என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
    • விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 131 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வட மாநிலங்களில் பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று 19 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் நாடு முழுவதும் நிலவிய மோசமான வானிலை காரணமாக இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புறப்படும் 4 விமான சேவை, 7 வருகை விமான சேவை ரத்து செய்யப்பட்டன.

    கொல்கத்தா, ஜெய்ப்பூர், காசியாபாத் நகரங்களுக்கான புறப்பாடு, வருகை விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • வரைவு வாக்காளர் பட்டியல் 19-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
    • பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் பகிரப்பட்டுள்ளன.

    சென்னை:

    இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் 19-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த நடவடிக்கையானது, எந்த தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முந்தைய காலகட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்று அணுகியபோதும் தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்கள் அதாவது இறந்தவர்கள், கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் என குறிக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை தயாரித்து உள்ளனர்.

    இந்த பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் பகிரப்பட்டுள்ளன. இந்த கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரின் உண்மையான நிலையை உறுதி செய்துகொள்வதற்காகவும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்பே ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை திருத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இந்த பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை முதல் 22-ந்தேதி வரை தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை:

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை முதல் 22-ந்தேதி வரை தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • த.வெ.க. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வரும் 18-ம் தேதி ஈரோட்டில் நடக்கவுள்ளது.
    • இதில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை த.வெ.க. அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    வரும் 18ஆம் தேதி (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் 'ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    நம் வெற்றித் தலைவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கழகத் தலைவரின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

    * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு BOX-களிலும், காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    * கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    * தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும், அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

    * காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத் தோழர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

    * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், மேலும் அங்கே செல்லும் வழிகளில் மற்றும் திரும்பி வரும் வழிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

    * எளிதில் அடையாளம் காணும் வகையில், தன்னார்வலர்கள் சீருடை அணிந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    * உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும் பிற சாலைகளிலும் நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

    * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்கு கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers) ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    * தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும்.

    தலைவரின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் தூண் குறித்த படங்களை நீதிபதிகளிடம் வக்கீல் சமர்ப்பித்தார்.
    • மலை உச்சியில் தர்கா இருப்பதால் அதனை சிக்கந்தர் மலை என கூறப்படுகிறது.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை இன்று முற்பகலில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் முன்பு தொடங்கியது. இதில் வக்பு வாரியம் சார்பில் வக்கீல் அப்துல் முபின் வாதாடினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

    வக்பு வாரிய வக்கீல்:- மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக தர்கா அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் தொழுகையும் நடந்து வருகிறது. அதுவும் அங்கு ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது.

    நீதிபதிகள்:- மலை உச்சியின் இரு இடங்களில் என்னென்ன வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. தர்காவுக்கு சொந்தமான அது சார்ந்த நிலங்கள் என்னென்ன?

    வக்பு வாரிய வக்கீல்:- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவும், மலையின் பின்பக்க பகுதியில் காசி விஸ்வநாதர் கோவிலும் உள்ளது. அங்கு ஒருபுறம் பக்தர்களும், இஸ்லாமியர்களும் வந்து செல்ல குதிரைச்சுனை அருகில் இருவேறு பாதைகள் பிரிகிறது. கடந்த காலங்களில் தீபமேற்றுவது தொடர்பாக ஐகோர்ட்டு தனிநீதிபதி உத்தரவுகள் உள்ளன.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றுவது தொடர்ச்சியான பழக்கவழக்கமாக இருந்தது இல்லை. நெல்லித்தோப்பு மற்றும் அதுசார்ந்த பாதைகள், அவ்விடத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது. இதையெல்லாம் தனிநீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை.

    தொடர்ந்து மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் தூண் குறித்த படங்களை நீதிபதிகளிடம் வக்கீல் சமர்ப்பித்தார். அவற்றை நீதிபதிகள் பார்வையிட்டனர்.

    நீதிபதிகள்:- மலை உச்சியில் உள்ள தூணிற்கு செல்லும் பக்தர்கள் தர்காவை கடந்துதான் செல்ல வேண்டுமா? இல்லை வேறு பாதை உள்ளதா?

    வக்புவாரிய வக்கீல்:- பழமையான மலை பாதை உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நெல்லித்தோப்பு தர்கா விற்கு செல்லும் படிக் கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என உத்தரவு உள்ளது. மலை உச்சியில் தர்கா இருப்பதால் அதனை சிக்கந்தர் மலை என கூறப்படுகிறது.

    1921-ம் ஆண்டில் சிவில் கோர்ட்டு தர்காவிற்கு வழங்கிய உரிமையை உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவை பிரிவியூ கவுன்சிலும் உறுதி செய்துள்ளது என்றார்.

    அதற்கு நீதிபதிகள், தர்கா முழுவதும் சர்வே செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து வக்பு வாரியம் சார்பில் சர்வே செய்யப்பட்டு ஆவணங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர், தர்காவிற்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளதா? உறுதியான ஆவணங்கள் கொடுக்க இயலுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவை இருந்தால் நாளை தாக்கல் செய்யுங்கள் என்றனர்.

    • பருவகால பாதிப்புகள் இல்லாத நிலையில் தக்காளியை பயிரிடும்போது ஏக்கருக்கு 9-10 டன்கள் வரை சாகுபடி கிடைக்கும்.
    • தக்காளியின் விற்பனை விலை தற்போது ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.

    பேரூர்:

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதில் குறைந்த காலத்தில் அதிக லாபம் பார்க்க முடியும்.

    இதன்காரணமாக அங்குள்ள விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் தக்காளி,வெண்டை, காலிபிளவர், முட்டைக்கோஸ், கத்தரி போன்றவற்றை நடவு செய்து உள்ளனர். காய்கறி விளைச்சலுக்கு போதிய தட்பவெப்பநிலை மற்றும் சீதோஷ்ண சூழ்நிலை இருந்தால் மட்டுமே விளைச்சல் நல்ல முறையில் இருக்கும்.

    ஆனால் கடந்த 2-3 ஆண்டுகளாகவே தொண்டாமுத்தூர் பகுதிகளில் காலநிலை மாற்றம் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தீத்திபாளையம், மாதம்பட்டி, குப்பனூர், சென்னனூர், வடிவேலாம்பாளையம், செம்மேடு, தென்னமநல்லூர், தேவராயபுரம் பகுதிகளில் சின்ன வெங்காயத்தை நடவு செய்து இருப்பு வைத்து கிட்டத்தட்ட 70 சதவீதத்துக்கும் மேல் விவசாயிகள் விற்பனை செய்து விட்டனர்.

    இதற்கு விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு போதிய விலை கிடைக்க இயலாததால் அங்கு தற்போதுஅதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. அவற்றில் 50 சதவீதம் தக்காளிகளை விவசாயிகள் பறித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். விவசாய தோட்டங்களில் மீதம் உள்ள தக்காளி பயிர்கள் பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அதிகப்படியான பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பூக்கும்-காய்க்கும் தருவாயில் உள்ள தக்காளி செடிகளுக்கு பூஞ்சாண நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் காய்ப்புழு தாக்குதல், செம்பேன், இழைப்புள்ளி நோய், வேர்வாடல் நோய் போன்ற நோய்களின் தாக்குதல் தக்காளி விளைச்சலை பெருமளவில் பாதித்து உள்ளது. பருவகால பாதிப்புகள் இல்லாத நிலையில் தக்காளியை பயிரிடும்போது ஏக்கருக்கு 9-10 டன்கள் வரை சாகுபடி கிடைக்கும். ஆனால் தற்போது 4-5 டன்கள் வரை அறுவடை செய்ய முடிகிறது.

    இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது. விவசாய தோட்டங்களில் தக்காளி பயிரிட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1.10 லட்சம் முதல் 1 1/4 லட்சம் வரை செலவாகிறது.

    ஆனால் தக்காளியின் விற்பனை விலை தற்போது ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு போதியவிலை கிடைக்காததால் அங்குள்ள விவசாயிகள் தற்போது பாக்கு, வாழை போன்ற பயிர்களை விளைவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    எனவே கோவை மாவட்ட விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளி உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு தோட்டக்கலை, வேளாண் அதிகாரிகள் கால சூழலுக்கு ஏற்ப தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் பருவநிலை மாற்றத்தை பாதிக்கப்படும் தக்காளி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
    • பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நாளை மறுநாள் முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே நாளை மறுநாள் முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 19-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சமத்துவ நடைபயணம் வருகின்ற ஜனவரி 2-ந்தேதி மேற்கொள்ள உள்ளேன்.
    • மக்கள் மன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு தான் ஆதரவு உள்ளது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். அப்போது அவர் திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2-ந்தேதி தனது தலைமையில் நடைபெறும் "சமத்துவ நடைப்பயணத்தை" தொடங்கி வைப்பதற்கான விழா அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி னார்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சமத்துவ நடைபயணம் வருகின்ற ஜனவரி 2-ந்தேதி மேற்கொள்ள உள்ளேன். 950 பேர் இந்த நடைபயணத்தில் மேற்கொள்ள உள்ளனர்.

    திருச்சி உழவர் சந்தையில் மது ஒழிப்பு நடைபயணத்தை ஜனவரி 2-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நடைபயணத்தில் விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன், கமல்ஹாசன், நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்.

    ஜனவரி 12-ந்தேதி மதுரையில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் நிறைவு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். கட்டுப்பாடாகவும், போக்குவரத்து ஒழுங்கு செய்வதாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படும்.

    மக்கள் மன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு தான் ஆதரவு உள்ளது. 2026 சட்ட மன்ற பொது தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும். யார் எந்த முயற்சி செய்தாலும் தவிடு பொடியாகி விடும்.

    சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் இப்போது அதற்கான தேவையில்லை.

    2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெரும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும் யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் மக்கள் மத்தியில் தி.மு.க. கூட்டணிக்கு வரவேற்பு இருப்பதை மக்கள் மத்தியில் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.

    குடிமனைபட்டா கோரி இன்று நடத்தும் பேரணி தொடர்பாக கோரிக்கை வைத்து பேசினார்கள். அதேபோல் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் ராஜாராம் சிங், மாநில செயலாளர் ஆசை தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

    • இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
    • இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்ட முன்வரைவில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு முறையையும் மாற்றுவது நியாயமானது அல்ல.

    கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகவும், வறுமை ஒழிப்பு ஆயுதமாகவும் திகழும் இந்தத் திட்டத்தின்படி 100 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, மொத்த பயனாளிகளில் 5 விழுக்காட்டினருக்குக் கூட முழு நாள்கள் வேலை வழங்கப்படவில்லை. அதனால், இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை 150 நாள்களாக உயர்த்த வேண்டும்; 50 % பயனாளிகளுக்காவது முழுமையாக 150 நாள்கள் வேலைவழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பயனாளிகளுக்கு அதிக நாள்கள் வேலை கிடைக்க வகை செய்யும்.

    அதேபோல், நடவு, அறுவடை போன்ற விவசாயப் பணிகள் நடைபெறும் நாள்களில் இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கும் விஷயமாகும். இதன் மூலம் வேளாண் பணிகளுக்கு தடையில்லாமல் ஆள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

    ஆனால், இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியடிகளின் பெயர் நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதும், திட்டச் செலவில் இதுவரை இருந்த 10%க்கு பதிலாக 40 விழுக்காட்டை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தின்படி எங்கு, எந்த நேரத்தில், என்ன பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    • திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா உள்ளது.
    • திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு வழியாக தூணிற்கு செல்ல வேண்டுமென்றால் எங்கள் உரிமை பாதிக்கப்படும்.

    மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றவில்லை. மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும், தீபத்தூணுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    திருப்பரங்குன்றம் மலையில் என்னென்ன வழிபாட்டு தலங்கள் உள்ளன என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பினர்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா உள்ளது. அதில் தொழுகையும் நடந்து வருகிறது. மலை உச்சியில் தர்கா, பின்பக்கத்தில் காசி விஸ்வநாதர் கோவில் இருபிரிவினரும் வந்து செல்ல தனித்தனியாக பாதை உள்ளதாக வக்பு வாரியம் தெரிவித்தது.

    திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு சொந்தமான, அது சார்ந்த நிலங்கள் என்னென்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த வக்பு வாரியம்,

    மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்க ஸ்தலங்கள், நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம். நெல்லித்தோப்பு, மலையில் உள்ள பாதை, படிக்கட்டுகள் தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தர்காவுக்கு சொந்தமான இடங்கள் குறித்து விசாரணையின்போது தனிநீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்தது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகில் உள்ள தூண் தொடர்பான படங்களை ஐகோர்ட் நீதிபதிகள் பார்த்தனர்.

    மலை உச்சியில் உள்ள தூணிற்கு செல்லும் பக்தர்கள் தர்காவை கடந்து செல்ல வேண்டுமா? வேறுபாதை உள்ளதா? என நீதிபதிகள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த வக்பு வாரியம்,

    தர்காவை ஒட்டி குதிரைசுனை உள்ளது. அதனை தாண்டி தூண் உள்ளது. தர்காவிற்கு படிக்கட்டு பாதை உள்ளது. நெல்லித்தோப்பு தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என உத்தரவு உள்ளது.

    மனுதாரரின் வழக்கால் தூண் யாருக்கு சொந்தம். அந்த நிலம் யாருக்கு சொந்தமானது என பிரச்சனை எழுந்துள்ளது. தூண் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் தீர்க்கப்பட வேண்டும்.

    தீபத்தூண் என மனுதாரர் குறிப்பிடும் தூண் தர்கா இடத்தில்தான் உள்ளது. தீபத் தூணுக்கு செல்லும் மலைப்பாதையும் தர்காவுக்கு தான் சொந்தம்.

    திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு வழியாக தூணிற்கு செல்ல வேண்டுமென்றால் எங்கள் உரிமை பாதிக்கப்படும். தூணும் தர்கா இடத்தில் உள்ளதால் அங்கு தீபம் ஏற்றுவதில் வக்பு நிர்வாகத்திற்கு உடன்பாடு இல்லை.

    மலை உச்சியில் தர்கா இருக்கும் பகுதி சிக்கந்தர் மலை என்று தான் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது. 1920-ம் ஆண்டு உரிமைகள் நீதிமன்றம் வழங்கிய உரிமையை தர்காவிற்கு உறுதி செய்ய வேண்டும் என வக்பு வாரியம் வேண்டுகோள் விடுத்தது.

    • தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் என்றும் புறக்கணிப்பார்கள்.
    • வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள்.

    சென்னை:

    ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை விக்ஷித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் என்று ஒன்றிய பாஜக அரசு மாற்றப் போவதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வர போகிறது. இதன்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலை வாய்ப்பு, ஒன்றிய அரசு 60 சதவிகிதம் மாநிலங்கள் 40 சதவிகிதம் என நிதிப் பகிர்வு முறை, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கல், விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாட்களுக்கு வேலை வழங்கப்படாது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப் போகிறார்கள்.

    இவை அத்தனையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் செயல்பாடுகள்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி கள்ள மவுனம் காக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடிய சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.

    தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் என்றும் புறக்கணிப்பார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×