என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • திடீரென பெய்த மழையால் ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் காலை 7 மணியளவில் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழ்நிலையில் இருந்தது வந்தது.

    இதனை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அடையாறு, மயிலாப்பூர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, எழும்பூர், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், குமரன் நகர் மற்றும் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    • ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வர்த்தகர்களுடன் ஏற்பட்ட வளர்ச்சி இதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
    • ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    இந்தியாவின் ஆயத்த ஆடை கடந்த நவம்பர் மாதம் ரூ.11,320 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் 11.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    அமெரிக்க வரி விதிப்பு உள்பட பல்வேறு தடைகள் இருந்த போதிலும் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபத்திய ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் இந்திய ஆடைகள் முக்கிய சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து செல்வாக்கு பெற்று வருவதை குறிப்பிடுகிறது.

    நவம்பர் மாதத்தில் ஆடை ஏற்றுமதிகள் ஆண்டு கணக்கில் குறிப்பிடத்தக்க அளவில் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வர்த்தகர்களுடன் ஏற்பட்ட வளர்ச்சி இதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

    பாரம்பரிய வர்த்தகர்களை தாண்டி புதிய சந்தைகளில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கம், அமெரிக்க சந்தையில் பருவகாலம் மற்றும் சுங்க வரி தொடர்பான சவால்களை சமநிலைப்படுத்த உதவி செய்து, மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

    பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வட்டி சமநிலைப்படுத்தும் திட்டம் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இது மட்டுமல்லாது சந்தை அணுகல் தொடர்பான கடன் வசதிகள் போன்ற பிற வர்த்தக நிதி ஆதரவு நடவடிக்கைகளும் காலதாமதமின்றி அமல்படுத்தினால் ஏற்றுமதியாளர்களின் நிதிச்சுமை குறிப்பிடத்தக்க அளவில் குறையும். அதன்மூலம் மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகம் மேலும் அதிகாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் 2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பது நாட்டுக்கே திருப்புமுனையாக அமையும்.
    • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்.

    பழனி:

    பழனியில் பா.ஜ.க. சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், சட்ட பேரவை தொகுதி பயிலரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தி.மு.க. தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு 2 ஏக்கர் நிலம் குறித்து கேட்டபோது தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் கொடுக்கும் அளவுக்கு நிலம் இல்லை என்று தனக்கு தற்போதுதான் தெரியவந்தது என்றார்.

    5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி மனதறிந்து பொய்சொல்லி வெற்றி பெற்றார். அதுபோலத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆட்சி முடியும் தருவாயில் ஹஜ் பயணம் செல்வோருக்கு இல்லம், மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என்பது போன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார். பொங்கல் பண்டிகையின் போது ஆளுக்கு ஒரு வீடு கொடுப்போம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், ஆளுக்கு ஒரு பஸ் தருவோம் என சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. தேர்தலுக்காக வாக்குகளை பெற வலைவிரிக்கும் தி.மு.க.வின் முயற்சி ஒருபோதும் பலிக்காது.

    தமிழகத்தில் 2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பது நாட்டுக்கே திருப்புமுனையாக அமையும். தமிழகத்தில் பா.ஜ.க. கொடிகட்ட 1 அடி இடம் கூட தரமுடியாது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். தற்போது எங்கு பார்த்தாலும் பா.ஜ.க. கொடிதான் பறக்கிறது. தமிழகத்தை அழித்து வரும் தி.மு..க.வை அகற்ற விரும்பும் அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.

    செங்கோட்டையன் வேறு கட்சியில் இணைந்திருப்பது சேராத இடம் தனிலே சேரவேண்டாம் என்பது போல உள்ளது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் இதயத்தையே பா.ஜ.க. கைப்பற்றியதன் மூலம் வரும் தேர்தலில் அங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். வடிவில் விஜய் தெரிவதாகவும், அவர் முதலமைச்சர் ஆவார் என்றும், நாஞ்சில் சம்பத் பேசி வருகிறார். அவர் உண்மையில் எம்.ஜி.ஆரை. பார்த்திருக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லாரி முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
    • தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சதீஸ், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் புதூர் பகுதியில் இன்று காலை வந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரில் இருந்தவர்கள் அய்யா.. அம்மா... என்று அலறினர்.

    உடனே அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் உதவியுடன் போலீசார் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த விபத்தில் இறந்தது ஈரோடு மாவட்டம், சங்கரியை சேர்ந்த முனியப்பன் (வயது40), தருமபுரி மாவட்டம், மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, சம்மனம்பட்டியை சேர்ந்த அருணகிரி ஆகிய 3 பேர் என தெரிய வந்தது. அவர்களது உடல் களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சதீஸ், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்து நடந்த இடத்தை ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த விபத்தால் தருமபுரி-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
    • இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், அ.தி.மு.க நிர்வாகிகள் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், தங்கள் பெயரிலும் விருப்ப மனுவை அளிக்க வைகை எக்ஸ்பிரசில் புறப்பட்டு சென்றனர்.

    முன்னதாக ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 54 ஆண்டுகளில் தேர்தல் களத்தில் முதன்மை இயக்கமாக, தேர்தலில் முதல் துவக்கமாக எம்.ஜி.ஆர். காலம் தொட்டு, அம்மா காலம் வரை அ.தி.மு.க. இருந்து வந்தது. இன்றைக்கு இந்த இருபெரும் தலைவர்களின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிசாமி காலத்தில் தற்போது தேர்தல் பணியில் துள்ளி குதித்து வருகிறது.

    தேர்தல் பிரச்சாரத்தை முதலில் தொடங்கி 175 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். 12,000 கிலோமீட்டர் பச்சை பேருந்து மூலம் பச்சை தமிழராய் ஒரு கோடி மக்களை சந்தித்தார். இந்த சரித்திர சாதனையை யாரும் முறியடிக்க முடியாது.

    அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கும் முதல் நாளில் 1,237 மனுக்கள் பெறப்பட்டு அதில் 234 தொகுதிகளில் தனி தொகுதியை தவிர 349 தொண்டர்கள் தங்கள் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை அளித்தனர்.

    தற்பொழுது அம்மா பேரவையின் சார்பில் மதுரை மாவட்டத்தில் தனி தொகுதி தவிர உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நிற்க வேண்டும் என்று விருப்ப மனு அளிக்க உள்ளோம். மதுரையில் எந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நின்றாலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.

    தற்போது நடைபெற்று வரும் தி.மு.க.வின் சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வெற்றி மகுடம் சூட்ட தயாராகிவிட்டனர்.

    குமரி முதல் இமயம் வரை வெற்றி வரலாறு படைக்கும் வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது. குறிப்பாக இந்த கூட்டணி குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயக ஆட்சியை மலரச் செய்யும். அதனால் தான் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கண்டு ஸ்டாலினும், உதயநிதியும் இன்றைக்கு நடுங்கி போய் உள்ளார்கள்.

    நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது. செயற்கையாக சுவாசத்தை கொடுக்க விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.

    தி.மு.க.வின் தோல்வியை பற்றி உளவுத்துறை மூலம் அறிந்த ஸ்டாலின் தற்போது மகளிர் உரிமைத் தொகை கூடுதலாக வழங்கப்படும் என்று கூறுகிறார். இந்த ஆட்சி முடிய 3 மாதம் உள்ளது. இப்போது அறிவித்து என்ன பயன்? இதை எல்லாம் மக்கள் நம்பப் போவதில்லை தி.மு.க. வுக்கு மக்கள் ரெட்கார்டு போட்டு விடுவார்கள்.

    எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் தான் பொதுக்குழு தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயமாக அது நிறைவேறும், தை பிறந்தால் வழி பிறக்கும்.

    யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது. தி.மு.க. வை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். 54 வருடங்களாக எங்களுக்கு எதிரி தி.மு.க. தான். சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்றுதான் பார்ப்பார்கள். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார். 

    • மதியத்துக்கு பின்னர் தங்கத்தின் விலை 2-வது தடவையாக மீண்டும் உயர்ந்தது.
    • வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

    தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவின் மீது தொடுத்த வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

    இதேபோல அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை கணிசமாக குறைத்துவிட்டு, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை திசை திருப்ப தொடங்கி உள்ளனர்.

    பெரும்பாலானோர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு மதிப்புமிக்க மஞ்சள் உலோகமான தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை உலக அளவில் கணிசமாக அதிகரிக்க செய்துள்ளது.

    தேவை அதிகமாக இருப்பதால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்றது.

    இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ரூ.96 ஆயிரம் வரை சென்றது. அதன்பிறகு விலை சற்று தணிய தொடங்கியது. அதாவது, 'முழம் ஏறி சாண்' சறுக்கியது.

    கடந்த சில மாதங்களாக சீரான இடைவெளியில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தங்கம் விலை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலையில் நிலையற்றத்தன்மை காணப்பட்டது.

    தொடர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாத கனியாகவே மாறிவிட்டது. குறுகிய காலத்தில் தங்களது சேமிப்பை அதிகரிக்கும் எண்ணத்தில் சிலர் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

    கடந்த 9-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்துக்கும், சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. அதன்பிறகும் படிப்படியாக தங்கம் விலை ஏறுமுகம் கண்டு வருகிறது.

    அதன்பின்னர் கடந்த 13-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது.

    இதற்கிடையே நேற்று காலை ரூ.90 அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்து 460-க்கும், ரூ.720 அதிகரித்து சவரன் ரூ.99 ஆயிரத்து 680-க்கும் விற்கப்பட்டது.

    நல்ல வேளையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டவில்லை என்று நினைத்தவர்களுக்கு சில மணி நேரங்களிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மதியத்துக்கு பின்னர் தங்கத்தின் விலை 2-வது தடவையாக மீண்டும் உயர்ந்தது.

    அதாவது மேலும் ரூ.55 அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், 440 அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.145-ம், சவரனுக்கு ரூ.1,160-ம் உயர்ந்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிய நிலையில் இன்று ஏறிய வேகத்தில் குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,350-க்கும் சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 211 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.100,120

    14-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    13-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-12-2025- ஒரு கிராம் ரூ.215

    14-12-2025- ஒரு கிராம் ரூ.210

    13-12-2025- ஒரு கிராம் ரூ.210

    12-12-2025- ஒரு கிராம் ரூ.216

    11-12-2025- ஒரு கிராம் ரூ.209

    • ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
    • தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார்.

    வேலூர்:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளார்களா? சந்தேகப்படும் நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப்படை போலீசாரும் வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் சுற்று வட்டாரப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

    ஸ்ரீபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

    ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. ஜனாதிபதி நாளை காலை 11.05 மணிக்கு திருப்பதியில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் வர உள்ளதால் அவருடன் கூடுதலாக 2 ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு கருதி வர உள்ளது. அந்த 2 ஹெலிகாப்டர்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயணம் செய்ய உள்ளனர்.

    தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மதியம் 12.30 மணி அளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    அவர் வருகை தரும் நேரத்தில் ஸ்ரீபுரம் -ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட உள்ளது.

    அவரது வருகையை ஒட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு நாளை காலை வருகை தர உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் சோதனை ஓட்டமும், பாதுகாப்பு ஒத்திகையும் நடந்தது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை:

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தி.நகர்: தணிகாசலம் சாலை, ஆற்காடு தெரு, சரவணா தெரு, மெலனி சாலை, நீலகண்ட மேத்தா தெரு, வைத்யராமன் தெரு, ராமசாமி தெரு, தியாகராய சாலை, தீனதயாளன் தெரு, பாசுதேவ் தெரு, வடக்கு போக் சாலை, பனகல் பார்க், பிஞ்சலா சுப்ரமணியம் தெரு, வெங்கடேசன் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, ஜி.என். செட்டி தெரு, சிங்காரவேலு தெரு, சிவப்பிரகாசம் தெரு, ராஜா தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ராஜாபத்தர் தெரு, ராமன் தெரு, சரோஜினி தெரு, கோபால கிருஷ்ணன் தெரு, விஜயராகவ சாலை, டாக்டர் நாயர் சாலை, நானா தெரு, டேனியல் தெரு, ராஜாச்சார் தெரு, பசுல்லா தெரு, கிரியப்பா சாலை, லோடிகன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, உஸ்மான் தெரு, கிரசென்ட் தெரு, சுந்தரம் தெரு, ராஜாம்பாள் தெரு, யோகம்பாள் தெரு, சிங்காரம் தெரு, ஹனுமந்த ராவ் தெரு, ராமராவ் தெரு, சீனிவாச சாலை, ராமச்சந்திரன் சாலை, சாம்பசிவம் தெரு, ராகவய்யா சாலை, பர்கிட் சாலை, தெற்குப் போக் சாலை, சிங்காரவேலன் தெரு, மாசிலாமணி தெரு, வடக்கு கிரசென்ட் தெரு, இந்தி பிரச்சார சபா தெரு

    செங்குன்றம்: சோத்துப்பெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், தேவநேரி, சோழவரம், சிறுணியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞானேறு, நெற்குன்றம் கும்மனூர், அங்காடு, அருமந்தை.

    பூந்தமல்லி: குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, சீனிவாச நகர், மல்லியம் நரசிம்மா நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர், ஏஎஸ்ஆர் சிட்டி எஸ்எஸ்விகே, பக்தவச்சலம் நகர் மற்றும் அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    • புதிய மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக மின்வாரியத்திற்கான நிதியை பெறுவதற்கு மத்திய அரசினுடைய நிதி நிறுவனங்கள் நிதியை வழங்க வேண்டும்.
    • படிப்படியாக இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுமக்கள் மின்சாரத்தை தங்களுடைய வீடுகளிலும், பொது இடங்களிலும் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும். மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை கடும் நிதி நெருக்கடிக்கு இடையில் தான் செயல்பட்டு வருகின்றன. நிதி நிலைக்கு ஏற்ப மின்வாரியத்தில் சில புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக மின்வாரியத்திற்கான நிதியை பெறுவதற்கு மத்திய அரசினுடைய நிதி நிறுவனங்கள் நிதியை வழங்க வேண்டும்.

    அந்த நிதியை பெறுவதில் தாமதம் இருந்தது. தற்போது அதற்கான நடைமுறைகள் எடுக்கப்பட்டு, பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு, புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டு வருகிறது. அதேபோல் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.

    ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதற்கு அது வசதியாக இருக்கும். ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும் என்றார். 

    • ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.

    ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கண்காணிப்பார் அனுமதி வழங்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ரூ.50 ஆயிரம் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி என தகவல் வெளியானது.

    இந்நிலையில், 18ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறையின் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

    அதன்படி, விஜய்யின் பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.

    நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு Box-லும் குடிநீர்வசதி செய்து தரப்படவேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை தாங்கள் மனுவில் குறிப்பிட்டதை விட மிகாமல் இருக்க வேண்டும்.

    அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர தனி வழி விடப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!
    • 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

    100 நாள் வேலை திட்டத்திற்கான பெயர் மாற்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!

    தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

    100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

    இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!

    பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

    #ThreeFarmLaws, #CasteCensus போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல #MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே #VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×