்கூடாது அதுபோல தீபம் ஏற்றும் விவகாரத்திலும் ஆகம விதிகள் பொருந்தும் என்று வாதாடினார்கள்.

    அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வக்கீல் ஆஜராகி கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் மீது பற்று இல்லாதவர்களை போல சித்தரிக்கப்படுகின்றனர் என்றார்.

    பின்னர் 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் நாகசுவாமி எழுதிய புத்தகத்தை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தனர்.

    அந்தப் புத்தகத்தில் கார்த்திகை தீபம் குறித்து தெளிவாக கூறியுள்ளார். மலையடிவாரத்தில் இருந்து பாதி வழியில் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். நாயக்கர் கால தீபத்தூண் அந்த தீபத்தூன் அனுமன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவனின் தலை மீது உள்ள தூண் என அதை மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும் என கூறப்படுவதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த தூண் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் தூண் தான் என்றும் அறநிலையத்துறை வக்கீல்கள் வாதாடினர்.

    • ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
    • நாளொன்றுக்கு 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில் தமிழ்நாடு ஹஸ் இல்லம் அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை சர்வதேச விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் நிலத்தில் அமையும் ஹஜ் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

    ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

    நாளொன்றுக்கு 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில் தமிழ்நாடு ஹஸ் இல்லம் அமைக்கப்பட உள்ளது. 

    • இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார்.
    • நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

    திருச்சி:

    திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் பகுதி பெருமாள் கோவில் 39-வது வார்டில் நடைபெற்ற 'என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி' கூட்டம் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டு காலத்தில் என்னென்ன பணிகள் விடுபட்டு போயிருந்ததோ, அந்தப் பணிகளையும் சேர்த்து இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார். குறிப்பாக நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

    மத்திய அரசு வேண்டுமென்றே என் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது. நேருவை அடித்தால் இந்த பகுதியில் தி.மு.க.வை அழித்து விடலாம் என்ற உள்நோக்கத்தோடு அதற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தவறும் செய்யவில்லை, செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சமீபத்தில் தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை பரிந்துரை கடிதம் அளித்திருந்தது. அதுதொடர்பாக அவர் கூறுகையில், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும், பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர்.
    • முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்.

    பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலையை வெளியிட்டார்.

    இந்த நிலையில், பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு தபால் தலை வெளியிட்டதற்காக பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பிலும்,

    அ.தி.மு.க. சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார். 

    • அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எதிர்காலம் அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட வலிமையான இயக்கத்தை என்ஜின் இல்லாத கார் என்றும் அதை பா.ஜ.க. என்ற லாரி கட்டி இழுக்க முயன்று வருகிறது என்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணியால் தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கலங்கி போய் ஒரு நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளார்.

    இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு தடையாக இருப்பது அ.தி.மு.க. தான்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை கண்டு நடுங்கிப் போயிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வரம்பு மீறி 54 ஆண்டு பொது வாழ்வில் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வந்த அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    வாரிசு அரசியலில் டெல்லியில் முடிவுரை எழுதப்பட்டு தற்போது பீகாரிலும் வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுதி மக்கள் தந்த தீர்ப்பை கண்டு தான் ஸ்டாலினும், உதயநிதியும் அரண்டு போய் உள்ளார்கள்.

    அந்த காரில் சென்றார், இந்த காரில் சென்றார் என காரின் மீது கவனம் செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும். வகுப்பு அறையில் மாணவிகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். சக மாணவர்களால் மாணவன் அடித்து கொலை.

    இப்படி எங்கே செல்கிறது இளைய சமுதாயம்? அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், இளைஞரணி என்ற பெயரில் அ.தி.மு.க.வை பற்றியும் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் வசை பாடி தான் கலங்கி நிற்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

    இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ற சாமானியர் முடிவுரை எழுதும் வகையில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். அ.தி.மு.க.வை வெற்றிப்பாதை அழைத்துச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எத்தனை கோடி விமர்சனங்கள் வைத்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்கொள்வார்கள். தமிழக மக்கள் உங்கள் விமர்சனத்தை புறம் தள்ளுவார்கள்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்வார். தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் அநாகரீகம் இன்றி எத்தனை விமர்சனம் செய்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள், எள் முனையளவும் பின் வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

    • இவ்வழக்கு தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    • ஞானசேகரனின் தாயார் கங்காதேவி வழக்கு தொடர்ந்தார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புழல் அறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரனின் தாயார் கங்காதேவி தொடர்ந்த வழக்கில், வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
    • வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவுவது வழக்கம். குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனி அதிகளவில் காணப்படும்.

    இந்த ஆண்டு 40 நாட்கள் கழித்து தாமதமாக கடந்த 12-ந்தேதி உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து சில நாட்களாகவே ஊட்டி, குன்னூரில் உறைபனி கொட்டி வருகிறது.

    இன்றும் குன்னூர், ஊட்டி, மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. குறிப்பாக தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் அதிகளவில் உறைபனி கொட்டியது.

    இன்று தலைக்குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 4.3 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது.

    கொட்டும் உறைபனியால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, படகு இல்லம், பைக்காரா, குதிரை பந்தய மைதானம், குன்னூர் ஜிம்கானா மைதானம் உள்ளிட்ட புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளித்தது. அங்குள்ள செடி, கொடிகள் மீது பனி படர்ந்து காணப்பட்டது.

    இதுதவிர சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், ஆட்டோ மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களிலும் உறைபனி காணப்பட்டது. வாகன ஓட்டிகள் காலையில் உறைபனியை அகற்றி வண்டியை எடுப்பதற்குள் சிரமப்பட்டனர்.

    குன்னூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் மீதும் வெள்ளை கம்பளம் விரித்தது போன்று உறைபனி காணப்பட்டது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக அதிகாலையில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு கூட பொதுமக்கள் அதிகாலையில் வெளியில் வர முடியவில்லை.

    இதனால் ஊட்டி, குன்னூரில் உள்ள முக்கிய பஜார் பகுதிகளில் காலை நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு செல்வதை காண முடிந்தது. வெளியில் நடமாடிய ஒரு சிலரும் போர்வை, கம்பளி ஆடை, சுவர்ட்டர், சால்வை உள்ளிட்டவற்றை அணிந்தபடி சென்றனர்.

    குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள பெரும்பாலானோர் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும் குளிர் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் தேயிலை செடிகள், மற்றும் மேரக்காய் பந்தல்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் உறைபனி தாக்கம் காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். அவர்களும் உறைபனி காரணமாக வெளியில் வரமுடியாமல் விடுதிகளுக்குள்ளேயே முடங்கினர். உறைபனி குறைந்த பிறகே வெளியில் சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.

    • கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.
    • துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.

    சென்னை:

    துரோகிகள் இருக்கும் வரை ஒன்றிணைய முடியாது என அன்புமணி கூறியிருந்தார். இதற்கு, ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேற தயார் என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.மணி கூறியிருப்பதாவது:-

    * பா.ம.க. நிறுவனர் ராமதாஸை கொல்லுங்கள் என பதிவிட்டவரை கூப்பிட்டு அன்புமணி பாராட்டினார்.

    * ராமதாசுடன் இருப்பவர்களை துரோகி என அன்புமணி அவமானப்படுத்துகிறார்.

    * கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.

    * அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியைக் கூட மிக கடுமையாக அன்புமணி விமர்சித்தார்.

    * வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுத்தது நான்தான் என்றும் அன்புமணி அவதூறாக பேசினார்.

    * ஆட்சி மாற்றம் காரணமாக 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு நான் எப்படி காரணமானேன்.

    * ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேறத் தயார். நானும் எனது குடும்பத்தினரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.

    * ராமதாஸ், அன்புமணி இணைவதற்காக பா.ம.க.விலிருந்து விலகுவதுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யவும் தயார்.

    * துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார். 

    • ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற வந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்தார்.

    தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்துள்ளனர். இருப்பினும் ஒரு மாணவர் மேடையில் ஆளுநரை வெளிப்படையாக அவமதித்தது இது முதல் முறையாகும்.

     

    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி...

    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 759 பேருக்கு பட்டம் வழங்கினார்.

    அப்போது, ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக பட்டம் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவதால் நான் அவரிடம் இருந்து பட்டம் பெறுவதை விரும்பாமல் துணைவேந்தரிடம் பட்டம் வாங்கினேன். எனக்கும் அவருக்கும் எந்தவிட ஒரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது. திராவிட மாடலை நான் விரும்புகிறேன். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதால் நான் இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்தார்.

     

    இந்த விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் கலந்து கொள்ளவில்லை.

    இந்த நிகழ்வு பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

     

    இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜன் என்பவரின் மனைவி ஜீன் ஜோசப், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என கூறி உள்ளார். காலம் காலமாக கட்சியில் பெயர் வாங்க, தி.மு.க.வினர் அரங்கேற்றி வரும் நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக்கொள்ளக்கூடாது என கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

     

    இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், மாணவி ஒருவர், ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் அல்ல. அவரது கொள்கை பிடிப்பும், துணிச்சலும் பாராட்டத்தக்கது. இருப்பினும், சபை நாகரிகம் என்பதும் முக்கியமானது. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் செயல், ஒரு வகையில் ஏற்புடையது என்றாலும், தனிமனித அணுகுமுறை என வரும்போது சபை நாகரிகமும் முக்கியம். தமிழையும், தமிழ் மக்களையும் ஆளுநர் அவமதித்து பேசி வருகிறார். இதனால், அவரது தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று கூறினார்.

     

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த பிஎச்.டி மாணவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் இருக்கும்போது, பட்டம் வழங்கிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினருக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

    சிலர் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பாகப் பார்க்க, பலர் இது போன்ற ஒரு புனிதமான விழாவை அவமதிப்பது சரியல்ல என கருத்து தெரிவித்தனர்.

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் புகார் அளித்த மாணவர்...

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்.14-ந்தேதி 39-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.

    அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     

    மாணவர் பிரகாஷ் அளித்த மனுவில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சில வழிகாட்டிகள் ஆராய்ச்சி அறிஞர்களை ஆராய்ச்சி அறிஞர்களாகக் கருதுவதில்லை, கல்விப் பணிகளைத் தவிர, ஆராய்ச்சி அறிஞர்கள் சில வழிகாட்டிகளின் வீட்டில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகள் உள்ளன. ஆனால் அது பொது விடுதியாக நடத்தப்படுவதால், ஆதி திராவிட (பட்டியலின சாதி) ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மாதாந்திர மெஸ் கட்டணம் செலுத்துவதில் பெரும் சுமை உள்ளது.

    வைவா நேரத்தில், ஆராய்ச்சி அறிஞர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய சில வழிகாட்டிகள் அறிவுறுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி, சில வழிகாட்டிகளின் நிர்ப்பந்தத்தால், வைவா வாய்ஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின், ஆராய்ச்சி அறிஞர்கள், துறையில் உள்ள சில வழிகாட்டிகளுக்கு பணம், உணவு, தங்கம் வழங்குகின்றனர். இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்

     

    இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

    விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

    இதையடுத்து, அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பல்கலையில் முனைவர் பட்டம் பெற பயிலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். வழிகாட்டு ஆசிரியரின் தனிப்பட்ட அல்லது வீட்டு வேலைகளை செய்ய மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழங்களில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×