என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்குகளை பெற வலைவிரிக்கும் தி.மு.க.வை மக்கள் நம்ப மாட்டார்கள்- பொன் ராதாகிருஷ்ணன்
- தமிழகத்தில் 2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பது நாட்டுக்கே திருப்புமுனையாக அமையும்.
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்.
பழனி:
பழனியில் பா.ஜ.க. சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், சட்ட பேரவை தொகுதி பயிலரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தி.மு.க. தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு 2 ஏக்கர் நிலம் குறித்து கேட்டபோது தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் கொடுக்கும் அளவுக்கு நிலம் இல்லை என்று தனக்கு தற்போதுதான் தெரியவந்தது என்றார்.
5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி மனதறிந்து பொய்சொல்லி வெற்றி பெற்றார். அதுபோலத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆட்சி முடியும் தருவாயில் ஹஜ் பயணம் செல்வோருக்கு இல்லம், மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என்பது போன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார். பொங்கல் பண்டிகையின் போது ஆளுக்கு ஒரு வீடு கொடுப்போம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், ஆளுக்கு ஒரு பஸ் தருவோம் என சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. தேர்தலுக்காக வாக்குகளை பெற வலைவிரிக்கும் தி.மு.க.வின் முயற்சி ஒருபோதும் பலிக்காது.
தமிழகத்தில் 2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பது நாட்டுக்கே திருப்புமுனையாக அமையும். தமிழகத்தில் பா.ஜ.க. கொடிகட்ட 1 அடி இடம் கூட தரமுடியாது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். தற்போது எங்கு பார்த்தாலும் பா.ஜ.க. கொடிதான் பறக்கிறது. தமிழகத்தை அழித்து வரும் தி.மு..க.வை அகற்ற விரும்பும் அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.
செங்கோட்டையன் வேறு கட்சியில் இணைந்திருப்பது சேராத இடம் தனிலே சேரவேண்டாம் என்பது போல உள்ளது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் இதயத்தையே பா.ஜ.க. கைப்பற்றியதன் மூலம் வரும் தேர்தலில் அங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். வடிவில் விஜய் தெரிவதாகவும், அவர் முதலமைச்சர் ஆவார் என்றும், நாஞ்சில் சம்பத் பேசி வருகிறார். அவர் உண்மையில் எம்.ஜி.ஆரை. பார்த்திருக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






